புனித ரமலான் மாதம்.
பள்ளிவாசலில் நோன்பு திறப்பதற்காகக் கஞ்சி தயாராகிக்கொண்டிருந்தது. முக்கோண வடிவில் மூன்று பெரிய கற்களைச் சமமாக வைத்து, காய்ந்த விறகுகளை அடுக்கி, தீமூட்டி, ஒரு பெரியா குண்டாவை ஏற்றி அதில் களைந்த அரிசி, நெய், புதினா, தக்காளி, வெங்காயம், வெந்தயம், இலவங்கம், பட்டை, ஏலக்காய், இஞ்சி, பாசி பருப்பு, ஆகியவற்றை எப்போது, எவ்வளவு போடவேண்டும் என்பதை தலைமைச் சமையல்காரார் விளக்கிக் கொண்டிருக்க, அதை அப்படியே கடைப் பிடித்து மும்முரமாய் பணியாற்றிக் கொண்டிருந்தனர் உதவியாளர்கள்.
பள்ளிவாசலின் அலுவலக அறையிலிருந்து வெளிப்பட்ட ஜமாத் தலைவர் ஜக்கரியா, தயாராகிக் கொண்டிருந்த கஞ்சிப் பணிகளை மேற்பார்வையிட அருகில் சென்று நின்றார்.
“ஸ்டோர் ரூம் திறந்துதான் இருக்கு. என்னென்ன தேவையோ எடுத்துக்குங்க.” என்றார்.
“சரிங்க ஐயா.” என்றார் தலைமை சமையல்காரர்.
சாப்பிட்டு இரண்டு நாட்களாகிவிட்டன. கையிலிருந்த இருபது ரூபாயும், பன்னும், டீயும் வாங்கிச் சாப்பிட்டதில் கரைந்துவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் கால் போன போக்கில் நடந்து கொண்டிருந்தார் முனுசாமி.
தனக்கே இவ்வளவு பசி மயக்கம் இருக்கிறதே, குடிசையில் இருக்கும் மனைவி, குழந்தைகளின் நிலை எப்படியிருக்கும் என்றெண்ணியபோது ஒரு கலக்கம் உண்டாயிற்று.
‘எப்படியாவது ஒரு வேலை தேடி வருகிறேன்.’ என்று மனைவி கௌசல்யாவிடம் கூறி கிளம்பியவர்தான், இரண்டு நாட்களாய் வேலை தேடி அலைகிறார். ஒன்றும் கிடைக்கவில்லை.
நடந்து வந்து கொண்டிருந்தவருக்குத் தலைசுற்றியது. மயக்கம் வருவது போல் தெரிய, ‘சட்’டென பள்ளிவாசல் படிகட்டுகளில் அமர்ந்துவிட்டார்.
பள்ளிவாசலுக்குள்ளிருந்து கிளம்பி, காற்றில் கலந்து பரவிய நோன்புக் கஞ்சியின் மணம், அவர் நாசிக்குள் நுழைந்து, பசியை மேலும் கிளறிவிட்டது.
“கடவுளே... ஒரு வாய் கஞ்சி கிடைக்காதா..?’ என ஏங்கியது மனம்.
இஸ்லாமியர்களிடம் எப்படிக் கேட்பது? அவர்கள் கொடுப்பார்களா? நோன்பாளிகளுக்காக உண்டாக்கியிருக்கும் கஞ்சி மற்ற மதத்தினருக்குக் கொடுப்பார்களா? என்பது போன்ற பல கேள்விகள் அவரைக் குழப்ப, அப்படியே தன்னையுமறியாமல் கண்ணயர்ந்தார்.
எவ்வளவு நேரம் அவ்வாறு சாய்ந்திருந்தார் என்று தெரியவில்லை,
“முனுசாமி... முனுசாமி...” என்று யாரோ அழைக்க, பதறிக் கண் முழித்தார்.
“ஜக்கரியா... நீயா..?”
“ஆமாம். நானேதான். இது என்ன கோலம்? ஏன் இப்படி இடிஞ்சு போய் உட்கார்ந்திருக்கே? என்ன பிரச்சினை உனக்கு?”
ஜக்கரியா கேட்ட கேள்விகளுக்கு அவனால் பதில் சொல்ல இயலவில்லை.
தட்டுத் தடுமாறி, எழுந்து நின்றார்.
“சரி, வா...” என்று அவரை பள்ளிவாசலுக்குள் அழைக்க, அவர் தயங்கினார்.
அவர் தயக்கத்தைப் புரிந்து கொண்டவர், “அட, வாய்யா. உள்ளாறத்தான் என் ஆபீஸ் இருக்கு” என்று அவரை அழைத்துக் கொண்டு போய் அலுவலக அறையில் அமரச் செய்தார்.
அலுவலகத்தில் இருந்த ஒருவரை ஏவி, கஞ்சி கொண்டுவரச் செய்தார்.
‘கம கம’ மணத்துடன் சூடான நோன்புக் கஞ்சியை ஒரு பாத்திரத்தில் கொண்டு வந்து கொடுத்துவிட்டுப் போனார் ஒருவர்.
“ம். குடி”
முனுசாமி கஞ்சி குடிக்காமல் ஜக்கரியாவையே பார்த்துக் கொண்டிருந்தார்.
“என்ன?”
“இது நோன்பு வைத்தவர்களுக்குண்டான கஞ்சி. இதை எப்படி நான்..? அதுவும் நான் இந்து. நோன்பு திறப்பதற்க்கான நேரமும் இன்னும் நெருங்கலை. அதுக்குள் இதை நான் குடிக்கலாமா?” தயங்கிக் கேட்டார் முனுசாமி.
“இதோ பாரு, முனுசாமி... உன்னைப் பார்த்தால் நீயும் ஒரு நோன்பாளியாத்தான் தெரியுறே. சாப்பிட்டு எத்தனை நாளாச்சோ. அது மட்டுமில்லை, ஓர் இந்து இதைக் குடிக்கலாமான்னு கேட்டே, இந்த கஞ்சி உண்டாக்கினதே நம்ம அரசு அனுப்பிய அரிசியிலிருந்துதான். தெரியுமா? மொதல்ல சாப்பிடு. அப்புறம் பேசலாம்” என்று சொல்லிவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட்டார் ஜக்கரியா.
பதினைந்து நிமிடங்கள் கழித்து வந்தார் ஜக்கரியா.
கஞ்சி பாத்திரம் முழுக்க காலி செய்திருந்தார் முனுசாமி.
இப்போது அவர் முகத்தில் ஒரு தெளிவும், உற்சாகமும் தெரிந்தது.
“ம். இப்பச் சொல்லு முனுசாமி. உனக்கு என்ன பிரச்சினை?” என்று கேட்டார் ஜக்கரியா.
“தோல் தொழிற்சாலையில் வாட்ச் மேனா வேலைப் பார்த்துக்கிட்டிருந்தேன். கம்பெனி நஷ்டத்துல ஓடுதுன்னு இழுத்து மூடிட்டாரு ஓனரு. என் வேலை போயிருச்சு. வேறு வேலை தேடி, தேடி அலைஞ்சுக்கிட்டிருக்கேன். ஒண்ணு கூடக் கிடைக்க மாட்டேங்குது. வீட்ல பொண்டாட்டி, ரெண்டு குழந்தைங்க வேறு இருக்காங்க”
தன் சோகக் கதையை விவரித்தார் முனுசாமி.
“எந்த கம்பெனியில வேலை பார்த்தே?”
சொன்னார்.
ஆழ்ந்து யோசித்தவர், “உனக்குத்தான் சைக்கிள் ரிப்பேர் வேலையெல்லாம் தெரியுமே?” என்றார்.
“ப்ச். தெரிஞ்சு என்னப்பா பிரயோஜனம்? வேலைதான் கிடைக்கலையே?”
“அந்த ஆண்டவனாப் பார்த்து உன்னை இங்கே சரியான சமயத்துலதான் அனுப்பியிருக்கான்”
“நீ.. நீ என்னப்பா சொல்ற?”
“எனக்குச் சொந்தமா ஒரு சைக்கிள் கடை இருக்கு. அதைச் சரியாப் பார்த்துக்க ஆள் இல்லாம நான் திண்டாடிக்கிட்டிருக்கேன். நீ என்ன பண்றே, நாளையிலிருந்து அந்தக் கடையை உன் முழு பொறுப்புல எடுத்து நடத்துற. இந்தா அட்வான்ஸ்” என்று சொல்லி இரண்டாயிரம் ரூபாயை எடுத்து அவரிடம் கொடுத்தார் ஜக்கரியா.
நடப்பது, கனவா? நிஜமா? என்று புரியாமல் அவர் கொடுத்த பணத்தைப் பெற்றுக் கொண்டார் முனுசாமி.
ஒரு சிறிய வாளி நிறைய நோன்பு கஞ்சியைக் கொடுத்து, “இதை குழந்தைங்களுக்குக் கொடு.” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தார் ஜக்கரியா.
வீட்டில் இருந்த பொருட்களை வைத்து எப்படியோக் குழந்தைகளுக்கு ஊட்டிவிட்டு, தண்ணீர் மட்டும் பருகிய கௌசல்யா, கணவனைக் காணாது பதறிப் போனாள். இதுவரை இப்படி இரண்டு நாட்கள் வரை முனுசாமி காணாமல் போனதில்லை.
குழந்தைகளைப் படுக்க வைத்துவிட்டு, வாசலில் வந்து வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தாள்.
தூரத்தில் புள்ளியாய் தெரிவது முனுசாமி மாதிரி இல்லை?
அவரேதான்...
அவளுக்குப் போன உயிர் திரும்ப வந்தது போல் இருந்தது.
எழுந்து அவரை நோக்கி ஓடினாள்.
“எங்கேயா போனே? இப்படியா என்னை பயமுறுத்தறது?” என்று சொல்லிக் கொண்டே அவரிடமிருந்த கஞ்சி வாளியை வாங்கிக் கொண்டாள்.
“என்னய்யா இது?”
“வீட்டுக்குள்ளாற வா, சொல்றேன்.” என்றவர், பெரிய பையை ஒரு மூலையில் வைத்துவிட்டு தரையில் அமர்ந்தார்.
நடந்ததை விவரித்தார்.
“ஜக்கரியா என்னோடு ஸ்கூல்ல ஒண்ணா படிச்சவன். எனக்குத்தான் படிப்பு ஏறலை. அவன் நல்ல படிச்சு இப்ப பெரிய ஆளாயிட்டான். நம்ம ஊர் பள்ளிவாசல்ல தலைவனா இருக்கான். அதுமட்டுமில்லை, பல கடைகளையும் வெச்சு நடத்தறான். அவனைப் பார்த்து பல நாட்களாகியும், அவன் என்னை அடையாளம் வெச்சி கண்டுபிடிச்சிட்டான். என்னை அவனுடைய சைக்கிள் கடையைப் பார்த்துக்கச் சொல்லி அட்வான்ஸ் சம்பளத்தையும் கொடுத்தான். இதோ அவன் கொடுத்த பணத்துல அரிசி, பருப்பு, மளிகை சாமான் எல்லாம் கொண்டு வந்திருக்கேன். குழந்தைங்களுக்கு ஆக்கிப் போடு.” என்றார்.
“வாளியில என்னய்யா அது?”
“நோம்பு கஞ்சி புள்ளே. சாப்புடு”
“நீ…?”
“நான் சாப்டுட்டுத்தான் வந்தேன்”
அதற்குள் மூத்தவள் எழுந்து கொண்டாள்.
“அம்மா... பசிக்குது...”
“எழுந்து வா, கஞ்சி தர்றேன்.” சொன்னவள், ஒரு பாத்திரத்தில் கஞ்சியைக் கலக்கி, ஊற்றிக் கொடுத்தாள். தானும் சாப்பிட்டாள்.
“நல்லா இருக்கும்மா. இன்னும் கொஞ்சம் குடும்மா.” என்று கேட்டு வாங்கிக் குடித்தாள்.
அரவம் கேட்டு சின்னவனும் எழுந்து கொள்ள, அவனுக்கும் கஞ்சி ஊற்றிக் கொடுத்தாள் கௌசல்யா.
“அந்த புண்ணியவான் நல்லா இருக்கணும். நீடுழி வாழணும். சரியான சமயத்துல உதவியிருக்கிற அந்த நல்ல உள்ளம் பல்லாண்டு வாழணும்.” என்று மனதார வாழ்த்தினாள் கௌசல்யா.
இன்னும் இரண்டே நாளில் ரமலான் பெருநாள்.
முனுசாமியை அழைத்தார் ஜக்கரியா.
“என்னப்பா?”
“இந்தா...” என்று ஒரு பார்சலைக் கொடுத்தார்.
“என்னப்பா இது?”
“குழந்தைங்களுக்கு புது ட்ரெஸ். உனக்கு கைலி. அண்ணிக்கு சேலை”
முனுசாமி தயங்கினார்.
“அட, சும்மா வாங்கிக்கப்பா”
“நீ இவ்வளவு செய்வேன்னு நான் எதிர்பார்க்கலைப்பா..”
அவர் கொடுத்த பார்சலை வாங்கிக்கொண்டார்.
“ஒருவிதத்துல இது நான் உனக்குக் கொடுக்கிற நஷ்ட ஈடா எடுத்துக்கப்பா”
“நஷ்ட ஈடா? என்னப்பா சொல்றே? எனக்கு ஒண்ணும் புரியலையே?”
“நீ வேலை பார்த்த கம்பெனி இழுத்து மூடிட்டதாச் சொன்னியே, அந்த கம்பெனியோட முதலாளி வேறு யாருமில்லை, என் பையன்தான். ஒரு வேளை, நீ வேறு கம்பெனியில வேலை பார்த்திருந்தாலும், இந்த உதவியை நான் கண்டிப்பா உனக்கு செய்திருப்பேன். எதுக்கு சொன்னேன்னா, எதைக் கொடுத்தாலும் நீ வாங்கத் தயங்குறே, அதனால்தான் அந்த உண்மையைச் சொன்னேன். இப்பப் புரியுதா? என்னுடைய உதவிகளை ஏத்துக்க இனி உனக்குத் தயக்கமில்லையே?” சொல்லிவிட்டுச் சிரித்தார் ஜக்கரியா.
முனுசாமியின் மனம் இப்போது லேசானது போலிருந்தது.
வீட்டிற்குள் நுழைந்து சோபாவில் அமர்ந்தார் ஜக்கரியா.
அவருக்காக இஞ்சி டீ போட்டு எடுத்து வந்து கொடுத்தாள் மனைவி பாத்திமா.
வாங்கி பருகிக்கொண்டே முனுசாமி பற்றி சொன்னார் ஜக்கரியா.
“எல்லாம் சரி. ஆனா, அவர் வேலை பார்த்த கம்பெனி ஓனர்தான் நம்ம மகன்னு ஏன் பொய் சொன்னீங்க?” என்று கேட்டாள் பாத்திமா.
“அதுவா? முனுசாமி ஏழையா இருந்தாலும் கூச்ச சுபாவம் படைச்சவன்.உழைத்து சம்பாதிக்கணும்னு நினைக்கிறவன். பிறர் உதவியை ஒருபோதும் ஏற்கமாட்டான். அதனால்தான் அப்படி ஒரு பொய்யைச் சொன்னேன். அவன் வேலை பார்த்த கம்பெனி முதலாளி கொடுத்த இழப்பீடுன்னு சொன்னதால்தான் அவன் அதை ஏத்துக்கிட்டான்.” என்றார் ஜக்கரியா.
நண்பர்கள் இருவரின் சித்தாந்தங்களை எண்ணி வியந்து நின்றாள் பாத்திமா.