தேநீர் கோப்பையைக் கொண்டு வந்து வைத்த ருக்கையா ஓர் ஆழ்ந்த பெருமூச்சுடன் ஜபருல்லா அருகில் அமர்ந்தாள்.
கோப்பையை எடுத்து உறிஞ்சிய ஜபருல்லா, “என்னம்மா, ஒரு மாதிரி சோகமா இருக்கே? என்ன விஷயம்?” என்று கேட்டார்.
“வேறு என்ன? நம்ம பொண்ணுக்கு வயசு இருபத்தெட்டு நெருங்குது. இது வரை ஒரு வரன் கூட அமையலை. அதை நெனைச்சாத்தான் தூக்கமே வரமாட்டேங்குது.” என்றாள்.
“நாம முயற்சி செய்யாமலா இருக்கோம்? நேத்துக்கூடத் தரகரைப் பார்த்தேன். கூடிய சீக்கிரத்துல வருவதா சொல்லியிருக்கார். நீ எதுக்கு இவ்வளவு வருத்தப்படறே? எல்லாம் வல்ல அல்லாஹ் மீது பாரத்தைப் போடு. அவனிடம் மன்றாடி துவா கேளு. அவன் நிச்சயம் நம்மை கைவிட மாட்டான்.”
ஜபருல்லாவின் ஆறுதலான பேச்சு ருக்கையாவைத் தேற்றவில்லை. அவள் ஆழ்ந்த துக்கத்தில் அமிழ்ந்து கிடந்தாள்.
சொல்லி வைத்தாற்போல் ஒரு வாரத்தில் ஷம்ஷாத்தைப் பெண் பார்க்க வந்தார்கள்.
ஸ்வீட், காரம், டீ என பதார்த்தங்களைப் பரப்பி வைத்தார் ஜபருல்லா.
பையனின் அத்தா, அம்மா, இன்னும் நான்கு பெண்கள் என மொத்தம் ஆறு பேர் வந்திருந்தனர்.
ஷம்ஷாதைப் பார்த்ததும் அவர்களுக்குப் பிடித்துப் போயிற்று.
“சரி. மேற்கொண்டு பேசலாமா?” என்று கேட்டார் பையனின் தந்தை.
“ஓ… பேசலாமே…” என்றார் ஜபருல்லா.
“பொண்ணுக்கு நகை எவ்வளவுப் போடுவீங்க?”
“இப்ப தங்கம் விலை எக்கச்சக்கமா ஏறி கிடக்குதே, எங்களால முடிஞ்சதைப் போடுவோம்”
“இப்படி மொட்டையா சொன்னா எப்படி? எத்தனை பவுன் போடுவீங்க?”
ஜபருல்லாவுக்கு தர்ம சங்கடமாக இருந்தது.
“ஒரு பத்து பவுன் போடுவோம்.” என்றார்.
“என்னது? பத்து பவுனா? எந்தக் காலத்துல இருக்கீங்க? முப்பது சவரன், நாப்பது சவரன், அம்பது சவரன்னு போடத் தயாரா நிறைய பேர் நிக்கறாங்க. ஏதோ தரகர் சொன்னாரேன்னு பார்க்க வந்தோம். இப்படி இருக்கும்னு தெரிஞ்சிருந்தா...” என்று
வார்த்தையை முடிக்காமல் இழுத்தார் பையனின் அத்தா.
இடிந்துபோனார் ஜபருல்லா.
இவர்கள் மனிதர்களா இல்லை வியாபாரிகளா? நா கூசாமல் கேட்கிறார்களே? அவர்கள் மீது ஆத்திரம், ஆத்திரமாக வந்தாலும் அடக்கிக் கொண்டார் ஜபருல்லா.
“குறைஞ்சது ஒரு முப்பது பவுன் நகை போடற மாதிரி இருந்தா தரகர்கிட்ட சொல்லி அனுப்புங்க, நாங்க வர்றோம்.”
அவர்கள் போய்விட்டனர்.
“அல்லாஹ் நம்மை ஏன் இப்படிச் சோதிக்கிறான்? கொஞ்சங்கூட இரக்கமே இல்லையா நம்ம மேல?” என அங்கலாய்த்தாள் ருக்கையா.
ஷம்ஷாதும் சோர்ந்து போனாள்.
ஒன்றா, இரண்டா? இப்படி இன்னும் எத்தனை பேர் வந்து தன்னைப் பார்த்துவிட்டு மனம் புண்பட பேசிவிட்டுப் போக இருக்கிறார்களோ?
“இதோ பார் ருகைய்யா… அல்லாஹ் ஒருபோதும் நம்மை கைவிடமாட்டான். அவன் செய்வதெல்லாம் நம் நன்மைக்காகத்தான் இருக்கும். அவன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மட்டும் ஒரு போதும் இழந்துவிடாதே.” என மனைவியைத் தேற்றினார் ஜபருல்லா.
*****
“என்ன பாய்… நல்ல மனுஷங்களை அனுப்பச் சொன்னா, இப்படி சந்தையில மாடு வாங்க வந்தவங்களை எல்லாம் அனுப்பி வெக்கறீங்க?” என எகிறினார் ஜபருல்லா.
“நான் என்ன பாய் பண்ணட்டும்? காலம் ரொம்ப கெட்டுக்கிடக்குது.” என்றார் தரகர்.
அவர் சொல்வதிலும் நியாயம் இருக்கத்தான் செய்தது.
“இதோ பாரும். என்னால் முடிஞ்சதைத்தான் செய்வேன். அதுக்கு ஏத்தா மாதிரி நல்ல மனம் படைச்ச வரன்களா இருந்தா மட்டும் அனுப்புங்க”
“சரி பாய்.” என்றவாறு நகர்ந்தார் தரகர்.
அடுத்து, ஒரு வருடம் கடந்து போனது.
“இப்படியே போனால் நம்மப் பொண்ணு முதிர் கன்னியா காலம் தள்ள வேண்டியதுதான்.” என கலங்கினாள் ருக்கையா.
ஜபருல்லாவின் ஆறுதல்களோ, நம்பிக்கை தரும் பேச்சுக்களோ அவளிடம் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.
வழக்கம்போல் மக்ரீப் தொழுகையை முடித்துக்கொண்டு பள்ளிவாசலிலிருந்து வெளிப்பட்டார் ஜபருல்லா.
மக்ரீப் தொழுகை முடிந்ததும் அவர் நேராகப் போவது காஜா பாய் டீக் கடைக்குத்தான். காரணம், காஜா பாய் போடும் டீ அவ்வளவு சுவையாக இருக்கும். அதனால் டீக் கடையில் ஜன வெள்ளம் அலை மோதும். கடைக்கு வெளியேக் கும்பல் கும்பலாய் நின்று பேசிக்கொண்டே மக்கள் தேநீரை ரசித்து ருசித்துக் கொண்டிருந்தனர்.
தேநீர் போடுவதில் மும்முரமாய் செயற்பட்டுக் கொண்டிருந்தார் காஜா பாய்.
டீ கிளாசை ஜபருல்லாவிடம் கொடுக்கும்போது, “பாய்… உங்களைத்தான் எதிர்பார்த்துக்கிட்டிருந்தேன். டீ குடிச்சிட்டு கொஞ்ச நேரம் வெயிட் பண்ணுங்க. ஒரு முக்கியமான சமாச்சாரம் பேசணும்.” என்றார்.
என்னமோ, ஏதோ என ஜபருல்லாவும் தேநீர் அருந்திவிட்டுக் காத்திருந்தார்.
பத்து நிமிடங்களில் ஜனம் குறைந்ததும் ஜபருல்லாவை அழைத்த காஜா பாய், “உங்க பொண்ணுக்கு ஒரு வரன் வந்திருக்கு பாய். பையனைப் பத்தி நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன். நீங்களேப் பேசிக்குங்க” என்றவர், முகவரி எழுதிய ஒரு துண்டுச் சீட்டை எடுத்துக் கொடுத்தார்.
“இங்கிருந்து நாலாவது தெருதான். பையன் வீட்லதான் இருப்பான். இப்பவேப் போய் பார்த்துட்டு வந்திடுங்க.”
“ரொம்ப நன்றி பாய்.” என்றவாறு அந்தத் துண்டு சீட்டை வாங்கிக் கொண்டு புறப்பட்டார் ஜபருல்லா.
காலிங் பெல்லை அழுத்திவிட்டுக் காத்திருந்தார் ஜபருல்லா.
கதவைத் திறந்த இளைஞன் அழகாய், அடக்கமாய் இருந்தான்.
“அஸ்ஸலாமு அலைக்கும்.” என்றார் ஜபருல்லா.
“வஅலைக்கும் அஸ்ஸலாம்…” என பதிலுரைத்த அந்த இளைஞன் குழப்பமாய் அவரை ஏறிட்டான்.
“நீங்க..?”
“ஒரு வரன் விஷயமா என்னை காஜா பாய் அனுப்பினார்…”
“ஓ… நீங்களா…? வாங்க, வாங்க…” என கதவைத் திறந்து உள்ளே அழைத்துப் போனான்.
“உக்காருங்க.”
சோபாவில் எதிரும், புதிருமாக அமர்ந்தனர்.
“என் பேரு அக்பர். எனக்காகத்தான் அம்மா பொண்ணு பார்த்துக்கிட்டிருக்காங்க. காஜா பாய் எங்க தூரத்து உறவு. அவர்கிட்டயும் அம்மா சொல்லி வெச்சிருந்தாங்க.”
“ஓ… அப்படியா? அத்தா எங்கே?”
“அவர் மௌத்தாயிட்டாருங்க.”
“இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.” என்றவர், “நீங்க என்ன பண்றீங்க தம்பி?” என்று கேட்டார்.
“சாஃப்ட்வேர் இஞ்சினியரா ஒர்க் பண்ணிட்டிருக்கேன்.”
அக்பருடைய அம்மா இடையில் வந்து சலாம் சொல்லி தேநீர் வழங்கி விட்டுப் போனார்.
“எனக்கிருப்பது ஒரே பொண்ணு. உங்க எதிர்பார்ப்பு என்ன?”
“நிறைய இருக்கு!” என்றான் அக்பர்.
‘பக்’கென அதிர்ந்தார் ஜபருல்லா.
இஞ்சினியருக்கு ஏற்ப எதிர்பார்ப்பானோ? “சொ…சொல்லுங்க..?” – தயங்கிக் கேட்டார்.
“பொண்ணு படிச்சிருக்கணும். குர்ஆனை மனனம் செய்திருக்கணும். ஐவேளை தொழுகை, நோன்பு ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்கணும். குடும்பத்தை நல்ல விதமாய் நடத்தும் குணவதியா இருக்கணும்…”
ஜபருல்லாவால் நம்பமுடியவில்லை. இந்த காலத்தில் இப்படி ஒரு பையனா?
“நீங்க எதிர்பார்க்கிற அனைத்தும் என் பெண்ணிடம் இருக்கு. நகை எவ்வளவு எதிர்பார்க்கிறீங்க..?
“என்னது? நகையா? அது நான்தான் பொண்ணுக்குப் போடணும்.”
சந்தோஷ வானில் சிறகடித்துப் பறப்பது போலிருந்தது ஜபருல்லாவுக்கு.
‘அப்ப பெண் பார்க்க எப்ப வரப் போறீங்க?”
“நாளைக்கு சாயந்திரமா வர்றோம்.” என்றார் அக்பரின் தாயார்.
“அல்ஹம்துலில்லாஹ்… அப்படியே ஆகட்டும்.”
மகிழ்ச்சியுடன் எழுந்து விடை பெற்றார் ஜபருல்லா.
மனிதர்கள் இன்னமும் இருக்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது அவருக்கு.