அந்த பென்ஸ் கார் புகிட் திமாவின் சாலையில் வழுக்கிக் கொண்டு ஈஸ்ட் கோஸ்ட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. காருக்குள் இருந்த க்ளாராவின் குரலில் சற்று பதட்டம் இருந்தது.
‘வாட்....?’
வாயேஜர் டூ இன்னும் சீராக இயங்குகிறதா? என்றவள் சூசனின் பதிலைக் கேட்டு நிமிர்ந்தாள்.
‘என்ன மாதிரியான ஒலி? நம்முடைய ஒசிலாஸ்கோப் அலையொலி எப்படி இருக்கின்றது?’ என்று கேட்டாள் க்ளாரா.
சூசன் பேசியதைக் கேட்ட க்ளாராவின் முகத்தில் அதிர்ச்சி ரேகைகள் ஊடுருவின. அவள் சூசன் கூறிய தகவலை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினாள். ஆனால், வார்த்தைகள் தொண்டைக் குழியிலேயே உருண்டு கொண்டிருந்தன. மீண்டும் அவளால், வாட்?..... என்று மட்டுமே கேட்கமுடிந்தது. நொடிகள் செல்லச் செல்ல...அவளுடைய மூளையின் அனைத்து செல்களும் பரபரப்புக்குள் மூழ்கி விட்டன. கார் ஈஸ்ட் கோஸ்ட்டைச் நெருங்க முயற்சி செய்து கொண்டிருந்தது. இருபது வருடங்களுக்கு முன்னால் கடற்கரையாக இருந்த இடம் தூர்க்கப்பட்டு முக்கிய விண்வெளி மையமாக மாறி இருந்தது. 2013 ல் உருவான OSTI -ன் முக்கிய கிளை அலுவலகம் அங்குதான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதிலும் தற்போது பூமியைச் சுற்றி வரும் நிலவின் தென்துருவப் பகுதியை, ‘ஆர்டெமிஸ்’ (Artemis) திட்டத்தில் நாசாவுடன் இணைந்து நுணுக்கமாக ஆராய்ந்து வருகின்றது. ஸ்டியரிங்கைத் தொட்டுக் கொண்டிருந்த விரல்களின் நுனியில் அவள் தன்னுடைய இதயத் துடிப்பை உணர்ந்தாள்.
ஆசுவாசப்படுத்திக்கொண்டே திறன்பேசியில் சூசனிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தாள்.
‘சூசன்.... இது வழக்கமாக வருகின்ற கேரியர் வேவ் இல்லை என்பதை உறுதிப்படுத்தினீர்களா?’
‘ஆமாம், டாக்டர்.க்ளாரா. இது கேரியர் வேவ் இல்லை’
‘என்ன மாதிரியான ஒலி அலை இது?, சூசன்’
‘இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது. சில வினாடிகள் இடைவெளி கழித்துத் திரும்பத் திரும்ப வருகின்றது.’
சில நொடிகளை மௌனத்திற்குக் கொடுத்த க்ளாரா சிந்தனையிலிருந்து மீண்டாள்.
‘சூசன், இது ஏதேனும் இயற்கை நிகழ்வாகவோ அல்லது சூரிய மின்னழுத்தக் காந்தப் புயலாகவோ இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற கோணத்தில் சரியாகச் சோதித்துப் பார்த்தீர்களா?’
‘யெஸ், டாக்டர். க்ளாரா. நாங்கள் மிகக் கவனமாக ஆராய்ந்து விட்டோம். இந்த ஒலி நீங்கள் கூறுவது போல் இல்லை’
‘எப்போது இந்த ஒலி கேட்க ஆரம்பித்தது?’
‘இன்று காலை எட்டு மணிக்குத் தொடங்கியது. கிட்டத்தட்ட முப்பது நிமிடங்களாகத் தொடர்ந்து வந்துகொண்டிருக்கிறது’
‘நீங்கள் உடனடியாக ரேடியோ அஸ்ட்ரோனமி டீமைத் தொடர்பு கொள்ளுங்கள். இன்னும் சிறிது நேரத்தில் நான் அங்கு இருப்பேன்’ என்ற க்ளாரா திறன்பேசியைத் துண்டித்தாள். அதற்குள் அவளுடைய கார் SSN (Singapore Space Nexus) விண்வெளி மையத்தை நெருங்கி உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.
மிஷின் கண்ட்ரோல் இன்ஜினியர் சூசன், வேறு விண்வெளிக் கோளத்திலிருந்து வித்தியாசமான ஒலிகள் வருகின்றது என்று கூறியது க்ளாராவை வியப்பிலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியிருந்தது. உடனடியாக ஒலியை ஆய்வு செய்யுமாறும் இந்தத் தகவலை யாருக்கும் தெரியப்படுத்தக்கூடாது என்றும் நாசாவிலிருந்து தகவல் வந்திருப்பதாக சூசன் தெரிவித்திருந்தார். சிறிது நேரத்தில் அவள் திட்ட அறையில் இருந்தாள். சூசன் பதிவு செய்திருந்த ஒலிகளைக் கவனித்துக் கேட்டாள். ஒலியின் கட்டமைப்பு மிகுந்த துல்லியத்துடன் மாறிக் கொண்டிருந்தது மிகவும் குழப்பத்தை ஏற்படுத்தியது. எல்லாத் தரவுகளையும் திரட்டி ஸ்பெக்ட்ரல் அனலிசிஸ் செய்யக் குழுவில் இருந்தவர்களைப் பணித்தாள். பரபரப்பாக விழுங்கப்பட்ட சில மணித்துளிகளில் அந்த ஒலி, எந்தவொரு விண்கலத்திலிருந்தும் செயற்கைக் கோளிலிருந்தும் வரவில்லை என்பதும் இது வாயேஜர் டூவின் சாதாரண பிராட்காஸ்ட்டிங் இல்லை என்பதும் முடிவு செய்யப்பட்டது. காலை முடிந்து பகல் வேளை ஆரம்பித்த அந்தப் பொழுதில், இது வேற்று கிரகத்திலிருந்து கிடைக்கின்ற சிக்னலாக இருக்கப் பெரும்பான்மையும் வாய்ப்பிருக்கிறது என்று SSN டிடெக்டர் மூலம் டாக்டர் க்ளாராவின் குழு உறுதி செய்தபோது விஞ்ஞானிகள் விவரிக்க முடியாத அதிர்ச்சிக்குள் உறைந்து விட்டனர்.
“இந்த ஒலி ஒரு குறியீடு மொழி போலத் தெரிகிறத”; என்று க்ளாரா கூறினாள். “இது இரகசியக் குறியீட்டின் அடிப்படையில் இருக்கக்கூடும்” என்று கணித்தாள் க்ளாரா.
இதனால் அவளுடைய குழு குறியீட்டு மொழி டீகோடிங் முறையைத் தேர்ந்தெடுத்தது. அவளுடைய தரவுகள் நாசா விஞ்ஞானிகளுக்கு விவரித்துக் காண்பிக்கப்பட்டபோது, ஒலி அலை வரிசையைத் தொடர்ந்து டீகோடிங் செய்ய முயற்சிக்குமாறு அவளை நாசாவின் முதன்மை விஞ்ஞானி ரிச்சர்ட் பணித்தார்.
எல்லாத் தரவுகளையும் விரிவாக அவளுடைய தலைமையிலான குழு ஆராய ஆரம்பித்தது.
இப்போது வாயேஜர் அனுப்பியுள்ள ஒலி 1977 ல் (Big Ear Radio Telescope மூலம்) பதிவு செய்யப்பட்டு ஜெரி எஹ்மானால் கண்டுபிடிக்க முடியாமல் போன ஒலியின் சாயலில் இருந்தது. 72 வினாடிகள் பதிவாகியிருந்த அந்த ஒலி அந்தக் காலத்திலேயே வேற்று கிரகவாசிகளின் குறியீடாக இருக்க வாய்ப்பிருக்கிறது என்ற யூகத்தைக் கிளப்பியிருக்கிறது. ஒலியிலுள்ள அலைகளைக் கண்டுபிடித்து, அதன் அலைக்கட்டமைப்பை ஆய்வு செய்து SSN க்கு அனுப்பியது நாசா. அதன் பிறகு ஒலி அலைவரிசையின் பிண்ணனி மற்றும் அலைநீளம் ஆகியனவற்றைப் பற்றி நுணுக்கமாக ஆராயும் பணியை SSN தொடர்ந்தது. அலைவரிசையிலுள்ள குறியீடுகள் அல்காரிதம் மூலம் கணக்கிடப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று மாத கடின உழைப்பிற்குப் பிறகு, அந்த ஒலி அலைவரிசையின் பொருள் கட்டமைக்கப்பட்டது.
“நாங்கள் ப்ரோக்ஸிமா செண்டரி கிரகத்தைச் சேர்ந்த செண்டரியன். பூமியுடன் தொடர்பு கொள்ள விரும்புகிறோம்”
இது மிகப்பெரிய இன்ப அதிர்ச்சியாக SSN விண்வெளி மையத்திற்கும் நாசாவிற்கும் அமைந்தது. அதோடு மட்டுமல்ல, சிங்கப்பூரின் இஸ்தானாவையும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையையும் இச்செய்தி மிகவும் சூடாக்கி விட்டுவிட்டது. சூரியக் குடும்பத்திலிருந்து 4.24 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் ப்ரோக்ஸிமா செண்டோரி பி என்னும் கிரகத்திலிருந்துதான் இந்தச் செய்தி பெறப்பட்டிருக்கிறது. இது கிட்டத்தட்ட பூமியை ஒத்த கிரகம் ஆகும். பல மில்லியன் ஆண்டுகளாக தனிமையில் சுழன்று கொண்டிருந்த பூமிக்கு இப்படி ஒரு செய்தியா? விண்வெளி மையத்தின் முக்கியப் பொறுப்பிலிருந்த டாக்டர் க்ளாரா உள்ளிட்ட அனைத்து விஞ்ஞானிகளுக்கும் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.
இச்சூழ்நிலையில் நாம் அமெரிக்காவின் தற்போதைய நிலையைப் பற்றித் தெரிந்து கொண்டே ஆக வேண்டும். 2040 ஆம் ஆண்டு ரஷ்யா அமெரிக்காவிற்கு எதிராகப் பகிரங்க அறிக்கை விட்டிருந்தது. அந்த அறிக்கையில், முன்பு ரஷ்யா ஸ்புட்னிக்கை விண்வெளிக்கு அனுப்பி அமெரிக்காவை அதிர்ச்சியடைய வைத்தது போன்று மீண்டும் அதிரடியாக விண்வெளியில் ரஷ்யா, தன் ஆதிக்கத்தை நிலைநாட்டும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் இது அமெரிக்காவிற்கு ரஷ்யா கொடுக்கும் சரியான மூக்குடைப்பாக இருக்கும் என்றும் கூறியிருந்தது. அந்தச் சூழ்நிலையில்தான் அமெரிக்காவின் அதிபராகப் பொறுப்பேற்றார் அலெக் வால்டன்.
அமெரிக்க அதிபர் வால்டன், தேர்தலில் ‘விண்வெளியில் குடியேறும் முதல் நாடாக அமெரிக்கா இருக்கும்’ என்று வாக்குறுதி கொடுத்தவர். இவர் நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர். பூமிக்கு அப்பாற்பட்ட எதிர்காலம் (A future beyond earth) என்று அவருடைய பதவியேற்பு நாள் அன்று அவர் பேசிய பேச்சு அமெரிக்க மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த அரசியல் சூழ்நிலையில் இப்படி ஒரு திருப்புமுனை வந்தால் விடுவாரா? உலக வரலாற்றில் அவருடைய பெயர் நிரந்தரமாகப் பதியப்போகும் தருணம் அல்லவா இது. இக்கலந்துரையாடலில் அமெரிக்க அதிபர் அலெக் வால்டன் மற்றும் சிங்கப்பூரின் பிரதமர் வான் ஜி ஆகியோர் கலந்துகொண்டனர். மிகவும் இரகசியமாக நடைபெற்ற இக்கலந்துரையாடலில் அமெரிக்க அதிபர், வேற்றுக் கிரகத்தினர் தொடர்பு கொண்டது எக்காரணத்தைக் கொண்டும் செய்தியாளர்களுக்கோ பொது மக்களுக்கோ தெரிந்துவிடக் கூடாது என்று வலியுறுத்தினார். இது பொதுமக்களிடம் தேவையில்லாத பீதியைக் கிளப்பும்; வேற்றுக் கிரகவாசிகளின் நிலை என்ன? அவர்கள் நம்மை எவ்வாறு எதிர்கொள்வார்கள்? என்பதைப் பற்றித் தெளிவாகத் தெரிந்த பின்புதான் செய்தியைப் பகிரங்கமாகப் பொதுமக்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டு அப்படியே அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.
இதுவரை செயல்பட்ட குழுவில் இருந்து பலரும் நீக்கப்பட்டனர். தொடர்ந்து செண்டரியன்களுடன் தொடர்பு கொள்ள அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே ஆய்வில் பலத்த பாதுகாப்புடன் ஈடுபடுத்தப்பட்டனர். அதன்பின் வந்த நாட்கள் நீர்க்குமிழிகள் போல் வேகமாக மறைந்துவிட்டன.
கடந்த ஒரு வருடத்தில் பல முக்கியச் சம்பவங்கள் நடந்துவிட்டன. டாக்டர் க்ளாராவின் குழுவிற்கு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டது. டாக்டர் க்ளாராவால் அந்த நாட்களை மறக்கமுடியாது. இரவுக்கும் பகலுக்கும் வித்தியாசம் காண முடியாமல் கழிந்த நாட்கள் அவை; உறங்குவதற்கும் உண்ணுவதற்கும் மறந்துபோன நாட்கள் அவை. செண்டரியன்களோடு தொடர்பு கொண்ட போது, அவர்கள் சூரியக்குடும்பத்திற்கு வர மறுத்துவிட்டனர். ஆனால், மனிதர்களுக்கு உதவத் தயாராக இருந்தனர் என்பது உறுதி செய்யப்பட்டது. செண்டரியன்கள் அனுப்பிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கிய விண்கலம் ப்ரோக்சிமா செண்டரியன் கிரகத்தைச் சென்றடைந்தது. செண்டரியன் கிரகத்திற்குச் சென்ற விண்வெளி வீரர்கள் அனுப்பிய தகவல்கள், படங்கள், வீடியோக்கள் ஆகியன துல்லியமாக செண்டரியன்களைப் பற்றி விளக்கின. இது விஞ்ஞானி ரிச்சர்ட் எதிர்பார்த்தது போலவே இருந்தது.
இன்றுதான் செண்டரியன் கிரகத்திற்குச் சென்று திரும்பிய விண்வெளி வீரர்களுடன் நேரடி உரையாடல் நடக்கப்போகிறது. அதற்குத்தான் டாக்டர் க்ளாரா வந்திருக்கிறாள்.கனத்த அமைதிக்கு நடுவே, நோர்டன் பேசினார். அவருடைய உரை, செண்டரியன்களை நம்பலாம் என்று ஆணித்தரமாகக் கூறியது. அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரின் முக்கியப் பொறுப்பாளர்கள், விஞ்ஞானிகள் குழாம் ஆகியோர் முக்கிய முடிவை எடுக்க வேண்டிய நேரத்தை சூழ்நிலையில் இருந்தனர். இச்சந்திப்பில் செண்டரியன்களின் மூலம் நாம் பெற்ற அதிசிறப்பு வாய்ந்த விண்கலத்தைச் சுட்டிக்காட்டினார் நோர்டன். மிகப்பெரிய தொழில்நுட்பத்தை நமக்கு செண்டரியன்கள் நமக்குக் கொடுத்திருக்கின்றனர் என்பதை மறுக்க முடியாது என்று என்று நோர்டன் கூறினார். சூரியக் குடும்பத்திற்குள் அவர்கள் வர விரும்பவில்லை. அவர்களுடன் நாம் இணைந்து செயல்பட்டால் நம்முடைய தொழில்நுட்பம் மிகப்பெரிய உச்சத்தை அடையும் என்று நோர்டன் வலியுறுத்தினார்.
மூன்று நாள் கலந்துரையாடலின் முடிவில் செண்டரியன்களுடன் கூட்டுறவு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது.
கடைசியாக 2042 மார்ச் மாதம் 12 -ஆம் தேதி அமெரிக்க அதிபர் வேற்று கிரகத்துடன் தொடர்பு கொண்டு அந்த முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டதை பொது மக்களுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். செண்டரியன்கள் அறிவுக்கூர்மை படைத்தவர்கள் ஆனால் ஆபத்தானவர்கள் இல்லை என்று புரொபசர் கூ தொலைக்காட்சிகளில் சிங்கப்பூரர்களுக்கு விளக்கினார். செண்டரியன் கிரகத்திலிருந்து அனுப்பப்பட்ட படங்கள், காணொளிகள் வலைதளங்களில் பகிரப்பட்டன. பூமி செண்டரியன்களுடன் தொடர்பு கொண்டால் எந்த அளவிற்குப் போக்குவரத்து, மருத்துவம், கல்வி, வாழ்க்கைமுறை உள்ளிட்டவை மேம்பாடடைய வாய்ப்பிருக்கிறது என்பது மக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. இஸ்தானாவில் விஞ்ஞானிகளுக்கு மிகப்பெரிய விருந்து வைக்கப்பட்டு முக்கிய விஞ்ஞானிகள் கௌரவிக்கப்பட்டனர்.
*******
2085 ஆம் நவம்பர் மாதத்தின் மாலைப் பொழுது இது. வெயிலின் ஆதிக்கத்திலிருந்த பொழுதை மேகம் சூழ்ந்துகொண்டிருந்தது. அவ்வளவுதான் ....சற்றுநேரத்தில் கனமழை பெய்யத் தொடங்கியது. அந்த மழை ஆலங்கட்டி மழையாக வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. பால்கனியில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தாள் க்ளாரா. இப்போதெல்லாம் முன்பிருந்தது போல் சிங்கப்பூர் இல்லை. சிங்கப்பூர் மட்டுமல்ல பூமி முழுவதுமே மாறிவிட்டது. தீர்க்க முடியாத நோய்கள் தீர்க்கப்பட்டு மக்களின் ஆயுட்காலம் நீட்டிக்கப்பட்டுவிட்டது. இப்போதெல்லாம் கர்ப்பப்பையில் பெண்கள் குழந்தைகளைச் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. க்ளாராவின் மருமகள் கூட ஸ்டர்ம் செல் மூலமாகத்தான் தான் விரும்பிய பெண் குழந்தையை ஆர்டர் செய்தாள்.
‘க்ளாரா…மழை பெய்கிறது பார். உள்ளே வா’ என்றார் கணவர் ச்சுவா.
‘இங்கே வந்து பாருங்கள், ஆலங்கட்டி மழை பெய்கிறது’ என்றாள் க்ளாரா. ‘நீ என்ன இன்னும் சிறுபிள்ளையா? இன்னும் அரை மணி நேரத்தில் கைவன் வரப்போகிறாள். அவளுக்குத் தின்பண்டம் ஏதாவது தயார் செய்’ என்றார் ச்சுவா. அப்போது அந்த ஏதெரா (நவீன திறன்பேசி) சிணுங்கியது. அதன் விசையை முடுக்கினாள் க்ளாரா. பல வருடங்களுக்கு முன்னால் SSN – இல் பணியாற்றிய போது அவளுடைய குழுவில் இருந்த முகில் மறுமுனையில் இருந்தான். அவனோடு அவள் பேசி சில வருடங்கள் ஆகிவிட்டன என்றாலும், அவன் இயல்பாக இல்லை என்பதை அவனுடைய குரலின் தொனியில் தெரிந்து கொண்டாள் க்ளாரா.
‘ஒரு முக்கியமான விஷயம். உங்களுடைய உதவி தேவைப்படுகிறது’ என்றான் முகில்.
‘சொல்லு முகில்’ என்றாள் க்ளாரா.
‘என்னால் ஏதெராவில் சொல்ல முடியாது. விஷன் எஸ்பிளனேட் வாருங்கள். மிக அவசரம்’ என்றான் அவன்.
‘இன்னும் சிறிது நாட்களில் தோன்றப் போகும் ப்ளூ மூன் பூமிக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கேள்விப்பட்டேனே. அது தொடர்பாகவா?’ என்று தான் யூகித்ததைக் கேட்டாள் க்ளாரா.
‘விளக்கமாகச் சொல்கிறேன், நேரில் வாருங்கள்’ என்றான் முகில். அவனுடைய குரல் உடைந்து ஒரு விதமான பதற்றத்துடன் இருப்பதாக க்ளாராவுக்குத் தோன்றியது.
‘சரி’ என்றாள் க்ளாரா. இத்தனை வருடங்களுக்குப் பின் முகில் எதற்காகத் தன்னைத் தொடர்பு கொள்கிறான் என்பது அவளுக்குப் புதிராக இருந்தது. ச்சுவாவிடம் விஷயத்தைத் தெரியப்படுத்திவிட்டு வீட்டின் முகப்பில் நின்று கொண்டிருந்த தானியங்கிக் காரில் ஏறி முகில் குறிப்பிட்ட முகவரியைப் பதிவிட்டாள். கார் பழைய ஆர்சர்ட் சாலையை நோக்கிப் பறக்கத் தொடங்கியது.
அவள் சில நிமிடங்களில் முகில் குறிப்பிட்டிருந்த இடத்தில் இருந்தாள். அப்போதுதான் கவனித்தாள் ஏதெரா வேலை செய்யவில்லை. அதனை மீண்டும் முடுக்கிவிட முயற்சி செய்தாள்.
‘டாக்டர் க்ளாரா…. ஏதெரா வேலை செய்யாது. இந்த அறையின் தொழில்நுட்பம் அப்படி. உட்காருங்கள்’ என்றான். அவள் அமர்ந்தபோது அவளுக்கு முன்னதாகவே இன்னும் சிலர் அங்கு இருந்தனர்.
‘நான் முக்கியமானவர்களை அல்ல.... நம்பிக்கையானவர்களை மட்டுமே அழைத்திருக்கிறேன்’ என்று பீடிகையுடன் பேச்சைத் தொடங்கினான் முகில்.
அவன் பேசிக்கொண்டே இருந்தான். ஒரு சில நிமிடங்கள் கடந்த பிறகு....கதகதப்பாக இருக்கும்படி அமைக்கப்பட்டிருந்த அந்த அறையில் அமர்ந்திருந்தவர்களின் விரல் நுனிகள் கூட சில்லிடத் தொடங்கின. முகில் தொடர்ந்து விளக்கிக் கொண்டிருந்தான், ‘நாம் இப்போது இந்தச் சொகுசான வாழ்க்கைக்குப் பழகி விட்டோம். நம்மால் சுயமாக, தனித்து இப்போதுள்ள தொழில் நுட்பக் கருவிகளை உருவாக்க முடியாது. நம்மிடம் செண்டரியன்கள் கொடுத்த மூல மாதிரிப் படிவத்தை வைத்துதான் எல்லாவற்றையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். செண்டரியன்கள் அறிவுக்கூர்மை வாய்ந்தவர்கள் என்பது தெரியும். ஆனால், வார்த்தைகள் எதுவும் இல்லாமலேயே டெலிபதி மூலமாக எதையும் அறிந்து கொள்ளக் கூடியவர்கள் என்பது நமக்குத் தெரியாததால்தான் இப்போது இந்தப் பிரச்சனையை நாம் சந்தித்து இருக்கிறோம். இந்த டெலிபதி மூலமாக நாம் வாழும் பூமியை செண்டரியன்கள் கட்டுப்படுத்துவதை நம்மால் அனுமதிக்க முடியாது. அதனால்தான்...’
‘என்ன இது, செண்டரியன்கள் பூமியை அடிமைப்படுத்த விரும்புகின்றனரா?’ ஒரு விஞ்ஞானி கேட்டதைப் பொருட்படுத்தாத முகில் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தான். ‘டெலிபதி மூலம் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவருவது எப்படி சாத்தியமாகும்?’ என்று கேட்டார் க்ளாராவிற்கு அருகில் அமர்ந்திருந்தவர்.
‘டெலிபதி என்பதைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால் தூரத்திலிருந்து கொண்டே ஒரு நபரின் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது. உதாரணமாக முக்கியமான உலகத் தலைவர்களின் அரசியல் முடிவுகளைக் கூட செண்டரியன்கள் தான் நினைக்கும்படி கட்டுப்படுத்த முடியும். வார்த்தைகளால் தொடர்பு கொள்ளாமலேயே, அவர்கள் நினைப்பதைச் செய்ய வைக்க முடியும். இதனால், உலக அரசியல், கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைத் தாங்கள் நினைக்கும்படி நடத்திச் செல்வார்கள்....’ என்று மூச்சுவிடாமல் தொடர்ந்து விளக்கிக் கொண்டிருந்தான் முகில்.
டாக்டர் க்ளாராவுக்குப் புரிந்தது. கிட்டத்தட்ட 90 சதவீதம் நாம் செண்ட்ரியன்களின் கட்டுப்பாட்டில் சென்று விட்டோம்; அதிலிருந்து பூமியை மீட்கத்தான் நம்பிக்கையானவர்களை முகில் இப்போது அழைத்திருக்கிறான் என்று. சந்திப்பு முடிய நள்ளிரவைத் தாண்டி விட்டது. வீட்டிற்கு வந்த க்ளாராவுக்குத் தூக்கம் வரவில்லை. ஆழ்ந்த சிந்தனையுடன் வாசலில் இருந்த பூந்தொட்டியின் அருகில் நின்று கொண்டிருந்தாள். தூரத்தில் நிலா எந்தவிதக் கவலையுமற்றுக் காய்ந்து
கொண்டிருந்தது. நம்மை விட பலமடங்கு புத்திசாலியை நம்மால் வென்று விட முடியுமா?
அடுத்த வருடம் தோன்றப் போகும் ப்ளூ மூனில், இப்பூமி அடிமையாக்கப்பட்டுச் சுழலுமா? அல்லது சுதந்திர பூமியாகச் சுழலுமா? அவளுக்கு விடை தெரியவில்லை. ஆனால், அது அந்த நிலவுக்குத் தெரிந்திருக்கும்.