கருமையிட்ட யாமம் தொடங்கிய நிலாப் பொழுதினில் கடலலைகள் சீற்றத்தில் கரையில் பாய்ந்தன. கவலையற்றுக் கூக்குரலிட்டு காற்று சுதந்திரமாகத் திரிந்தன. படகோட்டி ஓசையைத் தாழ்த்தி தோணியில் அமர்ந்தவர்களை திரும்பிப் பார்த்து, "எல்லோரும் ஏறிட்டீங்களா?" சந்தேகமாகக் கேட்டார். தோணியில் பீதியுடன் உட்கார்ந்திருந்த முதியவர் பால்வண்ணன் "எல்லோரும் இருக்கோம். நீ சீக்கிரம் போப்பா. யார் கண்ணிலும் பட்டுவிட்டால் சிக்கலாகிவிடப் போகிறது. இந்தப் பாழாப்போன போராலே மொத்தத்தையும் இழந்திட்டோம். மிஞ்சியிருக்கிற இந்த உயிரை எப்படியாவது கரை சேர்த்து எங்கேயாவது பிழைக்க வேண்டியதுதான்" உடைபட்ட குரலில் அதற்கு மேல் பேச்சின்றி விக்கித்து வடிகின்ற நீர்த்துளிகள் உருண்டு நெஞ்சுச் சட்டையில் பதுங்கின.
உள்நாட்டில் போர் மூண்டதில் குண்டுகள் ஓய்வில்லாமல் வெடித்தன. வன்முறையின் பலிகடாவாக அப்பாவிகளின் உயிர்கள் துச்சமாக காவு வாங்கப்பட்டது. மண்ணெல்லாம் இரத்தக்கறை சாயமிட்டு, கொடூரத்தைக் கொப்பளித்து அச்சுறுத்தின. மறுநொடி அங்கிருப்பவர்களுக்கு நிச்சயமற்றதாகிக் கரைந்தது. தன்னைத்தானேக் காப்பாற்றிக் கொள்ள நாலாபக்கமும் திக்கற்று சிதறினர். ஒருவித அச்ச மணியோசை இதய அடியில் வலுவாக அடித்தது. கள்ளத்தோணியில் அண்டைதேசம் அடைக்கலம் நீட்டும் நம்பிக்கையில் கடலில் கட்டுமரம் தவழ்ந்தது.
எதிலும் மனம் ஒன்றாமல் தோணியின் ஓரத்தில் கால்முட்டியில் முகம் புதைத்து உள்ளுக்குள் எத்தனித்த ஏக்கத்தை முடக்கி சோகமே குடியேறிய மொத்த உருவமாகக் காட்சியளித்தாள் செந்தாமரை. இரண்டு வயதான அவளுடைய குழந்தை கலவரத்தில் காணாமல் போய்விட்டது. குழந்தை குறித்த துப்பறிந்த தகவல்கள் தோணியில் ஏறும் முன் வரை காதுகளுக்குக் கிடைக்கவில்லை. செழிப்புகள் மிகுந்து வனப்பும் வசதியுமாக வாழ்ந்த செந்தாமரை உறவுகளும் உடைமைகளும் கண்ணிமைக்கும் மாத்திரைப் பொழுதில் களவாடிப் போகுமென்று சிந்தையில் தவறியும் உதித்ததில்லை. உயிரை உடல்கூட்டில் அடைத்துத் தப்பிவிடலாம் என்று முனைப்போடு வன்முறையாளர்கள் பார்வையில் மறைந்து நொடியும் இளைப்பாற நேரமின்றி ஓட்டமெடுக்கையில் கயவனின் தோட்டாக்குச் செந்தாமரையின் கணவன் சரணடைந்து கீழேச் சரிந்தான். அருகில் நின்ற செந்தாமரை, கணவனின் வெற்றுடலில் முகம் பொதித்து கவலை உருக்கி வாடிய போது உறவினர் அவளை அவசரமாக அங்கிருந்து கிளப்பினர். நடைபாதையில் குண்டுகளைப் பொதித்து வைத்ததில் சிலர் உடல் சிதறினர். அமைதி சீர்குலைந்து சராசரி மக்களின் அன்றாட வாழ்க்கை கேள்வியானது. அனைத்தும் வெறுமையானது.
தோணியின் வேகம் இன்னும் அதிகரிக்கப்பட்டது. பால்வண்ணன் இரண்டு உருண்டை வடிவ மாத்திரைகளைத் தண்ணீர் குடித்து விழுங்கினார். அவருக்குக் காய்ச்சல் தொட்டுப் பார்த்தால் கைசுட்டுவிடும் அளவுக்கு இருந்தது. பக்கத்தில் ஏதுமறியாமல் தூங்கிக் கொண்டிருந்த அவருயை பேத்தி மேலும் கீழும் முரண்பட்டுச் சீறும் அலையின் போக்கில் தோணி பயணப்பட கண் விழித்தாள். தாத்தாவை நிமிர்ந்து, "நாம எங்கே போறோம் தாத்தா? அம்மா அப்பா எங்கே?" பேத்தியின் தலையை வருடியவாறே தாத்தா "நாம பக்கத்துல சுத்திப்பார்க்கப் போறோம் கண்ணு. அம்மா அப்பா பின்னாடி வந்துக்கிட்டு இருக்காங்க" என பேத்திக்கு ஆறுதல் மொழிந்தார். தன் தாய் தந்தையை இழந்ததையும் அறியாத பேத்தியின் மழலைத்தனத்தை எண்ணி உள்ளுக்குள் நீர் கசிந்தது. மீண்டும் குழந்தை சுருண்டு ஒருசாய்ந்து படுத்தாள். செந்தாமரை நடப்பதையே வெறித்தாள். அவளுக்கு அப்படியே அலைகடலுக்குள் தாவி உயிரை மாய்த்துவிடலாமா என்று எதிர்மறை எண்ணம் தோன்றி மறைந்தது. எல்லாம் கைநழுவி போன பின் இனி யாருக்காக உயிர் பயணப்படுவது என்று வினவப்பட்டன.
செந்தாமரை கண்களை இறுக்கி இமையால் விலங்கிட்டாள். உற்றவனாகிய கணவன் மறைந்து விட்டான். குழந்தை என்ன செய்கிறதோ? நினைக்கும் போதே நெஞ்சம் பொசுங்கியது. உறவினர் ஒருவர்தான் தோணியில் வற்புறுத்தி ஏற்றிவிட்டார். ஆயிரம் ஈட்டிகள் பாய்ந்து காயப்படுத்துவதை போன்ற வலி. குரல் நாளங்கள் உசுப்பேறி வாய்விட்டு விம்மி அழுதாள். தோணியின் அமைதியை உடைத்து அவள் அழுகை மேலிட்டது. பால்வண்ணன் தழுதழுத்த ஓசையில் "அழாதம்மா செந்தாமரை! அழாதே! நடந்தது முடிந்ததாக இருக்கட்டும்! இனிமேல் நமக்கு நல்லதாகவே நடக்கட்டும்!" அவர் வார்த்தைகளைக் கொட்டும் போதேத் தூரத்தில் கடலில் பெரிய இராட்சத அலை மலை போல் எழும்பி பார்ப்போரை மிரள வைத்து சற்று ஆசுவாசபடுத்தி தணிந்து கடலோடு நீராய்ச் சங்கமித்தது. தோணியில் இருப்பவர்களுக்கு ஒரு கணம் கலக்கம் கோலோச்சியது.
பால்வண்ணனுக்கு காய்ச்சல் இன்னும் குறைந்ததாகத் தெரியவில்லை. கடலின் நடுவில் பயணிப்பது இன்னும் குளிர்ச்சியை அதிகரிக்க உடல் நடுங்க ஆரம்பித்தது. வயோதிகம் அவரை இன்னும் பலவீனப்படுத்தியது. அவரின் நிலை கண்ட செந்தாமரை தன்னுடைய பையினில் வைத்திருந்த கனமான இளஞ்சிவப்பு போர்வையை மடிப்பு விரித்து, பால்வண்ணன் உடல் மேல் நன்றாக மூடினாள். பால்வண்ணன் போர்வையின் பிடிக்குள் ஒளிந்து குளிர் தணிந்தவராய் உணர்ந்து அப்படியேத் தூங்கிப் போனார். செந்தாமரை வாய் பிளந்து திறந்திருந்த தன்னுடைய பையை மூடுவதற்காக எடுத்தாள். பைக்குள் சிவப்புச் சட்டை அவளைப் பார்த்துக் கண் சிமிட்டியது. கையில் ஆதங்கத்தோடு அந்தச் சட்டையைக் குழந்தையைத் தூக்குவது போல் மென்மையாக வெளியில் எடுத்தாள். அவளின் குழந்தை உடையது. கண்ணீர் கன்னத்தின் மேல் கரைபுரண்டது. அந்தச் சட்டையை அணைத்தபடி கண் மூடினாள்.
தரைமட்டமாக பெயர்ந்து கீழ் விழுந்த வீடுகள். பூக்கள் தலையசைத்து மணம் பரப்பும் தெருவெல்லாம் இரத்த நாற்றம் மூக்கைப் பிடிக்க வைத்தது. அவ்வப்போது, உரசலாய்ப் பற்றி எரிந்த இனக்கலவரம் சமீபமாய் பூதாகரமாக வெடித்தது. சாதாரணமாய் ஊர்ப் பொதுக் குளத்தில்தான் பிரச்சினை ஆரம்பித்தது. இருதரப்பும் பயன்படுத்தும் நடுநிலை இடத்தில் குளம் வெட்டப்பட்டிருந்தது. நன்னீர் குளமாக, தாகத்தைத் தீர்ப்பதற்கும், குளிப்பதற்கும் மக்களோடு ஐக்கியமானது. இருதரப்பாலும் ஒற்றுமையாய் உபயோகத்திற்கு இருந்தாலும் பின்னர் அதீத பயன்பாடாலும் குப்பைகளையும் அருகே கொட்டத் தொடங்கியதில் குளம் குப்பைக்களமானது. அங்குதான் பிரச்சினைக்கு ஆணி அடித்ததாகிவிட்டது. எதிர்த்தரப்பினர் பெரும்பான்மை உடையவர்கள் என்பதால், அவர்களுக்குப் பணபலமும் ஆட்பலமும் பக்கப்பலமாக துணையிருந்தது. ஏற்கனவே, அவர்கள் மீது காழ்ப்புணர்வில் திரிந்த உள்ளூர்வாசிகள் எதிர்தரப்பினரோடு கைகோர்த்து அவர்களை துவம்சம் செய்ய முடிவெடுத்தனர். அவர்களின் அதிகாரத்தை எல்லா இடங்களிலும் கொடுங்கோல் ஊன்றினர்.
கல்வி பரப்பிகளான பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் கூட அத்துமீறல்கள் அரங்கேறமானது. பெண்களும் கொச்சைப்படுத்தப்பட்டனர். அரசாங்க உதவியும் கைக்குக் கிட்டவில்லை. இந்நேரத்தில்தான் எதிர்தரப்பினர் பலரும் இராணுவப் பயிற்சிக்குச் சேர்ந்தனர். சிறுபான்மையினர் அதிகம் வசிக்கின்ற பகுதிகளில் அணு மின் நிலையங்கள் கட்டப்போவதாகவும் அப்பகுதி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர், சீறிப்பாயும் தோட்டக்களோடு சிறுபான்மையினர் சீண்டப்பட்டனர். ஒரு கட்டத்தில் குண்டுகள் மண்ணுக்குள் நடப்பட்டு பயங்கரத்தைத் தூண்டின. ஒற்றை நாரில் கதம்பமாக தொடுக்கப்பட்ட மக்கள் உதிரிப்பூக்களாய்க் கிள்ளி வீசப்பட்டனர். இக்கட்டான இந்நேரத்தில் புலம் பெயர்தல்தான் இறுதி வழி என்று தீர்க்கமாக முடிவெடுத்து சரம் சரமாய் வாழ்வாதாரத்திற்குப் பிரிந்து படையெடுத்தனர்.
சீரான வேகத்தில் வந்த தோணி வேகம் குறைந்து நின்றது. படகோட்டி அதை இயக்குவதற்கு முயற்சித்தார். பௌர்ணமி வெள்ளொளியில் நீலக்கடல் பிம்பம் ரசனையாக பிரதிபலித்தது. பத்து நிமிட இடைவேளையில் தோணியை முன்னோட்டினார் படகோட்டி. செந்தாமரை இரவு நேர மலராக, கண்ணிதழ்கள் கசங்கி வாடியிருந்தாள். மூன்று நாட்களைத் தாண்டிய பட்டினி என்பதால் வயிறு இரைந்து சத்தம் போட்டது. கட்டுமரத்தில் மூலையில் குலுங்கிய தண்ணீர் புட்டி பார்வையை உறுத்த செந்தாமரை தாகம் தணித்தாள்.
இன்னும் கொஞ்ச நேரம் கடந்திருக்கும். செந்தாமரை லேசாகக் கண் அசந்திருப்பாள். தோணி மறுமுறை கடலில் சத்தமின்றி நின்றது. அவர்களுக்கு முன் வந்தடைந்த பயணிகள் சிலர் நடுக்கடலில் தத்தளித்தனர். மணல் திட்டில் நின்றபடி உதவிக்கு யாரும் வருவார்களா என்று எதிர்பார்த்த வண்ணம் கவலை தோய்ந்த முகமாக வாடி நின்றனர்.
அதில், ஒரு பெண் கதறினாள். உடன் வந்த தனது வயதான தாய் மூச்சு பேச்சின்றி கிடப்பதாகவும், தாயைக் காப்பாற்ற வேண்டும் என்றும் கூட்டத்தில் முறையிட்டாள். வயதான அம்மாவைப் பரிசோதித்தவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். செந்தாமரை இருந்த தோணியில் பாதிப்பேரை ஏற்றினர். பிணத்தைக் கடல் வாரி சுருட்டியது. பின்னால், வேறு தோணி தொடர்வதாகவும் அதில் மீதிப் பேரை ஏறும்படியும் வலியுறுத்தினார்.
முன்பிருந்தை விட சுமையோடு தோணி புறப்பட்டது. வைகறை துலங்கியிருந்தது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் கரை தென்பட்டது. பறவைகளின் இன்னொலி வரவேற்றன. ஒவ்வோருவராக இறங்க ஆரம்பித்தனர். பால்வண்ணன் பேத்தியுடன் இறங்கினார். செந்தாமரை கண் மூடித் தூங்கிக் கொண்டிருந்தாள்.
பால்வண்ணன் அவளை எழுப்பினார். செந்தாமரை உதிர்ந்திருந்தாள்.