கடையில் ஏகப்பட்ட வாடிக்கையாளர்களின் கூட்டம்.
அவர்கள் கேட்கும் பொருட்களை எடுத்துக் கொடுப்பதிலும், பணத்தை வாங்கி கல்லாவில் போடுவதுமாக மும்முரமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தான் தெளசிஃப்.
அவ்வளவுப் பெரிய பலசரக்கு கடைக்கு ஒரே ஒரு பையனை உதவிக்காக வைத்திருந்தான். “டேய், வேடிக்கைப் பார்க்காதே. சுறுசுறுப்பா இரு. அவங்களுக்கு என்ன வேணும்னு கேள்.” என அவனை அதட்டிக் கொண்டிருந்தான்.
ஒரு கஸ்டமருக்கு மீதி சில்லறை கொடுக்கும்போது ஐந்து ரூபாய் நாணயம் ஒன்று தவறி சாக்கடையில் விழுந்தது.
அதே அந்தப் பையனின் கையிலிருந்து விழுந்திருந்தால் அவனுக்கு ‘செம’ திட்டு விழுந்திருக்கும். நழுவியது அவன் கையிலிருந்து ஆச்சே, அதனால் பேசாமல் வேறு நாணயத்தை எடுத்துக் கொடுத்தான் தெளசிஃப்.
வந்தால் ஒரேயடியாக கூட்டம் வந்து விடுகிறது. இல்லையென்றால் ஒரு அரைமணி நேரத்துக்கு ஈ ஓட்டவேண்டியதாக இருக்கும்.
கடைத்தெருவின் கடைசியில் இருந்தது பள்ளிவாசல். அதிலிருந்து கணீரென ஒலித்தது மக்ரீபு தொழுகைக்கான பாங்கு.
தெளசிஃப் செவிகளில் அது விழுந்தாலும் அது பற்றி அவன் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு கடை வெறிச்சோடிவிட்டது.
சாவகாசமாய் அமர்ந்த தெளசிஃப், எதிர்த்த டீ கடையில் இரண்டு டீ வாங்கிவர பையனைத் துரத்தினான்.
டீ வந்ததும் ஒன்றை எடுத்துக் கொண்டான். பையனும் ஒரு கிளாசை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான்.
தேநீர் அருந்தி முடித்ததும், ஞாபகமாய், “டேய், சாக்கடையில் ஒரு அஞ்சு ரூபா விழுந்துருச்சு பாரு. அதை எடு.” என்றான் தெளசிஃப்.
பையனும் அந்த நாணயத்தை எடுத்து தண்ணீரில் கழுவி கல்லாவில் போட்டுவிட்டு கைகளைக் கழுவிக்கொண்டு வந்து மீண்டும் அமர்ந்து கொண்டான்.
*******
நான்கு கடைகள் தள்ளி, முபாரக் ஃபேன்ஸி ஸ்டோரில் நுழைந்த அந்த நான்கு பேர் அடங்கிய குழுவைப் பார்த்ததும், “வந்துட்டீங்களா? இதுல ஒண்ணும் குறைச்சல் இல்ல. ஜரூரா வந்துருவாங்களே.” என்று சலித்துக் கொண்டான் தெளசிஃப்.
மார்க்க நல்வழிக்கு வருமாறு அழைப்பு விடுக்கும் தப்லீக் குழுதான் அது.
சிறிது நேரத்தில் வந்துவிட்டார்கள்.
“அஸ்ஸலாமு அலைக்கும்”
“வ அலைக்கும் ஸலாம்” என்றான் வெறுப்பை மறைத்தவனாக
“மக்ரீப் தொழுகையில் உங்களைப் பார்க்கலையே..?” என்று ஒருவர் ஆரம்பித்தார்.
“அந்த நேரத்துல ஏகப்பட்ட கிராக்கி. எப்படி விட்டு வர்றது?” என்றான்.
“வேலைக்காரப் பையன்தான் இருக்கானே பாய்?”
“இவனால சமாளிக்க முடியாது”
“ஒரு அஞ்சு நிமிஷத்துல அப்படியொண்ணும் பெரிசா வித்தியாசம் வந்துடப் போவதில்லை.
தொழுவது நம் கடமையல்லவா?”
“நானாவது வியாபாரத்துல பிஸியா இருக்கேன். வேலைவெட்டி எதுவும் இல்லாம சும்மா பொழுதைப் போக்கறவங்களை அழைக்கலாமே அவங்களையெல்லாம் விட்டுட்டு இப்படி யாரு நாலு காசு சம்பாதிக்கறாங்களோ அவங்க பின்னால ஒட்டிக்கிறீங்க?”
தெளசிஃபின் வார்த்தைகளில் எரிச்சல் எட்டிப் பார்த்தது.
“இதோ பாருங்க பாய், ஒரு முஸ்லீமைப் பார்த்து, ‘தொழ வாங்க’ன்னு அழைக்கறது எங்களுக்கேக் கூச்சமாத்தான் இருக்கு. இது எப்படி இருக்குன்னு சொன்னா, உங்களைப் பார்த்து, ‘வேளாவேளைக்கு ஒழுங்கா சாப்பிடுங்க’ன்னு சொல்ற மாதிரி இருக்கு. மூணு வேளை சாப்பாடு எவ்வளவு முக்கியமானதோ அதுபோலத்தான் ஐவேளைத் தொழுகையும் கட்டாயக் கடமையாக்கப்பட்டிருக்கு, ஒவ்வொரு முஸ்லீமுக்கும். சாப்பாடு, வியாபாரம் இவற்றிலிருந்து தவறாத நீங்க, தொழுகை என்ற கடமையிலிருந்து தவறலாமா?”
“எனக்கு நேரம் கிடைக்கும் போது தொழுதுக்கறேன்”
‘ஆளை விட்டால் போதும்’ என்கிற ரீதியில் இருந்தது தெளசிஃபின் பதில்.
வந்தவர்கள் விடுவதாய் இல்லை..
பலவாறு சொல்லிப் பார்த்தார்கள்.
“இதோ பாருங்க, நான் ஒரு முஸ்லீம். எனக்குத் தெரியும். நான் நேரத்துக்குத் தகுந்த மாதிரி தொழுதுக்குவேன்.. நீங்க வேறு ஆளைப் பாருங்க.” என்றான் தெளசிஃப்.
“நீங்க ஒரு முஸ்லீம்தான். நாங்க மறுக்கலை.. ஆனால், மதிப்பிழந்த முஸ்லீம்.” என்று ஒருவர் சொல்ல, ஆத்திரம் தலைக்கேறியது தெளசிஃபுக்கு.
“என்ன உளர்றீங்க? நான் மதிப்பிழந்த முஸ்லீமா?”
சூழ்நிலையின் உக்கிரத்தை உணர்ந்த ஒருவர் உடனேக் குறுக்கிட்டார்:
“ஆத்திரப்படாதீங்க பாய். நான் சொல்வதைக் கொஞ்சம் கவனமாய்க் கேளுங்க. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு நாணயம் உங்க கை தவறி சாக்கடையில விழுந்துருச்சு. அதை நீங்க மீண்டும் எடுத்துக் கழுவி வெச்சுக்கிட்டீங்க. அதை நான் கவனிச்சுக்கிட்டுத்தான் இருந்தேன். சாக்கடையில் கிடந்தப்ப அதுக்கு ஒரு மதிப்பும் இல்லை. ஆனால்,, அதைக் கழுவி மீண்டும் கல்லாவுல போட்டால், அதனுடைய மதிப்பு மாறாமல் மீண்டும் அதே நிலைக்கு வந்துடுது. அதைப் போன்றுதான் முஸ்லீம்களாகிய நாமும் இருக்கிறோம். நாம் முஸ்லீம்கள்தான். சந்தேகமே இல்லை. ஆனால், மதிப்பிழந்த முஸ்லீம்கள். நமக்கென்று விதிக்கப்பட்டிருக்கும் கடமைகளிலிருந்து தவறிப்போன முஸ்லீம்கள். மீண்டும் நம்மை நாமே கழுவிக் கொண்டு வந்தால் மதிப்புமிக்க முஸ்லீம்களா மாறலாம். இது நிச்சயம். அதைத்தான் என் நண்பர் உங்களுக்கு விளக்க முற்பட்டார். நீங்க அதைத் தப்பா எடுத்துக்கக்கூடாது”
அவருடைய விளக்கத்தைக் கேட்டு ஆடிப்போனான் தெளசிஃப்.
அவர் சொல்வதில்தான் எவ்வளவு உண்மை ஒளிந்திருக்கிறது? தொடர்ந்து இன்னொருவர் பேசினார்:
“தொழுவது நம் ஐவேளைக் கடமைகளில் ஒன்று. அதில் பரகத்தும் அடங்கி இருக்கு. நீங்க மட்டும் தவறாமல் தொழுது பாருங்கள். அதனால் விளையும் நன்மைகளை நீங்களே கண்கூடாகப் பார்ப்பீங்க. நாங்க புறப்படறோம். உங்க மனசைப் புண்படுத்தற மாதிரி பேசி இருந்தா மன்னிச்சிருங்க பாய். இறைவன் நம் எல்லோருக்கும் நல்லறிவை வழங்குவானாக.. ஆமீன். அஸ்ஸலாமு அலைக்கும்”
அவர்கள் கிளம்பிவிட்டார்கள். ஆனால்… ஒரு மாற்றத்தை உண்டாக்கக்கூடிய அந்த பாதிப்பு நீண்ட நேரம் அவன் மனதில் நிலைத்திருப்பதை உணர்ந்தான் தெளசிஃப்.