ஆழ் மனசுல ஒருவிதமான கலக்கம்... துக்கம்... பயம்... இன்னைக்குக் காலையில வந்த கலக்கமான்னா, அதான் இல்ல... பல வருசமாவேக் கருவண்டாகத் துளைச்சு மனசை உடம்ப இயங்க விடாமா ஆட்டிக் கொண்டிருந்தது. என்னன்னு யார்கிட்டயும் சொல்லவும் முடியாம! கடந்து செல்லவும் முடியாம! கலகக் குரலை கேட்டபடியே... தினந்தினம் வேலையோட இயந்திரத்துடன் இயந்திரமாக.... இதுக்கு மத்தியிலே அப்பாவின் நினைவுகள் தூக்கத்துல கூட, நீங்காம மனசுக்குள்ள மல்லுக்கட்டி நிக்குது. அப்பா! எங்களை எப்பவுமே இயற்கையின் மொழியைச் சொல்லி சொல்லி ஆளாக்கி வளா்த்த உசுரு.
இந்த பூமில மொத்தம் மனுசப்பசங்க இரண்டே இரண்டு தான், ஒன்னு நல்லவன்... “அவனுக்கு எல்லாரும் நல்லா இருக்கனும்னு” எண்ணம் இருக்கும். இன்னொருத்தன் இதுக்கு எதிர்மாறா யோசிக்கிறவன்... “ நான் மட்டும் நல்லா இருக்கனும் நினைச்சாக் கூட ஒன்னும் இல்ல... இவன் அடுத்தவன் அழியனும்னு நினைப்பான் பாரு” இது போல நாம வாழவேக் கூடாதுன்னு, சொல்ற அப்பாவோட மண் கலந்த வாசகம்... வாசம்... மாமரத்துக் காத்துல கலந்து வரும்...
இந்த வாசமும் வாசகமும் கொஞ்ச நாளவே திரும்பத் திரும்ப மனசத் தொட்டு தொட்டுச் செல்லுது... அப்பா காத்தோடு கலந்து மறைஞ்சு பல வருசமாகியும்... அப்பாவின் நினைவுல மனசு கிடந்து புலம்பித் தவிக்கும் போதெல்லாம் அப்பத்தாவின் முகம் கனவுல வந்து வந்து நிழலாடுது... எங்க வீட்டுத் திண்ணையில என்னையத் தூக்கி வளா்த்த அப்பத்தா போல, எந்த ஒரு பாசக்கார ஜீவனும் இந்த பூமியில இனி பிறக்கப் போறது இல்ல...
பாசத்தோட பண்பையும் ஒரு ஓரமாச் சொல்லிக் கொடுத்து வளா்த்தவ... நீ மட்டுமே எல்லாத்தையும் சாப்பிடனும் நினைக்காத... உன்னச் சுத்தி இருக்கும் ஜீவனெல்லாம் பசியில்லாம இருக்கானு பார்த்துப்புட்டுதான்... ஒரு வா சாப்பாடு நீ சாப்பிடனும்... வள்ளலார் பத்தித் தெரியாத அப்பத்தா வாழ்க்கைப் பண்பாட்டை மூச்சாச் சொல்லிச்சொல்லி வளா்த்தா... ராசா என்று வாய் நிறைய, என் பேரைக் காட்டிலும் ஆத்தா கூப்பிடும் ஒத்த சொல்லு போதும்... உலகமே என்னோட காலுக்குக் கீழ தான்... என்னோட நலன் மட்டுமே, அவளது ராசா என்ற சொல்லில் கடைசி வரை இருந்தது... கடைசி மூச்சுக்காத்துலயும் ராசா முகத்த ஒரு தடவ பார்க்க முடியலயேன்னு ஏங்கியே... எங்கள விட்டுச் சாமியா மாறிப்போச்சு... எங்க அப்பத்தா மாரியம்மாள்...
இந்த நினைவுகளோடப் போராட முடியாம தோத்துப் போயி, நேரத்தை ஏற்படுத்தி அழகான வயலும், ஆறு ஓடும் வாய்க்காலும், உயரமா பல கதை சொல்லும் மரங்களும் தோப்புகளும் நிறைஞ்ச எங்க ஊா் நோக்கிப் பயணமானேன் 20 வருடத்திற்குப் பின்...
பல நேரம் கடந்து... பல தூரத்தில் இருந்த... எந்தன் ஊரின் வாசத்துடன் என் வீட்டின் நினைவலைகளுடன் மாமரத்து காத்துல அப்பாவின் மணமெல்லாம் மனதில் மணக்க வந்து சோ்ந்தேன். இதோ அம்மாங்கற அன்பு கிடைக்க முடியாம, நான் வளா்ந்த சிறிய வீடு, கேட்காமலே எல்லாமே கிடைக்கிற பெரிய மாளிகை.... காரணம் என்னோட அப்பா! அப்பா! மட்டுமே... பல கடினச்சூழலிலும் பெரிய படிப்பு படிக்க வைச்சு, கண்ணு குளிரப் பார்க்காமலேச் சென்று விட்ட அப்பாவின் நினைவுத் துக்கத்துல நிழலாடி நின்னேன்... ராசான்னு கூப்பிட நாதியத்த மனுசனா, சொந்தப் பூமியில கால் வைப்பது போல கொடும எதுவும் இல்லப்பா சாமி! என்று மாரியாத்தா சொல்லு தேடி அலைஞ்சது மனசு...
ஆறு ஓடிய வாய்க்காலும் கதை சொல்லி மரமும் தோப்பும் இருந்த இடத்தில் மிகப் பிரம்மாண்டமா ஒரு தொழில்நுட்பம் வளா்ந்து பூதமாக காட்சித் தர குழப்பத்தோடு, அருகே நின்ற சிறுவனை நோக்கி, என்னப்பா பள்ளிக்கூடம் போகல? என்று கேட்க, இப்பலாம் இங்க இருக்கும் பெரிசுக வயக்காடுக்கும் போகல! .... சிறுசுக பள்ளிக்கூடமும் போகல!... எல்லாரும் எப்ப ஊர விட்டு, உசுரோடு போவோமுன்னு இருக்காய்ங்க... ஆமா நீ யாரு.... எல்லாரும் கிளம்புனா நீ இங்க வர....
நான் பதில் சொல்ல வார்த்தையைத் தேடிய பொழுது, தூரத்தில் சொர்ணம்மா பாட்டி வீடு தெரிய ஓடோடினேன்.... என்னைப் பார்த்ததும் பாட்டி அடுத்த நொடி கூறி விட்டாள்.. மேலத்தெரு இராசப்பன் மவன் சின்ராசுதானப்பா நீ... உன் அப்பன் பொசுக்குனு உசுர விட்டுப் போயிட்டான்... நல்ல வேள நம்ம ஊரோட நிலையப் பார்க்கல... உன் அப்பத்தா சாவும் போது கூட, கடைசி வர என் ராசா வருவானு மூச்சுக்கு மூச்சு சொல்லிக்கிட்டேத்தான் போய் சோ்ந்துச்சுய்யா... நல்ல உசுரு... போவும் போது வானம் அழுது! அழுது! புலம்பில போயிடுச்சு...
நான்தான் இன்னும் இங்கன காத்துக்கிடக்கேன்... எப்படியாச்சுலும் இந்த மண் வாசனையிலே மூச்சு போயிடனும்னு .....என்று புலம்பித் தீா்த்தாள். பெரும் மூச்சுடன், வெறும் பத்து வருசத்துக்கு முன்னாடி வந்த இந்த பிசாசுக் கட்டிடம் காட்டுச் சிங்கம் போல வந்து நம்ம மக்க எல்லாத்தையும் காவு வாங்கி வவுத்துக்குள வச்சிக்கிடுச்சு... மனுசனுக்கு பணத்தாச அதிகமாச்சுதா... நீக்கு போக்கு இல்லாம விவசாய நிலத்த வித்துப்புட்டான்... இரத்த வெறி பிடிச்ச சிம்மம் போல வேகமாக வளா்ந்த இந்த கட்டிடம் வாழ வைக்கும்னு தப்பு கணக்கு போட்டுப்புட்டான்... அது என்ன வீட்டுப் பூனையா சொல் பேச்சு கேட்க... மனுச உசிர எடுக்குற கொடூர விலங்குனு தெரியாம ஊருக்குள்ள நுழைய விட்டுவிட்டான்... இப்ப எல்லாம் தினம் தினம் பலியாகி கா உசுரா வாழுதான்...
மீதி இருக்கும் கொஞ்ச மனுசங்களும் எப்ப கிளம்பலாம்னு கிடக்காவுக.... ஏதோ... கமிக்கலோ கெமிக்கலோ அத செய்யுற இடமாம்... மண்ணு வளத்த நாசமா ஆக்கினதோட மனுசங்களையும், பிறக்கிற சின்ன உசுருகளையும் காவு வாங்குது... மண்புழு கூடச் சாவக்கூடாதுன்னு மண்ணுல உழுத மனுசனெல்லாம்... மனுசங்க முழுசா மண்ணுல சாயுறதப் பார்க்க முடியமா கிளம்பிட்டாவுனுக... என்று சொர்ணம்மா பாட்டி எழுந்து போக... பாட்டியின் பின்னால் வெயிலில் இருளாகத் தெரிந்தது... நான் வெளிநாட்டில் பணி புரியும் வணிக நிறுவனத்தின் பெயா்...
நான் தொலைத்த என் அப்பத்தாவின், தந்தையின் மண் வாசத்தையும் வாசகத்தையும் தேடினேன்... என் மூச்சு பிறந்த என் பூமியிலே தான் இனி என் வாசம் என்று...