மழைக்காலம் தொடங்கி உழவு வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன. நாற்றங்காலில் விதைபாவுதலும், வரப்பு வெட்டுவதும் ,பரம்பு அடிப்பதுமாய் மனிதத்தலைகள் பூத்த விதை நெல்லாய் நீட்டிக் கொண்டிருந்தன. ஆடு,மாடு,எருமைகளுக்கு மேய்ச்சலாக இருந்த நிலங்களில் தண்ணீர் நிரம்பி வெண்கலச் சருவப் பானையாய் மின்னுகிறது. கால்நடைகளை காலாற விடுவதற்கு கண்மாய்க்கரையும்,மேகறைத் தோப்பும் தான் இருந்தது. கண்மாயில் தண்ணி நிறைந்து நெறமாத்த கர்ப்பிணியாய் இருந்தது. அலையடித்துக் கரையை மோதின. அரசாங்கத்திடம் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. உபரிநீரை கிருதுமாலில் திறந்து விட வேண்டுமென்று. பொன்னையனின் மேகறைத் தோப்புப் பச்சைப் பசேலென்றுக் குழைகளும் பாளைகளும் அப்பி மொய்த்துக் கிடக்கின்றன.
கிருதுமாலை ஒட்டி பொன்னயனின் தோப்பு இருந்தாலும், ஒரு சொட்டுத் தண்ணி உள்ளே வராத படியான மேடு. கிருதுமால் வாய்க்கால் தூர் வாராமல் செடி கொடிகளும், முள்ளும் மண்டி தூர்ந்துப் போய்க் கிடக்கின்றன. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குப் பிறகும் வாய்க்கால்களைக் கிராமச் சம்சாரிகளே தூர் வாரிச் சுத்தம் செய்து வந்தனர்.
எப்பொழுது அரசாங்கத்தின் கையில் சென்றதோ. அப்பொழுதிலிருந்து கண்மாய்களும்,வாய்க்கால்களும்,கலிங்குகளும்,மடைகளும் பராமரிக்காமல் கிடப்பில் கிடந்து போனது. அதிகாரிகள் கண்மாய் உடைந்து விடும் என்று தண்ணியைத் திறந்து விட்டனர். கிருதுமால் மூச்சுத் திணறித் திணறி ஒரு வழியாக தனது சேருமிடமான இராமநாதபுரம் கடலை நோக்கிப் போனாள்.
மழைக் காலங்களில் கால்நடைகளுக்கு இறை பாக்குறது மிகச் செரமம்.
“ஆடு,மாடு,இல்லாதவன் அட மழைக்கு ராசா, பிள்ளகுட்டி இல்லாதவன் பஞ்சத்துக்கு ராசா” ன்னு புலம்பிக் கொண்டு மூக்கனும் இருளாயிம் கண்மாய்க்கரைப் பாதை வழியாக மேகறைத் தோப்பிற்கு வந்தனர்.
சீலைப்புல்லும்,கொடியருகும், வரிக்கொரடானும், தோப்பு முழுவதும் பூத்துக் கிடந்தது. பொன்னயன் குடிசையைச் சுத்தி முள்ளு மொடிகளை வெட்டிச் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தான்.
“என்னடா மூக்கா, சம்சாரி வேலை இல்லையா”
“செத்த அசரக் கூடநேரமில்லை”
“ஒழவு வேலைகள் நடக்குது”
“மழையும் பேய்ஞ்ச வாக்குல இருக்கு”
”வீட்டுலக் கெடக்குற , வாயில்லாச் சீவன்கள் பாவம் பட்டினியாக் கெடக்கு, ரெண்டு எறை பாத்திட்டுப் போகத்தேன் வந்தேன்”
சரி சரி, கெழ மேற்கில அரைக்குறுக்கும் போட்டுட்டுப் புல்லுகளைப் புடுங்கிட்டுப் போங்க. எனக்கும் ரெண்டு காராம்புப் பசு கெடக்கு. மூக்கனும், இருளாயும் நாலு கட்டு அளவுக்குச் சேர்த்தனர். மேகறைத் தோப்பிற்கும் வீட்டிற்கும் ரெண்டு நடை வந்து போயினர்.
மேய்ச்சலுக்கு வேறு இடம் இல்லை. ஆடு,மாடு, எருமைகள் மேகறைத் தோப்பைப் பரம்படித்தன. பொன்னயனுக்குக் கோவம் உச்சிக்கு ஏறியது. அடித்து விரட்டி விரட்டிப் பாரத்தான் . சம்சாரிகளிடம் சண்டையும் போட்டான்.
“எங்க ஆடு, மாடு போடுற சாணியில ஒங்க தோப்புதேன் நல்லா காய் பிடிக்குது”
“வாயில்லாச் சீவன் உசரக் காப்பாத்துறதுக்கு வேற எங்க போறது”
பூராவும் நடுகையும் ஒழவுமாய்க் கெடக்கு. ஊரார்கள் பொன்னயனின் வாயை அடைத்தனர்.பொன்னயன் இரவோடு இரவாகத் தோப்பிற்குள் ஆங்காங்கேக் குழிகளைத் தோண்டினான். மண் பானைகளைப் பதித்தான். மண்பானை நிறைய வடித்த கஞ்சித் தண்ணியும் விஷமும் கலந்து ஊத்தி வைத்தான். இரக்கமற்ற கல்நெஞ்சுக் காரனாக மாறினான்.
ஒவ்வொரு நாளாக ஆடுகளும்,மாடுகளும்,பறவைகளும்,துள்ளத் துடிக்கச் சாக ஆரம்பித்தன. பொன்னயனின் தோப்பிற்குள் மேய்ச்சலுக்கு வரும் ஆடு, மாடுகள் மேய்ந்து விட்டு, இவன் விஷம் வைத்தத் தண்ணியைக் குடித்துவிட்டுக் கண்மாய்க்கரை, கிருதுமால் வாய்க்கால்,பெரிய வாக்கால், இப்படி ஆங்காங்கேச் செத்துக் கிடந்தன.
சம்சாரிகள் தேடித் தேடிப் போய்ப் பார்க்கையில் செத்து வெறைத்துக் கெடந்தன. ஆடுகளை நரி பிடித்துத் தின்னும், மாடுகள் எப்படிச் சாகிறது என்று ஊரார்களுக்குப் பெருத்தச் சந்தேகம் கிளம்பியது. கிளிகளும், காக்கைகளும், குயில்களும், மயில்களும் தொடந்துச் செத்த படியே இருந்தன. விஷத்தண்ணியைக் குடித்த மயில் ஒன்றுத் துடிதுடிக்கச் செத்தது பொன்னயனின் காலடியில். சுற்றி முற்றிப் பார்த்தான் யாரும் பார்க்கிறார்களா வென்று. யாருக்கும் தெரியாமல் முட்புதரை ஒட்டி தோப்பிற்குள்ளேக் குழியைத் தோண்டிப் புதைத்து விட்டான்.
“பொன்னையனின் மனைவி கிட்டிணம்மாள் நிறைமாதக் கர்ப்பிணியாக இருந்தாள். நிறை அமாவாசை இருட்டு. சாமக்கோடாங்கி ஒவ்வொரு வீடாகக் குறி சொல்லி வந்தான். கிட்டிணம்மாளும் பொன்னயனும் சட்டென முழித்து விட்டனர். கதைவை இறுக்கச் சாத்திவிட்டுச் சாமக் கோடாங்கியின் பாட்டைக் கேட்டனர்.
ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு மூன்று நிமிடங்களில் குறிசொன்ன சாமக்கோடாங்கி. பொன்னயனின் வீட்டின் முன்பு நின்று நெடுநேரமாக சொல்லியிருக்கிறான்.
“பாவத்தச் சொமக்கப் போறீங்க
வாயில்லாச் சீவன விட்டுடுங்க
இந்தப்பூமி ஒனக்குச் சொந்தமில்ல
வீட்டுலப் பெறக்கும் வாரீசுக எல்லாம்
இந்தப் பாவத்தைச் சொமக்கப் போகுது”
உடுக்கை அடித்துக் குறி சொன்னச் சாமக்கோடாங்கி, அடுத்த வீட்டிற்குச் சென்றிருக்கிறான்.
கிட்டிணம்மாளுக்கு நெஞ்சுப் பதைபதைத்து. ஒடம்பெல்லாம் வியர்வைப் பூத்தது. பொன்னயன் என்ன செய்வதென்று தெரியாமல், வீட்டிற்குள் சுத்திச் சுத்தி நடந்து வந்தான். விடிய விடியத் தூக்கம் வரவில்லை. லேசான விடியல் தட்டியது. விறுவிறுவென மேகறைத் தோப்பிற்கு வந்தான். குழி தோண்டிப் புதைத்து வைத்திருந்த மண்பானைகளும் அதில் கலந்து வைத்திருந்த விஷத்தையும் எடுத்து, குரல்வளை முட்ட ஓடிக் கொண்டிருக்கும் கிருதுமால் வாய்க்காலில் கரைத்து விட்டான்.
சாமக்கோடாங்கிகள் ராத்திரில குறி சொல்லிவிட்டுக் காலையில் தவசம் வாங்குவதற்கு வீடு வீடாக வருவார்கள். ராத்திரி குறி சொன்னச் சாமக்கோடாங்கியும் பொன்னையன் வீட்டிற்கு வந்தான். வீட்டில் கிட்டிணம்மாள் மட்டும் தான் இருந்தாள்.
“ஆத்தா,கோடாங்கி வந்திருக்கேன் ஏதாவது குடுங்க சாமி”
“பச்ச நெல்லைச் சொளகில் அள்ளிக் கொண்டு வந்துக் கோடாங்கியிடம் நீட்டினாள். கோடாங்கி வாங்கிக் கொண்டு, நான் போயிட்டு வாறேன் தாயினு” அடுத்த வீட்டிற்கு நகர்ந்தான்.
கிட்டிணம்மாள் பேறு காலத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்தாள். பொன்னயனுக்கு பயம் துரத்தித் துரத்தி வந்தது. சாமக்கோடாங்கி ராத்திரிலப் பாடியதை நினைத்து நினைத்துப் பார்த்தான். வீட்டில் யாரிடமும் சொல்லாமல் முண்டுவேலம்பட்டிக்குக் கெளம்பினான்.
முண்டுவேலம்பட்டிக் கோடாங்கி இந்தச் சுற்றுவட்டாரத்தில் பெயர் பெற்றவர். களவு, செய்வினை, துரோகம், துக்கம், கலியாணம் ஆகாதவர்களுக்குக் கலியாணம், பிள்ளையில்லாதவர்களுக்குப் பிள்ளை, குடும்பப் பிரச்சினை,வெள்ளாமை, புதிய வீடு கட்டுதல், தொழில் இப்படிப் பல்வேறுக் கோணங்களில் உள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். முண்டுவேலம்பட்டிக் கோடாங்கிச் சொல்லும் அருள் வாக்கினால். பட்டி தொட்டி, நகரத்துச் சனங்கள் வரிசையில் காத்துக் கிடக்கின்றன.
பொன்னையனும் வரிசையில் ஒக்கார்ந்திருந்தான். பதினொரு ரூபாய் காணிக்கை, வெத்தலை,பாக்கு, எலுமிச்சை கனி ஒன்று. ஆட்களும் வரிசையும் நகர்ந்தது. முண்டுவேலம்பட்டிக் கோடாங்கி மேல் காளியாத்தாவும் ,கருப்பணசாமியும், முனியாண்டியும் துடியாக எறங்கியாடும்.
ஒவ்வொருவரிடமும் , “நீ எந்தத் தெசையிலிருந்து வந்திருக்க, ஒங்க முப்பாட்டன் இவன் தான, ஒன்னக் காக்குறவன் இவன் தான” என்று உடுக்கை அடித்து, பிடித்த பிடியில் பாடுவார்.
பொன்னயன் தன்னுடைய குறியை வைத்தான்.
“சாமி ஓங்குறியை எடுப்பா, ஒனக்குப் பாரக்க முடியாதுப்பா… நீ செஞ்சப் பாவத்துக்குத் தலைமுறைத் தலைமுறையாக அதைச் சொமக்கனும். எடுய்யாக் குறியை... எடுய்யாக் குறியை...” என்று அதட்டினார்.
மொத்தக் கூட்டமும் பொன்னயனைப் பார்த்தது. பொன்னயன் மேலும் கீழும் பார்த்தான். சாமி நான் என்ன தப்பு செய்ஞ்சேன் என்று , எதுவும் செய்யாததைப் போல வெட்கிக் குறுகிப் போய் வீடு வந்தான்.
அப்போதுதான் வீட்டிற்கு வந்த மூக்கனிடம், தான் செஞ்சதைச் சொல்லி வருத்தப்பட்டான்.
அதைக் கேட்ட மூக்கன் படபடத்துப் போனான்.
“வாயில்லாச் சீவன்களை இப்படிக் கொல்லலாமா, அதுக என்னா செஞ்சுச்சு, தோப்புல அடையுறப் பாதிப்பறவை பூராம் செத்திருச்சு, வீட்டுக்கொரு ஆடு மாடுகள் செத்திருக்கு, நீங்க நல்லாயிருப்பங்களா? ஒங்க வாரிசு வெளங்குமா” குமறினான் மூக்கன்.
ஊரார்களிடம் வந்துச் சேதியைச் சொன்னான் மூக்கன். கூட்டம் கூடியது.
“மந்தையில்.யாரும் ஆடு,மாடுகளை மேகறைத் தோப்புக்கு மேய்ச்சலுக்குக் கொண்டு போகாதீங்க. நம்மூரு ஆடு,மாடுகள் செத்ததெல்லாம், சாமிகுத்தம்னு எல்லாரும் நெனச்சுக்கிட்டு இருக்கேங்க, அது சாமிக்குத்தம் இல்லை, பொன்னையன் மேகறைத் தோப்புல மண்பானையில வடிச்ச கஞ்சியோடு வெஷத்தைக் கலந்து வச்சு நம்மூரு வாயில்லாச் சீவன்களைக் கொன்னு குமிச்சிருக்கான்...”
கால்நடைகளைப் பறி கொடுத்தச் சம்சாரிகள் நொந்து போனார்கள்.
“அடச் சண்டாளப் பாவிப்பய மக்கா, புழுதியாப் போவடா, பொட்டலாப் போவடா, ஓன் வம்சம் நாசமாப் போகும்டா, வாயில்லாச் சீவன்கள், என்னா செய்ஞ்சுச்சு…?” என்று விம்மினார்கள்.
பொன்னையன் வீட்டிற்குள் போனான், அங்கு தென்னைமரத்திற்கு வாங்கி வைத்திருந்த அந்த மாத்திரையை எடுத்து வாயில் போட்டுத் தண்ணீரைக் குடித்தான்.
வயிற்றுக்குள் போன மாத்திரை தன் வேலையைத் தொடங்க, வயிற்றைப் பிடித்தபடிக் கீழே விழுந்து சுருண்டான்.
அவனது மனத்திற்குள், அந்தத் தோப்பிற்குள் இறந்து போன மாடுகளும், மயிலும் வந்து போயின... அப்படியேக் கொஞ்சம் கொஞ்சமாக அவனது உயிரும்... அவனுடைய உடலிலிருந்து வெளியேறிக் கொண்டிருந்தது.