குமரேசன் ஒரு பொறுப்பற்றத் தையல்காரன். நிரந்தரமாக ஒர் இடத்தில் இருக்க மாட்டான். அங்கு மூன்று மாதங்கள், இங்கு மூன்று மாதங்கள் என்று கடைகடையாக மாறிக் கொண்டே இருப்பவன். அவன் அந்தச் சிக்கலில் மாட்டிய காலக்கட்டத்தில், அவன் மருதமலை அருகிலுள்ள கல்வீரம்பாளையத்தில், ஒரு தையல் கடையில் வேலை செய்து வந்தான். ஆறு மாதங்களாக ஒரே இடத்தில் தங்கி வேலை செய்தான் என்றால் அது அந்தக் கடையாகத்தான் இருக்கும். இரவு பகல் என்று பாராமல் துணி தைப்பான். உடல் நலனிலும் அக்கரை காட்டமாட்டான். சரியான நேரத்திற்குச் சாப்பிடமாட்டான். சரியான நேரத்திற்கு உறங்க மாட்டான்.
அன்று வழக்கத்துக்கு மாறாக அவனது வயிறு சற்று உப்பி இருந்தது. இரண்டு மூன்று நாட்களாக அவனுக்கு மலம் சரியாக வெளியேறவில்லை.தொடர்ந்து ஏப்பம் வந்துக் கொண்டே இருந்தது. அஜீரணம், பசி அறவே இல்லை. எப்போதும் மந்தமாகவே இருந்தது. சரியாகிவிடும் சரியாகிவிடும் என்று இருந்தான். சரியாகவே இல்லை. ஒரு வாரம் ஓடிவிட்டது. இனியும் இப்படியே விட்டால் உடம்பில் உயிர் தாங்காது என்றாகிவிட்டது. பிறகு ஒருநாள் அருகிலுள்ள ஒரு மருத்துவரை அணுகி அவனுடைய உப்பிய வயிற்றைக் காட்டினான். அவனுடைய வயிற்றின் மேல் கை வைத்து அழுத்தி அழுத்திப் பார்த்தார் மருத்துவர்.
அவனை உட்காரச் சொல்லி ”உங்கப் பெயர் என்ன?” என்று கேட்டவாறே “பிரிஸ்கிரிப்சன் எழுதித் தர்றேன். ஒரு பதினைந்து நாளைக்குச் சாப்பிடுங்க எல்லாம் சரியாகிவிடும். பதினைந்து நாள் கழித்து சரியாகலைன்னா வாங்க பாக்கலாம்’’ என்று அந்த மருத்துவர் கூறியது அவனுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது.
பதினைந்து நாள் கழித்து, கே…க், கே…க் என ஏப்பம் எடுத்துக் கொண்டே மீண்டும் அதே மருத்துவரைப் போய்ப் பார்த்தான்.
“நீங்க சொன்ன மாதிரியே பதினைந்து நாட்களாத் தொடர்ந்து மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்டேன் டாக்டர். ஓரளவுக்கு இருந்தது. மருந்து மாத்திரை சாப்பிடறத நிறுத்திட்டேன். நிறுத்தி மூனு நாளாகுதுங்க டாக்டர். அதுக்கப்புறம் மீண்டும் பழைய படியே ஆயிடுச்சி” என்றான் கலக்கத்துடன்.
“தொடர்ந்து ரொம்ப நாளைக்குச் சாப்பிட வேண்டிவரும். வயிற்றுப்புண் அவ்வளவு சீக்கிரம் ஆறாது.மீண்டும் அதே மாத்திரையைக் கன்டினியூ பண்ணுங்க இன்னும் ஒரு பதினைந்து நாளைக்கு” என்று அந்த மருத்துவர் கூறிய போது அவனுக்குக் கோபம்தான் வந்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே புரியாமல் அந்த கிளினிக்கை விட்டு வெளியே வந்தான். அவனுக்கு அந்த மருத்துவர் மேல் நம்பிக்கை வரவில்லை.
யாரை அணுகுவது என்றும் அவனுக்குத் தெரியவில்லை. அப்படியே சில நாட்கள் இருந்து விட்டான். ’பழையக் குருடி கதவைத் திறடி’ என்பது போல, அவன் வயிறு மீண்டும் பலூனைப் போல உப்பிக் கொண்டது. அந்த மருத்துவர் சொன்னபடியே வேறு வழியில்லாமல் அதே மாத்திரை மருந்துகளைச் சாப்பிட்டுக் கொண்டு வந்தான். ஒருநாளைக்கு மாத்திரைக்குச் செலவிடும் தொகை சாப்பாட்டிற்குச் செலவிடும் தொகையை விட அதிகமாக இருந்தது.
“மலச்சிக்கல் முழுச்சிக்கல். கூடவே வாயுத் தொல்லையும் இருக்குன்னு சொல்றே. இது கடைசியா பைல்ஸ் உருவாக்கிவிடும். இது ஒரு வகையான அல்சர். இரத்த வாந்தி கூட வருவதற்கு சான்சஸ் இருக்கு. கடைசியா கேன்சரா மாறிடும். எதுக்கும் ஒரு குடலியல் நிபுணரைப் பார்த்து எண்டோஸ்கோபி எடுத்துப் பாத்துக்கோ” என்று அவ்வப்பொழுது பழகிய வட்டாரங்களில் இருந்து எச்சரிக்கையோடு கூடிய அறிவுரைகள் அவனுக்கு வந்து கொண்டிருந்தன.
இத்தகைய எச்சரிக்கைகள் அவன் அடிவயிற்றை மேலும் இறுக்கிப் பிடித்தது. “ஆயிசு முடிந்து விடும்போல தெரிகிறதே” என்ற பயமும் அவன் அடிமனதில் அவ்வப்பொழுது வந்துப் போனது. “இப்படி உப்பிய வயிற்றோடு வாழ்வதைவிட உசுரை மாய்த்துக்கொள்ளலாம்” என்று யோசிக்கும் அளவுக்கு அவனுடைய வயிற்றுப் பிரச்சனைகள் மேலும் மேலும் பெரியதாகிக்கொண்டே போனது.
ஒரு சில நாட்களுக்குப் பிறகு , வடவள்ளியிலுள்ள ஒரு பெரிய மருத்துவமனைக்குச் சென்று குடலியல் நிபுணரைப் பார்த்தான். அவர் அவனது உடல் எடையையும் இரத்த அழுத்தத்தையும், உடல் எடையையும் பரிசோதனைச் செய்தார். அவனது உடல் எடை எட்டு கிலோ குறைந்திருந்தது. உடம்பு ரொம்பவும் இளைத்து விட்டது. முகம் பொலிவு இழந்து எப்போதும் வாட்டமாகவே இருந்தது. கண்களைச் சுற்றி கருவளையம் உருவாகிவிட்டது. இரத்த அழுத்தம் இயல்பு நிலையில் இருந்தது.
ஸ்டெதஸ்கோப்பை அவனது நெஞ்சு, முதுகு ஆகிய பகுதிகளில் வைத்துப் பார்த்தார். பிறகு “என்ன ப்ராப்ளம் சொல்லுங்க” என்று கேட்டார் அந்த மருத்துவர் அவனது கண்களைப் பார்த்தபடியே.
“ரெண்டு மாசமாச் சரியாகப் பசி எடுக்க மாட்டேங்குது டாக்டர். வயிறு உப்பிக்குது. கேஸ் வாய் வழியா அடிக்கடி வந்துட்டே இருக்கு. மலச்சிக்கலும் இருக்கு. மோசன் சரியாப் போக மாட்டேங்குது.
“வேறு என்ன ப்ராப்ளம் இருக்கு?”
“தலையும் திம்முணு இருக்கு”
“நெஞ்சு கரிக்கறதா?”
“ஆமாங்க டாக்டர்”
“வயிறு எரிகிறதா?”
”எரியுது சார்”
“சிகரெட் பிடிப்பிங்களா?”
”பிடிப்ப சார்”
“ஒரு நாளைக்கு எத்தனை?”
“அஞ்சு சிகரெட் வரை”
“ட்ரிங்ஸ் அடிக்கிற பழக்கம் உண்டா?”
“உண்டுங்க சார்”
டெய்லி அடிப்பிங்களா?!
”இல்லைங்க சார். வார இறுதியில மட்டும்”
“ டீ, காபி ?”
“நெரையவே குடிப்ப சார்”
“காலை உணவு சரியான நேரத்துக்கு எடுத்துப்பிங்களா?”
இல்லைங்க சார். அதிகம் டீ தான்.
அந்த மருத்துவர் பொறுமையாகக் கேட்டுவிட்டு, அவனைப் படுக்க வைத்து மூச்சை நன்றாக இழுக்கச் சொன்னார். பிறகு அவனது வயிற்றின் அனைத்துப் பகுதிகளையும் அழுத்தி அழுத்திப் பார்த்தார்.
பிறகு சற்று யோசித்தவாறே “பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லை. இந்த மருந்து மாத்திரைகளைச் சாப்பிடுங்க, சரியாகிவிடும். சரியாகலென்னா மூனு நாள் கழிச்சு வாங்க என்டோஸ்கோபி எடுத்துப் பாக்கலாம்” என்று கூறியவாறே மருந்துச் சீட்டை அவனிடம் நீட்டினார் அந்த மருத்துவர்.
அந்த மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளைச் சாப்பிட்ட இரண்டு நாட்களில் கொஞ்சம் பரவாயில்லை என்று தோன்றியது அவனுக்கு. மலம் ஓரளவுக்கு வெளியேறியது. ஓரே குறை வாயு தொல்லைதான் நின்றபாடில்லை. வாய் வழியாக அவ்வப்போது எட்டிப் பார்த்தது. அப்பவும் ஆசன வாய் வழியாகக் காத்துப்போன பாடில்லை. மூன்று நாட்களில் வாங்கி வந்த மாத்திரைகளும் தீர்ந்துவிட்டது. மீண்டும் பழையபடியே ஆசன வாய் அடைப்பட்டுக்கொண்டது; எப்போதும் சூடாகவே இருந்தது. மலக்குடல் நிறைய மீண்டும் மலம் தேங்கிக் கொண்டது.
மருத்துவர் சொன்ன மாதிரியே எண்டோஸ்கோபி எடுத்துப் பார்க்கலாமா என்று நினைத்தான். அதற்கு எப்படியும் இரண்டாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகும். அப்போது அவன் கையில் அவ்வளவு பணம் இல்லை. அதனால் போகாமல் இருந்துவிட்டான். அதற்கப்புறம் நான்கைந்து நாட்கள் தொடர்ந்து நேரம் காலம் பார்க்காமல் கழிவறையில் முக்கி முக்கிப் பார்த்தான். சுகப்பிரசவம் இல்லை.ஆட்டுப் புளுக்கைப் போல அவனுக்கு மலம் வெளியேறியது. வயிற்றைக் கிழித்து வெளியே எடுத்துவிடலாமா என்று கூட அவனுக்குத் தோன்றியது. முக்கிய முக்கில் பின் மண்டையும் கண்களும்தான் வலியெடுத்ததே தவிர வர வேண்டியது வரவேயில்லை.
சிக்கல் தொடர் கதையாகி விட்டது. “கடவுளே இந்த உலகத்தில் என் உடம்பைத் தவிர வேறு எதுவும் எனக்கு முக்கியமில்லை. என்னைக் காப்பாற்று கடவுளே! என்று அவ்வப்பொழுது கடவுளையும் வேண்டிக் கொண்டான்”
ஒரு நாள் மாலை ஐந்து மணி இருக்கும். கல்வீரம் பாளையம் பேருந்து நிறுத்தத்திலுள்ள ஒரு தேநீர் கடையில், தேநீர் சாப்பிட்டுக் கொண்டே தினத்தந்தி நாளிதழைப் படித்துக் கொண்டிருந்தான். அந்த நேரம் பார்த்து ஒரு சித்த வைத்தியர் வந்தார்.
கல்லாறு சித்த வைத்தியச் சாலையிலிருந்து வருவதாகச் சொன்னார். தைலங்கள், லேகியங்கள், பற்பொடிகள் ஆகியவற்றை அருகில் இருந்த பெட்டிக் கடையில் வைத்து விற்கும்படிக் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் அந்தப் பெட்டிக் கடையில் வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்தார்.
“எங்க சித்த வைத்தியச் சாலையில் எல்லா வகையான புற மற்றும் அக நோய்களுக்கும் மருந்து இருக்கு. யாருக்காவது தேவை ஏற்பட்டால் இந்த முகவரிக்கு வாங்க” என்று கூறி அருகில் தேநீர் கடையில் இருந்தவர்களிடமும் கொடுத்தார்.
அவனும் அந்த முகவரி அட்டையை வாங்கிக் கொண்டான். அவன் பிரச்சனையினை அந்த சித்த வைத்தியரிடமும் சொன்னான்.
”வாயுக்கோளாறு மலச்சிக்கல், அஜீரணம், என எல்லாத்துக்குமே மருந்து இருக்கு நீங்க எப்ப வேணும்னாலும் இந்த அட்ரசுக்கு வாங்க மருந்து கிடைக்கும். ஒன்மோர் திங். அருகம்புல் சாறு வயித்துக்கு ரொம்ப நல்லது. பசியைத் தூண்டும். நல்லா ஜீரணம் ஆகும். தினந்தோறும் காலையில சிக்ஸ் டு செவன் வரை, பாரதியார் யூனிவர்சிட்டி கேட்டுக்கு முன்னாடி, எங்க ஆளு ஒருத்தர் விக்கிராரு. ஒரு பத்து நாளைக்குக் குடிச்சுப் பாருங்க இம்ருவ்மென்ட் தெரியும்” என அக்கரையுடன் தனது ஆலோசனைகளையும் அவனுக்கு வழங்கினார் அந்தக் கல்லாறு சித்தர்.
அருகம்புல் சாற்றையும் ஒரு வாரம் வெறும் வயிற்றில் குடித்தான். கூடவே மெல்நடையும் நடந்தான். முதல்நாள் மட்டும் நன்றாகப் பசி எடுத்தது. அதன் பிறகு, ஒன்றும் தெரியவில்லை. அருகம்புல் சாறு விற்பவரிடமும் அவனது பரிதாப நிலையினை எடுத்துச் சொன்னான்.
அவன் சொல்வதை அங்கு அருகம்புல் சாறு குடித்துக்கொண்டிருந்த முதியவர் ஒருவர் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தார். பிறகு அவனைப் பார்த்து அந்த முதியவர் பிரச்சனை சீரியசா இருக்கும்போல தெரியுது. ஐ.ஒ.பி காலனி பஸ் ஸ்டாப்புக்குப் பக்கத்துல ஒரு இயற்கை வைத்தியச் சாலை இருக்கு., அங்குப் போய் பாருங்க தம்பி. ட்ரிட்மென்டுக்குப் பலன் இருக்கும்” என்று அந்த முதியவர் அவனுக்குத் தனது ஆலோசனையினை வழங்கினார்.
அடுத்த நாள் காலையில் அருகம்புல் சாறு குடித்துவிட்டு, அந்த இயற்கை வைத்தியச் சாலையினை நோக்கி நடந்தான். அந்த வைத்தியச் சாலையின் முன்புறம் ’இயற்கை மற்றும் யோகா மருத்துவமனை’ என்று ஒரு பெரிய பெயர்ப்பலகை ஒன்று அக்கட்டடத்தின் முகப்பில் தொங்கவிடப்பட்டிருந்தது. உள்ளே சென்றான். அவனை உட்காரச் சொல்லி இருக்கையைக் காட்டினார். மேசையின் மீது வைக்கப்பட்டிருந்த லெட்டர்பேடில் இருந்த ஒரு தாளைக் கிழித்தார். பேனாவை எடுத்து ஏதோ எழுதிக் கோண்டே,
“உங்கள் பெயர் என்ன?” என்று கேட்டார்.
”குமரேசன்” என்றான்.
“வயசு?”
”இருபத்தைந்து”
”கல்யாணம் ஆகிடுச்சா?”
இல்லை.
”எங்க தங்கி இருக்கிங்க?”
”ரூம் எடுத்து நண்பர்களுடன் தங்கி இருக்கேன் சார்”
”என்ன வேலை செய்றீங்க?”
”டைலர் சார். துணி தைக்கின்றேன்”
”சாப்பாடெல்லாம்?”
சற்று தயக்கத்துடன் ”மெஸ், ஹோட்டல், இரவு உணவுக் கடைகள்” என்று பட்டியலிட்டான்.
அந்த வைத்தியர் அவனைப் பார்த்தவாறே, “நம்ம உடல்நலப் பிரச்சனைகள் எல்லாம் உணவுப் பழக்கங்களால்தான் வருது. அதுக்கு என்ன செய்யனும் உணவு முறைகளை மாத்தணும். சரி போகட்டும். இப்ப உங்களுக்கு இருக்கிற பிரச்சனையை முழுசா குணப்படுத்தணுமா? இல்லை சர்பேஸ் லெவல்ல இருக்கின்ற பிரச்சனையை மட்டும் குணப்படுத்துனா போதுமா?” என்று கேட்டார் அந்த வைத்தியர்.
”முழுசா குணப்படுத்தணும் சார்” என்றான்.
”நல்லது. நீங்க எங்க இயற்கை வைத்தியச் சாலையிலெ ஒரு பத்து நாளைக்குத் தங்க வேண்டி வரும். அந்தப் பத்து நாளைக்கும் எங்கேயும் போகக்கூடாது. மருதமலை முருகனைப் பார்க்கிறதா இருந்தாலும் என்னைக் கேட்டுட்டுதான் போகணும். ட்ரீட்மென்ட் கொடுக்கத் தொடங்கும் முன் ’இனிமா’ கொடுத்து வயிற்றைச் சுத்தம் செய்வோம். அப்புறம்தான் மற்ற ட்ரீட்மென்டெல்லாம். இங்கு மருந்து மாத்திரையெல்லாம் கெடையாது. ’உணவே மருந்து’.காலை, மாலை, அருகம்புல் ஜூஸ், பூசணி ஜூஸ் தருவோம். காலை மாலை இரண்டு நேரமும் வாக்கிங் போகணும். மூன்று நேரமும் நாங்கள் கொடுக்கும் உணவைத்தான் சாப்பிடணும். எல்லாமே நேச்சுரல் புட்ஸ்தான். போர்டிங், லாட்ஜிங்,ட்ரீட்மென்ட் என எல்லாத்துக்கும் பீஸ் சிக்ஸ் தவுசன் ருபீஸ், நீங்க எப்ப வேணும்னாலும் வந்து அட்மிட் ஆயிக்கலாம். உங்களுடைய சவுரியத்திற்கேற்ப”
“அப்புறம் டெய்லி ஒரு மணி நேரம் உணவு முறைகளைப் பற்றி லெக்சர் கொடுப்போம். உணவு, உடம்பு, உள்ளம், உலகம், நோய், மருத்துவம், இயற்கை விதிகளைப் பற்றி அடிப்படை ஞானம் வந்துட்டாலே நோய்கள் அண்டாது. இதுதான் எங்க அடிப்படைச் சித்தாந்தம்.
”சரிங்க சார். தேங்ஸ். வீட்ல கேட்டுட்டு ஒரு வாரத்திற்கப்புறம் ட்ரீட்மென்ட் எடுத்துக்க வர்றேன்” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டான். எப்படியாவது பணம் தயார் செய்து கொண்டு சீக்கிரமே வந்து சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது.
சொந்த ஊருக்குப் போனால் வீட்டுச் சாப்பாடு கிடைக்கும். உணவு மாற்றம் தீர்வைக் கொடுத்தாலும் கொடுக்கும் என்று நினைத்தான். இரண்டு மூன்று நாட்கள் கழித்து, கோவை இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் இரயில் பிடித்துச் சேலம் சென்றான். அங்கிருந்து அவன் சொந்தக் கிராமத்திற்குச் சென்றான்.
இரயிலில் பயணம் செய்யும் பொழுது, அவனருகில் இருந்த சகப் பயணி ஒருவர் அவன் நிலையை உணர்ந்து அவனிடம் சில ஆலோசனைகளையும் பகிர்ந்துக் கொண்டார்.
“கடுக்காய்ப் பொடியுடன் தேன் கலந்து காலை மாலை இரண்டு வேலையும் சாப்பிடுங்க அல்லது திரிபலா சூரணம் சாப்பிடுங்க தம்பி. மலம் எளிதில் வெளியேறும். சும்மா ரெண்டு நாளைக்கு ட்ரை பண்ணிப் பாருங்க. ரிசல்ட் தெரியும். குடல் வாயு நீங்க இஞ்சி மரபா சாப்பிடுங்க. குடல் வாயுவைக் கட்டுப்படுத்தும்” என்று மிகவும் அக்கரையுடன் அவனிடம் சொன்னார் அந்தச் சகப் பயணி.
அவன் ஊருக்குப் போய்ச் சேரும் போது இரவு ஒன்பது மணி. போனவுடன் கடமைக்குக் கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு உறங்கிவிட்டான்.
அடுத்த நாள் காலை அவன் தந்தை நலம் விசாரிக்கத் தொடங்கிவிட்டார். “என்ன ஆச்சு? ஏன் இப்படி கேக்… கேக்குன்னு ஏப்பம் விட்டுட்டு இருக்க?” என்று கேட்டார்.
”ஒண்ணுமில்லப்பா..! வயித்துல புண்ணு. அதனாலதான் இப்படி”
”ஆஸ்பத்திரிக்குப் போனையா?”
”போனேன். ஒண்ணும் கேக்கல”
அதற்குள் பக்கத்து வீட்டுப் பாட்டியும் வந்துவிட்டாள். ”என்னாச்சி பயனுக்கு? கொமரனா போனவ இப்படி கெழவனா வந்து நிக்கறானே” வயிறு, வாயெல்லாம் ஒட்டிக் கெடக்கே” என்று அந்தப் பட்டி அக்கரையோடு அவனைப் பார்த்தவாறே கேட்டாள்.
”வயித்துல புண்ணாயிடுச்சி பாட்டி என்றான்” அவன்.
”வயித்துல புண்ணா, இல்ல மருந்தீடா யாருக்குத் தெரியும். எம் பெரிய பையனுக்கு இப்படிதான் இருந்தது. அஞ்சாறு மாசமா கே..கேக்ணு ஏப்பம் விட்டுட்டிருந்தான். மருந்தீடு போய் எடுத்தபொறவு இப்ப பரவாயில்ல!
”டேய் மாதப்பா..!, இப்படியே ஏமாந்து விட்டுட்டா, அப்புறம் பையன் கைக்குக் கெடைக்க மாட்டான். கொஞ்சம் முருங்கையிலை உருவிட்டுவாடா சொல்றேன்” என்றாள் அந்தப் பாட்டி அவன் அப்பாவிடம்.
”மருந்தீடா இருந்தா இந்த முருங்கையிலைச் சாறு கெட்டியாகிவிடும்” என்று சொல்லிக் கொண்டே அவனுடைய உள்ளங்கையினை நீட்டச் சொல்லிப் பிழிந்து விட்டாள்.
அவன் தந்தையும் அந்தப் பாட்டியும் வைத்தக் கண் வாங்காமல் அவன் உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சாறு உறையவில்லை. சற்று நேரம் கழித்து கையை லேசாகச் சாய்த்தான். விரல் சந்துகளில் ஓடி ஒழுகிவிட்டது அந்தச் சாறு.
டேய் மாதப்பா..!, நீ எதுக்கும் நாளைக்குப் பையனைக் கூப்பிட்டுனு போய் பாத்துட்டு வந்துரு. சிலருக்கு மருந்தீடு இருந்தா கூட முருங்கைச் சாறு உறையாது.
”ஏ..! போ… கெழவி…! உனக்கு வேற வேல இல்ல. மருந்தீடாவது கிருந்தீடாவது” என்றான் அவன்.
“மருந்தீடைப் பத்தி உனக்கு என்னடா தெரியும்? கொஞ்சம் ஏமாந்தா ஆளக் காலிப் பண்ணிடும். மருந்தீடுங்கிறது சாதாரணமானது இல்ல. பச்சோந்தியை அடித்து, அதன் ஈரலை எடுத்து, அதிலிருந்து மருந்து தயாரிச்சு, சாப்பாட்டுல கலந்து குடுத்துடுவாங்க நமக்கு ஆகாதவங்க. அது அப்படியே போய்க் கொடல்ல ஒட்டி மசுறு மொளச்சிக்கும். மசுறு வளர வளர வயிறு உப்பி செத்துப் போயிடுவாங்க. இள ரத்தம். உனக்கு இதப் பத்தி ஒண்ணும் தெரியாது” என்று அந்தப் பாட்டி காட்டமாகச் சொன்னாள்.
அதைக் கேட்டு அவன் மனதில் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியது. அடுத்த நாள் காலை அவன் தந்தை அவனை அழைத்துக் கொண்டு ஓமலூரிலுள்ள ஒரு யுனானி மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அங்கு ஒரு சிறிய அறையில் மேசை மேல் ஒரு கூடையில் வெற்றிலை, எலுமிச்சைப் பழங்கள் ஆகியவற்றை வைத்துக்கொண்டு உட்கார்ந்துக் கொண்டிருந்தார் அந்த யுனானி வைத்தியர்.
என்னை உக்கார வைத்து ”என்ன தொந்தரவு” என்று வினவினார்”
அவன் பிரசச்னைகளை ஒன்றுவிடாமல் சொன்னான். அவனை அந்த வைத்தியர் முழுமையாகக் கூர்ந்து நோக்கிப் பார்த்தார். பார்த்துவிட்டு மருந்தீடு ஒண்ணுமில்ல. இது அல்சருக்கான அறிகுறி என்று சொல்லி அனுப்பிவிட்டர், பத்து ரூபாயை வாங்கிக்கொண்டு.
அந்த வைத்தியச் சாலையை விட்டு வெளியே வந்ததும்,, ”மருந்தீடாக இருந்தால் எப்படிப்பா எடுப்பாங்க” என்று அவன் தனது தந்தையிடம் கேட்டான்.
“வவுறு நெரைய தண்ணி குடிக்கச் சொல்லுவாங்க. தண்ணி குடிச்சப்பிறகு பசுறு லேகியம் குடுப்பாங்க. அந்த லேகியத்தைச் சாப்பிட ஒடனே குபீர் குபீர்னு வாந்தி வரும். வாந்தியோடு சேந்து மருந்தீடும் கொடல்ல எங்க ஒட்டியிருந்தாலும் புடுங்கிட்டு வந்துரும்” என்று அவனுக்குப் புரியும்படி கூறினார்.
அன்று ஓமலூரில் சந்தை நாள் என்பதால் மக்கள் கூட்டம் வருவதும் போவதுமாக இருந்தது. வரும் வழியில் நாட்டு மருந்துக் கடையில் கடுக்காய்ப் பொடியும் ஒரு பாட்டில் தேனும் வாங்கிக் கொண்டான். அவனது தந்தை காய்கறிகளையும் பழங்களையும் வாங்கி பையில் போட்டு எடுத்துக் கொண்டார்.
“உனக்கு வேறு ஏதாவது சாப்பிடுவதற்கு வேணுமா” என்று அவன் தந்தை அவனிடம் கேட்டார்.
அதற்கு அவன் வேண்டாம் என்று தலையை ஆட்டினான்.
ஓமலூரிலிருந்து மீண்டும் ஊருக்கு வந்து சேர, பொழுது சாயும் நேரம் ஆகிவிட்டது. பேருந்துக்குக் காத்திருந்தே பாதிப் பொழுது முடிந்துவிட்டது. பேருந்தில் இருந்து இறங்கி அவர்கள் இருவரும் பேசிக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தார்கள். பறவைக் கூட்டங்கள் அவற்றின் இருப்ப்பிடங்களை நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. வயக்காட்டு வேலைக்குச் சென்றவர்கள் வீட்டை நோக்கி வேகவேகமாக நடந்தார்கள். கன்றுகள் தமது தாய்ப் பசுக்களைத் தேடிக் கொண்டிருந்தன. ஊர்க் குருவிகள் மரக்கிளைகளில் அடங்கின. மார்கழித் திங்கள் பனிக்காலம் என்பதால் குளிர் காற்று விசு விசு என அடித்தது.
இருவரும் வீடு வந்து சேர்ந்தார்கள்.
அவன் தாயார் அவர்கள் இருவரும் குளிப்பதற்காக வெண்ணீர் தயாராக வைத்திருந்தாள். அவன் குளித்தான். அதற்கிடையில் அவன் தந்தையர் மாடுகளைத் தொழுவத்தில் கட்டி அவற்றிற்குச் சோளத் தட்டு நறுக்கிப் போட்டுவிட்டு அவரும் குளித்தார்.
இரவு உணவு. கருவாட்டுக் குழம்பு, களி சாப்பிட்டு விட்டு, சிறிது நேரம் ஊர்க் கதை பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு அவன் திண்ணைமேல் கயிற்றுக் கட்டில் போட்டு கம்பளி போர்த்திக் கொண்டு படுத்துக் கொண்டான்.
”இவன் படிச்சி ஒரு நல்ல ஒரு வேலைக்குப் போவான்னு ஈரோட்ல ஒரு நல்ல காலேஜ்ல சேத்திவுட்டெ. இவ என்னடாண்ணா ஒரு வருசம் போனான். அப்புறம் பெயிலா போயிட்டெ. எனக்குப் புடிக்கலண்ணு சொல்லிட்டு, போக மாட்டேண்ணு சொல்லிட்டா. கூட்டாளிங்களோடு சேந்து கார்மென்ட்ஸ்க்குப் போற, கடெ வக்கிற, அப்படி இப்படின்னு சொல்லிட்டு நாலஞ்சு வருசமா திரிஞ்சா. கடன் ஒடன் பட்டு குடுத்தப் பணத்தையும் காலி பண்ணிட்டான். இப்ப எல்லாத்தையும் இழந்துட்டு, ஒடம்பையும் கெடுத்துனு வந்திருக்கா. இவன் உருப்பட்டாதானே இவனுக்குப் பின்னாடி இருக்கிறதுங்களும் உருப்படும் ” என்று அவன் தந்தை என்றுமே இல்லாத அளவுக்கு அன்று சலிப்பாகப் பேசினார்.
அவன் எதையும் கண்டு கொள்ளவில்லை. நன்றாக உறங்கிவிட்டான். ஒரு வாரம் வீட்டுச் சாப்பாடு. கம்புக் கூழ், இராகிக் களி, சாமை அரிசி சோறு, கை குத்தல் நெல்லு அரிசி சோறு, மணத்தக்காளி கீரை, கொள்ளு இரசம், நாட்டு மாட்டுப் பால், தயிர், மோர் என உப்பு, புளி, காரம் குறைவாக வயிற்றுப் புண்ணை குணப்படுத்துவதேற்கேற்ப அவன் தாயார் அவனுக்குப் பார்த்துப் பார்த்துச் சமைத்துக் கொடுத்தாள்.
ஒரு வாரம் கழித்து, இரயில் பிடித்து மீண்டும் கோயம்புத்தூர் வந்துவிட்டான். தேன் கடுக்காய் பொடி வைத்தியம், காலை மாலை கடுக்காய்ப் பொடியினைத் தேனில் குழப்பி நக்கி வந்தான். ஓரிரு வாரங்கள் இந்த வைத்தியம் தொடர்ந்தது. இப்பொழுது ஓரளவுக்குப் பரவாயில்லை என்று தோன்றியது. தினந்தோறும் சாப்பிட்டதால் வாயெல்லாம் கசந்தது கடுக்காய்ப் பொடி, தேன் தீர்ந்து விட்டது. போதும் இதை நிறுத்திக்கொள்ளலாம் என நினைத்து நிறுத்தி விட்டான். மீண்டும் சிக்கல் தொடர்ந்தது. ’எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற நிலை, அவன் நிலை. மிகவும் மனக் கலக்கத்தில் இருந்தான்.
”முருகா..! கடவுளே..! எனக்கு நல்ல ஆரோக்கியமான ஒடம்பே குடு. எனக்கு ஒரு வழியைக் காட்டு” என்று இறைவனை மனதிற்குள் வேண்டினான். அவன் வழக்கம் போல அன்றும் துணி தைத்துக் கொண்டிருந்தான். அப்பொழுது அக்கடையின் வழக்கமான வாடிக்கையாளர் ஒருவர், தான் தைக்கக் கொடுத்தத் துணியினை வாங்க வந்திருந்தார். அப்பொழுது அவனைப் பார்த்து நலம் விசாரித்தார்.
”ஏனுங்க தம்பி குமரேசா..!, எப்படி இருக்கீங்க?”
”பரவாயில்லைங்க சார். நல்லா இருக்கேன்”
”உங்க வயித்துப் பிரச்சனைத் தீந்ததுங்களா?”
”இல்லிங்க சார். அப்படியேதான் இருக்கு”
”ஒரு நல்ல மருத்துவரை பாரத்திருக்கலாமேங்க. அட என்னங்க தம்பி, இப்படி உட்டு புட்டிங்க போங்க. இந்த ஒடம்பு என்னத்துக்கு ஆகிறது. கோயம்புத்தூர்ல இல்லாத மருத்துவமா?!”
”யாரே பாக்கறதுன்னே தெரியில சார் என்றான் சற்று சோகமாக”
”சவுரிபாளையத்துல குடல் சார்ந்தப் பிரச்சனைகளைப் பார்ப்பதற்குன்னே, ஒரு பெரிய ஆஸ்பெட்லா கட்டி வச்சிருகாங்காங்க. கோயம்புத்தூர்ல இருந்துட்டு இதுகூட தெரியாம இருக்கீங்க. அட, போங்க தம்பி. இங்க வடவள்ளியிலெ இருந்து சிங்காநல்லூர் பஸ் போகுதுல்ல, அதுல் போங்க தம்பி. ஆஸ்பத்திரிக்கு எதுக்காப்லெ போய் விட்டு விடுவான்”. என்று தனது ஆலோசனையினை அவனுக்கு வழங்கினார்.
”அந்த வாடிக்கையாளர் சொன்ன ஆலோசனையின்படி, இரண்டுநாள் கழித்து அந்த மருத்துவமனைக்குச் சென்றான். பெரிய மருத்துவமனை. குடல் சார்ந்த பிரச்சனைகளுக்குத் தென்னிந்தியாவிலேயே சிறந்த மருத்துவமனை என்ற குறிப்புகளெல்லாம் அந்த மருத்துவமனையின் சுவற்றில் காண முடிந்தது. பல பிரபலங்களும் அங்கு வந்து மருத்துவம் செய்திருக்கும் செய்திகளும் புகைப்படங்களும் காண முடிந்தது.
வரவேற்பு அறையில் தனது விவரங்களைப் பதிவுச் செய்துக் கொண்டான். பிறகு மருத்துவரை அனுப்பினான். அவர் பரிசோதனைச் செய்துவிட்டு, நாளை காலை வெறும் வயிற்றில் வாங்க. என்டோஸ்கோபி எடுத்துப் பார்க்கலாம். அப்போதுதான் உங்க ப்ராப்ளம் என்னண்ணு முழுமையாகத் தெரியும் என்றார் அந்த மருத்துவர்.
அடுத்தநாள் காலை ஏழு மணிக்கெல்லாம் வந்து விட்டான். காபி, தண்ணி என்று எதுவும் குடிக்கவில்லை. வெறு வயிற்றோடு இருந்தான். அவன் பெயரைச் சொல்லி செவிலிப் பெண்மணி அழைத்தாள். மருத்துவரைப் பார்த்தான். செவிலிப் பெண் அவனிடம் ஒரு டூப் மாத்திரையினைக் கொடுத்து இதை உங்க ஆனஸ்ல வச்சிக் கொஞ்சம் நேரம் இருக்கி பிடிங்க. டாய்லெட் வரும். வயித்தெ சுத்தம் செய்யும் என்று கூறினாள்.
அவள் சொன்னபடியே செய்தான். சிறிது நேரத்தில் கழிவறையை நோக்கி வேக வேகமாக நடந்தான். சிறிது நேரத்தில் வயிறு சுத்தம். நீண்டநாள் பாரத்தை இறக்கிவிட்ட உணர்வு அவனுக்கு. பிறகு எண்டோஸ்கோபி எடுக்கப்பட்டது. முதலில் ஆசனவாய் பகுதிவழியாக ஒரு சிறிய குழாயினைச் செலுத்தி பரிசோதனைச் செய்தார்கள். பிறகு வாய் வழியாகவும் குழாயினைச் செலுத்தி பரிசோதனைச் செய்யப்பட்டது. அங்காங்கே வயிற்றில் சிவப்பு சிவப்பாகப் புண்கள் இருப்பதை அவனுக்கும் கணினி வழியாகக் அந்த மருத்துவர் காட்டினார். பரிசோதனை முடிந்தது. வாய் வழியாகக் குழாயினைச் செலுத்திய பொழுது மிகவும் சிரமப்பட்டான். இருப்பினும் ஒரு வழியாகச் சமாளித்துக் கொண்டான்.
அந்த மருத்துவர். பயப்படற மாதிரி ஒண்ணும் இல்லைங்க. வயிற்றுப் புண். மருந்து மாத்திரை தறேன். ஒரு வாரம் சாப்பிடுங்க. அதன்பிறகு மீண்டும் வாங்க பார்க்கலாம் என்றார். அந்த மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தான் ஒரு வாரம். நல்ல முன்னேற்றம் தெரிந்தது. மீண்டும் ஒரு வாரத்திற்குப் பிறகு அதே மருத்துவரைப் பார்த்து ஆலோசனைப் பெற்றான். அவர் மீண்டும் ஒரு வரு வாரத்திற்கு அதே மருந்துகளை எடுத்துக்கச் சொல்லி ஆலோசனை வழங்கினார்.
இரண்டு வாரத்திற்குப் பிறகு அவனுக்கு நிம்மதி பெருமூச்சு.மாத்திரை மருந்துகளைச் சாப்பிடுவதை நிறுத்திவிட்டான். மலம் வெளிரிய மஞ்சள் நிறத்தில் நீளமாக வெளியேறியது. மலத்தில் ஒரு ஆரோக்கியம் தெரிந்தது அவனுக்கு. வாயுத் தொல்லையும் இல்லை. வயிறு எறிச்சல் இல்லை. இப்பொழுது அவன் வயிறு ஆரோக்கியமாக இருப்பதை அவனால் உணர முடிந்தது. மிகுந்த மகிழ்ச்சி அவனுக்கு!
“தான் வேண்டிய கடவுள் கை விடவில்லை; சரியான நேரத்தில் தனக்கு வழிதுணையாக இருந்து கட்வுள் வழிகாட்டியுள்ளார்“என மனதில் நினைத்துக் கொண்டான். சில நாட்கள் கழித்து தைப்பூசம் அன்று பூ, தேங்காய், வாழைப் பழம் வாங்கிக் கொண்டு, மருதமலை முருகன் கோவிலுக்குச் சென்று வந்தான். மருதமலைப் படிக்கட்டுகளில் இறங்கி வரும் பொழுது, அங்கு மரங்களில் ஓடி ஆடித் திரிந்துக் கொண்டிருந்த குரங்குகளுக்கு வாழைப்பழங்களைக் கொடுத்து மகிழ்ந்தான். வரும் வழியில் மயில் ஆடுவதைக் கண்டும், குயில்கள் கூவுவதைக் கேட்டும் பேரானந்தம் அடைந்தான்.
அதன்பிறகு புத்துணர்ச்சியுடன் தனது பணிகளைச் செய்து வந்தான். ஒரு சில நாட்கள் கழித்து கோவையெங்கும் ஒரே பதட்டம். கோவையில் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. அதைப் பற்றி வானொலி, தொலைக்காட்சிகளில் பரபரப்புச் செய்திகள். கோவையில் அந்தச் சம்பவத்துக்குப் பிறகு மக்கள் மனதில் ஒரு வகையான பீதி, கலக்கம். ஒரு பத்து இருபது நாட்கள் மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதும் பாதித்தது. அந்தப் பீதியிலிருந்து மீண்டு வர அவனுக்கும் ஓரிரு வாரங்கள் ஆகியது.
இனி இங்கு இருக்க வேண்டாம் என்று முடிவு செய்து, கோவையை விட்டுச் சொந்த ஊருக்கே போய்விட்டான். புதியதாக ஒரு தையல் மெசின் வாங்கி உள்ளுரிலேயே தையல் கடை வைத்துக் கொண்டான். அப்பாவிற்கு உதவியாக விவசாயத்தையும் பார்த்துக் கொண்டான். ஊரில் அவனை நல்ல டைலர் என்று பேசிக் கொண்டார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களும் அவனுக்குப் பெண் தருவதற்குத் தயாராக இருந்தார்கள்.
ஊரில் வேறு தையல் கடைகள் எதுவும் இல்லாததால், அவனுக்கு நல்ல வருமானம். கூடுதலாக ஒரு மெசினை வாங்கி, ஒரு ஆளையும் பணியமர்த்திக் கொண்டான். அவன் பணியமர்த்தியப் பெண் நல்ல சுறு சுறுப்பான பெண். பன்னிரண்டாம் வகுப்பு வரை படித்துவிட்டு தையல் கற்றுக்கொண்டு, பெண்கள் ஆடைகளை நன்றாகத் தைப்பவளாக இருந்தாள். அவனுக்கும் அவளுக்கும் நல்ல நட்பும் புரிதலும் இருந்தது. பிறகு அது காதலாக மலர்ந்து கல்யாணத்தில் முடிந்தது. அப்பா, அம்மா, தம்பி, தங்கை, மனைவி எனக் குடும்பத்தோடு மகிழ்ச்சியாகத் தனது புதிய வாழ்க்கையை வாழத் தொடங்கினான். நாளடைவில் டைலர் குமரேசன், ஒரு நல்ல பொறுப்பான குடும்பத் தலைவன் என்ற பெயரும் எடுத்தான்.