எங்க கரிசல் பூமி எல்லோருக்கும் வாழ்வு தரும் பூமி. பூமிதான் மழை இல்லாமல் வறண்டு இருக்குமே தவிர, மக்களின் மனசு எப்போதும் பிசுபிசுப்பாகவே இருக்கும். கரிசல் மண்ணில் தேங்கியிருக்கும் நீரைப்போல காளியம்மாவின் மனசும் எப்போதும் ஈரம் நிறெஞ்ச மனசுதான்.
காளியம்மா கடைசி வீட்டு சின்னாத்தாவின் மகள். பேருதான் சின்னத்தாள். அவள் மனசெல்லாம் பெருசு.
காளியம்மா காடு கழனினு இருப்பா. விடிஞ்சா காடு அடஞ்சா வீடு இதுதான் அவ பொழப்பு. கோழி கூப்புட கழனிக்கு வந்தா பொழுது சாயத்தான் வீடு சேருவாள்.
கழனி கழனினு வம்பாடுபட்டு உழைப்பா. அவ உழைப்புலதான் அவ மொத்தக் குடும்பமும் பசியாறுது.
காலங்காத்தால குனிஞ்ச தலை எப்போ நிமிரும்னே தெரியாது. அப்படிப்பட்டவ மேல பக்கத்து பிஞ்சையில் ஆடு மேய்க்கிற மாரியப்பனுக்கு ஒரு கண்ணு. ஆடு மேய்க்கிற மாதிரியும் இருக்கணும் தனக்குப் பொண்ணு பாத்த மாதிரியும் இருக்கணும்னு அவென் நினப்பு.
ஆடுகளை ஒரு பார்வையும் காளியாத்தாவை ஒரு பார்வையுமாக அவன் பொழுது கழிஞ்சது.
ஒரு நாள் கேட்டே விட்டான் மாரியப்பன்.
ஏன் ஆத்தா காளியம்மா… வேகாத வெயிலிலும் மழையிலும் கிடந்து காடே கதினு மாடு மாதிரி உழைக்கிறயே. உனக்கு நான் ரெஸ்ட் கொடுக்கணும்னு நினைக்கேன். நீ என்ன சொல்லுத.. மனசுல நீண்ட நாள் கேக்க நினைச்சதைப் பட்டென்னு கேட்டுப்புட்டான். அந்தப் புள்ள என்ன நினைக்கும்னு கூட யோசிக்கல. தெளிவாப் பேசினாத்தானே விளங்கும். பொடி வெச்சுப் பேசுனா எப்புடி?
இதெல்லாம் என்கிட்ட ஏன் கேக்குறீக? எங்க சின்னாத்தாவிடம் கேளுங்க. அது என்ன சொல்லுதோ அதுதான் எங்க வீட்டுல.
அய்யய்யோ! அது உன்னைப் பெத்த ஆத்தானா கேட்டிருப்பேன். உங்க அப்பனுக்கு வாக்கப்பட்டு வந்த இரண்டாம் குடி தானே. அதுக்கு ஏது மூத்தகுடி பெத்த பிள்ளை மேல அக்கறை.
ஏற்கனவே எங்க சின்னாத்தாவுக்குத் தூரத்துச் சொந்தம் யாரோ இருக்காகளாம். அவுக வெடி ஆபிஸ்ல சரம் பின்னுற வேலை செய்றாவுகளாம். அவுகளுக்குத்தான் என்னைக் கொடுப்பாகளாம். அப்படியாவது நெழலு கிடைக்கட்டும்னு. எங்க சின்னாத்தாவுக்குப் அவ்வளவு பிரியம் என்மேல.
ஒரு ஆவணி மாசத்துல காளியம்மாவுக்குக் கண்ணாலம் நடந்தது. அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகளைப் பெத்தா. காளியம்மாவும் கட்டிக்கிட்டவனுக்கு ஒத்தாசையாகத் தெரியாத வெடி வேலையையும் நேக்குப் போக்காகக் கத்துக்கிட்டு அதுதான் விதினு புருஷனும் பொஞ்சாதியுமாக சைக்கிள்ல போறத பார்த்து தெருக்காரங்கல்லாம் மூக்கு மேல விரல் வச்சிப் பார்த்துட்டே இருப்பாங்க. அவங்களுக்கு வேலையே யாரு யாருகூட , எங்கெ, எதுல போறாங்கனு வேடிக்கை பாக்குறதுதான்.
மாரியப்பனுக்கு இதைப் பார்க்கும் போது மனசுக்குள்ள ஒரு ஏக்கம், தவிப்பு, இல்லாமையுமாக இருந்தான்.
தான் கண்ணாலம் கட்டிக்கிட்டவளை அன்பா அனுசரணையா உயிராப் பாத்துக்கிட்டான். தன் பொஞ்சாதி மசக்கையாக இருக்கான உடனே தாங்கு தாங்குனு உள்ளங்கையிலேயே பொத்தி வைச்சிருந்தான். அவளும் அவனுக்குப் பிள்ளையைக் கொடுத்துட்டு மகராசியா போய்ச் சேர்ந்துட்டா.
மாரியப்பனே ஒத்தையாளா தன் கைச் சாப்பாடு தான் பொங்கிச் சாப்பிட்டுக் காலத்தைக் கழிச்சான். எத்தனையோ தடவ மறு கல்யாணம் பண்ணிக்கோ… நீ ஆம்பள உனக்குன்னு ஒரு குடும்பம் வேணும். துணை வேணும்னு எவ்வளவு சொல்லியும் கேட்கல.
ஒரு நாள் மாரியப்பன் ஆடு மேய்க்கையில ஏன் மாரியப்பா நீ அந்தக் காளியம்மா மேல எம்புட்டு ஆசை வெச்சிருந்த. நீ அந்தப் புள்ளையைக் கல்யாணம் பண்ணியிருக்கலாம்ல. நீ போய் அவ சின்னத்தா கிட்ட கேட்டிருந்தா கொடுத்திருப்பா. என்னவோ நீ தான் அப்படியே மசிஞ்சி மசிஞ்சி இருந்துட்டனு உருத்து இருக்கிறவங்க கேட்கும் பொழுது தலை குனிஞ்சிட்டு அமைதியாக இருப்பான்.
காலம் கழிந்தது. கடிகாரம் முள்ளை விட வேகமாக. காளியம்மா புருஷன் வெடி ஆபிசுல மும்முரமா தீவாளி வெடி செஞ்சுட்டு இருந்தப்ப ஆடி மாச மேக்காத்துல மருந்து உரசி, நீத்துப் போய் வெடிச்சிடுச்சாம். காளியம்மா புருஷனோட அந்த ரூம்ல இருந்த நாலு பேரும் கரிக்கட்டை ஆயிட்டாங்களாம். காளியம்மா கையில் ஒன்னும் இடுப்புல ஒன்னும் வச்சுட்டு எப்படித்தான் பொழப்பை நடத்தப் போறாளோ பாவி மக. தெரியலையேனு ஊரே ஒரே கூச்சலும், கூப்பாடுமாக இருந்தது.
பொறந்த வீட்டுலயும் நாதியில்ல. வாக்கப்பட்டுப்போன வீட்டுலயும் ஒன்னுமில்ல. காளியம்மா நாதியத்தவளாகிப் போனா. வீட்டிலேயே இருந்தா வவுத்துப்போட்டுக்கு என்ன செய்றது. எல்லாத்தையும் கெட்ட கனவா நினைச்சு மறந்துடனும்னு மனசுக்குள்ளே சபதம் எடுத்தா.
கான்ட்ராக்ட் சண்முகத்திடம் வாங்கிய கடனுக்கு அவெனும் நீ வேலை செஞ்சு அடன்னு ஒத்தக் காலுல வீட்டுல வந்து நின்னான்.
ரோச மானத்துக்குக் கட்டுப்பட்ட காளியம்மா சிண்டும் சிறுசுமாக இருந்த பிள்ளைகளை வீட்ல விட்டுட்டு வேலைக்குப் போனா. புருஷன் இறந்த கண்ணீரும் சோகமும் காயுறதுக்குள்ள. அங்கனெ ரெண்டு பொம்பளைக பாரேன் மயினி, இந்தக் காளியம்மா புருஷன் செத்துக் காரியம்கூட முடியல அதுக்குள்ள வேலைக்கு வந்துட்டா. இவளைக் கேட்க ஆள் இல்ல இந்த ஊர்ல.
ஒரு நாள் காளியம்மா வேலைக்கு ஒத்தையடி பாதையில போறப்ப மாரியப்பன் அந்தாள ஆடு பார்க்கப் பக்கத்து ஊரு போயிட்டு இருந்தான். எதேச்சையாகப் பார்த்தவன் மனசுக்குள்ள அப்படியே மருகிப் போனான். இந்தப் புள்ள பொழப்பு இப்படி ஆச்சேன்னு. என்ன செய்றது எல்லாம் அவ வாங்கி வந்த வரம். தலைவிதி.
என் வாழ்க்கையும் இப்படி ஆகிப் போச்சு. அந்தப் புள்ள வாழ்க்கையும் ஒன்னுமில்லாம ஆகிப்போச்சுன்னு மனுசுக்குள்ள ரொம்ப வெசனப்பட்டான்.
காளியம்மாளின் காலடிச் சுவடும் மாரியப்பனின் காலடிச் சுவடும் இணைந்தே சென்றன அந்த ஒத்தையடிப் பாதையில்….
விடியல் வரும்னு நம்பிக்கையில்...!