"இத பாருங்க மிஸ்டர் கணேசன்! என்னதான் நீங்க வாடிக்கையாளராக இருந்தாலும், நீங்க கொடுத்திருக்கிற இன்கம் சர்டிபிகேட்ஸ், சொத்து விபரம் எதுவும் போதுமானாதா இல்ல...லோன் சாங்ஷன் பண்றது கஷ்டம்", என்றேன்.
"முதல் முதலா பிசினஸ் தொடங்கப் போறேன்... மாசா மாசம் தவணை சரியா கட்டிடுவேன் சார்... நீங்க கொஞ்சம் பாத்து....", என்றார் அந்த வாடிக்கையாளர்.
"இது பேங்க் ரூல்ஸ் மிஸ்டர் கணேசன்... நீங்க ஒத்துப் போய்த்தான் ஆகணும். உங்களுக்கு தெரிஞ்சவங்க யாருக்காவது இந்த பேங்க்ல அக்கவுண்ட் இருந்தா கியாரண்டி கையெழுத்து போடச் சொல்லுங்க..."
"அப்படி யாரும் இல்ல சார்...."
"அப்ப ரொம்ப கஷ்டம் மிஸ்டர் கணேசன்", கண்டிப்பாகச் சொல்லிவிட்டு வேலையில் ஆழ்ந்தேன்.
மாலை...
வீட்டிற்குள் நுழைந்ததுமே ஏகப்பட்ட மரியாதை மனைவியிடமிருந்து.
"என்னங்க! என் தம்பி ஊர்லேந்து வந்திருக்கான்...இங்க ஒரு செல்போன் கடை வைக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கானாம்... நீங்க கொஞ்சம் பாத்து அவனுக்கு லோன் சாங்ஷன் பண்ணுங்களேன்...", காபியை நீட்டினாள்.
மாமா பேங்க் மேனேஜர் என்பதால் விதிகளைப் பற்றிக் கவலைப்படாமல் ரெக்கமெண்டேஷனுக்காக அக்காவைப் பிடித்த மச்சினன் கெட்டிக்காரன்தான்....மனைவி என்ற மலையின் முன் விதிகளை விளக்க இயலாத நான்...ம்கூம்...சொல்ல விரும்பவில்லை.
ஒருவேளை பேங்க் விதிகளை விளக்கியிருந்தால்....
கீழே விழுந்து நசுங்கிய எவர்சில்வர் பாத்திரங்களை கடைக்கு எடுத்துச் சென்று எக்ஸ்சேஞ்சு முறையில் மாற்றக் கடமைப்பட்டவனும் நான்தான்.