இரா.மாணிக்க சிவநேசன், எம்.ஏ., எம்.பில்., கல்லூரியில் தமிழ் விரிவுரையாளர்.
பக்கத்து ஊர்க் கோவிலில் "பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படிபட்ட பெருமான்", என்ற தலைப்பில் திருவிளையாடற் புராணச் சொற்பொழிவை முடித்துவிட்டு வீடு திரும்பியவருக்கு, கைப்பிடி உடைக்கப்பட்டு இருந்த அந்த சாய்வு நாற்காலியைப் பார்த்தவுடன் கோபம் சீறிக்கொண்டு வந்தது.
"புள்ளைங்களா இதுகள்? வால் ஒன்னுதான் மொளைக்கல....இந்த நாற்காலி மேல ஏறி விளையாடாதீங்கடான்னு எத்தனை தடவை சொல்றது....ஒரு தடவை சொன்னா உறைக்கணும்....வெளையாடறதுக்கு வேற எடமா கெடைக்கல?"
அவரால் கோபத்தை அடக்கிக் கொள்ள முடியவில்லை. கைப்பிடி இழந்த அந்த நாற்காலியைப் பார்க்கப் பார்க்க கோபம் கொழுந்துவிட்டது.
"இனிமே இதுல ஏறி விளையாடு....கால ஒடிச்சு அடுப்புல வச்சுபுடுறேன்...ராஸ்கல்'', என்று தன் ஆறு வயது மகனை ஒரு அறை விட்டார்.
"அந்தக் காலத்து நாற்காலி....இந்த மாதிரி மரம் இப்ப கிடைக்கிறதே அபூர்வம்... நானே பொத்திப் பொத்தி வச்சுண்டிருக்கேன்", சிலாகித்தார் சிவநேசன்.
அறை வாங்கிய மகன் கன்னத்தில் கை வைத்துக் கொண்டே அவரின் அருகில் வந்து...
"தாத்தாவ பொத்திப் பொத்தி வச்சுக்காம அந்தக் காலத்துக் கிழம்னு சொல்லி ஏம்பா முதியோர் இல்லத்தில கொண்டு போய்ச் சேத்தீங்க...", விசும்பலும் சேர்ந்து கொண்டது.
பிட்டுக்கு மண் சுமந்து சிவபெருமானுக்குப் பட்ட பிரம்படியைப் போல், மகனின் அந்த வார்த்தைகள் விரிவுரையாளரின் மனதில் சுரீரென்றது.