தம்பி வீட்டு விஷேசத்திற்கு வந்த அண்ணன் மனைவியுடன் புறப்படத் தயாரானார்.
தூங்குவது போல சோபாவில் சரிந்து உட்கார்ந்திருந்த தம்பியைத் தயக்கத்துடனேயே நெருங்கினார். அவனது இரண்டாம் கல்யாணத்திற்கு ஒத்துழைக்காதலால் தன் மீது கோபத்தில் இருப்பானோ என்று மனத்துள் பட்டது.
அதற்கேற்றாற்போல தம்பியும், கொஞ்ச நாட்கள் தங்கி விட்டுப் போகலாமே என்று உபசரிப்பு வார்த்தைகள் எதுவும் சொல்லாமல், "சரிண்ணா, பஸ் ஸ்டாப் கொஞ்ச தூரம்தான்...திருவாரூருக்கு பத்து நிமிடத்துக்கு ஒரு பஸ்" என்று கழற்றி விடுவதற்கு முனைப்பாக நின்றான்.
வழக்கம் போல அண்ணன் முகத்தில் சலனமின்றிப் புறப்பட்டார். அண்ணிக்கு முகம் சுருங்கி விட்டது. கூட இருந்த மகள், மருமகன் மற்றும் தம்பியின் பையன் ஆகியோர் விரக்தியானார்கள்.
தம்பி அரசுச் சம்பளத்தில் திடீர்ப் பணக்காரனானவன். எப்போதும் டிரைவர்களோடு தயார் நிலையில் இருக்கும் இரண்டு கார்கள் இப்போதும் நின்றிருந்தன. தம்பியின் வாய்தான் திறக்கவில்லை.
அண்ணன் மூட்டை தூக்கிய கூலியில் அரை வாய்க் கஞ்சி குடித்து, தன்னுடைய மகளையும் அரை வயிற்றுடன் வளர்த்து, மீதம் பிடித்த பணத்தில் தம்பியின் உயர் படிப்புக்குச் செலவளித்தது அண்ணியின் மனத்தில் நிழலாடியது. தாலியும் காதுக் கம்மலும் எத்தனை தடவை அடகுக் கடைக்குப் போயிருக்கும்?
தம்பி சொன்ன 'கொஞ்ச தூரம்' ஒரு மைலை நடந்தே கடக்க முடிவு செய்து தெருவில் இறங்கி நடக்கத் தொடங்கினார்கள்.
"பெரியப்பா, மனசுல எதுவும் வச்சுக்காதீங்க... அப்பா எப்பவும் இப்படித்தான்" என்று சமாதானமாக ஆரம்பித்தான் தம்பி பையன்.
"ஆமா... இவரு மனசுல வச்சிக்கனும்ணு யார் அழறாங்க..எங்க கஷ்டம் எங்களோட..யார் எங்களை கண்டுக்கப் போறாங்க.." என்று ஆரம்பித்த அண்ணியைக் கையமர்த்தி அடக்கினார் அண்ணன்.
"அவங்கவுங்களுக்கு ஆண்டவன் எப்படித் தலைலே எழுதியிருக்கானோ அப்படித்தான் நடக்கும்" என்றவாறு நடக்கத் தொடங்கினார்.
அப்போது தம்பியின் பங்களா முன் வந்து நின்ற காரில் இருந்து இறங்கியவர்கள் திமுதிமுவென்று உள்ளே நுழைந்தார்கள். வரி விதிப்புத் துறை அதிகாரிகள்!
அவர்களை இறக்கி விட்டுவிட்டுப் புறப்பட்ட கார், அண்ணன் குடும்பத்தார் அருகில் வந்ததும் நின்றது.
கண்ணாடியை இறக்கி விட்ட டிரைவர் அண்ணனிடம் பேசினார், "வண்டி காலியாத்தான் திருவாரூர் போகுது... நம்ம ஊர்க்காரரா இருக்கீங்க... வாங்க போலாம்" என்று உரிமையோடு அழைத்து ஏற்றிக் கொண்டார்.
தம்பி பையன் வாய் பிளந்து நின்றான். அவனுக்குப் புரியத் தொடங்கியது தெய்வம் கவனிக்கத் தொடங்கி விட்டதென்று.