என்றுமில்லாமல் அன்று முதலாளி கல்லாவில் உட்கார்ந்திருந்தார். வழக்கமாகக் கல்லாப் பார்க்கும் அவரது ஒரே மகன் சாப்பிடுபவர்களிடம் பந்தி விசாரித்துக் கொண்டிருந்தான்.
கல்லாவில் இருந்து பார்த்தால் தெருக்கோடி வரை தெரியும்.
வாடிக்கையாளர்கள் கூட்டம் சற்றுக் குறையத் தொடங்கிய போது ஓய்வாகச் சற்றுத் தலையை நிமிர்த்திப் பார்த்தவர், தெருக்கோடியில் ஒற்றை வேட்டி, முழங்கால் வரையிலான சட்டை, இடது கையிடுக்கில் கருப்புக் குடையுடன் வலது கை விரல்கள் வேட்டி நுனியைப் பிடித்திருக்க நிதானமாக வந்து கொண்டிருந்தவரைப் பார்த்தவுடன் பரபரப்பானார்.
அவசரமாகப் பையனைக் கூப்பிட்டுக் கல்லாவில் உட்கார்த்தி விட்டு, சமையலறைக்குள் சென்று சரக்கு மாஸ்டருக்கு உத்தரவுகள் கொடுத்தார். மாவாட்டிக் கொண்டிருந்தவனை உடை மாற்றி தொப்பி வைத்துச் சப்ளையராக மாற்றினார்.
குடைப்பெரியவர் ஆசுவாசமாகத் தனி இருக்கை பிடித்துக் கொண்டார்.
சற்றுக் காதும் மந்தமான மாவு சப்ளையர் பெரியவரைக் கவனிக்க ஆரம்பித்தான்.
பெரியவரின் மேசை அரைகுறையாகச் சுத்தம் செய்யப்பட்டது. அழுக்கு விரல்கள் படிந்த டம்ளரில் தண்ணீர் வைக்கப்பட்டது. பெரியவர் கேட்ட சூடான இட்லிகள் அரை மணி நேரத்துக்குப் பின் நீர்த்துப் போனவையாக வைக்கப்பட்டன. கூடவைக்கப்பட்ட சட்னி சாம்பாரில் பழையதான வாசனை தூக்கியது.
இட்லியில் ஒரு துண்டு மட்டும் விண்டு வாயில் போட்டுக் கொண்ட பெரியவர், காது மந்தமான சப்ளையருக்குப் பத்து நிமிடம் போராடிப் புரிய வைத்து, டிகிரி காப்பிக்கு ஆர்டர் கொடுத்தார்.
வைக்கப்பட்ட வெந்நீர்க் காப்பியை ஒரு வாய் மட்டும் குடித்து விட்டு, அரை மணி தாமதத்திற்குப் பின் பில்லைப் பெற்றுக் கொண்டார்.
கல்லாவுக்கு வந்தவர் பணத்தைச் செலுத்தி விட்டு, முதலாளி மகனிடம், "நல்ல பொறுப்புள்ள பையன். சம்பளம் கூடப் போட்டுக் கொடுங்க," என்று சொல்லிவிட்டு திருப்தியான முகத்துடன் புறப்பட்டுச் சென்று விட்டார்.
நடந்தவைகளைக் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்த வாரிசு மறைந்து நின்றிருந்த அப்பாவிடம் சந்தேகம் கேட்டான்.
முதலாளி அப்பா சொன்னார், "வந்தவர் நம்ம போட்டி ஓட்டல் முதலாளி. நம்ம வெற்றிக்குக் காரணம் பார்க்க வந்திருக்காரு"
"என்னப்பா செய்வாரு?"
"இப்ப நம்ம ஓட்டலில் பார்த்த அளவை வைத்துத் தன்னுடைய ஓட்டலில் மாறுதல் செய்து லாபம் அதிகம் பண்ணப் பார்ப்பார். அதனாலே நமக்கு ஒன்றும் பிரச்சனை இல்லை. யானை படுத்திருந்தாலும் குதிரையை விட உயரம் தானே?"
தொழிலில் இன்னும் கற்றுக் கொள்ள நிறைய இருப்பது பையனுக்குப் புரிந்து போயிற்று.