"என்னடா மாது! அம்மாவுக்கு தவசம் நன்னா பண்ணின. தட்சணையும் நெறைய கொடுத்திருக்க...பெரிய மனசுடா உனக்கு", சிலாகித்தார் குப்பு சாஸ்திரிகள்.
"பித்ரு காரியமாச்சே! பண்ணித்தானே ஆகணும்"
"ஆமாம்., சாஸ்த்திரப்படி என்னென்ன பண்ணனுமோ, அதெல்லாம் பண்ணித்தானே ஆகணும்... உங்கம்மாவோட ஆன்மா சாந்தியடைய வேண்டாமா?", சொல்லிக்கொண்டே பணத்தை பஞ்சகஜ மடிப்பில் சொருகிக்கொண்டார்.
"இந்த மாதுவ பாத்தியா...அவன் அம்மா உயிரோட படுத்த படுக்கையாக இருந்தப்ப ஒருவாய் கஞ்சி ஊத்தல...இப்ப இவ்வளவு தட்சணை கொடுத்து தவசம் பண்றான்" மகனிடம் சொல்லிக் கொண்டே நடந்தார்.
வீட்டில்...
"உங்க அம்மா என்ன பண்ணிருக்கா பாருங்கோ... நாலுபேர் வந்துபோற எடத்துல இப்படியெல்லாம் அசிங்கம் பண்ணினா யாரால இருக்கு", குப்பு சாஸ்த்திரிகளின் மனைவிக்கு எள்ளும் கொள்ளும் வெடித்தது.
குப்பு சாஸ்த்திரிகளின் அம்மா 81 வயதாகி நடக்க முடியாமல் நோய்வாய்ப்பட்டு இருப்பவள். அன்றாட வேலைகள் எல்லாம் உட்கார்ந்த இடத்தில்தான்.
"செத்துத் தொலையேன்...சனியனே!., ஏன் இப்படி என் பிராணனை வாங்குற...இனிமே இவளுக்கு கஞ்சி ஊத்தாதடீ", கோபம் தலைக்குமேல் ஏறியது.
"ஏம்பா! மாது அவன் அம்மாவுக்கு கஞ்சி ஊத்தலன்னு சொன்னேளே! இப்ப நீங்க பண்றது என்னவாம்? ஊருக்கு மட்டும்தானா உபதேசம், இதே நிலைமை உங்களுக்கு வந்தா என்ன பண்ணுவேள்?", நிதானமாக கேட்டான் குப்பு சாஸ்த்திரிகளின் மகன்.
"நீ போடா அதிகப்பிரசங்கி! போய் படிக்கிற வேலையைப் பாரு..."
மகனை அதட்டி அனுப்பினாலும், அவனது அந்த வார்த்தைகள் அவர் மனதை கிழிக்கத்தான் செய்தன.
எழுந்து சென்று அவரே அந்த இடத்தை சுத்தம் செய்தார். கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அம்மாவைப் பார்த்தார். மனதில் ஒரு தெளிவு பிறந்தது. அந்த பார்வையிலேயே அம்மாவை அணைத்துக் கொண்டார்.
அம்மா இறந்த பிறகு அவளுக்காக "தவசம்" செய்யவேண்டிய அவசியம் இனி அவருக்கு இல்லை.