ஏழு மணிக்கே வெய்யில் சுர்ர்ரென்று உறைத்தது.
சீதாவை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போகவேணடும். மாதத்தில் இரண்டாவது புதன்கிழமை டாக்டரிடம் சீதாவை காட்ட வேண்டிய நாள். எது எப்படி இருந்தாலும் அன்றைக்கு ஒத்திப் போட முயலுவதில்லை. இது அவள் வாழ்க்கைப் பிரச்சனை, நான்காண்டுகள் ஒரு சடங்கு போல தவறாமல் நடந்து வருகிறேன்.
“சீக்கிரம் புறப்படும்மா. நாழியாறது. லேட்டா போனா டோக்கன் கிடைக்காது.”
“இதோ வந்துட்டேன்பா”- சமையல் அறையிலுருந்து சீதாவின் குரல் வந்தது.
செருப்பு மாட்டிக் கொண்டு வாசலுக்கு வந்த போது எதிர்வீட்டில் ஆட்டோ ஒன்று படபடப்போடு வந்து நின்றது. அதிசயமாய் யாரென்று நிமிர, எதிர் வீட்டு மணி நாலைந்து சூட்கேசுகளுடன் தோளில் ஒரு ஜோல்னா பை தொங்க இறங்கியது தெரிந்தது.
சட்டென்று முகம் மாறியது உள்ளே போகலாமா என்று தயங்கிய போது, குட்மார்னிங் அஙகிள்“ அவன் பழசை அடியோடு துடைத்து விட்டுச் சொன்னான்.எனக்கும் தயக்கம் குறைந்தது.
“குட்மார்னிங் மணி. சௌக்கியமா?”
“நல்ல சௌக்கியம். எங்கியோ புறப்பட்டீங்க போலிருக்கு.”
நடையில் சீதா செருப்பை மாட்டிக் கொண்டிருந்தாள்.
“ஆமா மணி. டாக்டர்கிட்ட போகணும். சாயந்திரம் பாப்போம்.”
அவனை அப்போதைக்கு கழட்டி விட்டேன்.
“ஓகே! அஙகிள் சீயு.” அதற்குள் அவன் அம்மா பெட்டிகளைத் தூக்கிப் போனாள். அவன் ரொம்பவும் இங்கிதமானவன்தான். சீதா அவனைப் பார்க்கும் முன் உள்ளே போய்விட்டான்.
மணி ரொம்பவும் நல்ல இளைஞன்தான்.வயது இருபத்தெட்டிருக்கும்.
சிவந்தமேனி. சுருட்டையாய் முடி.அகன்ற முகம். எடுப்பான மூக்கு. தேக்குக்கட்டை போன்ற அகன்ற தோள்கள் உயரம்கூட இப்போது கூடி விட்டான்.யாரிடமும் பழகும் வெள்ளை உள்ளம்.
ஐந்தாணடுகளுக்கு முன்பாக முதல்முதலாய் இந்த வீட்டுக்கு வந்த போது அறிமுகமானவன் ஐம்பது வயது நிரம்பிய என்னோடு மிக நெருங்கிய நண்பனாகிப் போனான். ஏதோ கம்பெனியில் சேல்ஸ் எக்ஸிக்யுட்டாக பணிபுரிகிறான். கணிசமான சம்பளம். புதுப் படம் ஏதாவது ரிலீஸானால் போதும் உடனே ரிசர்வ் செய்து விடுவான். கச்சேரி காலச்சேபம் இலக்கியவிழா நாடகம் என எங்கு போனாலும் ஜோடியாக சுற்றினோம்.
சீதாவுக்கு அவன் மேல ஒருகண் என ரொம்பவும் தாமதமாகத்தான் எனக்குத் தெரிந்தது. அது கூட நானாகத் தெரிந்து கொள்ளவில்லை.
பெங்களுரிலிருந்து வந்த என் தங்கைதான் கண்டுபிடித்தாள்.
மணி என்னதான் நல்லவனானாலும் காதல் என்றாலே சீறும் சொந்தக்காரர்களுக்குப் பயப்பட்டேன். இதைத் துண்டிக்க நினைத்தேன்.
மணி ரொம்பவும் முன்னெச்சிரிக்கைக்காரன் என்பதை அதில்தான் கண்டேன். காலையில் நான் ஏதாவது சமாதானம் சொல்லி அவன் வரவைத் துண்டிக்க எண்ணினேன்.
ஆனால் மாலையில் அவனே வந்தான்.
“அங்கிள் எனக்கு சென்னைக்கு டிரான்ஸ்பர் வந்துடுச்சு. நாளைக்கே அங்க போய் ஜாயின் பண்ணனும். ராத்திரி சேரன்லே ரிசர்வ் பண்ணியாச்சு. உங்களோட ரொம்ப பழகிட்டேன். பிரியறதுக்கு மனசு ரொம்ப கஷ்டப்படுது. என்றான்.
என்னுடைய கணகளிலும் ஜலம் பெருகியது. என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவன் போய்விட்டான்.
அவன் போன பிறகு எங்கெல்லாமோ வரன்கள் வருவதும் போவதுமாய் நாட்கள் கழிந்தன.ஒன்று கூட குதிரவில்லை. ஒன்று ஜாதகம். இல்லையென்றால் சீர்செனத்தி. ரெண்டும் விட்டால் வரன் லடசணமாயில்லாதது. இப்படி ஒரு வருஷம் முடிந்தது. அந்தத் தீபாவளியை ஏதோ சொரத்தில்லாமல்லாமல் கொண்டாடினோம்.
கொல்லையில் புடவை காயப்போட்டுக் கொணடிருந்தாள் சீதா. திடீரென்று எங்கிருந்தோ ஒரு ராக்கெட் வெடி அவள் முகத்தில் மோதி வெடித்தது.வெறும் காயம் எனறு ஏதோ ஆயின்மெணட் வாங்கிப் போட்டோம். புண் சரியாகிப் போனது. ஆனால் அந்த இடம் மட்டும் கன்னம் முழுக்க மேரி பிஸ்கட் அளவுக்கு வெள்ளைத் திட்டாக நின்று போனது.
டாக்டரிடம் காட்டிய போது ஸ்கின் ஸ்பெஷலிஸ்டை கன்சல்ட் பண்ணச் சொன்னார். ஸ்பெஷலிஸ்ட்டிடம்தான் இநத நான்கு வருடமும் மாதம் தவறாது இரண்டாவது புதன்கிழமை போய் காட்டி வருகிறோம்.ஆயின்மெணட்டும் பில்சுமா எழுதிக் கொடுப்பார். நான்கு வருட மருத்துவத்தில் லேசாய் குணம் தெரிந்த மாதிரி இருக்கிறது. வெள்ளை வட்டத்தைச் சுற்றி லேசாய் பழுப்பு படர்கிறது.
“இது நல்ல அறிகுறி நாளடைவில் சரியாகிவிடும் என்று டாக்டர் சொன்னார். இப்படியானதிலிருந்து சொந்தபந்தம் முழுக்க இவளுக்கு இப்படியானதையே பேசினார்கள் எந்த வரனும் அமையவில்லை.
மனசு முழுக்க சோகத்தை தேக்கியபடி இதோ நாட்களை கடத்துகிறேன்.
“அப்பா டோக்கன் எட்டுன்னு கூப்பிடறாங்க நாமதானே?”
தூக்கத்திலிருந்து விடுபட்டவனாய் “ஆமாம்மா வா போகலாம்.” என்றேன்.
டாக்டரின் அறை பளிச்சென்று வெள்ளையிலிருந்தது.
“உக்காருங்க சார். வாம்மா இப்படி சீதா தானே? இம்ப்ருவ்மெனட் என்னான்னு பார்ப்போம்.”
டாக்டர் பரிசோதனை செய்தார்.
“நல்லா இம்ப்ரூவ் ஆகியிருக்கு. இன்னொரு ஆயின்மென்ட் மாத்திப் பார்போம். இன்னும் ரெண்டொரு வாரத்திலே குணமாயிடும்.
வெளியே வந்தோம்.
மாலையில் மணியின் வரவை என்னால் தடுக்க முடியவில்லை.பழையபடி எங்கள் நட்பு துளிர்த்தது. இப்போது அவன் சீதாவை பார்ப்பது கூட இல்லை.
டாக்டர் சொன்னபடி ஒரே வாரத்தில் அது காணாமல் போனது. சீதா இப்போது பழைய முகத்தோடு மலர்ச்சியாயிருந்தாள். அநத வாரத்தில் ஒரு கல்யாணம் வந்தது. குடும்பத்தோடு போனோம் முன்பு பெண் பார்த்து விட்டுப் போனவர்கள் சீதாவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார்கள். மறுபடி சம்பந்தம் பேச வருவதாகச் சொன்னார்கள்.
நான் சரியாக பதில் சொல்லவில்லை.
மறுநாள் மணியைப் பார்த்தேன்.
“மணி ஒரு விஷயம் சீதா உன்னே விரும்புறா.இல்லையா?”
“ஆமா சார்”
“உனக்கும் விருப்பம்தானே.?”
“ஆமா சார்” சலனமில்லாமல் சொன்னான்.
“ஆறுமாசத்துக்கு முன்னேயே நான் இந்த முடிவுக்கு வந்துட்டேன். மணி ஆனா அப்போ நான் கல்யாணத்துக்குச் சம்மதிச்சிருந்தா மத்தவங்க என்ன நினைப்பாங்க? ஏதோ பொண்ணுக்கு வியாதி. கன்னம் கூட வெள்ளையாயிருக்கு அதான் உன் தலையிலே கட்டி வச்சுட்டேன்னு பேசுவாங்க. இப்போ முழுசுமா குணமாயிடுச்சு அதான் உன்னைக் கேட்டேன்.” என்றேன்.
மணியின் கண்கள் பனித்திருந்தன.