ஊரிலுள்ள திருமணமான பெண்கள் பலரையும் பெரும்பாலும் அவர்களுடைய பெயர்களைச் சொல்லி அழைப்பது மிகவும் குறைவுதான். அவரவரின் ஊர்ப் பெயர்களாலேயே அழைக்கப்படுவர். வயதானவர்களாய் இருந்தால் ஊர்ப் பெயருக்குப் பின் ஆயா, இடைநிலை வயதுடையவர்களா இருந்தால் அம்மா, திருமணமான புதுசாகவோ சிறு வயதாகவோ இருந்தால் அக்கா, பொண்ணு, ஆச்சி போன்ற ஒட்டுக்கள் சேர்ந்து வரும்.
இப்படி அழைப்பதனால் பலருடைய சொந்தப்பெயர் மறைந்து ஊர்ப் பெயரே அவரவருடைய பெயர் போல நிலைத்து விடுவதுண்டு. இப்பவும் பல ஊர்களில் சிலருக்கு அப்படி அமைந்து விடுகிறது. அதற்காக அவர்கள் யாரும் வருத்தப்படுவதில்லை.
சொக்கங் கொளத்தா என்கிற பெயரும் அந்த ஆயாவுக்கு அப்படித்தான் அமைந்தது. சொக்கன் குளத்திலிருந்து இந்த ஊருக்கு வாழ்க்கைப் பட்டு வந்தவங்க சொக்கங் கொளத்தா என்கிற இந்தப் பெயர் இந்த ஊர் மட்டுமல்ல சுற்று வட்டாரத்தில் உள்ள பத்து பதினைந்து கிராமங்களிலும் புகழ் பெற்ற பெயராக இருந்தது.
வெள்ளி, செவ்வாய் ஆனால் பொழுது சாயும் நேரத்தில் யாராவது நாலுபேர் சொக்கங் கொளத்து ஆயாவுக்காக காளியம்மன் கோயில் வாசலில் காத்துக் கொண்டே இருப்பார்கள்.
இந்த நாட்களில் வீடுகளில் விளக்கேற்றுகிற நேரத்தில், ஆயா குளித்து முடித்து வீட்டுக்குப் போய் மூட்டையில் உள்ள சுத்தமான துணியை எடுத்துக் கட்டிக்கிட்டு நெற்றி நிறைய குங்குமத்தை இடுவாங்க.
குங்குமத்தை இடும்போதே தொண்டையிலிருந்து கிளம்பி மூக்கு வழியாக வெளிப்படும் ‘உம்’ சத்தம் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருகி தெருவாசலுக்கு வரும்.
அப்பொழுதே அப்பு தாத்தாவும், அவர் மகனும் வீட்டுவாசலில் ஆளுக்கொரு பக்கமா நின்று கொண்டு ‘தாயி மக்களுக்கு நல்லதச் சொல்லு, போ தாயி’ என்று அவங்கள வாசலை நோக்கி வழியனுப்பி வைப்பாங்க. குளிச்சு வந்த ஈரத் தலைமுடி இரண்டு பக்கமும் வகுந்து விட்டது போல் பரக்கக் கிடக்கும். அந்த ஈரத்திலும் முகத்திலிருந்து அனல் பறக்கும். முகமெல்லாம் சிவந்து அவங்களுடைய இயல்பான தோற்றம் மறைந்து பார்ப்பவரை நடுங்கச் செய்கின்ற தோற்றத்தில் வெளிப்படும். வீட்டை விட்டுப் புறப்பட்டு மேற்கு நோக்கிப் போகும் போது வழியில் எதிர்படுபவர்களெல்லாம் இருபுறமும் விலகி நின்று கையெடுத்து கும்பிட்டு, தாயே நல்லது சொல்லு’ன்னு கையேந்தி நிப்பாங்க.
காளியம்மன் கோயில் நெருங்கியவுடன் கூந்தலையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டுக் கைகள் இரண்டையும் விரைப்பாக நீட்டிக் கொண்டு தலையை அன்னாத்தி வடக்குப் பக்கமாகத் திருப்பிக் கொண்டு, ‘யார்ரா அங்க... வருவேன்னு தெரியுமில்ல, கொண்டாடா’ ன்னு இடது கையை ஏந்தி நிற்பாங்க.
அவங்களைப் பார்ப்பதற்காக வந்திருக்கிற ஒருத்தர் கையில் ஒடித்து வந்திருக்கிற வேப்பிலைக் கொத்தினை அவங்க கையில் வைப்பார். அதனை இறுகப் பற்றிக் கொண்டு வலது கையினை நீட்டி ‘சூடத்தை வையுடா’ ன்னு உரக்கக் கத்துவாங்க. அந்தச் சத்தம் கேட்டு முடிவதற்குள் அவங்க கையில் சூடத்தை வைத்தாக வேண்டும். இல்லையென்றால் ‘அவ்வளவு அலட்சியமாடா, எம்மேல’ ன்னு ஆவேசம் மிகுந்து பல்லை நறநற வென்று கடிப்பாங்க.
‘அப்படியெல்லாம் இல்ல தாயி, சூடத்தை ஏத்துறதுல நேரம் ஆயிடுச்சு’ ன்னு ஏற்றிய சூடத்தைக் கையிலே வைப்பார்கள். ஒரு வேள ஆயா கையில் வைக்கிற சூடம் சின்னதா இருந்தா தூக்கி எறிஞ்சிடுவாங்க அதற்காகவே நல்லா பெரிய கட்டி சூடமா வைப்பாங்க.
தாம்பாளத்தில் எரிவது போல ஆயா கையில சூடம் எரியும். கொஞ்ச நேரத்தில் கையில் இருக்குற சூடம் ஆயாவின் திறந்த வாய்க்குள் எரியும். எரியும் வாயையும் முகத்தையும் பார்க்கும் போது காளவாய் அடுப்பு நெருப்பு எரிவது போல இருக்கும்.
பக்கத்தில் நிற்பவர்களுக்கு அச்சம் கொள்கின்ற அந்தத் தோற்றமானது அந்தக் காளியே வந்து நிற்பது போலத் தோன்றும். சிறுபிள்ளைகளெல்லாம் அஞ்சி நடுங்குவார்கள். சூடம் எரிந்து அணையும் தருவாயில் அவுங்க முகத்திலிருந்து தோன்றுகின்ற பாவனைகளை வைத்து கூடி நிற்பவர்கள் அவரிடம் கேட்கவேண்டிய கேள்விகளைக் கேட்பார்கள்.
கேள்விகள் ஒவ்வொன்றும் அவர்களுடைய எதிர்பார்ப்பையும் கவலைகளையும் வெளிப்படுத்துவதாக அமையும். ஆனா ஆயாவோ முகத்தக் கடுகடுப்பா வச்சிக்கிட்டுக் கோபத்தின் உச்சத்தில் இருப்பாங்க.
தாயே சொல்லு தாயி. இத்தனை கோபம் எதுக்கு தாயி.....
நான் இன்னும் எத்தனை நாளைக்குடா இந்த மொட்டத் தரையில இருக்குறது. என்ன யாராவது கவுனிக்கிறங்கிளா? ....
நாங்க என்னம்மா பன்றது. வயித்து சோத்துக்கே பாடாயிருக்கு. ஏதோ எங்களால முடிஞ்சத வர கோடையில் செய்யுறோம். இப்ப நீ வந்த காரணத்த சொல்லு.
அதுவாடா... என்னைத் தேடி மேற்கேயிருந்து ஒருத்தன் வந்திருக்காம் பாரு ..... அவனைக் கூப்பிடு’ம் பாங்க உடனே பக்கத்துல இருக்கின்ற ஒருவர் யாருப்பா அது... ஆத்தா பக்கத்துல வா’ ம்பார்.
நீ நினைக்கிறது ஒடனே நடக்காது. இன்னும் கொஞ்சம் நாள் போவணும்.
அவரும் உடனே மறு பேச்சில்லாமல் சரி ஆத்தானு நகர்ந்திடுவார்.
பக்கத்தில் வேறொருவரைக் காட்டி, இவரு ஓஞ் சந்நிதிக்கு ஒன்னத் தேடி வந்திருக்காரு, நல்லவார்த்தையா சொல்லு’ன்னு ஆத்தா முன் நிறுத்துவார்.
கை கட்டி வாய்பொத்தி நிற்கும் அவர் தலையில் இறுகப் பிடித்த வேப்பிலையை வைத்தும் உதறியும் அவருக்கு உண்டான செய்திகளைச் சொல்லுவாங்க. அவரும் நம்பிக்கை உடையவராய் நகர்வார்.
இப்படி அவுங்கள நாடிவந்த ஒவ்வொருவருக்கும் உரிய பதிலைச் சொல்லி முடிந்ததும் சிறிது நேரத்திற்கெல்லாம் கீழே விழுந்து விடுவாங்க. அவங்க கீழே விழுந்துட்டாங்கன்னா அவங்க மீது வந்த அம்மன் அவங்களைவிட்டு அகன்று மலையேறி விட்டதாகப் பொருள்.
நினைவு திரும்பி இயல்பு நிலைக்கு வந்த பிறகு, தானே வீடு திரும்புவாங்க. அன்று இரவு முழுதும் யாருடனும் எந்தப் பேச்சும் இருக்காது. பொழுது விடிந்ததும் இரவு எதுவுமே நடக்காதது போல ஒரு முது பெண்ணுக்குரிய இயல்பான தன்மையுடன் நடந்து கொள்வாங்க.
இது எப்படி முடியும் என்று தெரியவில்லை. ஆனாலும் எப்பொழுது இம்மாதிரியான குணம் அவர்களுக்கு வந்தது என்றும் தெரியவில்லை. சிறியவர் முதல் தம்மைவிட பல வயது மூத்தோர் வரை, தன் கணவனாக இருந்தாலும் சரி, மாமனார் உள்ளிட்ட யாராக இருந்தாலும் சரி, அந்த நேரத்தில் அவுங்க முன் நிற்கின்ற யாராக இருந்தாலும் வாடா, போடா சொல்லுடா என்று ஒரே அடா புடாதான்.
அது நாட்டாமைக்காரராக இருந்தாலும் பஞ்சாயத்துக்காரராக இருந்தாலும் சரி, எல்லோருக்கும் ஒரே மரியாதைதான். இது பற்றி யாரும் மரியாதைக் குறைவாக எடுத்துக் கொள்வதில்லை.
ஊரே அவங்க முன்னால கைகட்டிப் பணிந்து நின்று நல்ல வாக்கு கேட்டு நிற்கின்ற கோலம் வேறு எந்தப் பெண்ணுக்கும் வாய்க்காது.
அவுங்கள சேர்ந்தவங்க மட்டுமில்லாம பக்கத்துல உள்ள வேற்றுச் சாதிக்காரர்களும் அஞ்சி நடக்கக் கூடிய பெண்ணாக இருந்தது விசித்திரம் தான்.
சாதாரண நாட்களில் தான் இப்படி என்றால் மாசிமகம் போன்ற முக்கியமான நாட்களில் சொல்ல வேண்டியதில்லை. சூரக்காட்டு மருதன் எப்போவெல்லாம் தன் தப்பை முழக்குகிறாரோ அப்பொவெல்லாம் ஆயாவைக் கட்டுப்படுத்த முடியாது.
வேப்பிலையும் சூலத்தையும் கையில் பிடித்து ஆடுனாங்கன்னா உங்க வீட்டு ஆட்டம் எங்க வீட்டு ஆட்டம் இல்ல, அப்படி ஒரு ஆட்டம். மருதனுக்கு நெம்பு கழண்டு வேர்வை பெருக்கெடுத்து ஓடும். அவங்க ஆட்டத்தைப் பார்த்துச் சுற்றி நிற்கிற சின்ன பசங்களும் அவங்களோடு சேர்ந்து ஆடுவார்கள்.
பெண் என்றால் நாணத்தோடும் பணிவோடும் இருக்க வேண்டும் என்பதற்கு மத்தியில் இவங்களுக்கு மட்டும் எப்படி இது சாத்தியம். ஏன் மற்ற பெண்களால் இது முடியவில்லை. இப்போது நினைத்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.
கணவன் இறந்து போன சில நாட்களில் மனந்தளர்ந்து போய் அருள் வந்து பேசுவதெல்லாம் குறைந்து, கொஞ்சங் கொஞ்சமாக குறைந்து அப்படியே நடமாட்டமும் இல்லாமல் போனது. உடம்புக்கு ரொம்ப முடியாம போய், படுத்த படுக்கையாக ஆன பிறகு தான் இந்த ஆட்டமெல்லாம் ஓய்ந்து போனது.
அவுங்களுடைய மூத்த மகன்கள் இருவரும் எத்தனையோ முறை அவுங்களைப் புதுத்தெருவில் உள்ள தம் வீட்டிற்கு வந்து விடும்படி அழைத்தும் கூட இந்தத் தெருவை விட்டுப் போகவில்லை. அப்படிப்பட்ட ஆயாவைப் படுத்த படுக்கையான பிறகு கடைசி காலத்தில் தன்னோடு சிலநாள் இருக்கட்டுமே என்று மூத்த மகன் பெருமாள் தன் வீட்டுக்குக் குண்டுகட்டாகத் தூக்கிக் கொண்டு போனார். சில நாட்களில் ஆயா செத்தும் போனாங்க.
அவுங்க சாவில் கூட ஊருக்கு ஒரு புது வழி பிறந்தது. அதற்கு முன்பு அந்தப் புதுத்தெருவில் யாராவது இறந்து விட்டால் பிணத்தை எந்த வழியாகத் தூக்கிச் செல்வது என்ற குழப்பம் இருந்து வந்தது.
ஏனென்றால் வழியில் வேற்று சாதிக்காரர்கள் தெரு இருந்தது தான் இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.
புதுத்தெருவின் முதல் சாவாக ஆயாவின் சாவு இருந்ததால் அவர்களை அந்தத் தெரு வழியாக எடுத்துச் செல்வதற்கு யாரும் எந்தத் தடையும் சொல்லவில்லை. கிச்சிக் கிமாருன்னு ஒரு சிறு சலனம் கூட ஏற்படவில்லை.
ஆயா மீதான அச்சமா, ஆயா மீது வரும் சாமி மீது அச்சமா தெரியவில்லை.
ஆயாவைத் தூக்கிச் செல்லும் போது அடுத்த சாதிக்காரர்களும் ஆயா போகும் திசை நோக்கி ‘ஆயா சொக்கங் கொளத்தா... எங்களுக்கு எந்தத் தொந்தரவும் குடுத்துறாதம்மா’ என்று கையெடுத்துக் கும்பிட்டு நின்றது ஊரில் யாருக்கும் கிட்டாத பெரும்பேறு.
அன்றைக்கு மட்டுமல்ல அவங்களப் பற்றிய பேச்சு மறையிற வரைக்கும் பயம் மறையவில்லை. ‘சக்தியுள்ள பொம்பள, அலட்சியமாக இருக்கக்கூடாதுன்னு’ ஆளாளுக்கு அவுங்கவுங்க வீட்டு வாசலில் அழிஞ்சி முளைக்குச்சி அடிச்சு கட்டுமானம் பண்ணியிருந்தார்கள்.
யாரோ ஒரு சிலர் ஆயா நடமாட்டம் பற்றிப் பேசினாலும் அவுங்க யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுத்ததாகச் செய்தி இல்லை. ஊரில் மனிதரோடு உலாவும் தெய்வமாகப் பார்க்கப்பட்டவர்களல்லவா.
உயிரோடு இருக்கும் போது நல்லவர்களாக இருப்பவர்கள் செத்துப் போன பிறகு கெட்டவர்களாக மாறி, பலரையும் துன்புறுத்துவார்கள் என்ற ஊர் வழக்கை, ஆயா தன் மறைவுக்குப் பின் மாற்றிக் காட்டுனாங்க. .
இன்றும் வெள்ளி செவ்வாயில் அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒரு சிலர் சினுங்கிப் பார்க்கின்றனர் என்றாலும் ஆயாபோல தாக்குப் பிடிக்க முடியவில்லை.
ஒரு கட்டி சூடத்தை எரிந்து முடிகிற வரைக்கும் அப்படியே வாயில் வைத்து எரிய விடுகிற செயல் என்ன அவ்வளவு சாதாரண செயலா?
அதற்கெல்லாம் பண்புடன் கூடிய பயிற்சியும் துணிவும் வேண்டும். மொத்த சமூகத்தைத் தன் வார்த்தைகளுக்கு முன் மண்டியிடச் செய்வது உண்மையிலே ஒரு பெரிய கலை தான்.
அதிர்ந்து அழுவதைக்கூட நாகரிகம் இல்லை என்று கருதி மனதுக்குள்ளேயே அடக்கிக் கொள்கின்றனர் பெண்கள்.
மனப் புழுக்கங்களின் வெடிப்புகளால் ஆன நிரந்தர ரணங்களோடேயே பொழுதுகள் தொலைகின்றன பலருக்கு. கிராமத்துப் பெண்கள் கொஞ்சம் கொடுத்து வைத்தவர்கள். எதுபற்றியும் யோசிக்காமல் விளாவாரியாக உடைத்துப் பேசிவிடுவார்கள். போதாக்குறைக்கு ஒரு பாட்டம் உட்கார்ந்து அழுது ஒப்பாரி வைத்துவிடுவார்கள்.
புழுங்குவதை விட அழுவது மேல்தான்.
இப்படிப்பட்ட பெண்களிலிருந்து வேறுபட்டவர்தான் சொக்கங் கொளத்து ஆயா.
அன்றும் சரி, இன்றும் சரி அவங்க இடத்தை இன்னும் யாரும் இட்டு நிரப்ப முடியல.
முன்பெல்லாம் காவல் நிலையத்துக்கோ நீதிமன்றத்துக்கோ போனதில்லை யாரும். நாட்டாண்மை பஞ்சாயத்தார்கள் மூலமே எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்வார்கள்.
அவர்களுக்கும் சேர்த்து விஞ்சி நிற்கும் மனக்குறைகளைப் போக்குகின்ற அருள் வாக்குகளைச் சொல்லக் கூடியவங்களாக ஆயா விளங்கியது விசித்திரம்தான். சரியோ, தவறோ ஊர் ஆண்களெல்லாம் கூடி நின்றாலும் ஒற்றைப் பெண்ணாய் ஒரு பிடி வேப்பிலையைக் கையில் பிடித்துக் கொண்டு அந்தச் சில கணங்களில் ஊரையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடும் திறமை, இனி யாருக்கு வரும்?