"நான் பூபதியுடன் நடந்து கல்லூரி வளாகத்தை நெருங்கிய தருணத்தில் பூபதி அழ ஆரம்பித்து விட்டான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவன் அழுகை அதிகரித்துக் கொண்டே இருந்தது. அவன் அழுது இதற்கு முன் நான் பார்த்ததே இல்லை.
அவனை சமாதானம் செய்து இயல்பு நிலைக்கு மாற்றி விபரத்தை கேட்ட போது, அவன் உயர்நிலை பள்ளி நாட்களில் இருந்து உயிருக்குயிராய் நேசித்த ஆர்த்தியிடம் அவனது கவிதை புத்தகத்தைக் கொடுத்திருக்கிறான். அவள் அதை கிழித்தெறிந்திருக்கிறாள். அதனை எதிர்பார்க்காத அவன் மனமுடைந்திருக்கிறான்.
பூபதியைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். அவனது விருப்பு , வெறுப்பு என்னவென்பதும். அவனது கவிதையாற்றலும். ஆமாம், அவனது எல்லா கவிதையிலிலும் ஆர்த்தி பற்றிய வார்த்தைகள் இல்லாமல் இருக்காது.
ஆர்த்தி அவனோட முதல் காதலி. அப்படி என்று தான் நினைக்கிறேன். ஆனால் முதன் முதலில் பூபதியை ஆர்த்தி வீட்டுக்கு அழைத்துச் சென்றது நான் தான். அதுதான் அவன் அந்த வீட்டை மிதித்த கடைசி நாளாகவும் இருக்கனும்.
அன்று தனது மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடச் சென்ற போது, "வாடா ஆர்த்தி வீடு இங்கதான் இருக்கு. அந்த பக்கம் போய் வரலாம்" என்றான்.
நானும் மறுப்பேதும் சொல்லாமல் வண்டியைச் செலுத்தினேன். ஆனால் அந்த தெருவில் கடைசியாய் உள்ளதுதான் ஆர்த்தி வீடு. போய் திரும்பும் போது அந்த வீட்டில் யாராவது பார்க்க நேரும் என்று திரும்ப நினைத்தேன்.
பூபதியோ போக வேண்டும் என்று அடம் பிடித்தான். சரி என்று அவள் வீட்டுக்கு வண்டியைச் செலுத்தினேன். என் சிறுவயது குடும்ப நண்பர்கள் தான் ஆர்த்தியின் பெற்றோர்கள். என் அப்பாவோட வேலை மாற்றம் காரணமாக வேறு ஊர்களில் இருந்து விட்டு அப்பொழுதான் அங்கு வந்திருந்தோம்.
அந்நேரத்தில் ஆர்த்திதான் வீட்ல இருந்தா. அவளுக்கு பூபதியை தெரியாதது மாதிரி நான் தான் அறிமுகப் படுத்தினேன். அவளும் அன்போடு வரவேற்றாள். அந்த நேரத்தில் ஆர்த்தி என்னை பற்றி என்ன நினைச்சிருப்பாள்? என்று எண்ணிய மனதில் ஏதோ உறுத்தல் தொடங்கிய நேரத்தில் பூபதியின் அழுகை சத்தம் எனக்கு நிகழ்காலத்தை உணர்த்தியது.
ஒரு பெண்ணுக்காக இந்த அளவு அழுது நான் யாரையும் பார்த்ததில்லை.
பூபதி அந்தப் பெண்ணை விடுடா அவளுக்கு குடுத்துவெச்சதது அவ்வளவுதான்னு நினைச்சுக்க , என ஆறுதல்கள் சொல்லி தேற்றி அனுப்பினாலும் அந்நிகழ்வு என் மனதில் இழப்பு என்பதின் வலி எப்படிப் பட்டது என்பதை தடம் பதித்துச் சென்றது.
பள்ளி வாழ்க்கை முடிந்து கல்லூரி வாழ்வினில் கால் பதித்து கவலை மறந்திருந்த காலம் அது. கனவுகளை மட்டுமல்ல காதலையும் சுமந்தே கல்லூரி வாழ்க்கை அமைந்து விடுகிறது பலருக்கு.
உண்மைதான் எனக்கும் ஒருத்தியை பிடித்திருந்தது. இரட்டை சகோதரிகள் இருவரும் ஒரே வகுப்புதான். மூத்தவளை விரும்பினேன் . எனக்கு குழப்பமே இருந்ததில்லை இருவரின் தோற்றத்தில் யார் அக்கா யார் தங்கை என்பதில். கல்லூரியிலும் பரவியது நான் காதலிப்பது. அந்த பெண்ணுக்கும் தெரியும் ஆனால் நான் நேரில் வெளிப்படுத்தியது கிடையாது.
பார்ப்பது ரசிப்பதிலேயே பறிபோனது ஒன்றரை வருடங்கள்.
பூபதி கவிதை பேச்சுப் போட்டி என கல்லூரியின் ஒட்டுமொத்த உருவமாக இருந்தான். பெண்களிடமும் சகசமாக பேசுவான். அவனுக்கு சில பெண்கள் மேல் ஈர்ப்பு ஏற்பட்டது.
அப்படித்தான் நான் விரும்பும் பெண்ணிடமும் பேச ஆரம்பிச்சான். யார் வெளிப்படுத்தியிருக்க கூடும் எனத் தெரியவில்லை. ஒரு கட்டத்தில் இருவரும் விரும்பும் செய்தி கிடைத்தது.
அந்நாட்களில் மனசுக்கு ஏதாவதென்றால் பூபதி அக்காவைத்தான் போய்ப் பார்ப்பேன். அன்றும் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன். வேறு ஒன்றை சிரித்துத்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். என்னுள் ஏதோ அழுத்தி என்னமோ நடக்கிறது. கண்ணில் இருந்து பொல பொலனு தண்ணி கொட்டுது. என்னால அதைக் கட்டுப்படுத்த முடியல. சிரிச்சுக்கிட்டே இருக்கேன். ஆனால் கண்ணில் பொல பொலனு தண்ணி வருது அக்கா பதறிப் போயிட்டாங்க
என்னடா தம்பி என்ன ஆச்சு எங்கிட்ட சொல்லுறதுக்கென்னடா என்று கேட்டாலும் ஏதோ சொல்லி மறைக்க முயன்றேன்.ஆனால் அக்கா புரிஞ்சுக்கிட்டாங்க. மறுபடியும் மீண்டும் சிரிச்சுப் பேச ஆரம்பிச்சிட்டேன்.
பூபதியும் நானும் ஒரே இடத்தில் டியூசன் போனோம். வாத்தியார் நண்பர் மாதிரி. அவரிடம் அவன் அவளின் மேற்படிப்பு எதிர்காலம் பற்றியெல்லாம் இலைமறைகாயாய் பேசுவான். வாத்தியாரும் புரிந்து கொண்டு குசியாகிவிடுவார். ஆர்வமாக அவனுக்குப் பதில்பேசிக் கொண்டு இருப்பார்.
அந்நேரங்களில் எனக்கு சங்கடமாயிருக்கும் எந்திரிச்சு ஓடிடலாம் என நினைப்பேன் முடிவதில்லை.
இந்நிகழ்வுகளின் தொடர்ச்சியாய் எனக்கும் பூபதிக்கும் இடையில் கொஞ்சம் விரிசல் ஏற்பட்டது. என் நண்பர்களும் புரிந்து கொண்டு கொஞ்ச நாள் அவனுடன் பேசுவதில்லை.
பூபதியும் அவளும் பஸ்சில் பேசிக்கிட்டே வருவாங்க. நான் பின்னாடி இருந்து கேட்டுக்கிட்டே வருவேன். எனக்கு கேக்கணும் என்றே பேசுவாங்கலான்னு தெரியாது.
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு எல்லாம் எனக்கு தெரியும் அதனால எனக்கு வரும் மாப்பிள்ளை இண்டர்நேசனல் லெவல்ல வரணும் என்பாள்.
அதை இப்ப நினைச்சாலும் எனக்கு சிரிப்பு வரும்.
அப்ப நான் நினைப்பேன் ஆர்த்திக்காக அன்னைக்கு அப்படி அழுதானே இப்ப இன்று என்னை அழுக விடுறானேன்னு. ஏன்னா இது என் முதல் காதல். எது அப்படி அவனை மறக்கடிச்சுதுனு தெரியலை. மேலும் மேலும் என் நெஞ்சை புண்ணாக்கிக் கொள்ள விரும்பாத நான் கொஞ்சம் கொஞ்சமா அவள் பார்வையில் இருந்து விருப்பமின்றி விலக ஆரம்பித்தேன்.
கல்லூரி வாழ்வு கனவு போல முடிந்தது. பணி நிமித்தம் பெங்களுர் சென்று விட்டேன். பூபதியிடம் மட்டும் தொடர்பு இருந்தது. பூபதியும் அந்த பெண்ணும் பிரிந்து விட்டதாகவும் அவன் இப்ப வேறு பெண்ணை விரும்புவதாகவும் எனக்கு தகவல் வந்தது.
என் அக்கா திருமணத்தின் போதுதான் நான் விரும்பிய பெண்ணைக் கடைசியாக பார்த்தேன். அக்காவுடன் பணிபுரிவதால் வந்திருந்தனர். அக்கா சொல்லித்தான் தெரியும் அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது.
எட்டு மாதிற்கு முன் சென்னை வர வேண்டியிருந்தது அப்ப பூபதியை சந்தித்தேன். தற்போது ஒரு பெண்ணை விரும்புவதாகவும் அந்த பெண்ணையே திருமணம் செய்யவிருப்பதாகவும் சொன்னான். நான் என்னை மறந்து சிரித்தேன். இல்லைடா இது சரியான நேரத்துக்கு வந்த காதல் என்னையும் என் வேலையையும் நல்லா புரிஞ்கிட்டிருக்கா என்றான்.
மறுநாள் நானும் பூபதியும் சந்திப்பதாக இருந்தது.
அதற்குள் அவனிடமிருந்து போன் வந்தது. பரோடாவில் இருந்து நண்பர் ஒருவர் வருகிறார் அவரை பார்க்கப் போய்விட்டு படத்துக்குப் போகிறேன் என்றான்.
மறு நாள் சைதாப்பேட்டை சென்றிருந்தேன்.
இரயில் நிலையத்தில் எதேச்சையாக பூபதியை பார்க்க நேர்ந்தது. அவனும் ஒரு பெண்ணும் நின்று கொண்டு சிரிச்சுப் பேசிக்கிட்டிருந்தாங்க ஒருவேளை அவன் விரும்பிய பெண்ணாகயிருக்கலாம். ஒரு இரண்டு நிமிடம் நின்னு பார்த்தேன். அப்புறம் அவன் கைத்தொலைபேசிச்கு போன் பண்ணி துண்டிக்கலாம்னு பார்த்தேன். ஆனா பண்ணலை அவனை கடந்து போக ஆரம்பிச்சேன் . அவங்க இரண்டு பேருக்கும் அவங்களைச் சுற்றி என்ன நடக்குதுனு தெரியாம இருந்தாங்க.
ஒரு மாசத்துக்கு முன்னாடி போன் செய்திருந்தேன். அம்மா ஒத்துக்க மாட்டாங்க, பேசாம கல்யாணத்தை பண்ணிக்கிட்டு போய் அவங்க காலில் விழுந்திட வேண்டியதுதான் என்றான்.
பூபதி காதல் தொடர்ந்த வண்ணமிருக்கு... இன்னமும் திருமணம் மட்டும் ஆகவில்லை...
முதல் காதல் முள்ளு மாதிரி குத்திக்கிட்டே இருக்கும்பாங்கல!
சரி இந்த நான் யார்?
இந்த நான் உங்களில் ஒருவராகவும் இருக்கலாம் .