ராமாயீ கலப்பையும் மண்வெட்டியும் வெளியே எடுத்து வைக்கும் போதே, அம்பிகா கேட்டாள்
"என்ன ஆச்சி, காட்டு வேலையா. யார் காட்டுல..."
ராமாயீ ஒரு சிரிப்புடன், "என்னுடைய காட்டுக்கா போகப் போறேன்...எல்லாம் அந்த தங்கவேல் தலைவர் காட்டுக்குத்தான்.." என்று வீட்டை பூட்டிக் கொண்டே சொன்னாள்.
ராமாயீ எந்த ஒரு பதிலுக்கும் ஒரு சிரிப்புடன்தான் பதில் சொல்வாள்.அதுவும் மனசில இத்தனை கவலையை வச்சிக்கிட்டு...
தங்கவேல் தலைவர் கூட சொல்லுவார் "எப்படி ராமாயீ.. இவ்வளவு பிரச்சினைக்கு மத்தியிலும் எப்பொழுதும் சிரிப்பா இருக்க.." என்பார்.
இவளுக்கு பதில் சொல்ல தெரியாது. இருந்தாலும் எதோ சொல்லி சமாளிப்பாள். தன் புருசன் ராஜவேல் சாகும் போது நீ எப்போதும் சிரிச்சிக்கிட்டே இருக்கனும்னு சொன்னதாக அம்பிகாட்ட மட்டும் சொன்னாள். அதுவும் சிரிச்சிக்கிட்டுத்தான்.
ஆச்சி எப்படித்தான் எல்லா விசயத்தையும் ரொம்ப சுலபமாக எடுத்துக் கொள்ளுகிறாளோ என்று ஆச்சர்யப்படுவாள் அம்பிகா.. நம்மளும் இருக்கிறமோ என்று கவலைப்படுவாள்.. புருசன் இறந்து போனதிலுருந்து தனக்கு ஆச்சிதான் எல்லாம் என்று நினைத்துக் கொள்வாள்.
யாரும் இல்லாத தனக்கும் தன் பையனுக்கும் ஆச்சி மட்டுமே துணை என்று சொல்லிக் கொள்வாள்.. யாரும் இல்லாத ராமாயீக்கும் அவள் மட்டுமே துணை.
ராமாயீக்கு இன்னொரு துணை இருந்தது. அதுதான் அவளுடைய ஆடு.அரசன்னு பேரு வச்சு அழகாய் வள்ர்த்து வந்தாள்.அம்பிகா வீடும் ராமாயீ வீடும் பக்கம் பக்கம்தான்.
வீட்டு பூட்டை பூட்ட முடியவில்லை. எவ்வளவு முயன்றும் முடியவில்லை.
அம்பிகாவும் முயற்சி பண்ணிப் பார்த்தாள்.முடியவில்லை.
"இழவெடுத்த பூட்டு, இன்னைக்கு ஏன் மக்கர் பண்ணுதுன்னு தெரியலயே..." என்று நொந்து கொண்டாள்.
"சரி.நீ போ.நான் வீட்டை பார்த்துக்கிறேன்..." என்று ராமாயீயை அனுப்பி வைத்தாள்.
"சரி சரி.பார்த்துக்கோ... பேரன் தூங்கிட்டானா..." என்று கேள்வியைக் கேட்டு விட்டு பதிலை எதிர்பாராமல் நடக்க ஆரம்பித்தாள்.
தோளில் மண்வெட்டியும், ஒரு கையில் கலப்பையும் இன்னொரு கையில் சாப்பாடு சட்டியுமாக நடந்து போனாள்.
அம்பிகா ராமாயீ போவதையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ராமாயீ ஒரு நாள் கூட வீட்டில் இருந்ததே கிடையாது. எதாவது ஒரு வேலைக்கு சென்று விடுவாள்.நூறு நாள் வேலை பஞ்சாயித்துல போட்டாங்கன்னா முதல் ஆளு ராமாயீதான் கிளம்புவாள். மற்றபடி தினமும் களை வெட்டுவதற்கு எதாவது ஒரு வீட்டில் இருந்து அழைப்பு வந்து விடும். சில நேரங்களில் பக்கத்து ஊருக்கும் களை வெட்டுவதற்கு செல்வாள். மேலும் ஊரில் உள்ள கரண்ட் ஆபிஸ், பஞ்சாயத்து ஆபிஸ், பேங்க், போஸ்ட் ஆபிஸ் எல்லாத்துக்கும் ராமாயீதான் கூட்டி
பெருக்குவாள்... யாரும் விஷேச வீட்டுக்கு கூப்பிட்டாங்கனா, போய் பாத்திரம் தேய்த்து காசு வாங்கிட்டு வருவாள்.. ஒரு வாய் கூட எதிர்த்து பேச மாட்டாள். அதனாலயே எல்லாரும் ராமாயீயதான் எதுக்குனாலும் கூப்பிடுவார்கள்.
தினமும் சமைக்க முடிந்தால் சமைப்பாள்.இல்லன்னா அம்பிகா வீட்டில் கை நனைத்து விடுவாள்.அம்பிகா வீடு மட்டுமல்ல எல்லார் வீட்டுக்கும் போக அவளுக்கு உரிமை இருந்தது. உரிமையோடு போய் சாப்பாடுவாள். எல்லாரும் அவளுக்காக வருத்தம்தான் படுவார்கள்.
ஒரு சின்ன கவலை மட்டும் ராமாயீக்கு இருந்தது. அது ஓடிப்போன தன் மகன் ராஜேந்திரன பற்றித்தான்.
அவனுக்காகவே இவ்வளவும் உழைத்தாள். ஒரு நாள் தன் பையன் திரும்பி வருவான்.அவன் நம்மள வச்சு காப்பாற்றா விட்டாளும் அவனை நம்ம வச்சு காப்பாற்றுவோம் என்ற நினைப்பிலே உழைத்து வந்தாள்.
தினமும் கோவிலுக்கு சென்று வேண்டுவாள். செவ்வாய்க்கிழமை தோறும் ஊர்ல உள்ள அந்தோணியார் கோவிலுக்குப் போவாள்.. மனமுருகி வேண்டுவாள். ஆனால் இதுவரைக்கும் அந்தோணியார் அவள் குரலுக்கு காது குடுத்த மாதிரி தெரியவில்லை.
ஒரு நாள் அம்பிகா கேட்டாள்.
"ஆச்சி... எல்லா பணத்தையும் எங்க போட்டு வச்சிருக்க... பேங்கலயா..? இல்ல போஸ்ட் ஆபிஸ்லயா..?" என்றாள்.
"பேங்கலத்தான் போட்டுருக்கேன்.என் ராசா இங்க வா." என்று அம்பிகா மகனை தன் பக்கம் இழுத்து விளையாட ஆரம்பித்துவிட்டாள்.
தன் மகன் ராஜேந்திரன் ஞாபகம் வரும் பொழுதெல்லாம், அம்பிகா மகனை எடுத்துக் கொஞ்ச ஆரம்பித்துவிடுவாள்.
"கீரை கட, கீரை கட.. இது உனக்கு, இது இந்த ஆச்சிக்கு, இது உங்க அம்மாக்கு, இது நம்ப ராஜேந்திரன் மாமாவுக்கு " என்று அவன் கையைப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பாள். ராஜேந்திரன் மாமான்னு சொல்லும் போது கண்ணுல தண்ணி வந்துரும்.
"நண்டு வருது, நரி வருது..." என்று கூறிக் கொண்டே அவனுக்கு கீச்சு கீச்சு காட்ட அவன் சிரிப்பான். அவனுடன் சேர்ந்து ராமாயீயும் சிரிப்பாள். அந்த சிரிப்பிலயே தனக்கு இப்படி ஒரு பேரன் இல்லையே என்ற குரல் மெதுவாக ஒலிக்கும். தனக்கு இந்த குடுப்பனை கூட வைக்காமல் போய்ட்டானே என்று நொந்து கொள்வாள்.
வீட்டில் போய் படுக்கும் போது கை, கால் எல்லாம் வலிக்கும். வலியில் கண்ணீர் வரும். கண்ணீரின் வழியே தன் பையனின் நினைப்பு வரும்.
ராஜவேல் இருக்கும் போது எந்த குறையும் இல்லாமல்தான் இருந்துச்சு.ராஜவேலுக்கு எந்த காடும் கிடையாது. குத்தகைக்கு எடுத்து பயிர் பண்ணிட்டு வந்தார். ஒரு நாள் காட்டுல பாம்பு கடித்து ராஜவேல் இறந்துப் போக, குடும்ப நிலமை தலை கீழாக மாறியது.
அதன் பின் காட்டு வேலைக்கு போய் ராஜேந்திரனைப் படிக்க வைத்தாள். அவனும் பாதியிலே படிப்பை நிப்பாட்டி விட்டு வெல்டிங்க் பட்டறைக்குச் சென்று விட்டான். இவளுக்கு ரொம்ப வருத்தமாக இருந்தது. நாலைந்து வருசம் அங்கயே வேலை பார்த்தான். பின்னர் வேலை கற்றுக்கொண்டு சென்னை போவதற்கு முடிவெடுத்தான். யாரோ சென்னை போனா நல்ல காசு கிடைக்குன்னு சொன்னதற்காக இந்த முடிவு.
ராமாயீக்கு இதில் துளி அளவுக்கும் விருப்பம் இல்லை. எதோ பையனுக்காக ஒத்துக் கொண்டாள்.
சென்னை போனான்.நல்லா வேலை பார்த்தான். மாசம் மாசம் ராமாயீயை பார்க்க வந்திருவான். ஊர்ல "உன் பையனை டவுனல பார்த்தேனே." என்று சொல்லும் போது ராமாயீக்கு சந்தோசமாயிருக்கும். நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது.
தீடிரென்று இரண்டு மாசம் ராஜேந்திரன் ஊர் பக்கம் வரவில்லை.. ராமாயீ எதிர்பார்த்து எதிர்பார்த்து எமாந்து போனாள்.
அந்நாட்களில் மிகுந்த மன உளைச்சலில் இருந்தாள். வேலை செய்யிற இடத்திற்குப் போன் பண்ணி கேட்டதற்கு ஊருக்கு போறதாக சொல்லிட்டுப் போனார் என்று சொல்லி விட்டனர்.அது வேற இவள் மனதை மிகவும் பாதித்தது.
அந்த நேரத்தில் எல்லாம் அம்பிகாதான் ராமாயீயை பார்த்துக் கொண்டாள்.ஆறு மாதம் கழித்து ராஜேந்திரன் ஊர் வந்து சேர்ந்தான். ஆளே மாறி இருந்தான். அழுக்கு சட்டையும் கைலியுமாக இருந்தான்.
பல நாள் வளர்த்த தாடி அவனைப் பிச்சைக்காரனைப் போல காட்டியது.
ராமாயீக்கு தன் மகன் வந்ததில் மிகுந்த சந்தோசம்.ராஜேந்திரன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. எங்கேயோ நிலை குத்திப் பார்த்துக் கொண்டிருப்பான். ஊர் முழுவதும் வந்து பார்த்துட்டுப் போனது.
ஊருக்குள் பைத்தியம் பிடித்துவிட்டதாக பேசிக் கொண்டார்கள். ராமாயீக்கும் அப்படித்தான் தோன்றியது. எது பேசினாலும் பேசமாட்டான். சாப்பாடும் ஊட்டி விட வேண்டியாதாகிருந்தது. ஊரார் தன் பையனை பைத்தியம் என்று சொல்வதை அவள் விரும்பவில்லை.
“எங்கடா போன, என்ன நடந்துச்சு..” என்று ராமாயீயும் அம்பிகாவும் மாறி மாறிக் கேட்டாலும் பதில் எதும் சொல்லாமல் பேந்த பேந்த முழிப்பான்.
பக்கத்து ஊர் பள்ளி வாசலுக்கு கூட்டிட்டு போயிட்டு வந்தாள். அங்கு போயிட்டு வந்ததிலிருந்து கொஞ்சம் பரவாயில்லை,பேசுவது புரிந்து கொள்வான். அடிக்கடி அம்பிகா பையனிடம் விளையாடவும் செய்வான்.எப்படி புத்தி குழம்பியது என்ற கேள்விக்கு பதிலே சொல்ல மாட்டான்.வீட்டிலே அடைந்து கிடப்பான். கொஞ்சம் நாளில் வெளிய போக ஆரம்பித்தான்.
அந்தோணியார் கோவில், வயக்காடு, அப்பா சமாதி என்று எங்கெங்கோ சுற்றுவான்.இலை, கிளை எல்லாம் பறிச்சுட்டு வந்து அரனுக்கு போடுவான்.சில நேரம் அரசனை கூட்டிட்டு மேய்க்க போயிருவான்.
ராமாயீக்கு நிம்மதியாயிருந்தது. ஒரு கல்யாணத்தைப் பண்ணி வைத்தால் மகன் சரியாகி விடுவான் என்று நினைத்தாள். பொண்ணு தேட ஆரம்பித்தாள்.
பக்கத்தில் ஒரு ஊரில் பொண்ணு ஒன்றை பார்க்க ராமாயீ போயிருந்த சமயம், ராஜேந்திரன் வீட்டில் நூறு ருபாய் மட்டும் எடுத்துட்டு ஓடிவிட்டான்.
அதன் பின் எங்கும் தேடியும் கிடைக்கவில்லை.
எதுக்குன்னு ஒடினான்னு தெரியவில்லை. ஓடுவதற்கு காரணமா வேணும்.
ஊருக்குள்ள எல்லாரும் எதோ காதல் காரணமாகத்தான் இப்படி ஆகிவிட்டான் என்று ஆளாளுக்கு சொல்லிக் கொண்டனர்.
அதுலாம் கொஞ்சம் நாள் தான். அதுக்குப்புறம் ராஜேந்திரனை மறந்து விட்டார்கள்.ராமாயீக்காக வருந்தப்பட்டார்கள்.
அவன் ஓடிப் போய் சுமார் இரண்டு வருடம் ஆகிறது. இது வரை எந்தத் தகவலும் இல்லை.
காலையில் எழுந்தாள் ராமாயீ.. உடம்பு வலியாயிருந்தது.. தலை சுற்றுவது போலிருந்தது. கீழே விழுந்து விட்டாள்.
சத்தம் கேட்டு அம்பிகா ஒடி வந்தாள். அவளைத் தூக்கி ஆஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போயிட்டு வந்தாள்.
படுத்த படுக்கையாகிவிட்டாள் ராமாயீ. வார்த்தைக்கு வார்த்தை ராஜேந்திரா,ராஜேந்திரா என்று உளறிக் கொண்டிருந்தாள்.
அம்பிகாதான் பக்கத்தில் இருந்து கஞ்சி வச்சு கொடுப்பது, சுடுதண்ணீர் கொடுப்பதுமாக இருந்தாள். ஊர் பெரியவர்கள் வந்து பார்த்துட்டுப் போனார்கள். ஆளாளுக்கு இரக்கம் தெரிவித்தனர். சில பேர் "தேறாது" என்று வெளிப்படையாக சொல்லிச் சென்றனர்.
கடைசி வரைக்கும் தன் மகனை பார்க்க முடியவில்லையே என்ற எண்ணம் அவளை மேலும் நோயாளி ஆக்கியது.
ஒரு நிறைந்த பௌர்ணமி நாளில் ராமாயீ காலமானாள். அவள் முகம் பௌர்ணமி மாதிரி பளிச்சென்று இருந்தது.
அம்பிகாதான் ஒயாமல் அழுதுக்கொண்டிருந்தாள்.
ஊர் பெரியவர்களெல்லாம் முடிவு பண்ணி ராமாயீ உடலைப் பெரும் விமர்சையாக அடக்கம் பண்ணினர்.
அடக்கத்திற்கு மழை வந்திருந்தது. பெரும் மழை... ராஜேந்திரன் தான் மழையாய் வந்ததாக அம்பிகா நம்பினாள்.
இப்பொழுது ராமாயீ கல்லறையில் நிரந்தரமாக துங்கிக் கொண்டிருந்தாள்.ராஜேந்திரன் வருவான் என்ற நம்பிக்கையில்..!!
மழை மட்டும அடிக்கடி வந்து கொண்டிருக்கிறது.. அது ராஜேந்திரனா என்று தெரியவில்லை...!!