ஆறாட்டுப்புழா நதிக்கு இரண்டு பக்கங்களிலும் கடந்த காலத்தின் நினைவுகள் படர்ந்து கிடக்கும் குறுவாலி என்ற நாட்டுப்புற கிராமத்தில் காலம் காற்றாக சுழன்று வீசிக் கொண்டிருக்கிறது. காற்றுடைய முனகலில் ஊரின் கதைகள் கலந்து சேர்ந்துதான் தாள லயம் உண்டாகிறது. அது அந்த கிராமத்துடைய பாரம்பரிய சொத்து.
மறதியுடைய சுழல் கூட்டில் மூழ்கிப்போனாலும் நீட்டமான தண்டின் வழியாக புதிய தாமரைகளை மலரச்செய்வது அந்த ஊர்க்காரர்களுக்கு நேரில் பார்த்துப் பழகிப்போன அனுபவங்கள். சுதா குட்டியுடைய சத்தம் கேட்ட வீட்டுப் படிகளுக்கு அருகில் ஒரு ஆணுடைய கம்பீரத்தோடு காலம் எப்போதும் சரித்திரப் பயணம் செய்வதும் இதனால்தான்.
“நானும் அம்மாவும் இங்கயே கொள்ளி வச்சுகிட்டு எரிஞ்சு சாம்பலாப்போயிடுவோம்”. சுதா குட்டியுடைய தீ கக்கும் வார்த்தைகளில் கணல் பறந்தது. அந்த நெருப்பில் சுஹராபீயும் ஜோனாச்சனும் மற்றவர்களும் அசைவில்லாமல் நின்றார்கள். அப்புறம் தலையைக் குனிந்தபடி படி கடந்து போனார்கள். வந்து கூடிய ஆண் கூட்டத்தின் முனகல்களில் இரண்டு ஸ்வரங்கள் கலந்திருந்தன. “இத்தனை அகம்பாவமா ஒரு பொண்ணுக்கு?” ஆயிஷா அம்மாளுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
“அந்தப் புள்ள அப்படிச் சொன்னதுல என்ன தப்பு இருக்கமுடியும்? இத்தன நாளா இவுங்க எல்லாம் எங்கப் போயிருந்தாங்களாம்?” பரமபிள்ளை சொன்னதை ஆதரிப்பதற்கும் அங்கே ஆட்கள் இருந்தார்கள். “இருந்தாலும் இப்ப அந்த ஆளு சாகக்கிடக்கறாரே?”. மீண்டும் கர்ண கடூரமான ஸ்வரங்கள் அசனாரு பிள்ளையை ஆதரித்து எழுந்தன.
அசனாரு பிள்ளை ஊரில் முன்னணி வியாபாரி. சுஹரா பீயும் அவருடைய வாரிசாக பிறந்த நான்கைந்து பசங்களுடைய நாட்டாண்மையும் நடத்தமும் ஊர்க்காரர்களுக்கு இடையில் அந்த ஆளுக்கு கிரீடம் இல்லாத ராஜாவுக்குரிய மதிப்பு மரியாதையை ஏற்படுத்திக் கொடுத்திருந்தது. ஒன்றிரண்டு கசமுசாக்கள் இருந்தாலும் அதெல்லாம் நிலாவைப் பார்த்து ஊளையிட்ட குள்ள நரியுடைய
கூச்சல்களாயின.
அந்த அசனாரு பிள்ளைதான் இப்போது மரணப்படுக்கையில். ஏதோ பிறவி சொந்தபந்தம் பூமியை விட்டுப் போக அந்த ஆளை அனுமதிக்காதது போல உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. கையாலாகாத மோட்சப் படுகுழியில் உயிரை மேலோகத்துக்குக் கொண்டு போய்ச் சேர்க்க படாதபாடு பட்டுக்கொண்டிருந்தார்கள்.
அந்தப் போராட்டத்தின் நடுவில்தான் அப்பா மகள் சொந்தத்தைப் பற்றி சுஹரா பீயிடம் மனம் திறந்து அந்த ஆள் சொன்னது.
“சுதாக்குட்டி. அவளப் பாக்கணும்”. சுஹரா பீக்கு அதிர்ச்சி ஏற்படுத்தாத ஒரு கதையாக இருந்தது அது. நரியுடைய ஊளையிடல்களாக அலைந்த அந்தக் கதையின் சலனங்களை காற்று சுதா குட்டியுடைய காதுகளுக்கும் கொண்டு போய்ச் சேர்த்திருந்தது. நாராயணி அம்மாள் அதி சுந்தரி இல்லை. ஆனாலும் நடையிலும் எடுப்பான உடம்பிலும் ஒரு ஈர்ப்பை ஏற்படுத்தும் வசீகரம் உடைய உருவம். கட்டான உடல்வாகு. கவந்திழுக்கும் அபாரமான சக்தியுடைய சிரிப்பு. அவளுடைய புருஷன் சங்கர பிள்ளை ஒரு சாது.
மகன் சந்திரனோடு ஒதுங்கி நின்ற குடும்பம். வம்பு தும்புக்கு அலையாத சுபாவம். தன்னுடைய தயவில் வேலை பார்த்து வந்த அந்த வேலைக்காரனை அசனாரு பிள்ளைக்கும் பிடித்திருந்தது. தன்னுடய கடையில் இருந்து பலசரக்கு சாமான்களை கடனாக வாங்க அனுமதித்ததும் அதனால்தான். நாராயணி அம்மாள் வரும்போது கல்லாவில் இருக்கும் அசனாருபிள்ளை அவளையே ஆச்சரியத்தோடு உற்றுப் பார்த்துக்கொண்டு எதையாவது பேசுவது வழக்கம்.
பார்ப்பவர்கள் யாருக்கும் அதில் ஒரு வித்தியாசமும் தோன்றவில்லை.
சங்கர பிள்ளை காய்ச்சல் வந்து படுத்த படுக்கையாகக் கிடந்த நாட்களில்தான் நாராயணியுடைய வீட்டு வழியாக அசனாரு பிள்ளையுடைய நடத்தம் ஆரம்பித்தது. வாசலில் இருந்து சங்கரனைப் பற்றி தொடங்கிய நலம் விசாரித்தல்கள் மெதுவாக வீட்டுக்குள் நுழைந்து குசலங்களும் உபசரிப்புகளுமாக மாறின. காய்ச்சல் சரியாகி சங்கர பிள்ளை வேலைக்குப் போக ஆரம்பித்த போதும் குசலம் விசாரிப்பதற்காக படியேறி வரும் அசனாரு பிள்ளையுடைய கவர்ச்சி மந்திரங்கள் நாராயணியை அடிமைப்படுத்தத் தொடங்கியது.
சந்திரன் இல்லாத சமயங்கள் சங்கம முகூர்த்தங்களாக மாறின. சங்கர பிள்ளையுடைய குறைகள் மட்டும் நாராயணியுடைய கண்களில் அதுவரை இல்லாத அளவுக்கு பெரிதாக விசுவரூபம் எடுக்க ஆரம்பித்தன. சஞ்கர பிள்ளை சாதுதான் என்றாலும் அந்த குறைவான அறிவுக்கு அங்கு நடக்கும் விஷயங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது.
குள்ள நரிகளின் ஊளையிடல்களின் பொருள் அவனுக்குப் புரிய ஆரம்பித்தது. சங்கர பிள்ளை தோப்புக்கு வேலைக்குப் போவதை நிறுத்திக்கொண்டான். கிணறு வெட்டப் போனான். வேலை முடிந்து வரும்போது வீட்டுக்கு வேண்டியதை வாங்கிக் கொண்டு வரும் பழக்கம் மறுபடியும் ஆரம்பித்தது. சந்திரன் ஸ்கூலில் இருந்த சமயத்தில் தலை சுற்றி விழுந்த நாராயணி அம்மாள் தனக்குள் புது ஜீவன்
முளைத்திருப்பதை அரங்கேற்றி விளம்பரப்படுத்தினாள்.
சங்கர பிள்ளை தன்னால் முடிந்த வரை கவனித்துக்கொண்டான் என்றாலும் நாராயணிக்கு அகம்பாவம் தலைக்கேறியிருந்தது. அப்புறம் அது அவளை விட்டு போகவேயில்லை. வெள்ளைவெளேரெண்று துருதுருப்புடன் ஒரு பெண் குழந்தை பிறந்தபோது சந்திரன் மட்டும் சந்தோஷப்பட்டான். பார்க்க வந்த ஊர்க்காரர்களுடைய உதட்டின் ஓரத்தில் ஒரு பரிகாச சிரிப்பு விரிந்து நிற்பதை சங்கர பிள்ளையும் நாராயணியும் உணர்ந்து கொண்டார்கள்.
நாராயணி தலையைக் குனிந்துகொண்டாள். சங்கர பிள்ளை பாயை சுருட்டி வீட்டை விட்டு படியிறங்கி வெளியேறினான். ஆறாட்டுப்புழைக்கு அக்கரையில் புதிய வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டான். சந்திரனுடைய “அப்பா” என்ற அழைப்புக்குரல் மனதில் திகட்டும்போது புதிய உடையும், பலகாரமுமாக புழையின் இக்கரைக்கு வந்தான்.
வீட்டுக்கு வெளியில் இருந்து சந்திரனிடம் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டுத் திரும்பும் போது வராந்தாவில் இருந்து விளையாடும் வெள்ளை முத்தை பார்க்காததுபோல நடித்தான். நாராயணியை ஒருபோதும் பார்க்காமல் இருக்க அவனும் அவனுக்கு முன்னால் வந்துவிடக்கூடாதே என்று நாராயணியும் கடின விரதம் இருந்தார்கள்.
கிலுகிலுப்பை போல சுதா குட்டி பள்ளிக்கூடம் போகிற வழியில் சந்திரன் அண்ணனுக்கும் மற்றவர்களுக்கும் பின்னால் துள்ளிப் பாய்ந்து ஓடும்போது, சைக்கிளில் இறக்கத்தில் இறங்கி வரும் அசனாரி பிள்ளை தொட்டும் தொடாததும் போல பக்கத்தில் வந்து பார்வை ஒன்றை வீசிவிட்டுப் போவதை அவள் கண்டதுண்டு.
ஒரு சமயம் சலீமாதான் அதை சொன்னாள்.
“ஏய். அதோ போகறதுதான் உன்னோட அப்பா”. சுதா குட்டியுடைய கண்ணிமைகள் உயர்ந்து தாழ்ந்தன. “அப்பாவா? எனக்கு அப்பா கிடையாது. சந்திரன் அண்ணனுக்குதான் அப்பா இருக்காரு”. அவளுடைய கண்ணீருக்கு நடுவில் பல ஆடை.. பலகாரங்களுடைய கலர் பேப்பர் பொட்டலங்கள் பிரிக்காமல் கிடந்தன.
“நீ கண்ணாடியப் போய்க் கொஞ்சம் பாரு”. அவள் வேகமாக திரும்பி நடந்தாள். கண்ணாடியில் அவளில் அசனாரி பிள்ளையுடைய வரைபடம் தெரிந்தது. வர்ணிக்கமுடியாத உணர்ச்சிகளின் தளத்தில் அவள் தனக்குக் கிடைக்காமல் போகும் கலர்ப் பொட்டலங்களையும் குட்டி குட்டி முத்தங்களையும் கனவு கண்டாள். அடுத்த நாள் முதல் அசனாரி பிள்ளையுடைய ஒரு பார்வைக்காக ஒரு புன்னகைக்காக அவள் காத்துக்கிடந்தாள்.
சைக்கிளில் வரும் அந்த ஆளுடைய முகத்தில் இருந்து கண்களை எடுக்காமல் பார்த்துக்கொண்டேயிருந்தாள். கவனத்தை தன் பக்கம் திருப்ப முன்னால் போய் நின்றாள். ஒரு பலனும் இல்லை. “அப்பா” என்ற வார்த்தை என்றென்றைக்குமாக அவளுடைய உதட்டில் வற்றி வறண்டு காய்ந்து காணாமல் போனது. வார்த்தைகள் பார்வைகள் குரல்கள் கேலிப் பேச்சுகள் பரிகாச சிரிப்புகள். காயங்கள் உள்ளுக்குள்ளும் வெளியிலும்.
ரணங்கள் வடுவாக.. தழும்புகளாக. இதிலிருந்து வலுப்பெற்று உருவான வலிமையில்தான் இன்றிருக்கும் சுதா குட்டி புதிதாகப் பிறந்தாள். யாரிடமும் போய் உரிமை கேட்கவில்லை. யார் மீதும் பழி போடவும் இல்லை. அன்றே நிழலாக ஒதுங்கிவிட்ட அம்மாவோடு சண்டை போட்டு என்ன பயன்? சாம்பல் மூடியிருந்த அந்தக் கணலைதான் சுஹரா பீ இரண்டு நாளைக்கு முன்னால் கிளறிவிட்டு
கிளர்ந்தெழச்செய்தாள். அசனாரி பிள்ளைக்கு மேலோகம் போவதற்கு முன்னால் ஒரு தடவை மகளைப் பார்க்க வேண்டும்.
“மகளாம்.. மகள்”. இதுவரை நடந்து போன வழிகளில் ரகசியமாகக் கூட ஒருதடவை கூட தோன்றாத மகள் மீதுள்ள பாசம். அப்புறமும் ஏதேதோ மனதிற்குள் தட்டுத்தடுமாறி எழுந்து விழுந்து தீ பிடித்தது. அடுக்களை இருட்டில் முடிவில்லாத அம்மாவுடைய நோட்டத்தை அவள் பார்க்காதது போல நடித்தாள். இனி வாழ அப்பாவுடைய பக்கபலம் தேவையில்லை. அவள் உதடுகளை இறுக்கி மூடினாள்.
அசனாரி பிள்ளையுடைய உயிர் அசைவுகளுடன் மட்டும் நான்கு நாட்கள் ஊசலாடிக் கொண்டிருந்தது. நடுவில் கண்ணின் மணிகள் மேற்கூரையில் பட்டுத் தெறித்து எதையெதையோ தேடி அலைந்து கொண்டிருந்தன. பார்த்தவர்கள் எல்லோரும் அசனாரி பிள்ளையுடைய கடைசி ஆசையை நிறைவேற்றாமல் உயிர் உடம்பை விட்டுப் போகாது என்று சுஹரா பீயிடம் கருத்து தெரிவித்துவிட்டுப்
போனார்கள்.
சுஹரா பீ பல தடவை சுதா குட்டியுடைய வீட்டுக்கு நடையாய் நடந்து கெஞ்சினாள். சுதா குட்டியிடம் எந்த உணர்ச்சி மாற்றமும் ஏற்படவில்லை. ஆட்கள் வட்டமாக கூடி நின்று அசனாரி பிள்ளையோடு அனுதாபம் தெரிவிக்கும்போது சுதா குட்டி அவமானத்தின் பாரம் சுமந்து கழுத்து ஒடிந்து போன மனதை சுயம் தலைவருடி சமாதானப்படுத்திக் கொண்டிருந்தாள்.
அம்மாவோடுகூட வெறுப்பு தோன்றும் இடத்தில் இருந்து மாறி அம்மாவுடைய பாதுகாவலாக வளர்ந்த இடம் வரைவந்துவிட்டாள் அவள். “உச்சியில் சூரியனைச் சுமக்கும் ஒற்றை மரமாக நிற்கும் எனக்கு இனி மேல் எந்த அப்பாவுடைய நிழலும் தேவையில்லை!” என்று நினைத்தாள். ஒத்தையடிப் பாதை வழியாக நடந்து வரும் மூன்று நான்கு பேரையும் சுஹரா பீயையும் வராந்தாவில் இருந்தபடியே அவள் பார்த்தாள்.
வந்தவர்களின் நடுவில் சுஹரா பீயுடைய வாரிசுகளும் இருந்தார்கள். சுஹரா பீ தொண்டையைக் கனைத்துக் கொண்டாள். “அஞ்க வராட்டி வேணாம். இங்க கொண்டு வரட்டுமா?” முத்தத்துல படுக்க வச்சுக்கலாம்”. அடுக்களையில் ஒரு நிழல் நிலை குலைந்து ஆடியது. மௌனத்தின் ஆடை அணிந்த ஒரு நிமிடம் கடந்து போனது.
“அப்படின்னா கொண்டுவந்துக்கங்க. இந்த முத்தத்துல படுக்கவச்சுக்கங்க” முற்றம் முதல் அடுக்களை வரை பொங்கி எழுந்து ஒரு நம்பிக்கைக் கீற்று பிரகாசித்தது. வந்தவர்கள் சரவேகத்தில் ஒத்தயடிப் பாதையில் இறங்கி நடந்தார்கள். ஆனா ஒன்னு. காட்டிட்டுத் திரும்பப் போகறதுக்கு முன்னால நானும் அம்மாவும் இந்த வீடும் எரிஞ்சு சாம்பலாப் போயிடுவோம்”.
சுதா குட்டியுடைய உறுதியான குரலில் வந்தவர்களுடைய கால்கள் நிலைதடுமாறின. முடிவில் மெதுவாக அவர்கள் நடந்து அகலும்போது சுதா குட்டிக்கு ஒரு பயங்கர எதிரியை வெற்றிகரமாக தோற்கடித்த ஆனந்தம் உண்டானது. ஆண் வீரியத்தின் முனகல்கள் காற்றில் கரைந்தன. இரண்டு நாள் கழித்து கடைசி ஆசை நிறைவேறாவிட்டாலும் சாகலாம் என்று அசனாரிப் பிள்ளையுடைய மரணம் நிரூபித்தது.
சுதா குட்டியுடைய மனதின் கழுத்து கொஞ்சம் நிமிர்ந்தது. அவமானத்தின் பாரமேறிய சங்கிலிகள் கால்களில் இருந்து கழன்று ஊர்ந்து போனது போல ஒரு சுகம். நாட்டுப்புற வழிகளில் காற்று முனக புதிய கதைகளை வாரி வழங்கிய ஆவேசத்தில் தலை நிமிர்ந்து கை வீசி இறங்கி நடக்கும் போது குறுவாலியுடைய காற்றுக்கு நறுமணம் உண்டு என்று முதல்முறையாக அவளுக்குத் தோன்றியது. திரும்பிப் பார்க்கும் போது அடுக்களை இருட்டில் ஆழ்ந்து போன ஒரு ஜீவன் வாசல் திண்ணையில் வந்து நின்று குறுவாலிக் காற்றுடைய புத்தம்புதிய கதைகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தது. தலைமுறைகளின் கதைகளுமாக காற்று முனகிக் கொண்டே மீண்டும் மீண்டும் வந்து குறுவாலியை சூழ்ந்து கொண்டே இருந்தது.
பாரம்பரியத்தின் வித்து கூடையில் இருந்து காற்றைச் சேர்த்துக் குழைக்க குறுவாலியில் அப்புறமும் சுஹரா பீயுடைய ஆயிஷா அம்மாளுடைய பரமபிள்ளையுடைய சந்திரனுடைய இன்னும் யார் யாருடையவோ எத்தனை எத்தனையோ கதைகள்...