ஆஸ்பத்திரியில் நோயின் கடுமையான பிடியில் ஆழத்தில் மயங்கிக் கிடந்த மகன் நிதியுடைய ஞாபகம் பைஸலுக்கு அப்போது ஏற்படவில்லை. மண்ணுக்கு அடியில் சேற்றில் தாழ்ந்து போய்க் கிடக்கும் மகள் ரக்ஷா. ஒரு துளி மூச்சுக்காற்றுக்காக துடித்துக் கொண்டிருக்கும் அவள். அவளை உயிரோடு ஒரே தடவை பார்க்க ஒரு ஜென்மம் போல அவனுக்கு நேரமும் காலமும் அப்போது ஊர்ந்து கொண்டிருந்தது. துருதுருப்பும் அன்பும் பாசமும் நிறைந்த கண்கள். பெருமூச்சு, கவலை, ஆறுதல்.
எல்லாம் முத்தப்பன் குன்றில் வெளிப்பாடுகளாக வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தன. மீட்புப் பணிகள் யுத்த வேகத்தில். நிலம்பூரும் சுற்றுப்புறப் பிரதேசங்களும் தண்ணீரால் சுற்றப்பட்டிருக்கிறது. மீட்புக் குழுவினருக்கும், வாகனங்களுக்கும் அங்கே போவதே பெரும்பாடு. அப்போது மண் அள்ளும் இயந்திரம் தேடிக்கொண்டிருந்த இடத்தில் ஒரு வீடு இருந்தது. ஒரு கான்க்ரீட் வீடு. வீட்டு முற்றத்தில் பல வண்ணங்களில் பூத்துக்குலுங்கிய செடிகள் இருந்தன. ஒரு பூவைக் கூடப் பறிக்க ரக்ஷா யாரையும் அனுமதிக்கமாட்டாள்.
பூக்களை தலை வருடி அவற்றோடு கொஞ்சிக் கொண்டிருப்பாள். படிப்பில் புத்திசாலி. படித்து முடித்து எல்லாவற்றையும் அவள் மேசையில் ஒரு ஒழுங்கோடு ஒதுக்கி வைத்திருந்தாள். அப்பாவுக்கும் அம்மாவுக்கும் பெருமை தரும் பாசம் மிக்கவளாக அவள் வளர்ந்தாள். வீட்டோடு சேர்ந்தே தொழுவம் இருந்தது. பசுக்கள், ஆடுகள், கோழிகள் அப்புறம் வாத்துகளும் இருந்தன. எல்லாம் வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போய்விட்டன. பச்சைப் போர்வை விரித்திருந்த முத்தப்பன் குன்று மைதானம் போலாகிவிட்டது.
அது எத்தனை எத்தனையோ பேருடைய கனவுகளின் கூடாரமாக இருந்தது. அவனும் அவனுடைய குழந்தைகளும் அடி மேல் அடி எடுத்துவைத்து நடை பழகிய வீடு. அவையெல்லாம் பைஸலை கடந்த காலத்துக்கு கூவி அழைப்பது போல இருந்தது. இயந்திரக் கைகள் சேற்றையும் பாறைகளையும் அகற்றத் தொடங்கின. கட்டிடத்தின் மிச்சம் மீதிகள் தெரிந்தன. கான்க்ரீட் தூண்கள் தென்பட்டன. தூணுக்கு அடியில் அப்பா. சிதைந்து போன உயிரில்லாத உடல். அவருடைய கைகள் நீட்டிப் பிடித்து யாரையோ காப்பாற்ற முயல்வது போல.
நிம்மதியில்லாத ஒரு ராத்திரிக்குப் பிறகும் மண்ணுக்கு அடியில் அருவமாக அவர்களுடைய அலறல்கள். பெருமூச்சுகள். மகள் இப்போது எங்கே இருப்பாள்? இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்து அவளுடைய மனதும் உருகுகிறதோ? பிரியப்பட்ட நேற்றைய பொழுதுகள். மரணம் வந்து சேரும் நேரத்தில்தான் எப்போது நேற்றுகள் பிரியப்பட்டதாகின்றன. எத்தனை எத்தனையோ ஜனன மரணங்கள் கண்ட முத்தப்பன் குன்று.
ஜனனத்தின் கை கால் துடிப்புகள். மரணத்தின் வாய் விட்டு கதறும் அலறல்கல். மழை நிற்கவில்லை. காற்றுக்கும் வேகம் குறையவில்லை. மழையும் காற்றும் துயர அனுபவங்களுக்குக் காரணமாகும் என்று முதல்முதலாக அவன் அப்போதுதான் தெரிந்து கொண்டான். இங்கே கொஞ்சம் மனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள். அவர்களுடைய கால்களுக்கு அடியில்தான் இந்த மண் அடித்துக் கொண்டு செல்லப்பட்டது.
அப்போது அவர்கள் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் தூங்குகிறார்கள் என்று அவர்களுக்கேத் தெரியவில்லை தூக்கம் மரணத்துக்கு சமமானது என்று அவர்களுக்குப் புரியவில்லை. மழை சம்காரத் தாண்டவமாடிக் கொண்டு வந்தது. கொஞ்ச நேரத்தில் பெய்த கனத்த மழை. எதிர்பார்க்கவில்லை. வீட்டுக்கு முன்னால் கலங்கிப்போன மண்ணின் அசுர வேகப் பெருக்கு.
பல குடும்பங்களும் பெருவெள்ள பீதியில் வீடு விட்டுப் புறப்படத் தயாரானார்கள். மண் சரிவு பாறைகள் உருண்டு விழுவது பற்றிய முன்னெச்சரிக்கைகள் கடந்த வருடத்திலும் கொடுக்கப்பட்டன. நஷ்டத்தை ஏற்படுத்தாததால் அவர்களுக்கு அது பொருட்டாகப் படவில்லை. மண்ணுக்கு அடியில் இடிந்த கட்டிடங்கள். வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட மரங்கள், தகர்ந்து விழுந்த சிறிய வீடுகள், குடிசைகள்.
ஒரே ஒரு பேய் மழையில் வேர் இல்லாமல் தலைகுப்புற விழுந்த மலைகள். குன்றுகள். ரோடுகள். பாலங்கள். அப்புறம் பூமி குளிர்ந்து மண் அடித்துச் செல்லப்பட்டு சேற்றுக்கு அடியில் புதைந்து போய் காணாமல் போகும் மனிதர்கள். உயிர்ப் பிழைத்தவர்களுடைய முகத்தில் நடந்த சம்பவத்துடைய பீதி அப்போதும் படர்ந்திருந்தது.
அப்பாவும் அம்மாவும் சகோதரர்களும் குட்டிமகளும் வாழ்ந்த அந்த வீட்டில் இனி அவர்கள் அங்கு இல்லை என்ற சத்தியத்தை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நள்ளிரவு ஹெலிகாப்டர் இறங்கும் போது ஏற்பட்ட பெரிய இரைச்சலைக் கேட்டு குன்றுக்கு எதிர்திசையில் வாழும் சுலைமான் விழித்தெழுந்தான். வெளியில் வந்து பார்த்தான். மலை மொத்தமும் கழண்டு வரும் விசித்திரக் காட்சி வீட்டுக்கு முன்னால் இருந்த வெளிச்சத்தில் தெரிந்தது. ஒரு நிமிடம். ஒரே ஒரு நிமிடத்தில் முத்தப்பன் குன்று அடித்துக்கொண்டு போகப்பட்டது.
குன்று தனியாக தான் மட்டும் அடித்துக்கொண்டு போகவில்லை. மனிதர்கள். குன்றளவு உயர்ந்து படர்ந்து பந்தலிட்டிருந்த மரங்கள். பள்ளிக்கூடம். வாசகர் சாலை. போஸ்ட் ஆபீஸ். செல்லப் பிராணிகள். கூட்ட அலறல்கல். உயிருள்ளவரைத் தேடி பாய்ச்சல்கள். தண்ணீரும் வெளிச்சமும் இல்லை. ஒற்றைப்பட்ட மனிதர்கள். காட்டு ஆந்தைகளும் நத்தைகளும் சிறகடித்து இருட்டில் எங்கோ மறைந்தன. பேரிடர்கள் திடீரென்றுதான் வந்துசேருகின்றன. அவற்றிற்கு முன்னால் பதைபதைத்து நிற்கும் மனிதர்கள்.
இங்கே இருப்பவர்கள் நிவாரண முகாம் எதிலும் இருப்பதாகத் தெரியவில்லை. மண்ணுக்கு அடியில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றும் தெரியவில்லை. சிலர் சொந்தக்கார வீடுகளில். வேறு சிலர் வேலை பார்க்கும் இடங்களில். நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் சிலர். உயிர் பிழைத்தவர்கள் மண்ணுக்கு அடியில் இருக்கலாம். இது தொடக்கம் இல்லை, முடிவும் இல்லை.
மழைத் துயரங்கள் இன்னமும் இங்கே தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. நிறங்களுடன் வண்ணக் கோலாகலங்களுடன் வாழ வசதியான வாழ்க்கையைத் தேடி அவன் சௌதிக்குப் போனான். எதையும் அடைய முடியவில்லை. சேர்த்து வைத்த கனவுகள். நஷ்டமானது சம்பாதித்த காசு பணம் எல்லாமும். வாழ்க்கைதான். அதுவும் ஒரு வாழ்க்கைதான். ஆனால் அது உற்றவரும் உடையவரும் இல்லாத ஒரு வாழ்க்கை.
அன்பின் முகத்தை எங்கும் காண முடியாமல் எல்லோருடைய அனுதாபத்தை பைஸல் வாங்கிக்கொண்டான். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, சித்தப்பா, சின்னம்மா, சகோதரிகள், அவர்களுடைய கணவர்கள், மாமா, அவருடைய மனைவி, அவர்களுடைய நாலு குழந்தைகள், பீனா, அவளுடைய அம்மா, அப்பா, பதினேழு சொந்தக்காரர்கள், உற்றவர், பிரளயமும் உருண்டு விழும் பாறைகளும் இல்லாத ஒரு உலகத்துக்கு யாத்திரை போனவர்கள்.
அந்த முகங்கள் எல்லாம் இடையிடையில் வந்து கண் முன்னால் மின்னி மறைகின்றன. இன்னும் ஒன்பது பேருடைய உடல்கள் கிடைக்கவில்லை. பீனாவும், நிதியும் ஆஸ்பத்திரியில் இருந்ததால் தப்பித்தார்கள். சௌதியில் இருந்த அவனும் அப்படிதான் தப்பித்தான். பல வருடம் கஷ்டப்பட்டு உழைத்து சேமிப்பின் குழந்தையாகப் பிறந்ததுதான் அந்த கான்க்ரீட் கட்டிடம். மிச்சம் பிடித்து வைத்த சம்பாத்தியம். வீட்டு உபகரணங்கள். எல்லாம் போய்விட்டன. இருந்தாலும் அதையெல்லாம் மறுபடியும் சம்பாதித்துக் கொள்ளலாம். உற்றவர்களுடைய உயிர்? கண்ணீர் கடலானது.
செத்துப் போனவர்களுடைய சொந்தக்காரர்கள் உயிரில்லாத உடல்களுக்கு பக்கத்தில் இருந்து அலறி அழுதுகொண்டிருந்தார்கள். பார்த்துக் கொண்டு நின்றிருந்தவர்கள் பொங்கி வந்த விசும்பலை கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டார்கள் என்றாலும் காணாமல் போனவர்களுடைய துக்கம் ஒருபோதும் பார்த்துக் கொண்டு நிற்பவர்களுக்கு ஏற்படுவதில்லை.
பைஸல் நடப்பதையெல்லாம் மனது தகர்ந்து இருட்டுடைய சூன்யத்தில் நிசப்தமாக பார்த்துக்கொண்டிருந்தான். தோழர்கள் அவனை கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். இயற்கையுடைய ஆட்டம் அடங்கவில்லை. மழை வானத்தைக் கிழித்துக் கொண்டு பெய்துகொண்டிருந்தது. மீட்புப் பணிகள் தடைபட்டன. உயிருள்ளவை உயிரில்லாதவை என்று பாகுபாடு பார்க்காமல் மழை வெள்ளம் எல்லாவற்றையும் மணிக்கணக்கில் அடித்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தது.
உயிர்பயத்தின் பல மணி நேரங்கள். பிரார்த்தனைகளோடு.. தேம்பலும் கவலையும் நிறைந்த பீதியோடு.. ஏழு நாட்கள் கடந்து போனது. இன்னமும் யாராவது உயிரோடு இருப்பார்களா? உள்ளத்தில் தைரியம் இருந்தால்.. உள்ளுக்குள் உயிர் வாழ ஆழமான ஆசை இருந்தால் மனிதனால் எதையும் சாதிக்கமுடியும் என்று எங்கேயோ படித்தது அவன் ஞாபகத்துக்கு வந்தது.
பைஸலுடைய மனதிலும் ஆசை இருந்தது. ரக்ஷாவுடைய உயிர் திரும்பக்கிடைக்குமா? ரக்ஷா. ஏழு வயதுதான் ஆகிறது. இரண்டு வருடம் முன்பு விடுமுறையில் வந்தபோது கடைசியாக அவளைப் பார்த்த ஞாபகம். சொந்தங்கள் காத்துக் கொண்டு நின்றன. ஆத்மார்த்தமான கட்டுப்பாட்டோடு.. அடக்கமுடியாத ஆர்வத்தோடு.. மீட்புக் குழுவினருக்கு உதவ போலீஸ். பாறைகள் உருண்டு விழுந்த போது பைஸல் தெய்வத்தைப் பார்த்தான். தெய்வத்துக்கு மீட்புப் பணியாளர்களுடைய சாயலாக இருந்தது.
உயிருள்ளவர்களை ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் ஆஸ்பத்திரிக்குக் கூட்டிக் கொண்டு போனார்கள். செத்துப் போனவர்கள் போஸ்ட்மார்ட்டத்துக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். பிரளயம் மனிதனை ஒட்டுமொத்தமாக அழிக்கப் பார்த்தது. அதை மனிதன் ஒன்றுபட்டு நின்று எதிர்த்தான். போராடினான். நிவாரண முகாம்களில் அந்த மனித முகத்தை அவன் பார்த்தான்.
மனிதனுக்குப் பிரளயம் கற்றுக்கொடுத்த பாடங்கள். மனிதனைக் காட்டிலும் மிக நுணுக்கமாக இயந்திரக்கைகள் சேற்றிலும் பாறாங்கற்களிலும் தட்டுத்தடவி வெளியில் எடுக்கும் உடல்களில் ஒரு கீறல் கூட விழக்கூடாது. சொந்த பந்தங்களுக்கு தாகம் தெரியவில்லை. பசி தெரியவில்லை. தங்களுக்குள் மறைந்து போனவர்களான ப்ரியப்பட்டவர்களுக்காக அவர்களுடைய நெஞ்சம் துடித்துக் கொண்டிருந்தது.
ஒரு கான்க்ரீட் தூணில் இயந்திரக்கைகள் தேடியது. தூணுக்கு அடியில் உதவிக்காக நீட்டிய கைகளோடு குட்டி ரக்ஷா! பக்கத்திலேயே மற்றொரு தூணுக்குப் அருகில் நீட்டிய கைகளோடு பைஸலுடைய அப்பா. இரண்டு கைகளுக்கும் நடுவில் நூலிழை தூரம். கைக்குக் கிடைத்தது வாய்க்கு எட்டாமல் போனது போல. கால்களில் கொலுசு போட்டுக் கொண்டு முல்லைக்கொடி.
அவள் அன்பு காட்டி பாசத்தோடு வளர்த்த முல்லை. அவளை விட்டுப் பிரிய மனமில்லாமல் அங்கே... இயந்திரக் கைகள் உயரத்தில் எழும்பின. கவிழ்ந்து கிடக்கும் சிறுமி. பிராண வாயு கிடைக்காமல் அந்தக் குழந்தையின் உயிர் துடிதுடித்து. பயங்கரமான நிசப்தம். அடக்கப்பட்ட அழுகைகள். பைஸல் மூச்சை அடக்கி அந்த முகத்தை ஒரு கன நேரம் பார்த்தான். இதயம் நொறுங்கும் காட்சி.
எல்லாவற்றையும் பார்த்து கவளப்பாறா நடுங்கியது. அப்போதுதான் இனி ஒருபோதும் உரிமையாளரைத் தேடிப் போகாத அந்தப் புத்தகத்தை இயந்திரக் கைகள் எடுத்தது. ரக்ஷாவுடைய பெயரையும் புத்தகத்தையும் பார்த்து சமநிலை தவறிய பைஸல் அலறி அழுதான். இயந்திரக்கைகளில் கிடப்பது அவனுடைய மகள்! அவன் கைகளை நீட்டி முன்னோக்கிப் பாய்ந்தான்.
மக்கள் கூட்டத்தை வேகமாக விலக்கி விட்டு போலீஸுடைய கட்டுப்பாடுகளை வெறி பிடித்தவன் போல முரட்டுத்தனமாக தல்ளிவிட்டு மின்னல் வேகத்துடன் முன்னோக்கிக் குதித்தான். மீட்புப் பணியாளர்கள் எடுப்பதற்கு முன்பே குழந்தையை வாரி எடுத்தான். மார்போடு சேர்த்தான். சேறும் ரத்தமும் நிறைந்த முகத்தை உற்றுப் பார்த்தான். இமைகள் அசைகின்றனவா! மார்பு உயர்ந்து தாழ்கிறது. அதற்கும் மேல் ஒரு நிமிடத்தைக் கூட பாழாக்க முடியாது. ஒரே ஓட்டம்!