அச்சுதன் பிள்ளை வீட்டுப் படியில் ஏறியபோது, அவனுடைய இதயத்துடிப்பு அதிகமானது. அங்கே இருள் படரத் தொடங்கியிருந்தது. முற்றத்தில் அங்குமிங்குமாக ஆட்கள் யார் யாரோ நின்று கொண்டிருந்தார்கள். இயற்கை மூச்சைப் பிடித்து அசையாமல் நின்றது. அவன் நேராக நடுக்கூடத்துக்குப் போனான். அறைக்குள் அழுகுரல்கள் கேட்டன.
எரிந்துகொண்டிருந்த பெரிய குத்துவிளக்குக்கு முன்னால் அப்பா நீண்டு நிமிர்ந்து கிடந்தார். தூங்குவது போலத்தான் தோன்றும். “இப்ப கண்ணைத் திறப்பாரா? திறந்தால் நீ வந்துகிட்டு இருக்கியா?” என்றுதான் கேட்பார். அதிகம் வளராத முடியும் முகத்தின் உரோமங்களும் உடம்பை மூடியிருக்கும் துணியும் எல்லாம் ஒரே மாதிரி வெள்ளை நிறத்தில் இருந்தன. அவன் கண்களை எடுக்காமல் கொஞ்ச நேரம் கால்களுக்குக் கீழே இருந்து பார்த்துக் கொண்டு நிண்றான். முட்டியை மடக்கி அப்பாவின் பாதத்தில் தலையை வைத்து முட்டிக்கொண்டு கண்ணீர்விட்டான்.
அறைக்குள் அழுகையும் தேம்பலும். முற்றத்தில் நிசப்தம். அவனுக்குள் நிலநடுக்கம். சிலர்மெதுவான குரலில் சொன்னார்கள். “அதிர்ஷ்டசாலி. கிடந்து கஷ்டப்படல. யாருக்கும் எந்தக் கஷ்டத்தயும் கொடுக்கவும் இல்ல. கேசவபிள்ளை அண்ணணுக்கு இப்ப எம்பது வயசு இருக்கும் இல்லயா...? கடவுளுக்கு பயந்த ஆளா இருந்தாரு”
“திடீர்னு எப்படி இப்படி நடந்திச்சு?. எப்ப செத்துப் போனாரு? எப்படி மரணம் சம்பவிச்சது? மூச்சுவிட முடியாம கஷ்டப்பட்டாரா? சுய நினைவு இல்லாம இருந்தாரா? சாகறப்ப யாரு பக்கத்துல இருந்தாங்க? சாகறதுக்கு முன்னால என்ன சொன்னாரு?” இப்படி பலவற்றையும் தெரிந்து கொள்ளும் கவலையுடன் அப்பாவை பல முகங்களில் பார்த்தான்.
“எல்லாரும் என்னைக் குற்றவாளியா ஆக்கறாங்களா? அப்படி என்றாலும் அதற்கு தான் தகுதியானவந்தான் என்ற நினைப்பினால் அவன் தலை குனிந்தது. கேசவபிள்ளை அவனிடம் அடிக்கடி சொல்வதுண்டு. “இனிம அதிக நாள் ஒன்னும் நான் உசிரோட இருக்கப் போறதில்ல. நோய்லப் படுத்தும் சாகப்போறது இல்ல. நீ அடிக்கடி வரணும்”
இதே வார்த்தைகளை அப்பா சொல்ல ஆரம்பித்து பத்து வருஷங்களுக்கு மேலாகிவிட்டது. அப்போதெல்லாம் இந்த வார்த்தைகளுக்கு பெரிய அர்த்தம் ஒன்றும் இல்லை என்றே தோன்றியது. “அப்ப இதப் பத்தி எனக்கு எதுவும் தோனவெயில்ல. அம்மாவோட மரணத்துக்கு அப்புறம்தான் அப்பா சாவப் பத்தி நினைக்க ஆரம்பிச்சாரு”
தான் தனிமைப்பட்டிருப்பதாக அவர் நினைக்கத் தொடங்கினார். சமவயதுக்காரர்கள் எல்லோரும் மண்ணோடு மண்ணாகப் போய்விட்டார்கள். ”எனக்குப் பின்னால் வந்த தலைமுறையும் பழையதாகிவிட்டது. என்னைப் போல இருப்பவர்களின் நம்பிக்கைகளும் கருத்துகளும் காலத்தின் ஓட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டு அழிந்துபோயின. இனி மேல் எனக்கு என்ன மதிப்பு மரியாதை? என்னால யாருக்கு என்ன பயன்?. வாழ்ந்தது போதும்” என்று அவர் நினைத்தார்.
கேசவபிள்ளைக்கு மரணத்தைப் பார்த்துப் பயமில்லை. மேலோக வாழ்க்கை சுகமாக இருக்க அவசியமான நல்ல காரியங்களைச் செய்து முடித்தாயிற்று. அம்மா புலம்புவதுண்டு. “இப்படி தருமம் செஞ்சா வாழ முடியாது தெரியுமா?”
அப்பா சொல்வார், “சரிதான். தருமரே எவ்வளவு கஷ்டப்பட்டிருக்காரு? அப்பறம்ல நாம எல்லாம்” அவர் பல கஷ்டங்களை அனுபவித்தவர். சின்ன வயதாக இருக்கும்போது ஏராளமான கஷ்டங்கள்.
இறுதிக்காரியங்கள் நாளைக்குத்தான். சிலர் பிரிந்து போனார்கள். சொந்த பந்தம் என்று சிலர் வந்து போய்க் கொண்டிருந்தார்கள். “எப்ப செத்துப்போனாரு? உடம்பு சரியில்லாம இருந்தாரா? சாகறப்ப எல்லாரும் பக்கத்துல இருந்தாங்க இல்லயா?” வந்தவர்கள் கேட்டார்கள்.
அச்சுதன் பிள்ளைக்கும் இதைப் பற்றியெல்லாம்தான் தெரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் தானே எப்படி யாரிடம் கேட்பது என்று தெரியாமல் அவன் குழம்பிக் கொண்டிருந்தான். “நான் காத்திருக்க வேண்டியவன் இல்லயா? அஞ்சு குழந்தைங்கள்ல ஒரு ஆள். அக்கா தங்கைங்க எல்லாரும் இங்கதான் இருந்தாங்க. பெரியக்காதான் அப்பா கூட இருந்த ஆளு. மத்தவங்க எல்லாரும் அப்பா கடைசியா மூச்சு விடறப்ப வாயில தண்ணி ஊத்த வந்திருப்பாங்க” அவன் நினைத்துக் கொண்டான்.
“இதுலயும் நாந்தானா அதுக்கும் கொடுத்து வைக்காமப் போனவன்? அச்சுதன் பிள்ளையுடைய மனைவி அவன் வருவதற்கு அரை மணி நேரம் முன்பு அங்கே போய்ச் சேர்ந்திருந்தாள். “கமலம் வந்தப்பறம்தானா அப்பா கண்ணை மூடினாரு? எத்தன தடவ நான் எங்க கூட வரச்சொல்லி கட்டாயப்படுத்தினேன்?” என்று அவள் கேட்டாள்.
அச்சுதன் பிள்ளை, மனைவி குழந்தைகளுடன்தான் கிளம்பினான். பஸ்ஸில் ஏறியபோது பப்புவைப் பார்த்தான். அவன் வீட்டிற்கு வருவதாகச் சொல்லியிருந்தான். காளைக்கு விலை பேசி அவனிடம் முன் பணம் வாங்கியிருந்தான். மீதிப் பணத்துடன் அவன் வந்திருந்தான். “நான் வீட்டுக்குப் போயிட்டு வரேன்”. “இனிம நாளைக்குத்தான். இப்பதானே வீட்டை விட்டுக் கிளம்பியிருக்கோம்?” என்று கமலம் சொன்னாள்.
“அப்பாவப் பாக்கப் போறோம் இல்லயா? பணம் கொஞ்சம் கையில இருந்தா நல்லதுதானெ” என்று அச்சுதன் பிள்ளை நினைத்தான். “நான் வீட்டுக்குப் போய் மாட்டைக் கொடுத்துட்டு மீதிய வாங்கிகிட்டு பத்து நிமிஷத்துல வரேன். நான் வர்றதுக்குள்ள பஸ் கிளம்பிடுச்சுன்னா நீங்க போங்க. அடுத்த பஸ்ஸப் பிடிச்சு வரேன்”. “இங்க பாருங்க. அந்த ஆளு நாளைக்கு வரட்டும்” என்று மனைவி சொன்னாள்.
“அய்யோ. அப்படிச் சொன்னா எப்படி? நாளைக்கு சந்தை. நேரம் வெளுக்கறதுக்கு முன்னால நான் மாட்டக் கூட்டிகிட்டு அங்கப்போய்ச் சேரணும். இத விட்டுட்டா அடுத்த சந்தை வரைக்கும் நான் காத்துகிட்டு இருக்கணும். அதனால எனக்கு எவ்வளவு நஷ்டமாகும்னு தெரியுமா? இன்னிக்கு வரச்சொல்லிதானே நீங்க எங்கிட்ட முன்பணம் வாங்கினீங்க?”
“அதெல்லாம் உண்மைதான். நான் சீக்கிரமா வந்திடறேன்”, அச்சுதன் பிள்ளை சொன்னான்.
காளையை வளர்க்க ஆகிற செலவு, நீட்டிய காசை தட்டி விட்டு வேணாம்னு சொல்றதுக்கு உண்டான தயக்கம், சொன்ன வாக்கை காப்பாத்த வேண்டும் என்ற எண்ணம். “நாங்க எப்படின்னாலும் இந்த பஸ்லதான் போறோம்”. “இதுலயே முடிஞ்சா நானும் வரேன்”. கமலமும் குழந்தைகளும் முன்னால் போனார்கள்.
அப்பாவைப் பார்க்க இன்றைக்குப் போகவேண்டும் என்று நினைக்கவில்லை.
கமலம்தான் சொன்னாள். “நாம போயி அப்பாவப் பாத்துட்டு வருவோம்”. “நாளைக்குப் போனாப் போதாதா?”. “இப்பப்போனா ராத்திரி சாப்பாட்டுக்கு திரும்பி வந்துடலாம். நாம சீக்கிரமாக் கிளம்புவோம்” அவன் சம்மதித்தான்.
அப்பாவைப் பார்த்து பத்தொன்பது வருஷமாகிவிட்டது.
போன தடவை அவன் சென்றபோது அப்பா சொன்னார். “பசங்களயும் கூட்டிகிட்டு வந்திருக்கலாம் இல்லயா? இனியும் அப்பப்ப வரணும் தெரியுதா?”. போய்ப் பார்க்கவேண்டும் என்று நினைக்காமல் இருப்பதில்லை. வேலையெல்லாம் முடித்துவிட்டு காசிக்குப் போகலாம் என்று சொல்வது போலதான். வேலை நெருக்கடிகளும், செய்ய வேண்டிய வேலைகளும் முடங்கிப் போகின்றன.
கமலம் சொன்னாள். “நான் வந்து நேரா அப்பா இருந்த இடத்துக்குப் போனேன். அச்சுதன் வரலயா கூட? அப்பா கேட்டாரு. பின்னாலயே வந்துகிட்டு இருக்காருன்னு சொல்லிகிட்டு இருக்கறப்பவே கொஞ்சம் தண்ணி கொடுக்கச் சொல்லி பாத்திரத்தப் பாத்து அப்பா கைய நீட்டினாரு. அப்பறம் அப்பா படுக்கையில படுத்துகிட்டாரு. நான் கொஞ்சம் தண்ணிய வாய்ல ஊத்தினேன். அதக் குடிச்சாரு. அப்பறமும் வாயத் திறந்தாரு. நான் மறுபடி தண்ணியக் கொடுக்க ஆரம்பிச்சப்ப கருவிழி மேலப் போயிடுச்சு. நான் அலர்றதக் கேட்டுட்டு அக்கால்லாம் ஓடிவந்தாங்க. அதுக்குள்ள சாவு வந்துடுச்சு”. பெத்த அப்பாவுக்கு செய்யவேண்டிய கடமையைச் செய்யாமப் போனதில் ஏற்பட்ட குற்ற உணர்வினால் அவன் ஸ்தம்பித்துப் போய் நின்றான். கமலம் தொடர்ந்தாள்.”எந்த வலியும் இல்ல. ஒரு நிமிஷம் கூட சுய நினைவு இல்லாம இல்ல”. “வலியெல்லாம் எனக்குதான். என்னைத் தேடினப்ப நான் இல்லாமப் போயிட்டேனே?
ஏதாச்சும் சொல்ல நினைச்சாரோ என்னவோ?”. அவன் உடலுக்குப் பக்கத்தில் சுவரில் சாய்ந்துகொண்டு நின்றான். அப்பாவுடைய ஞாபகங்கள் மனதில் ஓடி ஓடி வந்துகொண்டிருந்தன. நான் செஞ்ச காரியம்? அப்பா அதிகமா ஒன்னையும் சொல்லமாட்டாரு. ஒன்னுதான் அவரு ஆசப்பட்டாரு. அது நடக்காமப் போனப்ப அவருக்கு வேதனை உண்டாயிருக்கணும்.
கிடைக்கறத வச்சுகிட்டு திருப்திப்படணும். ஆசைக்கு அறிவு இல்ல. அப்பா அப்படிதான் வாழ்ந்தார். அவர் சொல்வதுண்டு. “லஞ்சம் வாங்கறவன் வாங்கற ஒவ்வொரு பைசாவுக்கும் கடைசியில கணக்கு சொல்லணுங்கறத ஞாபகத்துல வச்சுக்கணும்”. ஒரு பக்கம் பணத்தின் மினுமினுப்பு. மற்றொரு பக்கம் அப்பாவுடைய உபதேசம். கடைசியில் உபதேசங்கள் மண்ணில் மறைந்துபோவதுதான் வாடிக்கை.
மனது முழுவதுமாக அப்பாவை மையமாக வைத்து சுழன்றபோது அச்சுதன் பிள்ளைக்கு குற்ற உணர்வு உண்டானது.
“நான் அப்பாவ வேதனைப்படுத்திட்டேன். மகன் செய்யவேண்டிய கடமையை செய்யாதவனா ஆயிட்டேன். ப்ரியமான அப்பா.. மன்னிச்சுக்கணும்”
ரங்கு ஐயர்தான் அவனுக்கு வேலை வாங்கிக் கொடுத்தார். யாருக்கும் எந்த உதவியும் செய்யாத ஆள் என்று பெயர் பெற்றிருந்த ரங்கு ஐயர்இப்படி ஒரு உதவி செய்ததில் கேசவ பிள்ளைக்கு ஆச்சரியமும் நன்றியும் ஏற்பட்டது. கேசவ பிள்ளை குளித்து முடித்து சாமி கும்பிட்டுவிட்டு கோயிலுக்கு வெளியில் வந்தபோது கோர்ட்டில் இருந்து வந்திருந்த சிப்பாய் சொன்னார். “உங்களுக்கு ஒரு வாரண் இருக்கு”. ரங்கு ஐய்யருக்குக் கொடுக்கவேண்டியிருந்த ஐநூறு ரூபாய்க்குதான் அந்த வாரண்ட்.
கேசவ பிள்ளையின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. “வாங்க. வீட்டுக்குப் போய்ச் சாப்பிட்டுட்டு கச்சேரிக்குப் போலாம். நேத்திக்கு ஏகாதசி முடிஞ்சிருக்கு. கோயிலுக்கு வந்திருக்கீங்க. நீங்க குளிச்சு சாமியைக் கும்பிட்டுட்டு வாங்க”. சிப்பாய் சொன்னார். “அதெல்லாம் ஒன்னும் எனக்கு வேணாம். சாப்பாடும் வேணாம்”
“பிரபலமான இந்த கோயிலுக்கு வந்துட்டு குளிக்க வேணாம்னு சொல்றீங்களே? உங்க சாமாங்கள எங்கிட்டக் கொடுத்துட்டுப் போங்க. அந்த காகிதத்த எல்லாம் எங்கிட்டக் கொடுங்க”. சிப்பாய் சிரித்தார். “இந்த வேலைக்கு வந்து எனக்கு பதினெட்டு வருஷமாச்சு. கோர்ட் பிடிச்சுட்டு வரச்சொன்ன ஒரு ஆளுகிட்ட எல்லாத்தயும் கேட்டுட்டு கோயிலுக்குப் போனதா ஒருத்தரயும் நான் கேள்விப்பட்டது இல்ல. நான் குளிச்சு கோயிலுக்குப் போயிட்டு வர்றப்ப...”
கேசவ பிள்ளை வார்த்தைகளை முடித்தார். “நான் இந்த யானைக் கொட்டில்லயேதான் இருப்பேன். சரி போகட்டும். ரெக்கார்டுங்களயாச்சும் எங்கிட்டக் கொடுப்பீங்களா? குளிக்கறப்பவும் கோயிலுக்குப் போகறப்பவும் இந்த காகிதத்த எல்லாம் எடுத்துகிட்டு நான் ஓடிப்போயிடுவேன்னு நீங்க பயப்படறீங்க இல்லயா? அப்படிப்பட்ட மனசோட சாமியக் கும்பிட்டு என்ன பலன்? நாம வீட்டுக்கே போலாம்”
வீட்டுக்குப் போனார்கள். இரண்டு பேரும் சாப்பிட்டார்கள். கேசவபிள்ளை திருவிழாவுக்குப் போவது போல தோய்த்து இஸ்திரி போட்ட வேட்டியையும் சட்டையையும் போட்டுக்கொண்டார். “அந்த காகிதத்த எடுங்க. கையெழுத்துப் போட்டுத் தரேன்”. சிப்பாய்க்கு உற்சாகம் குறைந்தது. “பதினெட்டு வருஷ சர்வீஸ்ல இப்படி ஒரு குத்தவாளிய நான் பிடிச்சது இல்ல. ஒரு நடுக்கமும் இல்லாத மனுஷன்.
அங்க வந்து கையெழுத்துப் போட்டாப் போதும்”. “நான் இவரு கூடக் கொஞ்சம் போயிட்டு வரேன்”. வீட்டில் சொல்லிவிட்டு கேசவ பிள்ளை நடந்தார்.
சிப்பாய் பின் தொடர்ந்தார். வழியில் சிப்பாய் சொன்னார். “நாம வாதியக் கொஞ்சம் பாத்துட்டுப் போலாம்”. “அதயேதான் நானும் சொல்லணும்னு நினைச்சேன்”. அவர்கள் ரங்கு ஐய்யர் கடைக்குப் போனார்கள்.
வாதி மனதால் சிப்பாயைப் பாராட்டினார். “நாலு காசு கொடுத்து வாரண்ட்டத் திரும்ப வாங்கிக்கலயே?”. கேசவ பிள்ளை சொன்னார். “என்னை வாரண்ட்டுல பிடிச்சிருக்காங்க”. “காசு கொடுக்க ஏற்பாடு செய்யலைன்னா...” “செஞ்சுக்கங்க”. “கேசவ பிள்ளை.. ஜெயிலுக்காப் போறீங்க!? இது ஒரு சின்ன தொகைதானே? முழுக்கக் கொடுக்க முடியலைன்னா பாதி கொடுத்துட்டு பாக்கிக்கு ரெண்டு மாத தவணயக் கேளுங்க ”
“ஜாமீன் எடுக்கறதுக்குக் கூட காசு கையில இல்ல. நான் ஜெய்யிலுக்குப் போய் இருக்கேன். திரும்ப வந்துட்டு எப்படியாச்சும் சாமியோட பணத்த முழுசாத் தந்துடறேன். அச்சுதனுக்கு நல்ல இடத்துல ஒரு வேல கிடைச்சுடுச்சுன்னா ஒரு சீட்டு சேந்து அதுல வர்ற காசப் பிடிச்சு சாமிக்கு தரேன்”. “சீட்டோ? கடனைத் தீர்க்க நீங்க முன்னால ஒரு தடவை சீட்டு சேந்து பிடிச்ச பணத்த எனக்குத் தராம சங்கு பிள்ளைக்குக் கொடுக்கலயா?” ரங்கு ஐயர் கேட்டார்.
“ஆமாம். கொடுத்தேன். மகனுக்கு டெபாசிட் கட்ட வேற எங்கயும் பணம் கிடைக்கலைன்னு சீட்டு பிடிச்சு வர்ற பணத்த ஒரு மாசத்துக்குள்ள திருப்பித் தரேன்னு சொல்லி அவரு வந்தாரு. சீட்டு பிடிச்சு காச உங்ககிட்டக் கொடுக்கலாம்னு இருந்தப்ப அந்த ஆளு காசு கிடைக்கும்னு நம்பி வீட்டுல காத்துகிட்டு இருந்தாரு. ஒருத்தருக்கு உதவி செய்யற வாய்ப்ப நழுவ விடக்கூடாதுன்னு நினைச்சு நான் அம்பது ரூபாய் கொடுத்தேன்.
அந்தப் பையனுக்கு வேலை கிடைச்சுச்சு. உப்பயும் தவிடயும் வாங்கின மாதிரி ஒன்னும் அரையுமா இருபத்தி ஒன்பது ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்தாரு. கடந்த ஒரு வருஷமா ஒரு பைசாவும் கொடுக்கல. அதெல்லாம் இருக்கட்டும். இப்ப நான் உங்ககிட்ட சொல்றது இதுதான். நான் ஜெயில்ல இருக்கறப்ப அச்சுதன் வந்து கேட்டா கொஞ்சம் அரிசியயாச்சும் கடன் கொடுக்கணும். அதுக்கு உரிய காசையும் நான் தரேன். என்னோட கடன மீட்காம நான் சாகமாட்டேன்”.
ரங்கு ஐய்யர் உரக்கச் சிரித்தார். “வாரண்ட்டு போட்டதுக்கு எனக்கு தண்டனை இது. நீங்க ஜெயிலுக்குப் போவீங்கன்னு நான் நினைக்கலை. வாரண்ட்டுல பிடிச்சா பசங்க யாராச்சும் கடனை தீப்பாங்கன்னு நினைச்சேன்”. “பொண்ணுங்களோட புருஷங்களக் கொண்டு கடனை அடைக்கறது அதருமம் இல்லயா? இந்தக் கடனே சின்னப் பொண்ணோட கல்யாணத்துக்கு சாமாங்கள வாங்கறதுக்காக வாங்கின கடன். இத நாந்தான் கொடுக்கணும். இல்லாட்டா மகன் கொடுக்கணும்”.
ஐயர் கேட்டார். “வாரண்ட்டுல கையெழுத்துப் போட்டாச்சா?”. போடல”. சொல்லி சிப்பாய் காகிதத்தை எடுத்தார். “பிரதிய தேடினதுல கிடைக்கலைன்னு சொல்லி வாரண்ட்ட திருப்பி அனுப்பிடுங்க”. ஐயர் சொன்னார்.
அன்றே ரங்கு ஐயர் அச்சுதன் பிள்ளையை தாசில்தாரிடம் அழைத்துக் கொண்டு போனார். தாசில்தார் ரங்கு ஐயருடைய சொந்தக்காரர்.
ஊர்க்காரர்கள் சொல்வதுண்டு. “அச்சுதன் பிள்ளை புத்திசாலி. நாலு காசு சம்பாதிக்கத் தெரியும்” அப்பா சொல்வதுண்டு.
“உன்னோட கையிலேர்ந்து எதயாச்சும் வாங்கிச் சாப்பிடறப்ப கசக்குது”. அந்த வார்த்தைகளுடைய பொருளை அவன் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. அவன் அப்பாவைப் புரிந்து கொள்ளவில்லை. ரங்கு ஐயர் புரிந்துகொண்டார். அப்பாவுடைய சித்தாந்தம் காலத்துக்குப் பொருந்தாதது என்று அவன் நினைத்தான்.
“நாடு ஓடறப்ப நடுவுல ஓடணும். அந்த ஓட்டத்துல பலதும் தகர்ந்து போகும். பலருக்குக் காயம்படும். அவனவனுடைய உடம்பை அவனவன் பாத்துகிட்டா ஜெயிக்கலாம். இதோ இங்க நானும் தகர்ந்து போயிட்டேன். நான் கொடுக்கற தண்ணி கசக்கும்னு அப்பா நினைச்சாரா? என்னோட கண்ணீர்ல கசப்பு இல்ல அப்பா”
(
குறிப்பு: கச்சேரி - கோர்ட், பிரதி - குற்றம் சுமத்தப்பட்டவன், வாதி - குற்றம் சுமத்தியவன், யானைக்கொட்டில் - யானைகள் பராமரிக்கப்படும் இடம்)