“மாதவன் அண்ணே” - என்னுடைய அழைப்பு மிகவும் பலவீனமாக இருந்தது. அதைக் கேட்டு தாபுவும் ஜோஸுவும் உரத்த குரலில் கூப்பிட்டார்கள். கூவினார்கள். அண்ணன் மட்டும் எதையும் காதில் வாங்கவில்லை. அவரை அதற்காக குற்றம் சொல்லிப் பயனில்லை.
காலை ஏழு முதல் ராத்திரி பத்து வரை பஞ்சாயத்து பரிசலுக்காக நிச்சயித்திருந்த நேரம். இருந்தாலும் தியேட்டரில் செகண்டு ஷோ முடிந்து வருபவர்களுக்காக அவர் காத்துக் கொண்டிருப்பார். அது பஞ்சாயத்து மாதம்தோறும் அவருக்கு தரும் சம்பளத்தைத் தவிர... சினிமா பார்த்துவிட்டு வருபவர்கள் ஏதாவது தொகையைக் கையில் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில்தான் அது நடந்தது.
அதையும் தாண்டி ஒரு மனிதாபிமான எண்ணமும் அவருக்கு இருந்தது. ஏனென்றால், பரிசல் போனால் ஆற்றை கடந்து செல்ல நீந்துவதைத் தவிர வேறு வழியில்லை. ஆழம் அதிகம் இல்லாவிட்டாலும் துணிகளையும் போட்டுக் கொண்டு நீந்தமுடியாது. ஆனால் துணிகள் இல்லாமலும் நீந்த முடியாது.
நனையாமல் துணிகளைத் தூக்கிக் கொண்டும் நீந்த முடியாது. பழைய தலைமுறையைச் சேர்ந்த ஒருவர் கூட அந்த ஆற்றை அப்படிக் கஷ்டப்பட்டு என்றைக்காவது ஒரு நாள் கடக்காமல் இருந்திருக்க மாட்டார். குறிப்பாக, திருவிழா நாட்களில். பிரபலமான கதா பிரசங்கங்களையும் பிரசித்தி பெற்ற குழுக்களின் நாடகங்களையும் பார்க்கக் கூட்டம் கூடும்.
எல்லாவற்றையும் சந்தோஷமாக ரசித்துக் கேட்டுப் பார்த்து விட்டு சுக்குக் காபியையும் குடித்து, கதைகளை பேசியபடி பரிசல் கரையில் அண்ணன் இல்லாமல் காலியாக இருக்கும் பரிசலை பார்க்கும் போது அது வரை அனுபவித்த சந்தோஷம் எல்லாம் காணாமல் போய்விடும். பரிகாரம் இல்லாத ஒரு சமன்பாடு போல நீண்டு கிடக்கும் அங்காடித்தோடு.
அண்ணன் விறைத்துப் போய் அந்த குளிரில் பனி பெய்யும் ராத்திரியில் குறட்டை விட்டுத் தூங்குவாராக இருக்கும். அப்புறம் ஒவ்வொருவராக ஆற்றில் ஒரே பாய்ச்சல்! வாகனங்கள் போகும் வகையில் புதிய பாலம் கட்ட ஏற்கனவே இருந்த சிறிய துண்டுப் பாலம் உடைக்கப்பட்ட போது இப்படி நீந்தல் பயிற்சி செய்யவேண்டி வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.
அந்தக் கால தலைமுறையினருடைய அனுபவங்களை எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் அது முடியாத ஒரு பெருங்கதையே. முடிவில்லாத ஒரு தித்திக்கும் வேதனை போல துவர்த்தாலும் மறுபடியும் சாப்பிடும் போது தித்திக்கும் நெல்லிக்காய் போல அந்த ஞாபகங்கள் எப்போதும் மனதிற்குள் பாய்ந்து வரும்.
சாலை என்ற கனவு நனவாவதை எதிர்பார்த்துதான் நாங்கள் இந்தக் கஷ்டங்களை சகித்துக் கொண்டோம். காயல் கரையோடு சேர்ந்து கிடக்கும் எங்கள் ஊரில் சாலை என்பதுதான் மிகப் பெரிய கனவும் எதிர்பார்ப்பும். அதனால் எங்கள் கனவுகளில் மிகப்பெரிய வாகனம் தண்ணீரே.
அதற்கு அப்பால் எதையும் கற்பனை செய்து பார்க்கவும் எங்களால் முடியவில்லை. அன்று ஊரில் கார் என்று இருந்தது ஒரே ஒரு வீட்டுக்காரரிடம் மட்டும்தான். அவர்களோ வீட்டுக்குக் காரை எடுத்துக் கொண்டு வர வழியில்லாமல் கரையில் காரை நிறுத்தி இரண்டு மூன்று கிலோமீட்டர் தாண்டி வீட்டுக்கு போவார்கள்.
யாருக்காவது உடம்பு சரியில்லாமல் போய்விட்டாலோ பெரும் துயரம்! நோயாளியை பரிசலில் அல்லது நாற்காலியில் இருத்தி இரண்டு மூன்று பேர் தூக்கிக் கொண்டு போன காலம் இன்னும் மறக்க முடியாத காட்சிகளாக இருந்தது. கல்யாணம் என்றாலும் வேறு எந்த தேவையானாலும் அக்கரையில் இருந்து கடையில் வாடகைப் பாத்திரங்கள், மேசை நாற்காலிகள், பந்தல் கட்டுவதற்கு அவசியமான பொருட்களைப் பரிசலில் ஏற்றி, கரையில் கொண்டு வந்துதான் வீடுகளுக்கு எடுத்துச் செல்வது வழக்கம்.
மரப்பாலமும் அப்புறம் ஒரு துண்டுப் பாலமும்தான் அன்றிருந்த பயண வழிகள். அதற்கு பிறகும் எத்தனையோ நாட்கள் கழித்துத்தான் சாலை என்ற ஆசை பிறந்தது. வாகனங்கள் நேராக போக வசதியான ஒரு பாலத்துக்காக இருந்ததும் உடைக்கப்பட்டது. இப்படி பாலம் வரும் வரை உள்ள இடைவேளையில் பரிசலோடு அண்ணன் எங்களுடைய ஒரே ஆதரவாக இருந்தார்.
இரண்டு வருடத்துக்கு எங்கள் எல்லோருடைய ப்ரியமானவராக அவர் மாறினார். யார் யார் எப்போது போகிறார்கள் எப்போது திரும்பி வருகிறார்கள் என்பதை அண்ணனிடம் கேட்டால் போதும். அவருடைய பரிசல் பயணத்தைப் பதிவு செய்யாத ஒரு யாத்திரையும் அந்தக் காலத்தில் இல்லை.
கொஞ்ச தூரம்தான் இருந்தது என்றாலும் அன்று பரிசலில் ஏறாமல் அக்கரைக்குப் போக வேறு வழி எதுவும் இல்லை. வெளித்தோற்றத்துக்குக் கரடு முரடான சுபாவத்துடன் காட்சி தருவதையும் தாண்டி ஆச்சரியமான ஒரு மனது அவருக்கு உண்டு என்று அன்றாடம் செய்த பல பயணங்களில் இருந்து புரிந்து கொள்ள முடியும்.
ஒரு துண்டைத் தலையில் கட்டி பல சமயங்களிலும் ஒரு பீடியை உதட்டில் வைத்துப் புகைக்கும் அவர் எங்களுடைய கடந்த கால கனவுகளிலும் நிஜ வாழ்க்கையிலும் எப்போதும் எங்களுக்கு ஒரு ஆச்சரியமாகவே வாழ்ந்தார். இதையும் தாண்டி காலத்தை வென்று வாழும் ஒரு யதார்த்தமாகவும் இருந்தார்.
பல நாட்கள் காலை நேரத்தில் வாசகர் சாலைக்குப் போய்விட்டு மத்தியானம் வீட்டுக்கு சாப்பிட வரும்போது அண்ணன் எந்த ஒரு அவசர கதியும் இல்லாமல் இக்கரையிலோ அக்கரையிலோ பீடியைப் புகைத்துக் கொண்டு பரிசலின் நுனியில் அல்லது கரையில் இருப்பதைப் பார்க்கலாம். கறுத்த மெலிந்த ஒரு உருவம். அந்த உருவம் எங்கள் நினைவுகளில் இப்போதும் நிழலாடியது.
“அண்ணே” என்று ஒரு தடவை கூப்பிட்டால், பல சமயங்களிலும் அவருக்கு கேட்காது. உரத்த குரலில் கூவ சங்கோஜமாக இருக்கும் போது, அண்ணன் சில சமயங்களில் குட்டித் தூக்கம் போட்டுக் கொண்டிருப்பார். இல்லாவிட்டால் ஏதோ நினைவுகளில் மூழ்கியிருப்பார்.
சத்தம் கேட்கும் போது சிரித்து கையை ஆட்டிக்காட்டி மெதுவாக எழுந்து வருவார். பாதியிலேயேத் தூக்கம் கெட்டுப் போனதால் அல்லது கனவு பாதியில் கலைந்து போனதன் சோர்வு அந்த முகத்தில் நம்மால் பார்க்க முடியாது.
“பொண்ணோட கல்யாணம் என்னவாச்சு?” இந்தக் கேள்வி கேட்கும் போது அவருடைய சிரிப்பு காணாமல் போகும்.
இரண்டு பெண்கள், அதற்கடுத்து ஒரு பையன். இதுதான் அவருடைய குடும்பம். “இல்ல தம்பி”. “எத்தன நாளாப் பாத்துக்கிட்டு இருக்கீங்க?” எத்தன பேரு வந்து பாத்தாங்கன்னு நினைக்கறப்ப... எல்லாம் சரியா வந்தா இங்க சாலையில்லாத பிரச்சனை. அதனாலேயே எத்தன வரன் கை விட்டுப் போயிடுச்சு?”
வயதாகி விட்டாலும் மகளுக்குக் கல்யாணம் ஆகாததால் உண்டாகும் துன்பத்தை அந்த முகத்தில் வாசித்துத் தெரிந்து கொள்ளலாம்.
“கவலப்படாதீங்க அண்ணே. எல்லாம் சரியாகும்” ஒரு பெரியவர் சொல்வது போல நான் அவரை சமாதானப்படுத்துவேன்.
அதற்கு அப்பறமும் எத்தனையோ நாட்கள் கடந்துதான் எங்களுடைய மனங்களில் ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டு பாலம் வந்தது. அப்போது எல்லோருக்கும் சந்தோஷம். ஆனால் அதில் துக்கம் ஏற்பட்டது அண்ணனுக்குதான்! பல நாட்களாகப் பஞ்சாயத்தில் இருந்து கிடைத்த வருமானம் இனிமேல் இல்லாமல் போகும்.
இல்லாவிட்டாலும் முன்பு போல ஏதாவது ஒரு வேலைக்குப் போய் அவர் குடும்பத்தைக் காப்பாற்றுவார். எது எப்படிப் போனாலும், அவருடைய பெண்ணுக்கு கல்யாணம் நடந்தால் போதும் என்று தோன்றியது. எப்போதும் பிராத்தனை செய்தேன். காலங்கள் கடந்து போயின. புதிய பாலத்தை மந்திரி திறந்து வைத்தார்.
வாகனங்கள் செல்ல ஆரம்பித்தன. கொஞ்ச நாட்கள் ஆன பிறகு பழைய பாலமும் பரிசலும் ஞாபகங்களில் இருந்து தொலைந்து போனது. அண்ணனும்தான். சாலையும் பாலமும் வந்ததால் ஏற்பட்ட சந்தோஷத்தில் ஊர்க்காரர்கள் பரிசல்காரரையும் பரிசலையும் சிறிது சிறிதாக மறந்து போக ஆரம்பித்தார்கள்.
எப்போதாவது அபூர்வமாக வழியில் பார்க்கும் போது ஒரு புன்முறுவலோடு அவருடன் இருந்த நட்பு முறிந்து போகும்! பீடியைப் புகைத்து வேட்டியை மடக்கிக் கட்டித் துண்டையும் தோளில் போட்டுக் கொண்டு அவர் நடந்து போகும் போது ஒரு தலைமுறையைக் கோர்த்து இணைத்த ஒரு மனிதன்தான் போகிறான் என்ற எண்ணம் இனி ஊரில் இருக்கும் எவருடைய மனதிலாவது ஏற்படுமா?
காரிலும் பைக்கிலும் சீறிப் பாயும் புதிய தலைமுறை இளைய தலைமுறைக்கு அவருடைய வாழ்க்கைக்கதை ஒரு நகைச்சுவை கதையாகவும் தோன்றலாம். பார்த்த போதெல்லாம் அவருடைய முகம் முன்பு போல அந்த அளவுக்கு பிரகாசமாக இல்லை என்றேத் தோன்றியது.
அவருடைய இயல்பான சுபாவத்தின் மிச்சம் மீதிகள் சிறிது சிறிதாக மறைந்து போய்க் கொண்டிருந்தன. வருமானம் இல்லாமல் போனதால் ஏற்பட்ட துக்கமா? மகளுடைய கல்யாணம் நடக்காமல் போனதால் உண்டான நிராசையா? என்று ஒரு போதும் எதையும் கண்டுபிடிக்க முடியாத ஒரு சங்கடம் அந்த முகத்தில் இருந்தது. நாடும் நகரமும் சந்தித்த ஒரு பெரு வெள்ளத்தின் போதுதான் அவர் உயிர் பிரிந்தது.
பிரளயம் ஏற்பட ஆரம்பித்த போது காயலுக்குப் பக்கத்தில் இருந்த வீடுகளில் இருந்து ஆட்கள் நிவாரண முகாம்களுக்கும் தூரத்தில் இருந்த சொந்தக்காரர்கள் வீடுகளுக்கும் போனார்கள். வீட்டிற்குள் வெள்ளம் புகுந்ததால் அடக்கம் செய்ய இடமில்லாமல் பஞ்சாயத்தின் பொது மயானத்தில் அவருடைய இறுதிச்சடங்குகள் நடந்தன.
தொலைவில் இருந்து அவரின் மரணத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட போது தாளாத துக்கம் ஏற்பட்டது. கடைசியாக அவருடைய முகத்தைப் பார்க்க முடியவில்லையே என்ற வேதனை மனதை வேட்டையாடியது. அந்தப் பரிசல் எத்தனையோ தடவை ஏறி இறங்கியது. கனவுகளின் யதார்த்தங்களின் அடையாளங்கள் அந்த பரிசலிலும் பதிந்து கிடந்தது.
இப்போதும் இடையில் புதிய பாலம் வழியாகச் செல்லும் போது என்னையும் அறியாமல் என்னுடைய கைகள் மெல்ல உயரும். கையை உயர்த்தி அல்லது இரண்டு கையாலும் ஒரு தட்டு தட்டிப் பார்த்தால்! அக்கரையில் பீடியையும் புகைத்துக் கொண்டு அண்ணன் இருப்பாரோ!