வாசல் திண்ணையில் உலாத்திக் கொண்டிருந்தேன். தலைக்குள் ஒரு தீ ஜுவாலை. பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியோ வாழ்க்கையின் நிலையான மதிப்பீடுகள் பற்றியோ அழகியலின் உலகியல் நிலை பற்றியோ நான் அப்போது சிந்திக்கவில்லை. இதைப் பற்றி எல்லாம் நான் மட்டும்தான் யோசிக்க வேண்டும் என்பதில்லை.
ஆனால் என்னுடைய குடும்பம்? அதை இன்னொரு ஆள் சுமக்க மாட்டான். இதுதான் என் சங்கடத்துக்குக் காரணம். நடுநடுவில் மார்போடு ஒட்டி இருந்த கடைசி குழந்தைக்குத் தாலாட்டு பாடித் தூங்க வைத்துக் கொண்டிருந்தேன். கையெல்லாம் ஒரே வலி. ஆனாலும் தூங்கும் வரை அவனைச் சுமக்காமல் இருக்க முடியாது.
வேறு வழியில்லை. குழந்தையின் அம்மா படுத்த படுக்கையாக இருக்கிறாள். அந்த வேலையையும் சேர்த்து அப்பாவான நான் ஏற்றுக் கொண்டிருக்கிறேன். இவனுக்கு முன்னால் பிறந்த பெண் குழந்தை “நான் கொஞ்சம் அழுதால் என்ன?” என்கிற பாவத்தில் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாள்.
“வேண்டிய அளவு என்னைக் கவனிப்பதில்லை” என்பது அவளுடைய பயம். அவள் எப்போது வேண்டுமானாலும் அழ ஆரம்பித்து விடுவாளோ” என்று நான் பயந்தேன். அழுகை ஆரம்பித்து விட்டால் அத்தனைச் சீக்கிரம் அது அடங்காது. தோளில் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையை அது எழுப்பிவிடும். அப்புறம் எல்லா அழுகைகளும் சேர்ந்து சங்க கானமாகிவிடும்.
அதனால் தாலாட்டும் போதே அவளிடம் சில பேச்சு வார்த்தைகளையும் நடத்த வேண்டியிருக்கிறது. நான் பேச ஆரம்பிக்கும் போது அவளுடைய முகம் மலரும். தாலாட்டு தொடர்ந்தால் முகம் வாடிப் போய்விடும். அப்போதும் என்னுடைய மூளை வேலை செய்து கொண்டிருக்கும். அந்தக் கனத்தில் என் பொக்கிஷக் கருவூலத்தில் இருந்த ஆக மொத்தத் தொகை அஞ்சே அஞ்சு ரூபாய் மட்டுமே. மனைவியுடைய மருந்துக்கு இரண்டு ரூபாயாவது வேண்டும்.
இல்லாவிட்டால் ராத்திரி முழுவதும் அவள் இருமிக் கொண்டிருப்பாள். தூங்க முடியாமல் என்னுடைய மூஞ்சி முகரை எல்லாம் வீங்கிவிடும். ராத்திரி முழுவதும் தூங்காமல் கிடப்பதற்கு உரிய நேரமா இது? வீட்டுச் செலவுகளுக்கு இரண்டரை ரூபாயாவது வேண்டும்.
இல்லாவிட்டால் சமையலறை வேலை நிறுத்தம் செய்ய ஆரம்பிக்கும். பரவாயில்லை. இப்போதே பட்ஜெட்டில் ஒரு அனா குறைவாக இருக்கிறது. புவியியல் பாட்டு புத்தகம் என்ற ஒரு படிப்பு சம்பந்தமான நோய் மகனை பற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கு இரண்டனா தேவை. அப்படியென்றால் மூன்றனா குறைகிறது.
காசு இல்லையென்றால் வாயை மூடிக் கொண்டிருக்கலாம். காசு இருந்தும் கைக்கும் வாய்க்கும் எட்டாமல் இருக்கும் போதும் எல்லாக் குழப்பங்களும் ஏற்படுகின்றன. இதற்கு நடுவில் தோளில் இருந்த குழந்தை தூங்கிப் போய்விட்டது. அவனைப் படுக்கையில் கிடத்திவிட்டு நான் கையை கொஞ்சம் நீட்டி நிமிர்த்தி ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.
வாசல் திண்ணைக்கு வந்தேன். ஒரே ஒரு அவுன்ஸ் பிரண்டைத் தைலம் வாங்க வேண்டும் என்று அப்போது எனக்கு தோன்றியது. ஜில்லென்று தைலத்தைப் பூசி ஒரு குளியல் போட்டால் உடம்பு முழுவதும் மெலிதாக வியர்வை படியும். அப்போது உடம்பு முழுவதும் லேசாகும். வாசல் முற்றத்தில் இருந்து ஒரு அழைப்பு.
அழைப்பது என்னை இல்லை. “மகாதேவா... கைலாச வாசா...” என்றுதான் அழைப்பு. அந்த ஆள் இந்த ஊருக்கு புதிதானவனாக தெரியவில்லை. கையை லேசாக அசைத்தேன். வந்தவன் வெளியில் போனான். “காசி... பத்ரிநாத்... பஞ்சவடி... தக்ஷ்ணேஸ்வரம்... புண்ணிய இடங்களைப் பாத்துட்டு வர்றவனாக்கும் நான்.
அத நினைப்புல வச்சுக்கணும்”. வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து டாக்டர் பட்டம் வாங்கிக் கொண்டு வந்த ஒருவனின் ஜம்பத்தோடு அவன் சொன்னான். என்னால் எதையும் கொடுக்க முடியாத நிலை. சிறியதாக ஒரு வாக்குவாதம். நான் அதில் ஜெயிக்கும் போதுதான் உள்ளே இருந்து அறிவுரை கேட்டது.
“காலனாவாச்சும் கொடுத்தனுப்புங்க”. மனைவியின் குரல். பக்தை. நோயாளியும் கூட. எல்லாப் புண்ணிய இடங்களையும் சபித்துக் கொண்டு காலனாவை எடுத்துத் தந்தேன். அவன் கிளம்பிப் போனான். திடீரென்றுதான் அந்த மனிதன் தோன்றினான். திண்ணையில் இருந்த போதே லேசாக நிழலாடியதைக் கவனித்தேன். வயது ஐம்பத்தைந்துக்கும் அறுபதுக்கும் இடையில் இருக்கும்.
திருவிழா நடக்கும் இடத்திலோ கடமத்திலோ பஸ் ஸ்டாண்டிலோ பார்த்த ஒரு முகம் போல அந்த முகம் இருந்தது. நரைத்து போன மீசைக்கு நடுவில் ஒரு புன்முறுவலை பூசிக்கொண்டு எனக்கு வணக்கம் சொன்னார். சுய நினைவு இல்லாமல் நானும் பதிலுக்கு வணக்கம் சொன்னேன். “யாருன்னு எனக்குத் தெரியலயே?”
கண்ணாடிக்கு இடையில் என்னை பார்த்தது அந்த உருவம். கைகளைப் பிசைந்து கொண்டு நின்றேன். “ஸ்கூல்ல சாக்கோ மாஸ்ட்டர ஞாபகத்துல இருக்கா?”. “சிவனே!” நான் அதிர்ந்து போனேன்.
“மன்னிச்சுக்கணும். எனக்குச் சுத்தமா அடையாளமேத் தெரியல”. “என்ன ஒரு மாற்றம்!”. அவர் இருக்க போகிறாரோ என்று தோன்றிய போது பயத்தில் என்னுடைய மகள் இடத்தைக் காலி செய்துவிட்டு வீட்டுக்குள் போனாள்.
அவளைப் பார்த்தபடி சாக்கோ மாஸ்ட்டர் கேட்டார். “பொண்ணுதானே?” “ஆமாம்”. “எத்தனை குழந்தைங்க?”. “அஞ்சு”. “ஹாங். எனக்கு ஒன்பது. இப்ப எட்டு” அவர் லேசாக ஒரு பெருமூச்சு விட்டார். “மாஸ்ட்டர் இப்ப எங்க இருக்கீங்க?”.
“இப்ப எங்கயும் இல்ல”. “பென்ஷன் வாங்க ஆரம்பிச்சாச்சா?”. “ பென்ஷன் ஒன்னும் கிடைக்கறதில்ல”
“வேலய விட்டுட்டீங்களா? நாம ஒருத்தர ஒருத்தரு பாத்துகிட்டு எவ்வளவு வருஷமாச்சு! நேத்திக்கு சாயங்காலம்தான் இந்த ஊர்ல நீங்க இருக்கீங்கன்னு தெரிஞ்சுச்சு. எப்படியாச்சும் பாத்துடலாம்னு நினைச்சேன்”. “ரொம்ப நல்லதாப் போச்சு. ஸ்கூல்ல நாம் எப்படியெல்லாம் இருந்தோம்!”. சாக்கோ மாஸ்ட்டர் சொன்னது சத்தியம்.
சகோதரங்கள் போலத்தான் இருந்தோம். அன்று என்னுடைய சம்பளம் ஆறு ரூபாய். அவருக்கு பதினேழு ரூபாய். அங்கயும் இங்கயும் கை மாத்தா வாங்கியும் ஒன்னு ரெண்டு டியூஷன் எடுத்தும்தான் வாழ்க்கை நகர்ந்துச்சு. இருந்தும் அவர் எத்தனை முறை எனக்கு உதவி செய்திருக்கிறார்! சில சமயங்களில் வாங்கியதைத் திருப்பிக் கொடுத்ததுண்டு. கொடுக்க முடியாத தொகைகளும் உண்டு. அது எதையும் இன்று வரைக்கும் என்னிடம் கேட்டதும் கிடையாது.
எனக்குக் கஷ்டங்கள் வரும் போது அவரிடம் போய் கடன் கேட்கமாட்டேன். ஆனால் அவர் எப்படியோ அதையெல்லாம் வாசனை பிடித்துத் தெரிந்து கொண்டு என்னிடம் வருவார். “தரித்திரம் ஒரு பாவம் இல்ல மாஸ்ட்டர். காசு பணம் ஒரு புண்ணியமும் இல்ல. நீங்க எதுக்காக இதுக்கு தயங்கறீங்க? இப்போதைக்கு இத வச்சுக்கங்க”
ரூபாயை என்னுடைய கையில் திணித்துவிட்டு வண்டின் கறுத்த நிறம் போல அன்று இருந்த கறுப்பு மீசைக்கு நடுவில் ஒரு புன்முறுவலை தூவிவிட்டு நடந்து செல்வார். “கஷ்டம். இன்னிக்கு அந்த மீசை அத்தனையும் வெளுத்துப் போச்சு. கடைசியாக அவர் எனக்கு எப்போது கடன் கொடுத்தார் என்று எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு.
அம்மா செத்துப்போன சமயம் அது. சவ அடக்கத்துக்கு காசு இல்லாம தவிச்சுகிட்டு இருந்தேன். தலையில் ஒரு தலைப்பாகையையும் கட்டிக்கொண்டு சாவிக் கொத்துகளையும் கையில் வைத்து கிலுக்கி கிலுக்கி ஆட்டியபடி மாமா வந்து சேர்ந்தார். என்னைக் கேட்டார். “அடக்கத்துக்கு வேணுங்கற ஏற்பாடெல்லாத்தயும் செய்ய வேணாமா?”. “இல்ல”. “ஊஹூம்”.
புத்திசாலியான அவருக்கு விஷயங்கள் புரிந்தது. “ஏண்டா ஸ்கூல் மாஸ்ட்டரே. யாரானாலும் அம்மா செத்துப்போனா அடக்கம் செய்யணும் இல்லயா?”. நான் பதில் சொல்லவில்லை. பெரியவர் என்ற இடத்தில் இருந்து கொண்டு சொல்ல வேண்டியதைச் சொல்லியாயிற்று என்ற பாணியில் அவர் முற்றத்தில் இறங்கி நடந்தார்.
சட்டென்று அதோ சாக்கோ மாஸ்ட்டர் சைக்கிளில் இருந்து இறங்கினார். மூச்சிரைக்க பக்கத்தில் ஓடி வந்தார். என்னை கட்டிப்பிடித்துக் கொண்டு அவர் சொன்னார். “தெய்வம் உங்களுக்கு ஆறுதல் தரட்டும்”. சொல்லிவிட்டு அவர் படியிறங்கும் போது கேட்டார். “பணம் ஏதாச்சும் வேணுமா?”. என்னுடைய கண்கள் பளபளத்தன.
“எனக்கு யாரும் கிடையாது மாஸ்ட்டரே”. “கடவுள் இருக்காரு. இந்தா” அவர் இருபத்தைந்து ரூபாயை எடுத்து தந்துவிட்டு சொன்னார். “இப்போதைக்கு இது போதும்தானே?”. “தாராளம்”. “சரி. ஆகவேண்டிய காரியங்கள பாருங்க”. மூன்று தவணைகளாக பதினைந்து ரூபாயைத் திருப்பிக் கொடுத்தேன். மீதி பத்து ரூபாய் அவர் நான் இருந்த ஸ்கூலை விட்டு மாறிப் போகும் போதும் என்னுடைய கையில் இல்லை.
“மாஸ்ட்டருக்கு நான் பத்து ரூபா தரணும்”. “நீங்க என்னோட தம்பி. உங்கள விட்டுட்டு போகறதுலதான் எனக்கு கஷ்டமா இருக்கு. பணத்தோட காரியத்த விட்டுத்தள்ளுங்க. எங்கிட்ட இருக்கற பைசா இப்போதைக்கு எனக்குப் போதும்” எங்கள் இருவரின் கண்களும் நிறைந்தன. மௌனமாக நாங்கள் பிரிந்தோம். அப்படிப்பட்டவர் இப்போது எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார்.
“ஓ! என்ன ஒரு மாற்றம்!”. “உங்களுக்கும் வயசாயிடுச்சு. அவர் சிரித்தபடி சொன்னார். “நீங்க ஏன் ஸ்கூல் வேலய விட்டுட்டு போனீங்க?”.”மிலிடரியில சேர்ந்தேன். திரும்பி வந்தப்ப ஒரு கம்பெனியில வேல கிடச்சுது. ஸ்கூல் சம்பளத்த விட அது நல்ல சம்பளம்னு தோனிச்சு”
“இருந்தாலும்...”. நான் ஆசிரியனாக இல்லாமல் போனதைப் பற்றி அந்த வயதான ஆசிரியனுக்கு ஒரு வருத்தம். இதற்கு நடுவில் நான் தேநீருக்கு ஏற்பாடு செய்தேன். அது வந்தது. குடிப்பதற்கு இடையில் நான் கேட்டேன். “மாஸ்ட்டர அப்புறம் எங்க மாத்தினாங்க?”. அவர் போன இடத்தை கேட்டபோது நான் அதிர்ந்து போனேன். ஒரு தண்டனை என்ற ரீதியில்தான் ஆசிரியர்களை அந்த இடத்துக்கு மாற்றுவார்கள். அதுதான் அன்றைய வழக்கம்.
ஆசிரியர்களின் உலகில் ஒரு அந்தமான் தீவு அது. “ஆமாமாம். அது ஒரு பனிஷ்மெண்ட் ட்ரான்ஸ்ஃபர்தான்”. “உங்களுக்கா!” அவரைப் போல ஒரு நேர்மையான நல்ல ஆசிரியரை நான் பார்த்ததில்லை. அவருக்கு ஒரு தண்டனையா! “என்னை பிடிக்காதவங்களோட ஏற்பாடாக்கும் அது. அதுல எனக்கு வருத்தம் உண்டு.
ஒழுங்கா வேல செஞ்சா மட்டும் போதாது. மேல இருக்கறவங்கள திருப்திப்படுத்தணும். அவங்க சொல்ற வழிதான் ரொம்ப சரியான வழிங்கறது அவங்க நினைப்பு. நான் அத பொருட்படுத்தறது இல்ல. நான் ஒரு அதிகப்பிரசங்கிங்கற பேருதான் கிடைச்சது. அது அப்படியே இருந்துட்டுப் போகட்டும்னு நானும் விட்டுட்டேன்.
அப்புறம் இஷ்டமில்லாதவங்களுக்கு கொடுக்கற மாதிரி நேரா தண்டிக்காம மறைமுகமா ஏதோ ஒரு காரணத்த சொல்லித்தான் அந்த தண்டனையை எனக்கு கொடுத்தாங்க. அத நான் எதிர்க்கல. அங்கயும் போனேன். அங்கப் போனப்பதான் தம்பி ஒரு சிலுவைய சுமந்துகிட்டு இருக்கேன்னு எனக்கு தெரிஞ்சது. எல்லாருக்கும் அங்க ஒன்னு ஒன்னரை வருஷம் மட்டும்தான் இருக்கமுடியும். அங்க நான் பதினோரு வருஷம் வேல பாத்தேன்”. “பதினோரு வருசமா! அப்படியும் ஒரு பகையா!”. “அது அவங்களோட குத்தம் இல்ல. அது யாரோட குத்தமும் இல்ல. கடவுளோட விருப்பம். ஒரு குன்றோட சரிவுலதான் ஸ்கூல்.
பக்கத்துல வீடு ஒன்னும் இல்ல. மேடு பள்ளமா இருக்கற ரென்டு மூனு வழியா இறங்கிப் போனா ஒன்னு ரெண்டு வீடுங்க வரும். அங்க இருக்கறவங்க எல்லாரும் ரொம்ப மோசமானவங்கன்னு பல பேரு எங்கிட்ட சொன்னாங்க. ஆனா என்னோட அனுபவம் அப்படி இல்ல. ஆத்மார்த்தமா பழகறவங்க அவங்க. அன்பு காட்டினா எல்லையில்லாம திருப்பி அன்பு காட்டுவாங்க. பகையைக் காட்டினாலும் அதே போலத்தான். நல்ல மனுஷங்க”. அவர் லேசாக சிரித்தார். “ஸ்கூல் எப்படி?”. “அதான் தம்பி சுவாரசியமான விஷயம். பதினொன்னு முதல் பதினாலு வயசு வரை உள்ளவங்கதான் ஒன்னாம் க்ளாஸ்ல பசங்க. அஞ்சாம் வகுப்பு வரை மட்டும்தான்.
கல்யானமானவங்க ஏழு பேரு அந்த வகுப்புல. அதுல மூனு பேரு அப்பாவா ஆன பசங்க. இவங்கள வச்சு பாடம் நடத்தறது என்ன அத்தனை சுலபமான காரியமா? முதல் நாள் கணக்கு சொல்லிக் கொடுத்தேன். போர்டுல ஒரு கணக்கப் போடறதுக்கு நடுவுல ஒரு கலவரம். எல்லா பசங்களுமா சேர்ந்து ஒரே ஆர்பாட்டம். கூட்டமா இடத்த விட்டு எந்திரிச்சு வகுப்பு முழுக்கவும் ஒரு நடந்தோம்.
மழத்தண்ணி உள்ள வந்துடுச்சுன்னுதான் இதெல்லாம். என்னத்த சொல்றது? ஆர்பாட்டம் எல்லாம் முடிஞ்சு வரட்டும். அது மட்டும் பேசாம இருந்தேன். ஒன்றரை மணி நேரம் கழிஞ்சப்ப எல்லாப் பசங்களும் ஒரே சத்தம் போட்டுக்கிட்டு கூட்டமா வந்தாங்க. “நாம கொஞ்சம் ப்படிக்கணும்”. சொன்னேன். இப்படி நடந்துக்கறது சரியில்லைன்னு சொல்லி முதல்லயே நான் கொஞ்சம் அடக்க ஒடுக்கத்தப் பத்திப் பேசினேன்.
அப்புறம்தான் சொன்னதோட சங்கடம் எனக்குப் புரிஞ்சுது. பசங்க மட்டும் இல்ல. அவங்கள பெத்தவங்களோட பகையையும் தேடிக்கிட்டேன். படிப்பறிவே இல்லாத அவஞ்க, பசங்க சொல்றதத்தான் நம்புவாங்க. ஒன்னாம் க்ளாஸ்ல ஒரு பையன் பீடி பிடிக்கறத பத்தி நான் அவனோட அப்பாகிட்ட சொன்னேன். அவரு என்ன சொன்னாரு தெரியுமா?
“அவன் பீடிதானே குடிக்கறான்? அவன் வயசுல நான் சுருட்டுதான் குடிச்சேன்”. எப்படியாச்சும் அங்கேர்ந்து தப்பிக்கணும். பசங்களோட இஷ்டப்பட்ட நேரத்துல படிச்சதுனால படிப்பு மேலக் கவனம் செலுத்தினாங்க. எல்லாப் பசங்களுக்கும் நல்ல அறிவு.
ஆறு மாசம் கழிஞ்சப்ப எனக்கு திருப்தியாச்சு. இன்ஸ்பெக்ஷன் முடிஞ்சு ஒரு நல்ல ரிப்போர்ட் கிடைச்சதுன்னா நான் அங்கேர்ந்து தப்பிச்சுடலாம்னு நினைச்சேன்”. “இன்ஷ்பெக்ஷன் நடக்கலயா?”. “நடந்தது. பசங்க கிட்ட விஷயத்த முத நாளேச் சொன்னேன். அடுத்த நாள் இன்ஸ்பெக்டர் வர்றப்ப சுத்தமா ஒழுங்கா வரணும்னும் ஒரு நாள் நல்ல பசங்களா இருக்கணும்னும் இல்லாட்டிப் போனா எனக்கு அவமானம்னும் அவங்க கிட்டச் சொன்னேன்.
பதினோரு மணிக்கு இன்ஸ்பெக்டர் வருவார்னு சொன்னாங்க. பத்து மணிக்கு முன்னாலயே பசங்க வந்துட்டாங்க. நல்ல பசங்களா அமைதியா இருந்தாங்க. பதினோரு மணி ஆச்சு. பதினொன்னரையும் ஆச்சு. அதுக்கு மேலயும் பொறுக்க முடியாம ஒருத்தன் எந்திரிச்சு கேட்டான். “அந்த ஆளு ஏன் வரல?”. ஏதோ காரணம் சொல்லிச் சமாதானப்படுத்தினேன்.
பன்னிரெண்டு மணி. எல்லாப் பசங்களோட கண்ணும் வாசப் படியிலதான் இருந்துச்சு. திடீர்னு ஒரு பையன் கூப்பிட்டுச் சொன்னான். “அந்த ஆளு வராரு” உண்மை. அவர் எதிர்ப்பக்கம் இருந்த வாசல் வழியா வந்துகிட்டு இருந்தாரு. உள்ளுக்குள் நடுக்கம். அசம்பாவிதச் சம்பவங்க ஒன்னும் ஏற்பட்டுடக் கூடாதேன்னு நான் வேண்டிகிட்டேன். அப்படி ஒன்னும் நடக்கல. அது மட்டும் இல்ல. இன்ஸ்பெக்டர் ரொம்ப திருப்தியோட எங்கிட்ட சொன்னாரு.
“மாஸ்ட்டர். நீங்கதான் ஒரு நல்ல ஆசிரியர். இங்க இருக்கற இந்த பசங்கள வழிக்குக் கொண்டு வந்துட்டீங்களே. இதுவரைக்கும் இந்த ஸ்கூல் இந்த அளவுக்கு நல்ல ஸ்கூலா இருந்ததேயில்ல”. பசங்க சிலரோட அப்பா அம்மாக்களும் வந்திருந்தாங்க. அவங்க கூடயும் அவர் பேசினாரு. எல்லாரும் என்னைப் பத்தி ரொம்ப நல்ல கருத்த சொன்னாங்க.
எனக்குச் சந்தோஷமா இருந்துச்சு. அந்த வருசக் கடைசியோட எனக்கு விடுதலை கிடைச்சுடும்னு நம்பிகிட்டு இருந்தேன்”. “அப்பறம் என்ன ஆச்சு?” “அததான் நான் கடவுளோட செயல்னு சொன்னது. இன்ஸ்பெக்ஷன் ரிப்போட்டுல என்ன பாராட்டி எழுதியிருந்துச்சு. கடைசியா நான் அந்த ஊர் ஸ்கூலுக்கு ரொம்ப பொருத்தமான ஹெட் மாஸ்ட்டர்னும் அங்கேர்ந்து என்னை யாரும் மாத்திடாம இருக்க ஆபீஸ்ல எல்லாரும் ரொம்ப கவனமா இருக்கணும்னும் எழுதியிருந்துச்சு”
“அய்யோ!”. “கேளுங்க. மூனு இன்ஸ்பெக்ஷன்லயும் இதே ரிப்போர்ட்தான். நாலாவது தடவை நான் ஆபீஸ் உயர் அதிகாரிங்க கிட்ட வேண்டிக்கிட்டேன்”. “என்னன்னு?”. “என்னை அங்கேர்ந்து மாத்திடக் கூடாதுன்னு”. “ஏன்?”. “ரெண்டு காரணம். எனக்கு இந்தக் கஷாயமே பக்ஷணமாப் போச்சு. வேறொருத்தரயும் கஷ்டப்படுத்தாம இருக்கலாம்.
இப்படி பதினோரு வருஷம் அங்க இருந்தேன். அங்கேர்ந்தே ரிடையரானேன். நான் கிளம்பறப்ப பஸ் ஸ்டாண்டு வரைக்கும் ஆளுங்க கூட்டமா பின்னாலயே அழுதுகிட்டே வந்தாங்க. அவங்களோட பேசக்கூட எனக்கு சக்தி இல்ல”. அவர் பேசுவதை நிறுத்தினார். சிந்தனையில் மூழ்கினார்.
“இப்ப?”. “பெரிய பையன் ராணுவத்துக்கு போனான். கொஞ்ச பணம் அனுப்பிக் கொடுத்தான். ஆனா அப்பறம் அவன் திரும்பி வரல”. ஒரு நிமிடம் கழிந்து தொடர்ந்தார். பெரிய பொண்ணு ச்கூல் பைனல் முடிச்சாச்சு. அவளோட வேல விஷயமாத்தான் நான் இங்க வந்தது. அது சம்பந்தமாத்தான் உங்கள பாக்கணும்னு நினைச்சேன். “என்னால முடிஞ்சது எதுவா இருந்தாலும் நான் நிச்சயமா செய்வேன்”.
“அது எனக்கு தெரியும். இது சம்பந்தமா இருபத்தஞ்சு ரூபா வேணும். வழிச்செலவு போக பதினைஞ்சு ரூபா இருக்கு. பத்து ரூபா கிடச்சா!”. “அஞ்சு ரூபாதானே கையில் இருக்கு”. நான் சொன்னேன். “பரவாயில்ல. இருக்கறத தந்தா போதும். மத்தவங்க யாராச்சும் உதவி செய்வாங்க. பொண்ணுக்கு இந்த வேல கிடச்சுடுச்சுன்னா இப்போதைக்கு கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாம்.
கடவுள் அதுக்கு உதவி செய்வாரு”. நான் ஐந்து ரூபாயை அவரிடம் கொடுத்துவிட்டுச் சொன்னேன். “இப்ப இது மட்டும்தான் இருக்கு. வர்ற வாரம் சம்பளம் வந்துடும். நீங்க இங்க அப்ப வந்தா...?”. “பரவாயில்ல. கஷ்டப்பட வேணாம்”. “நீங்க கண்டிப்பா வரணும்”. “அப்படின்னா வரேன். குழந்த குட்டிங்க இருக்கறவங்களோட நட்புக்கு என்னிக்கும் ஒரு முடிவு கிடையாது”.
அவர் படியில் இறங்கி நிற்பதை பார்த்துக் கொண்டு நான் நின்றேன். முப்பது வருட ஆசிரியர் வேலைக்கு பிறகு பொண்ணு என்ற வளர்ச்சி அடையாத ஊன்றுகோலைப் பிடிச்சுகிட்டு அப்போதும் பிரகாசமான முகத்துடனும் நல்ல எண்ணங்களோடும் நல்ல நம்பிக்கைகளோடும் போகும் அந்த மனுஷனை பார்த்தபோது எனக்குள் ஒரு வலிமை! ஒரு சக்தி! ஒரு உள் வெளிச்சம்! “இந்த மாதிரி ஆசிரியருங்கள இனிம பாக்கமுடியுமா?”. அவர் போவதை பார்த்துக் கொண்டு நின்ற போது என்னுடைய கண்களில் கண்ணீர் தளும்பியது.
மனைவியுடைய இருமல் சத்தம் அன்று என்னை கவலைப்பட வைக்கவில்லை. நல்ல மனிதனுடைய நட்பு என்னும் உணர்வு தந்த பலம் உலகின் எந்தத் தைலத்தை விடவும் வலிமை வாய்ந்ததாக இருந்தது!