கணவர்கள் மனைவிகளுடன் சண்டையிடுவது நல்லதில்லை என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அன்று காலை எங்களுக்கிடையில் லேசான ஒரு சச்சரவு ஏற்பட்டது. விஷயம் அல்பமானதுதான். குழந்தைக்கு ஒரு புது ஆடை வேண்டும் என்று ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே என்னுடைய மனைவி சொல்லிக் கொண்டேயிருந்தாள்.
அப்புறம்... ஒவ்வொரு நாள் காலையிலும் நான் வெளியில் செல்லும் போதெல்லாம் இதை ஞாபகப்படுத்துவதையே வழக்கமாக கொண்டிருந்தாள். அது அனாவசியமானதாக இருந்தது. ஞாபக மறதி இருப்பவர்களுக்கு நினைவூட்டுவதில் தவறில்லை. ஆனால் அதை திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்துவது மனதில் ஊசி குத்துவது போலிருந்தது. குழந்தையுடைய ஆடையில் இருந்த கிழிசல்கள் என்னுடைய இதயத்தில் ரணங்களை உண்டாக்கின.
தோள்பட்டையிலும் நெஞ்சுப் பகுதியிலும் இருந்த கிழிசல்கள் வழியாக அவனுடைய வெளுத்த தேகம் லேசாக வெளியில் தெரிய ஆரம்பித்தது. இது என் மனைவியை வேதனைப்படுத்துகிறது என்பது சரிதான். ஆனால் பணம்? ஊரில் நான் ஒரு எழுத்தர். யாராவது வந்து கேட்டால் பத்திரம் எழுதித் தருவதுதான் என் வேலை.
ஆட்கள் சண்டை போடும் போதுதான் எனக்கு வேலை. குத்தகைக்காரன் காசு கொடுக்காமல் இருப்பது. பக்கத்து வயல்காரன் அடுத்தவனுடைய வயலில் தண்ணீர் திறந்துவிடும் போது. பயமுறுத்தும் போது ஒரு புகாருக்காக பத்திரம் எழுதிக் கொடுப்பது. இப்படி ஏதாவது வந்தால்தான் பிழைப்பு.
பழைய வீடுகளைப் பராமரிக்காவிட்டாலும் புகார் எழுத வேண்டிய தேவை ஏற்படும். ஆனால்... காலம் இப்போது ரொம்பவும் கெட்டுப் போய்விட்டது. எங்களுக்கும் குழந்தைகளும் குடும்பமும் உண்டு என்று யாரும் நினைப்பதில்லை. பொழுது சாய்வதற்குள் ஐநூறு பொய்யும் அறுநூரு புரட்டுமாக ஆட்கள் வருவது ஒரு பொழுதுபோக்கிற்காக இல்லை.
குழந்தையின் ஆடையில் இருந்த கிழிசல்களும், மனைவியின் வயிற்று வலியும் அப்போதெல்லாம் எனக்கு ஞாபகம் வரும். அவள் ஒரு தடவை நினைவூட்டியிருந்தால் எனக்கும் அவளுக்கும் சண்டை ஏற்பட்டிருக்காது. பெண் போராட்டம் இல்லையா? உமித் தீ மாதிரி கணன்று கணன்று எரியும். “ஓ. நான் யார்கிட்டப் பேசறேன்?
இந்த செவுத்தோட சொன்னாக்கூட ஒரு பதில் கிடைக்கும்.. ஒரு குழந்தைக்காகத்தானே?” அவள் ராமாயணம் பாட ஆரம்பித்தாள். அப்புறம் ஒரு ஆறாவது காண்டமும் அழுகையும் புலம்பலுமாக ஒரு ஏழாவது காண்டமும் வாசித்துவிட்டுதான் அவள் அடங்குவாள். அதை அனுமதிக்கக்கூடாது. “ரொம்ப நல்லதாப் போச்சு. எனக்கு மனசில்ல” என்று நானும் சொன்னேன்.
அவளுக்கு லேசாகக் கோபம் வந்தது. இப்படியாக சர்ச்சை பெரிதானது. அது அவளை அழச் செய்தது. என்னைக் கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியில் செல்லத் தூண்டியது. எங்கள் இரண்டு பேரின் சண்டைக்கு நடுவில் முகத்தை பார்த்தபடி குழந்தை திகைப்போடு நின்று கொண்டிருந்தான். கொஞ்ச தூரம் நடந்தபோதுதான் எனக்கு ஞாபகம் வந்தது.
வழக்கமாக அவனுக்கு வெளியில் கிளம்பும் போது நான் கொடுக்கும் முத்தத்தை அன்று கொடுக்கவில்லை. கண்ணில் இருந்து நான் மறையும் வரை துருபிடித்த தூணைப் பிடித்துக் கொண்டு அவன் ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருப்பான். அந்தச் சின்னக் கண்கள் நிரம்பி கண்ணீர் தளும்பியிருக்கும். அன்றைக்குப் புது ஆடையுடன் வீட்டுக்கு முன்கூட்டியேப் போகவேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.
அதோடு அம்மாவோடும் மகனோடு மன்னிப்பு கேட்கவும் வேண்டும். இப்படி நினைத்தபடி தலையைக் குனிந்து கொண்டு நடந்து போகும்போது ஒரு குரல் கேட்டது. அது வேறு யாருமில்லை. அந்த கிழவன்தான். வயதான ஏழைக் கிழவன்.
“நான் ஒன்னு சொல்லட்டுமா?” நான் தயங்கி நின்றேன்.
கிழவன் என்னைத் துரோகிக்க ஆரம்பித்து இரண்டு நாட்களாகி விட்டது. கேட்காமல் நின்ற இடத்தை விட்டு நகரமுடியாது.
பெரும்பாலான ஆட்களும் காசு தருவது கேஸ் நடத்துவதற்காக இல்லை. அவர்களுடைய கேஸை அவர்கள் வாயால் சொல்லிக் கேட்பதற்கு ஒரு ஆள் வேண்டும் என்பதால்தான். கிழவனுக்கு ஒரு மகள். எனக்கு தெரியும். இளம் வயது. அவளைப் பார்க்கும் போது எனக்கு ஒரு பாவப்பட்ட பெண்ணின் ஞாபகம்தான் வரும். வாய் நிறைய சிரிப்பு. முன்னங்கையில் வளையல்களின் கிலுகிலுப்பொடு ஓசை. ஒரு நாள் என்னுடைய உடம்பின் மீது பட்டும் படாமலும் உரசியும் உரசாமலும் ஒரு ஓட்டம். “என்ன பொண்ணுடாப்பா இது?” என்று வேறெதையோ மனதிற்குள் நினைத்துக் கொண்டு நான் நடந்தேன். பத்தடி நடந்திருக்க மாட்டேன். அவள் போன வேகத்திலேயே திரும்பி வந்தாள்.
அவள் என்னிடம் சொன்னாள். “அத எங்கிட்ட கொடுக்கணும்”
“எத?”. நான் கேட்டேன்.
“என்னோட தட்டு” ஆயிரம் பேஜார்களுடன் போகும் நான் இப்படி ஒரு பிரச்சனையை சந்திப்பேன் என்று நினைத்துப் பார்க்கவில்லை. அங்கிருந்து மூச்சை இறுக்கப் பிடித்துக்கொண்டு ஆளை விட்டால் போதும் என்ற நினைப்போடு ஓட்டமும் நடையுமாக வெகுதூரம் நடந்தேன்.
அன்றே எனக்குத் தோன்றியது. “இவளுக்கு ஏதாச்சும் ஒன்னு ஆயிடும்” என்று நினைத்தது சரியாகப் போய்விட்டது. அது நடந்தேவிட்டது. அவள் கருவுற்றாள். குழந்தையையும் பெற்றாள். ஆனால் எல்லோருக்கும் தெரியும்படி அப்பா பெயர் தெரியாத குழந்தையாக அது பிறந்தது. விஷயம் ஊருக்குள் பரவியபோது பெரிய சங்கடம் ஏற்பட்டது.
ஆள் யார் என்று பலருக்கும் தெரிந்திருந்தது. பலசரக்கு வியாபாரி பாப்புட்டி. அவள் வந்ததையும் போனதையும் தெரிந்தது போல அந்த ஆள் காட்டிக் கொள்ளவில்லை. அவனுடைய கடையில் இருந்துதான் சாமான்களை வாங்கினாள். வாங்கியவற்றுக்கு காசும் கொடுப்பதில்லை. அவள் கர்ப்பமுற்ற பிறகு அவனுடைய செருப்போசை அவள் வீட்டு வாசற்படியில் கேட்பது நின்று போனது.
“எப்படியாச்சும் இதுக்கு ஒரு வழி ஏற்படுத்தணும் இல்லயா? பாப்புட்டிய கொஞ்சம் பாருங்க. அதான் நல்லது”
“ரெண்டு தடவ பாத்துட்டேன். அவன் ஒத்துக்க வேணாமா?” பெண்ணின் தந்தை கிழவன் சொன்னான்.
“இப்ப என்ன சொல்றான்?”. என்னத்த சொல்றதுக்கு?” பாப்புட்டியின் நிலைமை எனக்குத் தெரியும்.
அவனுக்கு வீடு உண்டு. குடும்பமும் உண்டு. எப்படிப் பார்த்தாலும் அவன் ஒத்துக்கொள்ள மாட்டான்.
“எல்லாம் சரியாயிடும்”. நான் சமாதானப்படுத்தினேன்.
“என்ன இருந்து என்ன? எங்களோட குடும்பத்துல இந்த மாதிரி ஒருத்தனும் இல்ல” அவனோட பொண்டாட்டி ஒரு அரைப் பைத்தியம். ஒரு பைத்தியம் கிடைச்சாலும் அவன் கட்டிப்பான். என்னோட பொண்ணு மாதிரி ஒருத்தி கிடைச்சாலும் அவளயும் கட்டிப்பான்.
ஒரு பொண்ண கஷ்டத்துல ஆக்கறோமேன்னு ஒரு மனசாட்சியும் இல்லாத பய அவன்” அவன் செய்தது நியாயமில்லை என்று எனக்கும் தோன்றியது. ஆனால், அவனுக்கு எதிராக கேஸ் நடத்த இந்த பாவப்பட்ட ஜென்மங்களால் முடியுமா? ஒரு புகார் எழுதிக் கொடுக்கலாம். என்னுடைய தொழிலும் அதுதான்.
என்னுடைய வேலை பிரதிபலன் இல்லாமல் செய்து கொடுப்பது. இருந்தாலும் அந்தப் பொண்ணை என்றென்றைக்கும் தந்தை இல்லாத ஒரு குழந்தையின் தாயாக ஆக்க வேண்டுமே என்று நினைத்த போது நான் இப்படிச் சொன்னேன். “ஆகட்டும் பாக்கலாம். நான் அவன பாத்து பேசறேன்”
“அந்தப் பய கேக்கமாட்டான். நீ சொல்லிப் பாரு”
கிழவன் திரும்பிப் போனான். கொஞ்ச தூரம் நடந்த போது நான் செய்தது எல்லாம் அபத்தம் என்று எனக்குத் தோன்றியது. அவனுக்கு புகார் எழுதிக் கொடுத்தால் நாலு காசு கிடைக்கும். அந்தக் குழந்தைக்கு அப்பா இல்லாமப் போனா எனக்கென்ன? ஊரில் இருப்பவர்கள் எல்லோருக்கும் தந்தையை ஏற்படுத்த நான் ஒன்றும் யாரோடும் உடன்படிக்கை செய்து கொள்ளவில்லை.
தந்தைக்கு மகன் வேண்டாம் என்றால், மகனுக்கு தந்தையும் வேண்டாம். பத்திரம் எழுதும் என்னுடைய அறைக்கு சென்ற போது மூன்று நான்கு பேர் காத்துக் கொண்டிருந்தார்கள். அதில் பெரும்பாலோரும் வயல்காரர்கள். இடத்தை காலி செய்யச்சொல்லி புகார் கொடுத்த ஜமீந்தாரருடைய விவகாரம் அது. அதை ஒத்திவைத்த கேஸ் தொடர்பாக புகார்களை கோர்ட்டில் சமர்ப்பித்து அது சம்பந்தமான நியாயத்தை சொல்லி என் பின்னால் நடந்து கொண்டிருக்கும் ஆட்கள் அவர்கள்.
அவர்களுக்கு இருந்த ஒவ்வொரு சொத்தின் மீது மாறி மாறி பல காலங்களில் பலர் உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அந்த வயலின் அமைவிடம், மண்ணின் சிறப்பு குணங்கள் இது பற்றியெல்லாம் எழுதி எழுதி கோர்ட்டுக்கு கொடுத்த புகாரில் தயாரித்து எனக்கு அலுத்துப் போய்விட்டது. ஒவ்வொருவராகப் பேச ஆரம்பித்தார்கள்.
“அப்ப? எங்களோட புகார் விஷயம் என்னவாச்சு?” நீடித்துக் கொண்டே போகும் வழக்குகளைப் பற்றி அவர்கள் பேச ஆரம்பித்தார்கள். எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தேன். கொஞ்சம் காசு பணத்தோடு ஒரே ஒரு ஆள் மட்டும் அந்த கூட்டத்தில் இருந்தான். ஒவ்வொருவருடனும் பேசி ஒவ்வொரு கதையை சொல்லி அனுப்பி வைத்தேன்.
கோர்ட் கட்டிடத்தில் இருந்த மணி பதினொன்று அடிப்பது கேட்டது. பசையுள்ள ஆள் பேசினான். அவனுக்கு அப்போதே ஒரு புகார் எழுதிக் கொடுக்க வேண்டும். எனக்கு சந்தோஷமாக இருந்தது. என்னுடைய குழந்தையின் புது ஆடைக்கு ஒரு வழி பிறந்தது. அந்த ஆளை எனக்கு பழக்கம் உண்டு.
வேலை செய்து கொடுத்தால் உடனே காசு கிடைக்கும். இரண்டு மணி நேரத்தில் எல்லா வேலையையும் முடித்துக் கொடுத்தேன். “செலவுக்கு எவ்வளவு வேணும்?” அந்த ஆள் கேட்டான். அதை நான் சொல்லக்கூடாது. அந்த ஆள் “சரி. அப்புறம் வந்து காசு கொடுக்கறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.
“செய்ததும் சொன்னதும் எல்லாம் தப்பாகப் போனதே!
அந்த ஆளிடம் கையில இருக்கறத கொடுத்துட்டுப் போகச் சொல்லியிருக்கலாம். முன்னால கொடுத்த காசுக்கெல்லாம் அதுக்கு ஏத்த மாதிரி வேலயச் செஞ்சு கொடுத்திருக்கேன். ச்சே. ஒரு நாளு முழுக்கவும் வீணாப்போச்சு. இப்ப கையில ஒரு காசு கூட இல்ல. இனி எப்படி வீட்டுக்கு திரும்பிப் போறது?”
அப்போது முழு உலகத்தோடு வெறுப்பும் எரிச்சலும் எனக்கு ஏற்பட்டது. முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு இருக்கும் போது ஒரு குடை என்னுடைய அறைக்குள் தலை நீட்டியது. பின்னால் வந்த மனுஷன் பாப்புட்டி. அவனைப் பார்த்த போதே எனக்கு வெறுப்பு தோன்றியது. “ஒரு குழந்தய அப்பா இல்லாம செஞ்ச துஷ்டன்! ஒரு பொண்ண தெருவுல ஆக்கின துரோகி!”. “ம்”.
சொல்லிவிட்டு அவனைப் பார்த்தேன். அவன் பதில் சொல்லவில்லை. லேசான மந்தகாசச் சிரிப்போடு முன்னாலிருந்த பெஞ்சில் பதுங்கியபடி உட்கார்ந்தான். “ம். என்ன முதலாளி?”. நான் மறுபடியும் விசாரித்தேன். “அப்பப்ப உங்கள பாக்க வேணாமா?”
“அப்ப விசேஷமா ஒன்னும் இல்லயா?”. அவனை விஷயத்துக்குள் இழுக்க முயற்சித்தேன்.
”எனக்குன்னு ஒரு பெரிய சங்கடம் வந்திருக்கு” அவன் ஆரம்பித்தான்.
கிழவனுடைய மகள் பிரசவித்ததுக்கான பொறுப்பு தன் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது என்றும் தன்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதாகவும், பிறப்பு இறப்பு பதிவேட்டில் தன்னுடைய பெயரைச் சேர்க்க முயற்சி செய்வதாகவும் அதற்கு தான் ஒத்துக்கொள்ளவில்லை என்றும் சொன்னான்.
“கொஞ்சம் மரியாதயா வாழக்கூடாதா பாப்புட்டி?” நடுவில் புகுந்து கேட்டேன்.
“என்ன சொல்றீங்க நீங்க? அவ பிரசவிச்சதுக்கு நானா பொறுப்பு?” அதைச் சொன்ன போது அவனுடைய முகத்தில் உண்டான சுருக்கங்களை நான் உற்று கவனித்தேன். அவன் வார்த்தைகளால் ஆட்சேபிக்கப் பார்க்கிறான்.
“கழுத. இந்த அறிவு முன்னாலயே இருந்திருக்கக்கூடாதா?” என்று நான் நினைத்துக் கொண்டேன்.
அருகில் போய் மெல்லிய குரலில் கேட்டேன். “உங்களுக்கு இதுல பங்கு உண்டா?” என்னுடைய கேள்வி அவனை திகைப்படையச் செய்தது. சுற்றிமுற்றும் பார்த்தான்.
மெதுவாகச் சொன்னான். “ஓரளவுக்கு உண்டு. அவ்வளவுதான்”
”ஏதாச்சும் கொடுத்து தீக்கக்கூடாதா?”
“அதுக்கு அந்த கிழவன் ஒத்துக்கமாட்டேங்கறான். அது போகட்டும். எனக்கு ஒரு பதில் புகார் மனு எழுதிக் கொடுக்கணும்”
“சரி”. எனக்கு ஏதாவது கிடைக்கும். என் குழந்தையின் ஆடை கிழிசல்களும் அவனுடைய வெளுத்த உடம்பு வெளியில் தெரிந்ததும் எல்லாம் என் மனதில் நிழலாடியது. பொழுது போய்க் கொண்டிருக்கிறது. இந்த மனிதனையும் விட்டால் இனிமேல் யாரும் வரமாட்டார்கள்.
என்னுடைய வேலை தரும அதர்மங்களைப் பற்றி சிந்திப்பது இல்லை. அரை மணி நேரத்திற்குள் புகாரைத் தயார் செய்தேன். அதில் கிழவனும் அவனுடைய மகளும் போக்கிரிகள் என்றும், எதையும் செய்யத் தயங்காதவர்கள் என்றும் எழுதி முடித்த போது என்னைப் பார்த்து எனக்குள் ஒரு பரிகாச சிரிப்பு ஏற்பட்டது.
பாப்புட்டி எல்லா வேலைகளுக்கும் சேர்த்து ஐந்து ரூபாயை கையில் கொடுத்துவிட்டு குடையையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். “ஹோ. இன்னிக்கு குழந்தைக்கு புது ஆடை கிடைக்கும்”. அங்காடியை நோக்கி நடந்தேன்.
சூரியன் மெல்ல தாழ்ந்து கொண்டிருந்தது. மஞ்சள் வெய்யில் ஊருக்கு அழகைச் சேர்த்துக் கொண்டிருந்தது.
நல்ல துணியை வாங்கி வாசல் திண்ணையிலேயே இருந்த தையல்காரனிடம் கொடுத்தேன். “என்ன மாதிரி ஸ்டைல்ல தைக்கணும்?” அவன் கேட்டான்.
“பழய ஸ்டைல்தான்” நான் சொன்னேன்.
ஒரு குழந்தைக்கு அப்பா இல்லாமல் செய்துவிட்டு கிடைத்ததுதான் இந்தக் காசு. இதை வைத்துதான் இப்போது நான் என்னுடைய குழந்தைக்கு துணி வாங்கித் தைக்கிறேன்.
சிறிது நேரத்திற்குள் என் மனதில் ஏதோ ஒரு இனம் புரியாத சங்கடம் குடியேறியது. சூடான பலகாரத்தை வாயில் போட்டது போல ஒரு அனுபவம். துப்பவும் வழியில்லை. விழுங்கவும் வழியில்லை. “ஆனா...? அது என்னோட தொழிலாக்கும். நான் இல்லாட்டா இன்னொருத்தன் இதச் செய்யப்போறான்”
தைத்த புதுத்துணி பொட்டலத்தை கக்கத்தில் வைத்துக் கொண்டு தலையைக் குனிந்தபடி நடக்கும் போது நடுநடுவேப் பொட்டலம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டேன்.
“என்னோட புதுத்துணி”. இதைப் பார்க்கும்போது அவன் பெரிதாக சிரிப்பான். மனைவி ஆச்சரியப்பட்டுப் போவாள். அதோ...! வழியில் கிழவன் எனக்காகக் காத்துக் கொண்டு நிற்கிறான்!
”இந்த ஆளோட தொல்ல தாங்கல” சொன்னேன்.
“அவன் சொன்னாக் கேக்க மாட்டேங்கறான்” நான் கிழவனை கை கழுவ முயற்சித்தேன்.
“அவன் கேக்கமாட்டான். அந்தப் பொண்ணயும் நடுங்கிகிட்டு இருக்கற அந்த குழந்தயயும் பாத்தா படைச்சவன் பூமிக்கே இறங்கி வருவான். அவளோட சேல கூட கிழிஞ்சு போயிருக்குது. இப்ப வீசற பனியில பச்சக் குழந்த நடுங்குது.
உடம்ப மூடறதுக்குக் கூட ஒழுங்கா ஒரு துணியில்ல. அந்தப் பய என்னடானா ஊரத் தெண்டிகிட்டு இருக்கறான். யாருகிட்டப் போயி இதயெல்லாம் சொல்றது? லேசாக் காத்தடிச்சாக் கூட குழந்த துடிச்சுப் போகுது. இதப் பாத்தா கடவுள்னு ஒருத்தன் இருக்கானான்னே சந்தேகமா இருக்கு”. நான் என்னுடைய கையில் இருந்த துணிப் பொட்டலத்தை ஒரு தடவை தடவிப் பார்த்துக் கொண்டேன்.
“இந்த குளிரு முடியும் போது குழந்த உசிரோட இருக்காது. கிழவனுடைய குரல் மீண்டும் இடறியது.
“இதோ... இத குழந்தைக்கு போட்டுவிடுங்க” நான் துணிப்பொட்டலத்தை எடுத்து நீட்டினேன்.
கிழவன் லேசாகத் தயங்கினான். “இந்தாங்க”. நான் பொட்டலத்தை கிழவனுடைய கையில் வைத்து அழுத்தினேன். வழியில் என்னுடைய மனது சுண்டி இழுத்து எதையோ புலம்பியது.
“அப்பாவோட காச வச்சு மகன் துணி போட்டுக்கட்டும். அப்போ என்னோட குழந்த?” வீட்டுக்குள் நுழைந்து குழந்தையை எடுத்து முத்தங்களால் மூடினேன்.
அவன் பெரிதாகச் சிரித்தான். அப்போதும் மனைவியுயின் முகத்தில் கண்ணீரின் அருவிகளுக்கு எந்த குறைவும் ஏற்படவில்லை.
தொட்டால் வெடித்துச் சிதறும் அந்த இடத்தை நான் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. தூக்கம் கண்களுக்குள் தெறித்து விழும் போது பக்கத்தில் இருந்து ஒரு முணுமுணுப்பு கேட்டது.
“குழந்தைக்கு ஒரு துணி வாங்கித் தரச் சொல்லி...? யாருகிட்டயாக்கும் இதப் போயி சொல்லுறது? செவுத்தோட சொன்னாக்கூட ஒரு பதில் கிடைக்கும்” அன்று தூக்கத்திற்கு விளம்பரம் சொல்லிக் கொண்டு குறட்டை சத்தம் வராததை நினைத்து நான் ஆத்மார்த்தமாக வருத்தப்பட்டேன்.