தேடும் விழிகளோடு அவன் தயானந்த ஆசிரமத்தின் முதண்மை வாசலைக் கடந்து சென்றான்.
“வணக்கம் அம்மா” கை கூப்பி வணங்கிய அவனை ஆசிரமத்தின் முக்கிய சந்நியாசினி வரவேற்றார். அவன் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான்.
“நான் யதீந்திர தாஸ். பத்திரிகையாளன்.உங்ககிட்ட ஒரு நேர்காணல் எடுக்கலாமென்று...” என்ற அவனது வார்த்தைகளை நிறைவு செய்யவிடாமல் அவர் சொன்னார்.
“கடந்த காலத்த மறக்க முயற்சி செய்யற ஒரு பாவம் துறவி நான். அதையெல்லாம் மறுபடியும் நினைவுப்படுத்த அல்லவா நீங்க வந்திருக்கீங்க? வேண்டாம். அது எனக்குப் பிடிக்கல. எனக்குன்னு ஒரு முழு ஆசிரம வாழ்க்கை இல்லைன்னு நம்ப நான் விரும்பறேன்” சொல்லிவிட்டுக் கைகளை கூப்பி ஆசிரமத்துக்குள் திரும்பிப் போக நினைத்த அவரிடம் அவன் கேட்டான்.
“வாழ்க்கையின் இருண்ட இடை வழிகளில்ல இருந்து ஆசிரமத்தத் தேடி வர்றவங்களுக்கு அடைக்கலம் தர்றதும், ஆத்ம வீரியத்தை இழந்தவங்களுக்கு அமைதி தர்ற மந்திரங்களா அன்பு காட்டறதயும் அர்ப்பணிப்போட செஞ்சுக்கிட்டு இருக்கற உங்களோட கடந்தக் காலத்தப் பத்தி ஜனங்க தெரிஞ்சுக்கறதுல என்ன தப்பு?” அவனுடைய கேள்வி அவரை அதிர்ச்சியடையச் செய்தது.
சிறிது நேரம் அவர் மௌனத்தின் கூட்டிற்குள் அடைபட்டது போல இருந்தார். சிறிது நேர யோசனைக்கு பிறகு மற்றொரு கேள்வி அவரிடம் இருந்து வந்தது. “கடந்த காலங்கள நினைவுப்படுத்தி பொறுக்கி எடுக்க நினைக்கறப்ப பலவீனங்களோட ஒரு பிடி கரிஞ்சு போன பூக்கள் மட்டுமே எனக்கு மிச்சமா இருக்கு. அதெல்லாம் என்னோடதா மட்டும்தான் இருக்கணும்னு ஆசைப்படறேன். ஆத்ம சாந்தியோட தீரத்துல தர்ப்பணம் செய்ய வர்ற தீர்த்தாடகருங்க என்னோட இதய காயங்கள ஏன் ஏத்துக்கணும்?”
ஆசிரமத்துக்குள் நுழைந்தது பற்றி அவன் விவரித்தான். அவருடைய விழிகளில் நீர்த்துளிகள் நிறைந்திருந்தன. அவர் அவன் சொல்வதை கேட்டார்.
மனதுக்குள்ள ஏராளமான கனவுங்களோட நான் இந்த நகரத்துக்கு வந்தேன். ஆனால், எனக்குக் கிடைச்சது சுட்டுப் பொசுக்கற அனுபவங்க. அப்ப அதிலிருந்தெல்லாம் விடுதல தந்ததும் வாழ்க்கையோட அமைதியான ஸ்பரிசத்த உணர வச்சதும் நகரத்துலேர்ந்து அதிக தூரத்துல இல்லாத இந்த ஆசிரமத்தோட ஆன்ம பலத்தாலதான். படிப்ப முடிச்சு காலேஜ்லேர்ந்து ஜர்னலிஸம் வகுப்போட படிகளக் கடந்து வெளியில வர்றப்ப மனசுக்குள்ள ஒரு ஆசை இருந்துச்சு”. தூய ஆடை அணிந்திருந்த அந்த துறவியின் முகத்தில் நிழலாடிய துக்கத்தின் திரைசீலைகள் ஒவ்வொன்றாக விலகி கடந்த காலத்தை நோக்கி நினைவுகள் பயணிக்க ஆரம்பித்தன.
“இளமையோட துடிப்புல எனக்குள்ள முளை விட்டு எழுந்த மோக மொட்டுகள கிள்ளி எறிய என்னை நானே கட்டுப்படுத்திக் கொண்டிருந்தால் இப்போ நான் உங்ககிட்ட பேசிகிட்டிருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது”
நரைத்த வெள்ளி முடிகள் நிறைந்த தலையை லேசாக வருடி அகிலா என்ற அந்தப் பெண் என்றபடி நீண்ட ஒரு பெருமூச்சு விட்டார். அவர் தன்னுடைய நேற்றுகளின் ஜென்மப் பாத்திர மூட்டை முடிச்சுகளை அவனுக்கு முன்னால் அவிழ்த்துவிட்டார்.
ஒரு பத்திரிகையாளனுடைய அடக்கமுடியாத ஆர்வத்தோடு அந்தப் பெண் துறவி சொல்வதை கேட்க அவன் தயாரானான்.
செல்வச் செழிப்புல மிதந்துகிட்டிருந்தவர்தான் என்னோட அப்பா. அவரோட கூட்டுக்காரங்களுக்கு சமைச்சுப் போடறதுக்காக ஸ்கூல் டீச்சரா இருந்த என்னோட அம்மா வேலைய ராஜினாமா செஞ்சாங்க. அம்மாவோட கனவு, கூட்டுக்குள்ளதான் அப்பாவோட அசிங்கங்க போய் விழுந்துச்சு. ஆனா புருஷனோட வாக்குகளுக்கு முன்னால அனுசரணையுள்ள ஒரு மனைவியா அவர் தன் வாழ்க்கையத் தொடர்ந்துகிட்டு இருந்தார். அடுக்களை சாம்ராஜ்யத்தைத் தனக்கு சொந்தமாக்கிக் கொண்ட அம்மா புது வாழ்க்கைய ஆரம்பிச்சா.
“அங்க போகாத. இங்க போகாத” கட்டுப்பாடுகளோட எல்லை மதில்களை அப்பா என்னை சுற்றிலும் கட்டினார். இப்படிச் சங்கிலிகளுடன் வாழ்ந்து மூச்சு முட்டி இருக்க வேண்டிய நிலையில் நான் வளர்ந்தேன். இளமையின் குதூகலங்கள் எனக்குள் அந்நியமாயின. ஆதரவில்லாத அரங்கில் இருந்து காலேஜுக்கு போன நான் முதலில் தேர்ந்தெடுத்தது சுதந்திரத்தின் வண்ணக்கலவையைத்தான். அந்த நிழலில் இருந்து அளவில்லாத அன்பு துளும்பும் ஒரு இதயத்தின் ஸ்பரிஸத்தை நான் கேட்டேன். அப்படிதான் நூலகத்துல வச்சு சீனிவாசன் எனக்கு அறிமுகமானான்.
என்னோட சீனியர் மாணவன் அவன். காலேஜோட இலக்கிய அரங்கில் நிறஞ்சு நிக்கற ஒரு பிரபலப்புள்ளியா அவன் இருந்தான். அவனோட சிரிப்பு, பக்குவமான பேச்சு, பழகும் தன்மை என்னைக் வசீகரிச்சது. பெரும்பாலான நாள்லயும் நாங்க ஒருத்தர ஒருத்தர் சந்திச்சுக்குவோம். ஏராளமாப் பேசுவோம். பிரியற நேரம் வர்றப்ப எங்களோட மனசு துடிதுடிக்கும். காதல்ல நாங்கள் ராதாவும் கிருஷ்ணனுமானோம். லைலா மஜ்னுவானோம். அவனோட வார்த்தைகள அதிகமா நான் நம்பினேன். நம்பிக்கையோட பின்புலத்துல என்னை நானே மறந்தேன். அதோடு சேர்ந்து என்னுடைய ஜென்ம துக்கங்களையும்.
“அகிலா”. சீனிவாசன் சொன்னான். “என் வாழ்க்கையோட ராகமும் நாதமும் நீதான். இதயத்தோட துடிப்பே நீதான்” அந்த வார்த்தைங்கள்ல நான் மயங்கிட்டேன். தொடர்ந்து பேசமுடியாத அளவு வார்த்தைகள் தொண்டையில் இடறி விழும்போது தாஸ் கேட்டான். “இப்ப சீனிவாசன் எங்க?” கண்ணோரங்களின் வழியாக கீழே விழுந்த நீர்த்துளிகளை புடவைத் தலைப்பால் துடைத்து அகிலா தன் கதையைத் தொடர்ந்தார்.
“தூரத்துல எங்கயோ ஒரு அட்வகேட்டா இருக்கான். எனக்குப் பதிலா அவனோட வாழ்க்கையில தாளத்தையும் நாதத்தையும் வழங்கினது ஏதோ ஒரு வங்காளிப் பொண்ணு. பயணத்துக்கு நடுவுல சந்தித்த அவன் இப்போ ஒரு வக்கீல். வடக்கேப் போயிட்டான். யாரும் யாருக்காகவும் காத்திருப்பது இல்லைன்னு தெரியும். இருந்தாலும் நான் காத்துகிட்டிருக்கேன். எதிர்பார்ப்புங்க இல்லாத வெறும் காத்திருப்பு. இது என்னை பயமுறுத்திச்சு. அடுக்களையோட உலகம் அம்மாவை மத்தவங்ககிட்டேர்ந்து விலகிப் போகச் செஞ்சுடுச்சு. மத்தவங்களுக்காக அவங்க சுயம் எரிஞ்சு அடங்க ஆரம்பிச்சாங்க. கடைசியில ஒரு விடியல் காலைப்ப்பொழுதுல அடுக்களைய்லேர்ந்து ஒரு பெரிய இருமல் சத்தம் இடி போலக் கேட்டுது. அப்போ நான் பாத்தது மூக்கிலேர்ந்து ஒழுகிகிட்டிருந்த ரத்தத்தயும் ஒருபக்கமா படுத்து கிடக்கற அம்மாவயும்தான். செரிபரல் ஹெமரேஜ்.
பல நாள் அம்மாவ நிசப்தமா கிடத்தவேண்டி வந்துச்சு. வரவுகளக் காட்டிலும் செலவுங்க அதிகமாச்சு. வட்டிக் கடை எல்லைங்க விரிவாச்சு. கடங்கற இருட்டுல வாழ்க்கை மூழ்கி அமுங்கிக்கிட்டிருந்துச்சு. பெரிய வீட்டில் இருட்டு வழியா வந்த லேசான வெளிச்சத்துல நாக்கக் கூட அசைக்க முடியாமக் கிடக்கற அம்மா. ஒரு மூலையில கிடந்தா. பழைய கௌரவத்த விட மனசில்லாத அப்பா கூன் விழுந்த சாய்வு நாற்காலியில சாஞ்சு கிடந்தார். சிந்தனைகளோட சாளரங்கள திறக்க முடியாத தம்பி படிகளுக்கு அப்பால் இருந்து வியர்வையில குளிச்சுகிட்டிருந்தான். எல்லாத்தயும் சகிச்சுகிட்டு அப்பால இருந்தான். ஆனா தனிமையோட எங்கேயிருந்தோ அலறி கிட்டு வந்த ஒரு அவப்பெயரோட கொடுங்காத்து என்னை தளர்த்திச்சு. தம்பியப் பாக்க வர்ற பலரை வசீகரிச்சு காசு பறிக்கற ஒருத்தியா நிறய பேரு என்னை சித்தரிச்சாங்க. ஒரு நாக்குக்கு வேணும்னா தடை போடலாம். பல நாக்குங்க ஒன்னு சேந்தா என்ன செய்யறது?
ஆனா தற்கொலை செஞ்சுக்க எனக்கு பயமாயிருந்துச்சு. சாவப் பாத்து பயப்பட்டதுனால இல்ல. என்னன்னு தெரியல. ஒரு வேள என்னோட ஜாதகத்துல மரண மொழிங்க மங்கிப் போயிடுச்சோ என்னவோ! அந்த சிதைஞ்சு போன வீட்டோட வாசலத் திறந்து நான் முத்தத்துக்கு வந்தேன். அந்த ராத்திரியில மழை பெஞ்சுது. வழிகாட்ட வந்த மாதிரி மேகங்க தீட்டின மின்னலுங்க என்னோட ஈரமானத் தலைக்கு மேல வெளிச்ச வட்டம் போட்டு சுத்தி வந்துச்சு. எங்கேன்னோ எந்த வழின்னோ ஒன்னும் தெரியாம நான் நடந்தேன். கடைசியில நனைஞ்ச உடம்போடயும் காஞ்சு போன மனசுமா முட்டினது இந்த ஆசிரமத்தோட வாசக்கதவத்தான்.
திறந்த வாசல் வழியா ரெண்டு கைங்க என்னை ஆதரவா கூப்பிட்டு அடைக்கலம் தந்துச்சு. அந்த ஜில்லிட்டுப் போன ராத்திரியில என்னை அரவணச்ச அந்தக் கரங்கள நான் உணந்தேன். அது என்னோட குருவோட கைங்க. அதுதான் சத்தியம். அந்த நிமிஷத்துல எனக்கும் தெரியாம யாரோ என்னோட தல மேல திருநீறத் தூவிவிட்டாங்க. வாழ்க்கையோட அர்த்தத்தை புரிஞ்சுகிட்ட கடவுள் எனக்காக நிச்சயிச்ச ஒரு இடம்தான் இந்த ஆசிரமம். ஆன்மாவோட பாத்திரத்த திறந்துவச்சு என்னோட வாழ்க்கை இங்க தொடங்கிச்சு”
அவனுக்குப் பின்னால் சந்நியாசினி முற்றத்திற்கு வந்தார்.
நன்றியோடு நடந்து வாசலை நோக்கி சென்று கொண்டிருந்த அவனை அழைத்தார்.
“யதீந்திர தாஸ் ஒரு நிமிஷம் நில்லுங்க. இது வரைக்கும் யாருக்கும் தெரியாத என்னோட நேற்றுங்களப் பத்தியும் நீங்க எழுதணும். ஊகங்களோட உலகத்துலயும் புதிரான நிமிஷங்கள்லயும் சஞ்சரிச்சுகிட்டு இருக்கற இந்த சமுதாயத்துக்கு என்னோட இந்த கதை கொஞ்சமாச்சும் ஆறுதல் கிடைக்கும்னா கிடைக்கட்டும். ஆன்மாவுடைய ஆழத்தில் வாழும் அகிலா என்ற அந்த பெண் ஆசிரம முற்றத்தின் வாசற்படிகளில் இருந்து புன்னகை பூக்க முயற்சிக்கும்போது, உள்ளேயிருந்து ராக சங்கீர்த்தனங்களின் பிரார்த்தனை கீதங்கள் கேட்கத் தொடங்கின.
அப்போது அவர்களைத் தழுவி கடந்து போன காற்றுக்கு ஏதோ முன் ஜென்மாந்திரங்களுக்குத் தொடரும் அன்பின் சுகந்தமும் ஆதரவும் இருந்தது.
மணியோசைகளின் நாதமும் அப்போது கேட்டது.