மேலாளர் வெளியில் இறங்குவதைப் பார்த்த போதே பிரபுவுடைய மனம் நடுங்கியது. அந்த ஆள் வெளியில் இறங்குவது இரண்டு காரணங்களுக்காக மட்டும்தான். ஒன்று வெளியில் இருக்கும் பாத்ரூமுக்குப் போவதற்கு, இன்னொன்று அவனை வசவு பாடவும் காதைப் பிடித்துத் திருகவும்தான். உள்ளே ஆண், பெண்களுக்கு தனித்தனி பாத்ரூம் உண்டு. ஆனால், அவன் அங்கேப் போவதில்லை. வேலை செய்பவர்கள் எவரும் அங்கேப் போகக்கூடாது என்று அந்த ஆள் கட்டாயமாகச் சொல்லியிருக்கிறான். அது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் உள்ளது. ஒரு சமயம் ஆண்களுடைய பாத்ரூமைச் சுத்தப்படுத்தும் போது, அதில் ஒன்றில் சிறுநீர் கழித்துவிட்டான்.
அவனையும் அறியாமல் நிகழ்தது அது. பாத்ரூமைச் சுத்தப்படுத்திவிட்டு வரும் போது வெளியில் மேனேஜர். “நீ அதுல மூத்திரம் விட்டயாடா?” என்று கேட்டார். “அவசரமா வந்துடுச்சு. அதனால... நான் எல்லாத்தயும் சுத்தப்படுத்திட்டேன்” என்று சொன்னான்.
இதைச் சொல்லும் போது அவனுடைய வார்த்தைகள் விறைத்துப் போயின.”உங்கள வேலைக்கு வச்சிருக்கற என்னைச் சொல்லணும். இனிம இந்த மாதிரி செஞ்சீன்னா...” இதை சொல்லிவிட்டு அந்த ஆள் அவனுடையக் கழுத்தைப் பிடித்துச் சுவரை நோக்கித் தள்ளினான்.
பாத்ரூம் சுவரில் போய் மோதி சமநிலை தவறி அவன் கீழே விழுந்தான். இதற்காக இரண்டு நாட்கள் சம்பளம் கட் செய்யப்பட்டது. ராத்திரி நேரமானதால் வேலை செய்பவர்கள் தவிர்த்து அப்போது அங்கே வேறு எவரும் இல்லை. கூட வேலை பார்க்கும் செல்வனும் ராஜீவும் ஓடிவந்து பிடித்து எழுப்பி நிறுத்தினார்கள்.
செல்வன் பிரபுவை போல தமிழ்நாட்டைச் சேர்ந்தவன். செல்வன் வேலை தேடிக் கேரளாவுக்கு வந்தவன். பிரபுவுக்கு முன்பே கேரளாவுக்கு வந்தவன். மாதக்கணக்கில் அலைந்து திரிந்து கடைசியில் இந்த ஹோட்டலுக்கு வந்து சேர்ந்தான். நாலு மாதம் கழித்துத்தான் பிரபு அங்கே வந்தான். ஹோட்டல் என்ற பெரிய அட்டையுடன் மழையிலும் வெய்யிலிலும் சாலையின் நடுவில் நிற்க வேண்டும். இதுதான் பிரபுவுடைய வேலை. பகல் பன்னிரண்டு மணி முதல் மூன்று மணி வரை “சாப்பாடு ரெடி” என்ற பலகையுடன் கையில் பிடித்துக்கொண்டு நிற்கவேண்டும்.
“ஹோட்டல்” என்ற பலகையை இன்னொரு கையில் பிடித்துக் கொண்டு நிற்க வேண்டும். வாகனங்கள் கடந்து போகும் போது சாலையின் நடுவில் இறங்கி, பலகையில் எழுதியிருப்பதை அவர்களுடையக் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டும். வேகமாக வரும் வாகனங்களாக இருந்தாலும் வேகத்தை குறைக்கச் செய்யும் வகையில் சாலை நடுவில் போய் நிற்கவேண்டும். அப்படி அவன் நிற்கும் போது இரண்டு முறை மயிரிழையில் உயிர் தப்பியிருக்கிறான்.
பயணம் செய்பவர்களை கவர்ந்து ஹோட்டலுக்குள் வரவழைத்து அவர்களை வண்டியில் இருந்து இறங்கச் செய்து உள்ளே அனுப்பினால் ஒரு ஆளுக்கு ஐந்து ரூபாய் வீதம் ஊக்கத்தொகை. மேனேஜருடைய கூர்மையான கண்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு கண்ணாடிப் பலகையின் வழியாக எப்போதும் வெளியில் நீண்டபடி இருக்கும்.
அந்த ஆள் வெளியில் இறங்கி நேராக பாத்ரூமுக்குப் போனான். எதனாலோ ஹோட்டலில் இன்று கூட்டம் குறைவாக இருந்தது. கைகள் இரண்டும் நன்றாக வலித்துக் கொண்டிருந்தது. கீழே இறக்கினான். “போர்டை தூக்கிப் பிடிச்சுகீட்டாடா நிக்கற?”. இதைச் சொல்லிவிட்டு மேனேஜர் காதைத் திருகி முன்னோக்கித் தள்ளினான். ஒரு நிமிடம் நின்றான். அப்போது சாலையில் வாகனங்கள் எதுவும் வராமல் இருந்தது பெரிய அதிர்ஷ்டம்.
மேனேஜரின் உடல் கோபத்தால் ஆடியது. ரோஷமும் பீதியும் கலந்த நிலையில் பிரபு இருந்தான். சட்டென்று ஏற்பட்ட அதிர்ச்சியால் போர்டுகள் கீழே விழுந்து கிடந்தன. “தூக்கிப் பிடிச்சுகிட்டு நில்லுடா!” அவன் இரண்டு அட்டைகளையும் பயணம் செய்பவர்கள் பார்க்கக்கூடிய விதத்தில் உயர்த்திப் பிடித்தான்.
அந்த ஆள் கால்களை தரையில் அடித்து கோபத்தோடு உள்ளேப் போனான். பிரபு இருமினான். மீண்டும் மீண்டும் இருமினான். சாலை ஓரத்தில் கபத்தை துப்ப நினைத்த அவனுடைய கண்கள் அவனையும் அறியாமல் மேனேஜரை நோக்கி பாய்ந்து சென்றன. அந்த ஆள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
வாயில் இருந்து வெளியில் வந்த கபத்தையும் துப்பத் தயாராக இருந்த எச்சிலையும் உள்ளே விழுங்கினான். பத்தரை வரை இதே மாதிரி நிற்க வேண்டும். பத்தரையாகும் போது கூட்டம் கொஞ்சம் குறையும்.
அப்புறமும் அதே நிலைதான். அங்கே வேலைக்கு வந்ததில் இருந்து அவன் இரண்டு தடவை ஊருக்குப் போயிருக்கிறான். ஓண விடுமுறை. மூன்றாவது நாள் ஹோட்டல் திறக்கும் போது வந்து சேரவில்லை என்றால் அப்புறம் வரவே வேண்டாம் என்ற அந்த ஆளின் இறுதித் தீர்ப்பு. இதற்கு நடுவில் அடி வயிற்றில் உருண்டு வரும் ஒரு பிரட்டல். குமட்டல். அது நெஞ்சுக்குப் போய் துடிதுடித்து அமுங்கி இருமலாக வெளியில் வரும். சில சமயம் இரண்டு மூன்று இருமல்களோடு நின்று விடும்.
ஆனால் சில சமயம் நிற்காமல் இருமிக் கொண்டேயிருப்பான். நெஞ்சு துடித்துக் கொண்டிருக்கும். வயதாவது தன்னை பெரிதாக பாதிக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது. அறுபத்தேழு வருஷங்கள் இந்தப் பூமியில் வாழ்ந்தது எப்படி என்று நினைத்து அவன் ஆச்சரியப்படுவது உண்டு. தேனீயில் இருந்து பதினான்காவது வயதில் ஆரம்பித்த பயணம். பட்டென்று நினைவுகளை திட்டியபடியே நிறுத்தினான். கடந்த காலத்தில் பயணிக்க அவன் இப்போது கொஞ்சம் கூட விரும்புவதில்லை. நினைத்துப் பார்ப்பதற்கு விரும்புகின்ற வகையில் அவனுடைய வாழ்க்கையில் எதுவும் இல்லையே!?
கால்களுக்கு இப்போது முன்பிருந்த பலம் இல்லை. நிற்க ஆரம்பித்து மூன்று வருடங்கள் ஆகிவிட்டன. பத்து மணிக்கு அப்புறம் பாத்ரூமையும் வாஷ் பேசினையும் சுத்தப்படுத்த வேண்டும். ஆரம்பத்தில் அந்த நாற்றம் பிடித்த வேலையைச் செய்து முடித்துவிட்டு வெளியில் வந்து சாப்பிடுவதே அவனுக்குப் பிடிக்காது. கொஞ்சம் கொஞ்சமாக அதுவும் பழகிப் போய்விட்டது.
இந்த அறுபத்தி ஏழாவது வயதில் வேறு எங்கே வேலை கிடைக்கும்? சாப்பாட்டு மேசைகளைத் துடைத்து முடிக்கும் போது பதினொன்றரை ஆகும். அப்புறம்தான் ராத்திரி சாப்பாடு. அப்போது சமையல் அறையில் இருப்பவர்கள் பாத்திரங்கள் எல்லாவற்றையும் கழுவி இடத்தைச் சுத்தப்படுத்தி துடைத்து முடித்திருப்பார்கள். அதற்கப்புறம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடும் கொஞ்ச நேரம்தான் தாங்கள் உயிருடன் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றும்.
பிரபுவைத் தவிர ஐந்து பேர் இருந்தார்கள். அவர்களில் மிகக்குறைவாகப் பேசுவது பிரபு மட்டும்தான். சமையல் அறையும் விறகு அடுக்கி வைக்கப்பட்டு சேர்ந்தாற்போல இருக்கும் இடமும்தான் படுக்க அனுமதிக்கப்பட்ட இடம் என்றாலும் எங்கே தூக்கம் வருகிறதோ அங்கேப் படுத்துத் தூங்குவார்கள்.
மேனேஜரும் சப்ளையர்களும் முன்பே அவரவர்கள் வீட்டுக்குப் போய்விடுவார்கள். நாலரைக்கு அலாரம் அடிக்கும். அதை செட் செய்து வைத்துவிட்டுதான் மேனேஜர் போவான். ஐந்து மணியாகும் போது, அவரவர்களுடைய வேலைகளை ஆரம்பிக்க வேண்டும். ஆறரைக்கு அந்த ஆள் வருவான். அப்புறம்தான் ஹோட்டல் திறக்கப்படும்.
வந்தவுடன் அந்த ஆள் எல்லா இடங்களையும் சுற்றி நடந்து திருப்தி ஏற்படும் வரை பார்வையிடுவான். முன்பக்கம் இருக்கும் ஷட்டரைத் திறக்கும் போது காத்துக்கொண்டிருப்பது போல ஆட்கள் டீ குடிக்க தயாராக இருப்பார்கள். அவர்கள் உதட்டில் வைத்து சூடோடு ஆவி பறக்கும் டீயைக் குடிப்பதைப் பார்த்தபடியே பிரபு அட்டைகளை தன் கையில் எடுப்பான். அப்புறம் வழக்கம்போல சாலையின் நடுப்பகுதிக்கு போவான். டீ கிடைக்க வேண்டுமென்றால் பத்தரை தாண்டியிருக்கவேண்டும்.
எழுந்தவுடன் ஒரு டீ குடிப்பது பல ஆண்டுகளாக இருந்த பழக்கம். அதனால் ஆரோக்கியமும் கொஞ்சம் நன்றாக இருந்தது. விருப்பப்பட்ட வேலைகளை செய்ய முடிந்தது. இன்று அவனுடைய உடம்பு எல்லாம் ஓடி ஓடித் தேய்ந்து போன ஒரு இயந்திரம். உடலை நிமிர்த்திநிறுத்த பாடுபட வேண்டியிருக்கிறது.
வெய்யில் ஊசிகளாக உடம்பை குத்தின. சிவந்த இரத்தம் வியர்வைத் துளிகளாக நிலத்தில் விழுந்தன.
“ஹோ! என்ன ஒரு நிற்பு இது!”. அவன் மீதே அவனுக்கு வெறுப்பு ஏற்பட்டது. மீண்டும் இருமல். அது நிற்கவில்லை. உடல் நிலைகுலைந்து போனது. கையால் நெஞ்சை அமுக்கிப் பிடித்தான். அந்த ஆளுடைய கண்கள் தன் மீதுதான் பதிந்திருந்தன. அதை அவன் கவனித்தான். நெஞ்சில் இருந்து அவசரமாக பாய்ந்து வெளியில் வந்த கபக்கட்டிகளை அவன் கஷ்டப்பட்டு விழுங்கினான். அதோடு அவனுக்கு லேசான ஒரு ஆறுதல். கூட்டம் இருந்தாலும் இன்றைக்கு ஒரு வாகனம் கூட அவனுடைய பலகைகளைப் பார்த்து நிற்கவில்லை. நடுநடுவே அந்த ஆளை பார்த்தான்.
உள்ளே எவ்வளவு வாடிக்கையாளர் கூட்டம் வழிந்தாலும் அந்த ஆளுடைய கண்கள் அவன் மீதுதான் பதிந்திருக்கும். சாலையில் நல்ல கூட்டம் இருந்தாலும் உள்ளே ஒரு வாகனமும் வராதது பற்றி அந்த ஆளுக்கு கோபம் வந்தது. வாகனத்தில் வருபவர்கள் போர்டைப் பார்த்து உள்ளே வராமல் போனால் பழி முழுவதும் பிரபுவின் மீதுதான் விழும். அது மட்டுமல்ல. யாரும் வராமல் போய்விட்டால் அன்றைய சம்பளம் கட். அதனால் வாகனம் வரும்போது எல்லாம் அவன் பழநி ஆண்டவரை பிரார்த்திப்பான். தெய்வங்களுக்கும் கூட இப்போது அவன் வேண்டாதவனாகி விட்டான்! சாலையில் நெரிசல் குறைந்திருந்தது.
தூரத்தில் இருந்து ஆடம்பர காரைப் பார்த்தபோது அவன் சாலையின் குறுக்காகப் போய் நின்றான். போர்டுகள் இரண்டையும் நீட்டிப் பிடித்தான். காருடைய வேகம் குறைவதைப் பார்த்தபோது அவனுக்குள் ஒரு நட்சத்திரம். கார் முன்னால் வந்து நின்றது.
காருக்குள் நாலைந்து பேர் இருந்தார்கள். சாலையோரமாக காரை நிறுத்தி வந்தவர்கள் கீழே இறங்கினார்கள். பவ்வியத்தோடு ஒதுங்கி நின்று அவன் ஹோட்டலுக்கு வழி காட்டினான். மேனேஜருடைய முகத்தில் புன்முறுவல் விரிவதை பார்த்தான். அவனுடைய மனதிற்குள்ளும் அதே வெளிச்சம்...
திடீரென்று வயிற்றுக்குள்ளிருந்து ஒரு குமட்டல். அது நெஞ்சிற்குள் படர்ந்தது. அது ஒரு இருமலாக வெளியில் அவதாரமெடுத்து வந்தது. ஒன்றன் பின் ஒன்றாக நிற்காத இருமல். நெஞ்சிற்கு உள்ளே இருந்து வாய்க்கு வந்த கபக் கட்டிகளை அவன் அவசரமாக விழுங்கினான். இருமல் நிற்கவில்லை. இப்போது அவனுடைய எல்லாக் கட்டுப்பாடுகளையும் மீறிக் கொண்டு ஒரு சிவந்த கபக் கட்டி வெளியில் தெறித்தது.
அவன் நெஞ்சை அமுக்கிப் பிடித்து பயணிகளை பலவீனமாகப் பார்த்தான். அவர்கள் அவனையும் தெறித்து விழுந்த கபக் கட்டியையும் மாறி மாறிப் பார்த்தார்கள். பிறகு எதுவும் பேசாமல் காரை நோக்கி அவசரமாக நடந்தார்கள். கார் முன்னால் செல்லும்போது பின்னால் இருந்த குழந்தை மட்டும் தலையை வெளியில் நீட்டி பார்த்தது.
அவன் நெஞ்சிலும் வயிற்றிலும் கைகளை அமுக்கிப் பிடித்து இருமிக் கொண்டேயிருந்தான். அதற்கு இடையிலும் தரையில் விழுந்த போர்டுகளை எடுக்கக் குனிந்தான். அப்போது உள்ளே இருந்து மீண்டும் சிவந்த கபக் கட்டிகள் வெளியில் தெறிக்க ஆரம்பித்தன. அது போர்டுகளுக்கு மேல் விழுந்து சிவப்பு நிற சாயக்கலவை போல பரவியது. அவன் நிலைகுலைந்து சாலையில் விழுந்தான். அதன் மேல் அவன் நிலை தடுமாறி விழுந்தான்.
பணம் வாங்குவதற்கு இடையில் மேனேஜர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த ஆள் வாட்சை பார்த்தான். இரண்டு மணிதான் ஆகியிருந்தது. கொஞ்சமும் அவசரப்படாமல் வெளியில் இறங்கி பிரபுவுடைய உடல் கிடக்கும் இடத்தை அடைந்தான். காலால் அதைச் சாலையோரமாக உதைத்து தள்ளி அகற்றினான்.
அப்புறம் பக்கத்தில் இருந்த “ஹோட்டல்” என்றும் “சாப்பாடு தயார்” என்றும் எழுதியிருந்த போர்டுகளை கையில் எடுத்தான். அவற்றில் ஒட்டியிருந்த இரத்தக் கறையை பக்கத்தில் இருந்த ஒரு பழைய பேப்பரை எடுத்துத் துடைத்தான். பிறகு சாலையில் கொஞ்சம் இறங்கி நின்று அவற்றை வாகனங்களுக்கு நேராகத் தூக்கிப் பிடித்தான்.