கூட்டம் அதிகமுள்ள ஒரு நாளாக இருந்தது அது. மேலாளருடைய கேபினுக்கு முன்னால் பலரும் அவரைப் பார்க்கக் காத்துக் கொண்டு நின்றார்கள். வேகத்தை அதிகரித்து முடிந்தவரை பேச்சைக் குறைத்து, செய்ய முடிந்ததை செய்து ஆட்களை அவர் அனுப்பிக் கொண்டிருக்கும் போதுதான் அந்த இளைஞன் அவருக்கு முன்னால் போய் நின்றான்.
ஒழுங்காக ஆடை உடுத்தாமல் ஷேவ் செய்யாத முகத்துடன் வந்து நின்ற அவனைப் பார்த்த போது அவருக்கு அவன் ஒரு தொழிலாளி என்று தோன்றியது. ஆனால் அவன் பழகிய விதம் ஒரு படித்தவன் போல இருந்தது. மேலாளர் அவனை உட்காரச் சொன்னபோது அதை ஏற்காமல் அவன் சொன்னான்.
“மன்னிச்சுக்கங்க சார். நல்ல கூட்டம் இருக்குன்னு தெரியும். இருந்தாலும் எனக்குப் பேச ஒரு அஞ்சு நிமிஷம் அனுமதிப்பீங்களா?” அவன் மரியாதையுடன் பேசிய விதம் அவரை கவர்ந்தது. அது அவரைத் தொடவும் செய்தது.
மேலாளர் சொன்னார். “உக்காருங்க உக்காருங்க” அவருக்கு முன்னால் இருந்த நாற்காலிகளில் ஒன்றில் உட்கார்ந்த அவன் தன் கதைமூட்டையை அவிழ்த்தான்.
அவனுடைய குடும்பம் ஐந்து பேர் அடங்கியது. அப்பா அம்மா அவன் இரண்டு தங்கைகள். அப்பா தென்னை மரம் ஏறும் ஒரு தொழிலாளி. எதிர்பாராமல் ஒரு நாள் அவர் மரத்தில் இருந்து விழுந்து இறந்து போனார். பத்தாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்த அவன் உட்பட உள்ள நான்கு பேர் அடங்கிய அந்தக் குடும்பம் அனாதையானது. நான்கு வயிறுகளை நிரப்ப அம்மா வீட்டு வேலை பார்க்க கிளம்பினாள். வீடுகளை தூசு தட்டி பெருக்கி சுத்தப்படுத்துவதிலும் சமையல் செய்வதிலும் அவள் திறமைசாலியானாள். ரெண்டு மூன்று வீடுகளில் வேலைக்குப் போய் குடும்பத்தை காப்பாற்றினாள். ஆனால் அதோடு அவனுடைய படிப்பு நின்று போனது.
பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண்ணுடந்தான் தேர்ச்சி பெற்றான். தொடர்ந்து படிக்கவேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது. ஆனால் கையில் காசு இல்லை. எல்லாச் சுமையையும் அம்மாவுடைய தோளில் ஏற்றாமல் வேலைக்குப் போய் சம்பாதிக்க மகன் தயாரானான். திடீரென்று ஒரு நாள் அம்மா படுக்கையில் விழுந்தாள்.
கை வைத்தியங்கள் எல்லாவற்றையும் செய்து பார்த்தபோதும் குணமாகவில்லை. அரசாங்கத்தின் கருணையில் கிடைக்கும் மருந்துகளைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து கொண்டிருந்தாள். அவன் ஒரு நாள் கூட ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் கூலி வேலைக்குப் போனான். தங்கைகளை நன்றாகப் படிக்க வைத்து நல்ல நிலைக்குக் கொண்டு வரவேண்டும் என்பதுதான் அவனுடைய நோக்கம். அதற்காக அவன் எவ்வளவு கஷ்டப்படவும் தயாராக இருந்தான். அம்மா படுக்கையில் கிடந்தாலும் வீட்டு நிர்வாகம் எல்லாவற்றையும் பத்திரமாகப் பார்த்துக் கொண்டாள். எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்து செய்யவைப்பாள்.
நடுநடுவே படுக்கையிலேயே எழுந்து உட்கார்ந்து கொள்வாள். ஆனால் வீட்டுக்கு வெளியில் போக முடியாது. ஒரு வாடகை வீட்டில்தான் வாழ்க்கை. அப்பா இறந்து வருமானம் இல்லாமல் போனதால் வாடகை வீட்டைக் காலி செய்ய வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டது. அப்பா ஐந்து செண்ட் நிலத்தை வாங்கியிருந்தார். அதில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அதை நிறைவேற்றாமல் போவதுதான் அவருக்குக் கடைசி வரை இருந்த பெரிய வருத்தம். வாடகை வீட்டைக் காலி செய்ததோடு, அந்த ஐந்து செண்ட் நிலத்தில் அவர்கள் தற்காலிகமாக ஒரு வீட்டைக் கட்டி வாழ ஆரம்பித்தார்கள்.
ஒரு ஹால், இரண்டு அறைகள். ஒரு சமையலறை. அதுதான் அவர்களுடைய வீடு. மேற்கூரையில் தார்ப்பாய் ஷீட். சுவர்களும் தார்ப்பாயால் ஆனவை. மண்ணை மொழுகி அடித்து சமப்படுத்தி போடப்பட்ட தரை. ஒரு அறையில் அம்மாவும் தங்கைகளும் தூங்கினார்கள். இன்னொரு அறையில் வீட்டுத் தலைவனான அவன். அம்மா எப்போதும் பெரிதாக சத்தம் போடும் கயிற்றுக் கட்டிலில். அதுதான் அந்த வீட்டில் இருந்த ஒரே ஒரு இருக்கை வசதி. தங்கைகள் தரையில் உட்கார்ந்து கொண்டு படிப்பார்கள். பாயை விரித்துத் தூங்குவார்கள்.
“அம்மாவுக்கு நல்ல சிகிச்சை கொடுக்கணும். தங்கச்சிங்கள நல்லாப் படிக்க வச்சு நல்ல நிலைக்குக் கொண்டு வரணும். ஒரு வீடு கட்டணும்”
அடங்காத இந்த ஆசைகளோடு அவன் கடினமாக உழைத்தான். ஆனால் அந்த வருமானம் தினப்படி சோற்றுக்கு மட்டும்தான் போதுமானதாக இருந்தது.
அவர்களுடைய அந்தத் தனிமை வாழ்க்கைக்கு இடையூறாக சொந்தக்காரர்களோ அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களோ யாரும் அவர்களை எட்டிப் பார்க்கக் கூட வரவில்லை. அவன் பேச்சை நிறுத்தினான். மேலாளரைப் பார்த்தான்.
“அஞ்சு நிமிஷம் முடிஞ்சிடுச்சு சார்! நான்...!” மேலாளர் அவனை ஆச்சரியத்தோடு பார்த்தார்.
அதற்குள் மேலாளருக்கு அவனை ரொம்பப் பிடித்துப் போயிருந்தது. “பரவாயில்ல... சொல்லுங்க”
“எங்க மாதிரி அன்னாடங்காச்சிகளுக்கு உதவற ஒரு அரசாங்கத் திட்டம் இருக்கு இல்லயா சார்? லாட்டரிச்சீட்டு!” மேலாளர் தலையாட்ட அவன் தொடர்ந்தான்.
“நானும் நல்ல ஒரு கனவ வச்சுகிட்டிருந்தேன். சம்பாதிக்கறதுல ஒரு சிறிய தொகைய லாட்டரிசீட்டு வாங்கறதுக்காக ஒதுக்கி வச்சேன். ஒரு சமயம் அதிர்ஷ்டம் என்னையும் தேடிவரும்னு நான் கனவு கண்டேன்”
“அப்படின்னா உங்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்கலயா?” மேலாளர் கேட்டார்.
“அதிர்ஷ்டம் தேடி வந்துச்சு சார்! எனக்கு ரெண்டு கோடி ரூபாயோட லாட்டரி அடிச்சுச்சு. ஆனா... இத நான் யாருகிட்டயும் சொல்லல. முதல் தடவயா இப்பதான் உங்ககிட்டச் சொல்றேன்” பாக்கெட்டில் இருந்து லாட்டரிச் சீட்டை எடுத்து மேலாளரிடம் கொடுத்துவிட்டு அவன் சொன்னான். அவர் ஆச்சரியத்தோடு அதை வாங்கிப் பார்த்தார்.
அப்பறம் தனக்கு முன்னால் இருந்த கம்ப்யூட்டரில் நம்பரைக் கவனமாகப் பரிசோதித்தார். பிறகு சொன்னார். “சரிதான். நீங்க அதிர்ஷ்டக்காரர்தான். உங்களுக்கு ரெண்டு கோடி ரூபா விழுந்திருக்கு. பிடித்தம் எல்லாம் போக ஒன்னே கால் கோடி ரூபா உங்களுக்குக் கிடைக்கும். ஆனா...? ஏன் இதப் பத்தி நீங்க அம்மாகிட்டயும் சகோதரிங்ககிட்டயும் சொல்லாம இருக்கீங்க?”
“பயமாயிருக்கு சார்! பயம்!” அவன் சொன்னான்.
“நான் பரிசோதிச்சுப் பாத்தேன். லாட்டரி விழுந்திருக்குன்னு தெரிஞ்சுது. ஏதாச்சும் காரணத்தால தப்பாப் போயிடுமா சார்?!”
“பரவாயில்ல. இப்ப உறுதியாயிடுச்சு இல்லயா? இத நாம வங்கிக் கணக்குல போடலாம். உங்க பேங்க் பாஸ் புக்கத் தாங்க”
“பாஸ்புக்கா! எனக்கு ஒரு பேங்க்லயும் கணக்கு இல்ல சார்”
“என்ன! பாங்க் அக்கவுண்ட் இல்லயா?!”
“ஆமாம் சார். கூலி வேல பாக்கற எனக்கு எதுக்கு சார் அக்கவுண்ட்?”
“ஓ! பரவாயில்ல. நாம ஒரு அக்கவுண்ட்ட ஓப்பன் செய்யலாம். ஆங்... ஆதார் கையில இருக்கு இல்லயா?”
“இருக்கு சார்” பாக்கெட்டில் இருந்து ஆதார் அட்டையை எடுத்துக் கொண்டு அந்த இளைஞன் சொன்னான். மேலாளர் பெல் அடித்து ஒரு ஊழியரை கூப்பிட்டு ஆதார் அட்டையைக் கொடுத்து ஒரு கணக்கை ஆரம்பிக்க ஏற்பாடு செய்தார். பிறகு சொன்னார்.
“இனிஷியல் டெபாசிட்டா ஆயிரம் ரூபா போடலாம். பாஸ் புக்கயும் செக் புக்கயும் ஏடிஎம் கார்டயும் இப்ப தரேன்” இளைஞன் பதுங்கினான்.
பிறகு மெலிதான குரலில் சொன்னான். “சார். என்னோட கையில ஒரு ரூபா கூட இல்ல. நேத்திக்கு செஞ்ச கூலி வேலைக்கு கிடச்ச காச அப்படியே அம்மா கையில கொடுத்துட்டேன். நான் அப்படித்தான் செய்யறது. பண விஷயத்த எல்லாம் அம்மாவும் தங்கைங்களும்தான் பாத்துக்கறாங்க”
மேலாளர் அவனை வியப்போடு பார்த்தார். பிறகு சொன்னார். “சரி. நான் அந்த பணத்தக் கடனாத் தரேன். இன்னிக்கே லாட்டரிச் சீட்ட கேஷ் செய்யறதுக்காக அனுப்பலாம். ரெண்டு மூனு நாள்ல பணம் கிடைக்கும்னு தோனுது”
“ஆனா? சார் இந்த விவரத்த யார்கிட்டயும் சொல்லாதீங்க” மேலாளர் அவனை மறுபடியும் பார்ப்பதற்கு நடுவில் அவன் தொடர்ந்தான்.
“இப்போ எங்களுக்கு யாருமில்ல சார். இந்த விஷயம் தெரிஞ்சா ஆளுங்க சொந்தம் கொண்டாடிகிட்டு ஓடி வருவாங்கறது உறுதி. வேண்டாம் சார். யாருக்கும் தெரியவேணாம். நியூஸ் பேப்பர்ல செய்தி எதுவும் வராமப் பாத்துக்கணும் சார்”
“சரி. அப்படியே ஆகட்டும். லாட்டரிச்சீட்டு ஆபீஸ்லயும் உங்களப் பத்தி எந்த விவரமும் தெரியாமப் பாத்துக்கறேன். ஆனா காச புத்திசாலித்தனத்தோடும் விவேகத்தோடும் செலவு பண்ணனும். சரியா?”
“அது எனக்குத் தெரியும் சார்”
“இன்னிக்கே அம்மாகிட்டயும் சகோதரிங்ககிட்டயும் விவரத்தச் சொல்லணும். அதுக்கு ஒரு வழி இருக்கு. அவங்களுக்கு பரிசுங்கள வாங்கிட்டு போறதுதான் அது. நீங்க உட்பட எல்லாருக்கும் பொருந்தற ஒரு ஜோடி வீதம் துணிமணிங்கள வாங்குங்க. பேங்குக்கு பக்கத்துலயே நல்ல ஒரு துணிக்கடை இருக்கு. அதுக்கு பக்கத்துல இருக்கற ஹோட்டல்லேர்ந்து மத்தியான சாப்பாட்டயும் இனிப்புகளயும் வாங்கிக்கங்க. இதோடு நீங்க வீட்டுக்கு போய்ச் சேரணும். இன்னிக்கு உங்களுக்கான நல்ல ஒரு சந்தோஷமான நாளா ஆகட்டும். அப்பறம் எல்லா நாளுங்களும்... “ஆனா இதயெல்லாம் வாங்கறது காசு?”
“நீங்க ஒரு கோடீஸ்வரர் நண்பரே. அதுக்குள்ள காச பேங்க் கடனாத் தரும்”
“எனக்கு ஒரு வீட்ட வாடகைக்கு பிடிக்கணும்னு ஆசை சார். நான் வீடு மாறனும். அம்மாவுக்கு ட்ரீட்மெண்ட் கொடுக்கணும்”
“இன்னிக்கே இதுக்கான முயற்சிங்கள ஆரம்பிங்க. ஒரு வீட்டக் கண்டுபிடிங்க. பேசி முடிச்சுடுங்க. அவசியமான பணத்த பேங்க் தரும். உங்களோட போன் நம்பரயும் தாங்க”
“எங்கிட்ட போன் கிடையாது சார். எங்க வீட்டுல யாருக்கும் அதுக்கான அவசியம் ஏற்படல சார்”
“இனிம இப்படி இருந்தா போதாது. இப்பவே ஒரு போன வாங்கணும். இண்டர்நெட் வசதி உள்ளதா இருக்கணும். பேங்க் வேலைங்க எல்லாம் இப்ப ஆன் லைன்லதான். ஒரு சிம்ம வாங்கறதுக்கும் மறக்காதீங்க. வீட்டுக்குப் போனதுக்கு அப்பறம் சிம் ஆக்ட்டிவேட் ஆச்சுன்னா உடனே எனக்கு போன் செய்ய மறக்காதீங்க”
மேனேஜர் சொல்வதை எல்லாம் அவன் தலையை ஆட்டிக் கேட்டான். ஆனாலும், அந்த முகத்தில் சந்தோஷத்தின் கீற்றுகள் விழாதது மேலாளருக்கு ஆச்சரியமாக இருந்தது.
புதிய சூழ்நிலைகளோடு பொருத்தப்பட அவன் தயங்குவதாக அவருக்குத் தோன்றியது. பிறகு இரண்டு வாரம் கழித்துத்தான் அவன் அவரைப் பார்க்க வந்தான். இப்போது நல்ல ஆடைகளைப் போட்டுக் கொண்டிருந்தான். முகத்தை க்ளீனாக ஷே செய்திருந்தான். அங்கே சந்தோஷத்தின் உதய கிரனங்கள் உள்ளதாகத் தோன்றியது.
அவர் அவனை மகிழ்ச்சியோடு வரவேற்றார். “பண பரிவர்த்தனை எல்லாம் கூகுல் பே வழியா செஞ்சதுனாலதான் நான் பேங்குக்கு வரல. சாரோட உதவியால காரியங்க எல்லாம் நல்லா நடக்குது சார்”. அவன் சொன்னான்.
“நான் என்னால முடிஞ்சத என்னோட கடமையத்தான் செஞ்சேன் அவ்வளவுதான். அப்பறம் காரியங்க எந்த அளவுல இருக்கு?”
“வாடகைக்கு வீடு எடுத்து குடியிருக்க ஆரம்பிச்சாச்சு. அம்மாவுக்கு நல்ல சிகிச்சை ஆரம்பிச்சாச்சு. அம்மா இப்ப எந்திரிச்சு நடந்து வீட்டு வேலைங்கள பாக்கறாங்க. தங்கச்சிங்க சந்தோஷமா படிக்கப் போறாங்க. என்னோட பங்குக்கு
வீடு கட்ட ஆரம்பிச்சுட்டேன்”
“அப்படியா! இந்த பணமெல்லாம் எங்கேர்ந்து கிடச்சதுன்னு யாரும் கேக்கலயா?”
“அதப் பத்தி எல்லாரும் விசாரிக்கறாங்க சார். நாங்க யாருகிட்டயும் எதயும் சொல்லல. ஆனா சில பேருக்கு சந்தேகம் வந்திருக்கு. இப்ப வீட்டுக்கு எல்லா நாள்லயும் யாராச்சும் வர்றாங்க”
“நன்கொடை கேட்டா?”
“சிலரு அப்படியும் வர்றதுண்டு. சிறிய நன்கொடைங்களக் கொடுக்கறோம். நான் எப்பவும் பிரார்த்தனைக்கு போற ஒரு கோயில் இருக்கு. சிறிய ஒரு அம்மன் கோயில் அது. வருமானம்னு பெரிசா எதுவும் இல்ல வயசான ஒருத்தருதான் பூசாரி. தினப்படி நித்யவிருத்திக்கு வகையில்லாத கோயில் அது. பக்தருங்களும் குறைவு. பூசாரி எங்கிட்ட ஒரு உதவி கேட்டாரு”
“என்ன அது?”
தேவியோட அருளால எனக்கு அதிர்ஷ்டம் அடிச்சுச்சுன்னு கேட்டேன். என்ன அதிர்ஷ்டம்னு எனக்குத் தெரியல. கோயிலுக்கு ஏதாச்சும் கொடுக்கணும். இங்க நித்யவிருத்திக்கேக் கஷ்டமாயிருக்கு”
“என்ன சொன்னீங்க?”
“ஒன்னும் சொல்லல. அதுக்கப்புறமும் நான் தினம் கோயிலுக்குப் போனேன். பூசாரி அப்புறம் எதுவும் கேக்கல. அதுதான் யதார்த்தமான அர்ச்சனைன்னு எனக்குத் தோனிச்சு”
மேலாளர் சொன்னார். “ஆனா ...? இப்படி அர்ச்சனை நடத்தக் கூட முடியாம பட்டினியும் பரிவட்டமுமா நிறய பேரு நம்ம நாட்டுல இருக்காங்க. அவங்கள யாரும் கண்டுக்கறதேயில்ல!”
“அதுல சில பேருக்காச்சும் நான் உதவி செய்வேன் சார். அது என்னோட கடமையில்லயா சார்?”
“உறுதியா. அப்படித்தான் செய்யணும்” மேனேஜர் மன நிறைவோடு சொன்னார்.