இன்று இராத்திரிக்கு என்ன ஆயிற்று என்று ஏகநாதன் பல தடவை யோசித்துப் பார்த்த போதும் ஒரு பதிலைக் கண்டுபிடிக்க அவனால் முடியவில்லை. இப்படிப்பட்ட ஒரு நினைப்பு இப்போதுதான் முதல்முதலாக அவனுக்குத் தோன்றுகிறது. மழை பெய்வதும் குளிர் உடம்பைத் தாக்குவது இப்போது பிரச்சனை இல்லை. எங்கேயிருந்தோ எப்படியோ சிலிர்த்து எழுந்த சிந்தனையின் தொடக்கம். இரவு சாப்பாட்டுப் பொட்டலத்துடன் வீட்டிலிருந்து கிளம்பும் வரை ஒரு பிரச்சனையும் இல்லை. நகரத்தின் வெளிப்புறப்பகுதியில் சிறிய ஒரு மருத்துவமனையில் செக்யூரிட்டி அறையில் அவன் இருந்தான். கிழக்குப் பக்கமாகப் போகும் சிறிய வழியை மறுபடி ஒரு தடவை பார்த்தான். மின்சார விளக்கும் எரிந்து கொண்டிருந்ததால், கன்ணுக்கு எட்டிய தூரம் வரை வழி தெளிவாகத் தெரிந்தது. காட்சிகள் முடிகின்ற ஒரு புள்ளியில் ரோடிற்கு அருகில் ஆலமரமும் மாமரமும் இருந்த இடத்துக்குப் பின்னால்தான் அவனுடைய வாடகை வீடு. வீட்டில் மனைவி மட்டுமே இருந்தாள். பனி ஊசி போல உடலைக் குத்திக் கொண்டிருந்த இந்த நேரத்தில் போர்வையை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு அவள் சுகமாகத் தூங்கிக் கொண்டிருப்பாள். நேரம் பதினொரு மணி. மூன்று நிமிடம் நடந்தால் போதும். வீட்டிற்கு போய்ச் சேர்ந்துவிடலாம்.
போன் செய்துவிட்டுப் போனால் அவள் தூக்கத்தில் இருந்து எழுந்து வெளிவிளக்கைப் போட்டு ஜன்னல் கண்ணாடி வழியாகப் பார்த்துக்கொண்டு நிற்பாள். ரோடில் உருவத்தைப் பார்த்தால் ஓடிவந்து கேட்டைத் திறப்பாள். ஜில்லென்று ஒரு காற்று பாய்ந்துவந்து அவனைத் தாக்கியபோதுதான் அப்படி ஒரு யோசனை அவன் மனதில் தோண்ரியது. “வீட்டுக்குப் போய் கொஞ்சநேரம் மனைவியுடன் இருந்துவிட்டு வந்தால் என்ன?” அவளுக்கு அது சில சமயங்களில் சந்தோஷமாக இருக்கும். தூக்கத்திற்கு இடஞ்சல் வந்தால் சில சமயங்களில் புலம்புவாள். கோபப்படுவாள். அதைக் கொஞ்ச நேரத்திற்குள் சரிசெய்துவிடலாம். அது சிறிய மருத்துவமனைதான் என்பதால் நாலைந்து படுக்கை நோயாளிகள் மட்டுமே இருந்தார்கள். இரண்டு நர்ஸ்கள் டியூட்டியில் இருக்கிறார்கள். இராத்திரி
டியுட்டிக்கு டாக்டர் இல்லை என்பதால் நோயாளிகள் யாரும் அப்போது வரமாட்டார்கள். அரை மணி நேரம் செக்குயூரிட்டி இல்லை என்றாலும் ஒன்றும் குடிமுழுகிப் போய்விடாது என்று அவன் உறுதியாக நம்பினான். அவன் கேட்டைப் பூட்டி சுற்றுமுற்றும் கவனமாக ஆராய்ந்தான். குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை. உடனே வீட்டிற்குப் போய்ச் சேரவேண்டும் என்ற எண்ணத்தில்
வேகமாக நடந்தான்.
வீட்டுக்கு அருகில் போனபோதுதான் மனைவிக்குப் போன் செய்யவில்லையே என்று தோன்றியது. கூப்பிட வாயைத் திறந்தான். அப்போதுதான் மருத்துவமனை பக்கத்தில் இருந்து சில உரத்த குரல்கள் கேட்டது. போன அதே வேகத்தில் ஏகநாதன் திரும்ப வந்தான். ஒரு வாரத்துக்கு முன்னால் நடந்த ஒரு சம்பவம் அவன் ஞாபகத்திற்கு வந்தது. அதை நினைத்தால் இப்போதும் பயமாக இருக்கிறது. சிகிச்சை செலவு அதிகம் என்று குற்றம் சாட்டி ஒரு நோயாளியுடைய சொந்தக்காரர்கள் கூட்டமாக வந்தார்கள். டாக்டரை வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தார்கள். ஒரு நர்ஸை அடிக்கப் போனார்கள். அறிமுகமான ஒன்றிரண்டு ஊர்க்காரர்களுடைய குறுக்கீட்டால் மருத்துவமனையில் இருந்தவர்கள் வந்தவர்களை ஒருவிதமாக சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார்கள். பிரச்சனை அதோடு நிற்கவில்லை. இராத்திரி சில பேர் வந்து ரகளை செய்தார்கள். மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைய முயற்சி செய்தார்கள். ஆறுதலாக பேசி அவர்களை திரும்பப் போகும்படி செய்து விட்டார்கள் என்றாலும் மருத்துவமனையில் இருந்தவர்கள் எல்லோரும் மனதளவில் சோர்ந்து போயிருந்தார்கள். மறுபடியும் அவர்கள்தான் வந்துவிட்டார்களோ என்ற எண்ணம்தான் இப்போது அவனைப் பயமுறுத்தியது.
ஏகநாதன் மருத்துவமனை கேட்டுக்கு முன்னால் போய்ச் சேர்ந்தான். அவன் நினைத்தது மாதிரி அங்கே எதுவும் நடக்கவில்லை. இரண்டு குடிகாரர்கள் உரத்த குரலில் பேசி ரகளை செய்து அந்த வழியாக நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெகுதூரம் போனபிறகும் உரத்த சத்தத்தை அவனால் இப்போதும் கேட்க முடிந்தது. அவன் மருத்துவமனையை மறுபடியும் ஒரு தடவை பார்த்தான்.
ஒரு படுக்கை நோயாளி பெரிய சத்தத்துடன் இடைவிடாமல் இருமிக் கொண்டிருந்தாள். அந்த நோயாளியுடன் கூட அவளுடைய மகளும் இருந்தாள். சுற்றுமுற்றும் இன்னொரு தடவை பார்த்தப் பிறகு மனைவியின் ஞாபகத்துடன் வீட்டை நோக்கி நடந்தான். இப்போதும் போன் செய்யாமல் வந்தது பற்றி அவனுக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது. வீடு நெருங்கியபோதுதான் இன்னொரு சிந்தனை அவனைக் கவலைப்படுத்தியது.
“இருமிக்கொண்டிருந்த நோயாளிக்கு நோய் அதிகமானால் என்ன செய்வது?” என்ற பயத்தில் அவன் ஒரு நிமிடம் நின்றான். மூச்சு விடக் கஷ்டமாக இருக்கும். அப்படி நடந்தால் சில சமயங்களில் டாக்டரைக் கூப்பிடுவார்கள். வேறு மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போக அவருடையச் சொந்தக்காரர்கள் வரவும் வாய்ப்பு உண்டு. அப்போது செக்யூரிட்டிகாரன் இல்லையென்றால் நிலைமை மோசமாகும். கேட் பூட்டப்பட்டிருக்கிறது.
எல்லாம் தலைகீழாக மாற அதிக நேரம் தேவையில்லை. அரசியல்வாதிகள் வருவார்கள். ஊர்க்காரர்கள் வருவார்கள். போலீஸ் வரும். வசவுகளும், அடிதடியும், கல் வீச்சும் ஏற்படும். வேலை போகும். வீட்டில் இருக்க வேண்டி வரும். அரைமணிநேரம் டியூட்டியில் இருந்து விலகி வாங்கும் சம்பளத்திற்கு உண்மையில்லாமல் ஏமாற்ற நினைத்தால் அதன் விளைவுகள் மாதக்கணக்கில் நீளும். வீட்டிற்குப் பக்கத்தில் இருந்து ஏகநாதன் அவசரமாக மருத்துவமனையை நோக்கி நடந்தான். கேட்டுக்குப் பக்கத்தில் போய் நின்று சுற்றுமுற்றும் பார்த்தான். நோயாளியின் இருமல் அதிகமாகியிருக்கிறது. அதன் வலிமை உயர்ந்திருக்கிறது. நிராசையுடன் செக்யூரிட்டி அறைக்குள் நுழைந்தான். “இன்னிக்கு ராத்திரி இதுக்கு மேலயும் வீட்டுக்குப் போகறதில்ல”என்று முடிவு செய்தான்.
“ஒழுங்கா டியூட்டியப் பாக்கறதுக்குத்தான் சம்பளம் தர்றாங்க. நாளைக்கு டியூட்டி இல்ல. அப்ப வீட்டிலேயே இருக்கலாம்”. மெத்தையை விரித்து படுக்க போனபோதுதான் மனைவியிடம் இருந்து போன் வந்தது. பளபளப்புடன் மின்னிய போன் திரையில் மனைவியின் பெயரைப் பார்த்தவுடன் அவன் பதட்டமடைந்தான். “இந்த நடுராத்திரியில அவளுக்கு என்ன ஆச்சு? தூக்கத்தில் இருந்து எழுந்து அவசரமாக அழைக்க என்ன பிரச்சனை ஏற்பட்டது?”. படபடக்கும் இதயத்துடன் அவன் போனை எடுத்தான்.
“அலமாரிக்குப் பின்னால ஒரு பாம்பு! சீக்கிரமா வாங்க!”. அவளுடைய குரலில் லேசான நடுக்கம் தெரிந்தது. அவன் அப்போது வேறெதையும் பற்றி யோசிக்கவில்லை. கேட்டைப் பூட்டி வேகமாக வீட்டை நோக்கி நடந்தான். வெளி விளக்கைப் போட்டுக்கொண்டு அவள் வெளியில் நின்றாள். அவளுடைய முகத்தில் பதட்டம் இருந்தது.
“ அப்பதான் ரூமுக்குள்ளப் போனேன்”. நடுங்கிய குரலில் அவள் சொன்ணாள். “டாய்லெட்டுக்குப் போக எந்திரிச்சு லைட்டப் போட்டேன். அலமாரியோட பின்பக்கம் என்னமோ ஊர்ந்து போற மாதிரி இருந்தது. பார்த்தப்ப நடுங்கிப் போயிட்டேன். எப்படி உள்ள வந்ததுன்னு தெரியல’
ஏகநாதனுக்கு ஐந்து நிமிடம் மட்டுமே தேவைப்பட்டது. பாம்பைக் கொன்று குழி தோண்டி புதைத்தான். அப்புறம் ஒரு ஹீரோவைப் போல அவளைப் பார்த்துச் சிரித்தான். வீட்டுக்குள் போய் கொஞ்ச நேரம் இருந்துவிட்டுப் போகலாம் என்று நினைத்து கதவை மூடப் போனபோதுதான் நர்ஸிடம் இருந்து அந்த போன் வந்தது.
“ஒரு பேஷண்டுக்கு சீரியஸ். டாக்டர் இப்ப வந்திடுவாரு. பேஷண்ட்டோட சொந்தக்காரங்களும் வருவாங்க”. வீட்டின் கதவை பூட்ட மனைவியிடம் சொல்லிவிட்டு அவன் மருத்துவமனை நோக்கிப் பாய்ந்தான்.
கேட்டுக்கு அருகில் போய் நின்றபோது டாக்டர் வந்தார். ஐந்து நிமிடம் ஆனபோது நோயாளியுடைய சொந்தக்காரர்களும் வந்தார்கள். அரை மணி நேரத்திற்குள் அவர்கள் நோயாளியை ஆம்புலன்சில் ஏற்றி வேறு ஏதோ பெரிய மருத்துவமனைக்குக் கூட்டிக்கொண்டு போனார்கள்.
டாக்டரும் உடனே திரும்பிப் போனார். “இன்னிக்கு ராத்திரி இதுக்கு அப்புறம் சீரியஸான பிரச்சனை எதுவும் வராது” என்று நன்றாகத் தெரிந்த போதும் வீட்டுக்குப் போவதில்லை என்று அவன் தீர்மானித்தான். “அவ சுகமாத் தூங்கட்டும்”. அவன் செக்யூரிட்டி ரூமில் படுக்கையில் சாய்ந்தான்.