வீதியில் நின்ற அவர்களைப் பார்த்த போது ஹரிக்குப் பல யோசனைகள் தோன்றின. ஆனால், ஆபீசுக்கு நுழைய ஒரே ஒரு வழி மட்டும்தான் உள்ளது. அங்குதான் அவர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் என்றால் நாலைந்து பேர் அடங்கிய ஒரு கூட்டம். சுகுமாரனுடைய சகோதரன்களும் அம்மாவும். சுகுமாரன் இறந்து ஆறு மாதங்கள் ஆகிவிட்டன. சம்பவம் நடந்து ஒரு வாரம் முடிந்த போதுதான் அந்தக் கூட்டம் முதல் முதலாக ஆபீஸுக்கு வந்தது.
ஹரி அந்த ஆபீசுக்கு வந்து ஒரு வருடமே ஆகியிருந்தது. சுகுமாரனுடன் அந்த அளவு நெருக்கமோப் பழக்கமோக் கிடையாது. கீழேயுள்ள வராந்தாவில் குடித்துவிட்டு இருக்கும் சுகுமாரனைப் பார்க்கலாம். சூப்ரென்டென்ட் சுபாஷ் கூப்பிட்டுக் கேட்பான். “இன்னிக்கு என்ன குடிச்ச? சாராயமா வேறயா?”. பிறகு மெதுவான குரலில் சுபாஷ் ஹரியிடம் சொல்வான்.
“ஒரு தடவை இவன் வயல்ல அறுவடை முடிஞ்சு எனக்கு ஒரு சரக்கு கொண்டு வந்து கொடுத்தான். நான் வேணாம்னுட்டேன். இவனுக்கு நல்ல ஸ்டேமினா”. அதைக் கேட்டபோது ஹரிக்கு ஆச்சரியமாக இருந்தது. அப்போதெல்லாம் அதிகம் பேசக்கூடாது என்ற தோணலில் ஹரி அமைதியாக இருந்தான்.
சுகுமாரன் ஒரு ப்ரத்யேக கறுப்பு. நல்ல விவசாயி. ஜாதிக்காய் உட்பட பலவற்றைப் பயிர் செய்தான். திராட்சையையும் முந்திரியையும் மட்டுமே அவனிடம் இருந்து வாங்குவார்கள். நிலத்துக்குப் பக்கத்திலேயே மலையும் குன்றும் அதற்கு அருகிலேயே சாராயம் காய்ச்சும் இடமும். அதே ஆபீசில் இருந்த அபிநவின் மனைவி புற்றுநோய் வந்து இறந்து போனாள். அந்த நினைவுகளில் இருந்து விடுபட அவனுக்குச் சிறந்த மருந்து சுகுமாரன் தரும் சரக்குதான்.
யாருக்கு ஞாபகங்களில் இருந்து தப்பிக்க வேண்டியது? அரசு வேலை கிடைப்பதற்கு முன்பு வரை சுகுமாரன் ஒரு காலேஜ் பஸ் டிரைவராக இருந்தான். அப்போது அவன் ஒரு கல்லூரிப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு ஓடிவிட்டான். அம்மா அப்பா செத்துப் போனாலும் கூட அவள் பிறந்த வீட்டுக்கு வரக்கூடாது என்று உடன் பிறந்தவர்கள் சொல்லிவிட்டார்கள்.
சுகுமாரனுக்கு அது மிகவும் வசதியாகப் போய்விட்டது. வந்த பெண்ணுடைய வீட்டுக்காரங்களுக்குப் பயந்துதானே நாம் மனைவியை வைத்துக் கொண்டு அழுகிறோம்? சுகுமாரனுக்கு எது வேண்டுமானாலும் செய்ய இது லைசென்ன்ஸ் கொடுத்தது போலாகிவிட்டது. இரண்டு குழந்தைகள், கருவுற்றிருந்த போது மனைவியைத் தாங்குவதற்கு பதில் அவன் அடித்து உதைத்தான்.
அன்றுதான் ஹரிக்கு இதெல்லாம் தெரிய வந்தது. சுகுமாரனுடைய கதையைக் கேட்ட அண்று ஹரிக்கு சங்கடமாக இருந்தது. ஆனால், அதிகம் தாமதிக்காமல் சுகுமாரன் டியூட்டியில் இருந்த போதேச் செத்துப் போனான். எதிர்பார்த்திருந்த ஏதோ ஒன்று போலத்தான் ஆபீஸில் எல்லோரும் அந்த மரணச்செய்தியைக் கேட்டார்கள்.
ஒருவருடைய முகத்திலும் அதிர்ச்சியோ துக்கமோ இல்லை. ஒரு மரத்தின் இலை பழுத்துவிட்டால் உதிர்ந்து விழும்தானே? எல்லோரும் மரண வீட்டுக்குப் போனார்கள். பொருளாதார ரீதியாக உதவிகள் செய்தார்கள். ஒரு வாரத்துக்குப் பிறகு சுகுமாரனின் எண்பத்தி ஐந்து வயது அம்மாவும் இரண்டு சகோதரன்களும் சகோதரிகளும் வந்தார்கள்.
இறந்து அதிக நாள் ஒன்றும் ஆகவில்லையே? பிறகு எதற்காக இவர்கள் வந்திருக்கிறார்கள் என்ற ஒரு பரபரப்போடு ஹரி அவர்களை வரவேற்றான். மீசைக்கார அண்ணன் சோமநாதன் பேச ஆரம்பித்தான். “ஒரு அனுகூட அவளுக்குக் கொடுக்கக்கூடாது. சுகு சாகறதுக்கு முத நாள் வேறொருத்தனோட ஓடிப்போனவளாக்கும் அவனோட பொண்டாட்டி”
அவன் பேசிக் கொண்டிருக்கும் போதே வாயின் முன் வரிசை பல்லின் இடுக்கில் இருந்து எச்சில் தெறித்து ஹரிக்கு முன்னால் இருந்த பைலின் மீது விழுந்தது. “சுகுவோட அம்மா உசிரோட இருக்காங்க இல்லயா? அவங்களுக்கு இனி மேல யாரு இருக்காங்க? பெத்த வயித்தோட வேதனை அவங்களுக்கு மட்டும்தானே தெரியும்?
அவங்களுக்கு மட்டும்தான் பெரிய இழப்பு. அவங்களுக்கு எல்லா மருந்தையும் சுகுமாரன்தான் வாங்கி கொடுத்துக்கிட்டு இருந்தான். அத எல்லாம் வாங்கிக் கொடுக்க எங்க கிட்ட காசு பணம் இல்ல”. ஒரு சாமர்த்தியசாலிப் பெண்ணுடைய தந்திர புத்தியோடு சகோதரி ஜலஜா விஷயங்களை கதை போலப் பெரிதாகச் சொன்னாள்.
“தம்பி லாலுவுக்கு என்ன எல்லாம் கிடைக்கும்? இன்சூரன்ஸ், பி எஃப், கருணை அடிப்படையில் வேலை”. ஆபீஸில் இருந்து எத்தனை பணம் கிடைக்கும் என்பது வரை அவர்கள் விசாரித்து தெரிந்து வைத்திருந்தார்கள். ஒவ்வொருவரும் சொல்லி முடித்தபோது சுகுமாரனுடைய அம்மா பேசும் முறை வந்தது.
அதுவரை வாயைத் திறக்காமல் இருந்த அவள் பெரிதாக வாய் திறந்து அழ ஆரம்பித்தாள். “என்னத்த சொல்றது சார். சினிமா நடிகன் மாதிரி இருந்த என்னோட பையனை அந்தப் பொண்ணு வசீகரிச்சு கல்யாணம் கட்டிகிட்டப்ப ஆரம்பிச்சதுதான் அவனோட கஷ்டகாலம். அவ பெத்ததும் அதே மாதிரிதான்.
“இவங்கல்லாம் இல்லயா?”. ஹரி கேட்டான்.
“இந்த ராப்பட்டினிக்காரங்கள நம்பி நான் என்னத்த செய்யறது?”
“யாருகூட இருக்கீங்க?”
“நேத்திக்கு மட்டும் சுகுவோட வீட்டுல இருந்தேன்”
“நான் கூட்டிகிட்டுப் போறேன். அவ கூட தங்கவச்சா அது சரியாகாது” சோமநாதன் சொன்னதைக் கேட்டும் கேட்காதது போல ஹரி பைல்களில் மூழ்கினான்.
“அம்மாவ நாங்க கூட்டிகிட்டுப் போறோம்” சகோதரிகள் குறுக்கிட்டார்கள்.
“நாந்தான் அம்மாவப் பாத்துக்க வேண்டியது. நாந்தான் சின்னப் பொண்ணு”
“லாலுவுக்கு இந்த விஷயத்துல பொறுப்பு இருக்கு” இதைக் கேட்டுவிட்டு சோமனும் ஜலஜாவும் வாயை மூடியபடி சிரித்தார்கள்.
லாலு அவர்களை முறைத்துப் பார்த்தான். “இந்த சந்தர்ப்பத்துல நாம சண்டை போட்டுக்கிட்டு இருக்கக்கூடாது. ஒன்னா சேந்து செயல்படணும்” என்பது போல இருந்தது அந்தப் பார்வை.
சகோதரர்களுக்கு அது சட்டென்று புரிந்தது. “அதெல்லாம் உங்களோட விஷயம். அரசாங்கத்தோட காரியம் முறைப்படி நடக்கும். நான் வேணுங்கறத செய்யறேன்”. ஹரிக்கு அவர்கள் போனால் போதும் என்று இருந்தது.
“வேணுங்கறது போல செஞ்சா சரி. ஆனா... அந்த பொம்பளைக்கு ஒரு சல்லிக் காசு கொடுக்கக்கூடாது. கொடுத்தா...!”. சோமன் சுண்டு விரலை உயர்த்தினான்.
மோசமான பொம்பள என்றும் சல்லிக் காசு என்றும் சொன்னபோது ஹரி அதைக் கேட்க விருப்பப்படாதவன் போல பைல்களுக்குள் மூழ்கினான். அன்று முழுவதும் அவனுக்குச் சங்கடமாக இருந்தது. அவன் வியர்வையில் குளித்தான். மறுபடி மறுபடி தண்ணீரை குடித்தான். மத்தியானச் சாப்பாட்டைச் சாப்பிட மறந்தான்.
சுபாஷ் அன்று பிற்பகலில்தான் ஆபீஸுக்கு வந்தான். விஷயத்தை கேட்டபோது அவன் பெரிதாகச் சிரிக்க ஆரம்பித்தான். “என்ன சொல்றது சார். அவனோட பொண்டாட்டி ஒரு பாவப்பட்ட பொண்ணு. அடிச்சு உதச்சாக் கூட எதுத்து எதுவும் செய்யத் தெரியாத பாவம். அவளோட அப்பாவும் அம்மாவும் நல்ல பேர் போன டாக்டருங்க.
பொண்ணு கூட பேசறதுக்கு அவங்களுக்கு நேரம கிடையாது. அப்போதுதான் அதற்கான நேரம் உள்ள சுகுமாரன் வந்து சேர்ந்தான். அவன் ஒரு வர்த்தமான மகாவீரனாக்கும். சுகுமாரன் சாகறதுக்கு முத நாளு அவனோட அடி உதையை தாங்க முடியாம அந்தப் பொண்ணு பக்கத்து வீட்டுக்கு ஓடிப் போய் அடைக்கலம் புகுந்தா.
அந்த வீட்டுல அஞ்சாறு ஆம்பளைங்க தங்கியிருக்காங்க. அதனாலதான் அவ ஓடிப்போனவன்னு இவங்க சொல்றாங்க. அந்த வீட்டுல இப்படி நடக்கறது என்னிக்கும் வாடிக்கைதான். நாம இறுதிச் சடங்குக்குப் போனப்பக் கூட அம்மாவும் பொண்ணும் அலறிகிட்டு இருந்தத கேட்டோம் இல்லயா?
இவளாலதான் என்னோட பையன் செத்துப் போனான்னு அந்த அம்மா சொன்னாங்க இல்லயா?”
“இப்ப நான் என்ன செய்யணும்?”
“சுதந்திரமா செயல்படறதா இருந்தா சார் ரிப்போர்ட்டு தயார் செய்யணும்”
“நீங்க வேணுங்கற நடவடிக்கைங்கள எடுப்பீங்க இல்லயா?” சீனியர் அசிஸ்ட்டெண்ட் வர்கீஸ் தயாரித்திருந்த ரிப்போட்டில் சுகுமாரனுடைய குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள் இருந்தன.
பென்ஷனில் அம்மாவுக்கு அருகதை உண்டு. பி எஃப் தொகையை அம்மாவுக்கும் இரண்டாவது மகளுக்கும்தான் சுகுமாரன் முன்பே எழுதி வைத்திருந்தான். மனைவிக்கு இதில் எந்த அருகதையும் இல்லை. முடிவு செய்யமுடியாத ஏதோ ஒன்று அதில் மிச்சமாக இருக்கிறது என்ற தோணலில் ஹரி சுகுமாரனுடைய மனைவியையும் குழந்தைகளையும் ஆபீஸுக்கு அழைத்தான்.
ஒரு அலறலே மனித உருவம் எடுத்து வருவதைப் போல ஒரு பெண்ணும் இரண்டு குழந்தைகளும் தூரத்தில் வருவதைப் பார்த்து ஹரிக்கு உறுதியாகத் தெரிந்தது. அது சுகுமாரனுடைய குடும்பம்தான். பூமி விழுங்கிவிடுவது போல ஒரு சிறிய தேவதையும் சுகுமாரனைப் போல இருக்கும் இரண்டு குழந்தைகளும்.
“பென்ஷன் விஷயத்துல சில விளக்கங்களக் கேக்கத்தான் கூப்பிட்டேன்.
கருணை அடிப்படையில யாருக்கு எதக் கொடுக்கணும்ங்கறதப் பத்தி முடிவு செய்யணும். எது வரைக்கும் படிச்சிருக்கீங்க”
“எம் ஏ முடிக்கல”
“அதுக்கு முன்னாலயே கல்யாணம் ஆயிடுச்சா?” அவள் தலையை ஆட்டினாள்.
பிறகு மெதுவாகச் சொன்னாள். “ஹரிக்கு என்னை ஞாபகம் இல்ல. யுனிவர்சிட்டி போட்டிகள்ல நாம ஒன்னா பங்கெடுத்து இருக்கோம்.
எப்பவும் உங்களுக்குத்தான் முதலிடம். ஒன்னு ரெண்டு தடவை எனக்கு இரண்டாவது இடமும் மூனாவது இடமும் கிடைச்சிருக்கு. மாயா ராஜசேகரங்கறதுதான் என்னோட பேரு” முன் ஜென்மத்தில் எதையோ விவரிப்பது போல அவள் மிக அனாயாசமாக எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் “
மனசுல நினைக்கறத மறச்சு வாழறது தண்டனையத் தர்ற விஷயங்களாத்தான் இப்ப எனக்குத் தோணுது.
“நான் மறந்து போயிட்டேன். மாயா. உங்க முகத்த என்னால ஞாபகப்படுத்திப் பாக்க முடியல”
“யாருக்கும் என்னை அடையாளம் கண்டுக்கமுடியும்னு எனக்குத் தோணல. அப்ப நான் இப்படி இல்ல”
“அது போகட்டும். மாயா நீங்க வேலய ஏத்துக்கறீங்க இல்லயா?” மெல்லிய குரலில் ஒரு முணுமுணுப்பை மட்டுமே அவள் பதிலாகத் தந்தாள்.
அடுத்த நாள் காலையிலேயே சுகுமாரனுடைய அம்மாவும் சகோதரர்களும் வந்தார்கள். அதோடு புதிதாக ஒரு ஆள். எதற்கும் ஒரு உதவிக்கு இருக்கட்டும் என்று நினைத்து ஹரி சுபாஷையும் தன் அறைக்குள் அழைத்தான்.
“எனக்கு உசிரு இருக்கற மட்டும் அவ இங்க வேலைக்கு வர்றத நான் ஏத்துக்கமாட்டேன்” சுகுமாரனுடைய அம்மா பைத்தியம் பிடித்தவள் போல பெரிதாக அலறினாள்.
“அவங்களுக்கு வேலைக்கு வர்றதுக்கு எல்லா அருகதையும் இருக்கு” ஹரி உறுதியாகச் சொன்னான்.
“இது யாருன்னு சாருக்குத் தெரியுமா?” கூட இருந்த அறிமுகம் இல்லாத அந்த ஆளை முன்னால் அழைத்து சுட்டிக்காட்டி லாலு சொன்னான்.
“இது அவளோட கள்ளக் காதலன்”. சோமன் விவரித்தான்.
அப்போதும் அவனுடைய வாயில் இருந்து வெளியில் வந்த எச்சில் ஹரியுடைய மேசையின் மீது விழுந்தது. ஹரிக்கு சிரிப்பு வந்தது.
“முத தடவையா ஒரு கள்ளக் காதலன் இங்க வரான்” ஹரி அவனை உற்றுப் பார்த்தான்.
அவன் நெளிந்தான்.
“அவ இன்னொருத்தனைக் கட்டிகிட்டா அவளுக்கு பென்ஷன் வாங்கத் தகுதி இல்ல இல்லயா? நேத்து ராத்திரி இவனை அவளோட வீட்டுலேர்ந்து கையும் களவுமா பிடிச்சோம். அவனே இத ஒத்துக்கிட்டான். அதனால அவளுக்கு புருஷனோட பென்ஷனுக்கு தகுதி இல்ல” லாலு விவரித்தான்.
“சோமன் அண்ணனும் லாலுவும் நேத்திக்கு ராத்திரி அங்க காவல் இருந்ததுனால இவனை பிடிக்கமுடிஞ்சது. பல ஆளுங்களும் அங்க வந்து போயிகிட்டு இருக்காங்கன்னுதான் சொல்றாங்க. பொய் சொல்வதை அனுபவிக்கும் இயல்பான ஒரு மூச்சுமுட்டலோடு ஜலஜா சொல்லி முடித்தாள்.
சுபாஷ் இரகசியமாக எதையோ சொல்வது போல ஹரியைப் பார்த்தான். “சட்ட திட்டத்த எல்லாம் நல்லா தெரிஞ்சுகிட்டுதான் இவங்க வந்திருக்காங்க. இவங்க கிட்ட வாக்குவாதம் செஞ்சு பிரயோஜனம் இல்ல”. ஹரி அவர்களை தவிர்க்க முயற்சி செய்தான்.
“பாக்கறேன்” ஹரி சொன்னான். “இப்படிச் சொன்னாப் போதாது. எழுதித் தரணும்”
“அரசாங்க வேலை இல்லயா? காலம் எடுக்கும்” சுபாஷ் குறுக்கிட்டான்.
“ம். இன்னொரு விஷயம். அந்த மாயாவுக்கு வேல கொடுக்க முடியாது”
“அவங்க கேட்டாங்கன்னா கொடுத்துதான் ஆகணும்”
ஹரிக்கு கோபம் வந்தது. சுபாஷ் ஹரியை கொஞ்சம் இறுக்கிப் பிடித்தான்.
“கேட்டாதானே? அவங்க கேக்காத மாதிரி பாக்கலாம்”.
“இந்த லாலுவுக்கு வேலை கிடைக்குமா?”. ஜலஜாதான் அதைக் கேட்டாள்.
“கருணை அடிப்படையிலன்னா மனைவிக்கும் குழந்தைக்கும்தான் வேலைக்கு தகுதி உண்டு. அரசாங்கம் வேறெதயும் அனுமதிக்கறது இல்ல. உங்களுக்கு வேணும்னா கோர்ட்டுக்குப் போய்ப் பாருங்க. எங்களால ஒன்னும் செய்யமுடியாது”. ஹரி நயமாகச் சொன்னான்.
“அது கிடைக்கலைன்னா போகட்டும். ஆனா முதக் குழந்தைக்குதான் வேலை கொடுக்கணும்”
“அது முடியாத குழந்தையில்லயா? அதால வேலை செய்ய முடியுமா? ரெண்டாவது குழந்தை படிச்சுகிட்டு இருக்கு இல்லயா? அதுக்குதான் தகுதி இருக்கு”
“அது நடக்காது”. சுகுமாரனுடைய அம்மா அலறினாள்.
“அவ ரொம்ப அகங்காரம் பிடிச்சவ. இந்த ஜலஜாவோட மகள கட்டிக்கடான்னு சொன்னப்ப அவன் வெக்கப்பட்டான். பேசத் தெரியாத பய அவன். இருந்தாலும் அவனுக்கு என்னோட பொண்ண கட்டிக்கொடுக்க முடியல”. காயம்பட்ட ஆக்ரோஷத்தோடு ஜலஜா பேசினாள்.
“விதிப்படி முதக் குழந்தைக்குதானே தகுதி. அது வேணாம்னு சொன்னாத்தான் அடுத்த குழந்தைக்கு கொடுக்கமுடியும்? லாலுவுக்கு எல்லாம் தெரியும். நாங்க சொன்னதுக்கு மாறா வேற எதாச்சும் செஞ்சீங்கன்னா...!”. லாலுவும் சோமனும் ஒரே நேரத்தில் மேசை மீது கைகளைத் தட்டிச் சொன்னார்கள்.
ஒரு மிரட்டலின் தாளத்தோடு எல்லோரும் வெளியில் போனார்கள்.
“சார். பாத்து ஜாக்கிரதயா நடந்துக்கணும். உங்க கிட்ட ஒரு வெகுளித்தனம் இருக்கு. அது ரொம்ப ஆபத்தானது. இந்த மாதிரி காரியங்கள்ல ஒரு வீரன் மாதிரி நீங்க நடந்துக்கணும்” சுபாஷ் அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தான்.
பிறகு சில நாட்கள் கேள்விகளுடனும் அச்சங்களுடனும் கடந்து சென்றன.
இப்போது அந்தக் கூட்டம் அங்கே வருகிறது. ஹரி லேசாக நடுங்கினான். அவனுக்கு வியர்த்தது.
“சுகுமாரனோட அம்மா கொஞ்சம் இளச்சுப் போயிருக்காங்க. நீங்க அவள வேலையில் சேர்றதுக்கு உதவறீங்க இல்லயா?”
சோமனுடைய குரலில் அது உறுதியாக தெரிந்தது. மேசைக்கு மேல் அவனுடைய வார்த்தைகள் தெறித்து விழுந்தன.
“அவளோட அழகப் பாத்தப்ப சார் கொஞ்சம் மயங்கிப் போயிட்டீங்க போல இருக்கு? சார் மாறிட்டீங்க. நீங்க இந்த விஷயத்துல அந்நியமாப் போயிட்டீங்க”
“காசு பணம் விஷயத்துல எனக்குப் பெரிய ஆசை எதுவும் இல்ல. ஆனா நீங்க செய்யறது மகா பாவம். ஒரு சாதுவான பொண்ண வாழ விடமாட்டீங்களா? அந்தப் பொண்ணு இன்னிக்கு வரைக்கும் உங்களுக்கு எதிரா ஒரு வார்த்த கூட பேசல. மத்தது எல்லாத்தயும் நீங்களே வாங்கிக்கங்க. அந்தப் பொண்ணு வேலய மட்டுமாச்சும் வாங்கிகிட்டு குடும்பத்த காப்பாத்தட்டுமே?”
“அவளோட மேனி அழகப் பாத்துதான் பாவம்னு உங்களுக்கு தோணிச்சு இல்ல?” ஜலஜா அருவருப்பான முகத்தோடு சொன்னாள்.
“அந்தப் பொண்ணுக்கும் ரெண்டாவது குழந்தைக்கும் வேலை கொடுக்க நீங்க சம்மதிக்க மாட்டீங்க. முதக் குழந்தையால வேலை செய்ய முடியாது இல்லயா”
“அதப் பத்தி நீங்க கவலப்படவேணாம். அவ மட்டும் வேலைக்கு வந்தா அம்மா ஆசிட் வீசுவாங்க”
“இந்த நாட்டுல சட்ட திட்டம்னு ஒன்னும் இல்லயா?”
“முதல்ல தப்பு செய்யணும். அப்பறம்தான் சட்டம் எல்லாம். இதுவரைக்கும் நாங்க சொல்றது எதுவும் உங்களுக்குப் புரியலயா”? படிச்சுட்டும் உங்களுக்கு அறிவு இல்லயா?”. ஹரிக்கு கோபம் வந்தது.
“போடா வெளியில”
“போகலைன்னா என்ன செய்வ?” சோமநாதன் சவால் விட்டான்.
“நான் போலீசக் கூப்பிடுவேன்”
சுபாஷ் ஓடிவந்து அவர்களை கூட்டிக்கொண்டு வெளியில் போனான். ஹரி தூக்கிய கையைக் கீழே போட்டான். சோமனை அறையில் இருந்து வெளியில் சுபாஷ் கூட்டிக்கொண்டு போகும் போதுதான் அவனுடைய கையில் இருந்த கத்தியை ஹரி பார்த்தான்.
ஹரிக்கு எதிராக குற்றச்சாட்டுகள். வழக்குகள் ரிப்போட்டுக்கு எதிராக விசாரணைகள்.
அரசாங்கத்தின் முடிவு தெரிவதற்கு முன்பு ஹரிக்கு அந்த இடத்தில் இருந்து மாறுதல் வந்தது. எவ்வளவோப் போராடியும் மாயாவுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற நிராசையோடு அவன் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினான்.
நாலரைக்கு பிறகு ஒரு நண்பனுடைய அம்மா இறந்ததை விசாரித்து விட்டு திரும்பி வரும்போது காளை மாடுகள் கயிற்றை அவிழ்த்துக்கொண்டு சாலைக்கு குறுக்கே ஓடியதைத் தொடர்ந்து ஹரி வண்டியை நிறுத்தினான்.
அப்போது சாலையை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த ஒரு பெண்கள் கூட்டத்தை பார்த்தான். அந்தக் கூட்டத்தில் மாயாவைப் பார்த்தபோது சந்தோஷம் ஏற்பட்டது. மனதுக்குப் பிடித்த ஒரு ஆளைப் பார்த்தது போல அவனுக்குத் தோன்றியது. மாயா வண்டிக்கு அருகில் ஓடி வந்தாள்.
“மாயா. எங்க இங்க?”. “சின்னப் பொண்ணு அவளுக்குப் பிடிச்ச ஒருத்தனோட வீட்ட விட்டு ஓடிப்போயிட்டா. அதனால அந்த ஊர்ல வாழறதுக்கு சொந்தக்காரங்க யாரும் விடமாட்டேனுட்டாங்க. வீட்டயும் அவங்க எடுத்துகிட்டாங்க. எனக்குத் தெரிஞ்ச ஒரு தோழி இங்க இருந்தா. அவதான் என்னை இங்க கூட்டிகிட்டு வந்தா. வீட்ட வாடகைக்கு எடுத்தேன். இப்ப இந்த வேலையும் கிடைச்சிருக்கு. நல்லதாப் போச்சு”
“மாயா. எத்தன நாளைக்கு இப்படியே வாழமுடியும்?. எனக்கு கல்யாணம் ஆகலைன்னு உனக்குத் தெரியும். நாம கல்யாணம் செஞ்சுக்கலாம். நல்லபடியா வாழலாம்” அந்த வார்த்தைகள் தன் வாயில் இருந்துதான் வந்ததா என்று ஹரிக்கு ஆச்சரியமாக இருந்தது.
“ஹரி. ஜோக் அடிக்காதீங்க. எனக்கு சாயங்காலம் வரைக்கும் இங்க வேலை இருக்கு. சிரிச்சுப் பேச முடியாது”
“இந்த ஜோக்கை என்னிக்காச்சும் நிஜமாக்கணும்னு மாயா உனக்குத் தோணிச்சுன்னா என்னைக் கூப்பிடு”
ஆம் என்றோ இல்லை என்றோ சொல்லாமல் மாயா சிரித்துக் கொண்டிருந்தாள்.
காட்சியில் இருந்து மறையும் வரை ஹரி அவளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் அவசரமாக வேலையை முடித்துக்கொண்டிருந்தாள்.
யாரோ தலையில் சுமத்திய சுமையை இறக்கி வைக்க இடம் தேடி ஓடிக்கொண்டிருந்தாள்.