தினமும் காலை நடைப்பயிற்சி முடிந்து வீட்டுக்கு வரும் பாலன் மாஸ்ட்டர் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு காலை உணவையும் சாப்பிட்டு முடித்து நேராக செய்தித்தாள்களைப் படிக்கச் செல்வது வழக்கம். அன்று என்னவோ? வராந்தாவில் இருந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்தபடி உட்கார்ந்து சிந்தனையில் மூழ்கியிருந்தார்.
அதைப் பார்த்த அவருடைய மனைவி சரோஜத்திற்கு அதில் ஏதோ விபரீதம் இருப்பது போலத் தோன்றியது. “இது வழக்கமான ஒன்று இல்லயே? என்ன ஆச்சு?”. லேசான பதட்டத்தோடு அவள் அவருக்கு அருகில் போய் கேட்டாள். “என்ன விஷயம்? எதப் பத்தி இவ்வளவு யோசனை? உடம்புக்கு ஏதாச்சும் சரியில்லயா?”
லேசான ஒரு புன்முறுவலுடன் சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்த அவர் மனைவியிடம் சொன்னார்.
“ஒன்னுமில்ல. இருந்தாலும்...!”. ஏதேதோ வேலைங்கள இன்னும் செஞ்சு முடிக்கறதுக்கு இருப்பது போல ஒரு தோணல். அதயும் ரொம்ப சீக்கிரமாவே செஞ்சு முடிக்கணும்”. சொல்லிவிட்டு அவர் குளியலறையை நோக்கி நடந்தார்.
சரோஜம் எதையும் புரிந்துகொள்ளமுடியாமல் வராந்தாவின் அரைச் சுவரில் இருந்த தூணில் சாய்ந்து நின்றாள்.
அவள் யோசித்தாள். “இந்த வயசுல இன்னும் என்ன செஞ்சு முடிக்கவேண்டிய வேலைங்க இருக்கு?. உழச்சு சம்பாதிச்ச காச வச்சு சின்ன வயசுலேயே பழய வீட்ட பெரிசாக்கி அம்மாவயும் அப்பாவயும் அங்கே குடியிருக்க வச்சு அவங்கள நல்ல விதமா பாத்துகிட்டு அவளுக்கு நல்ல ஒரு புருஷனா... குழந்தைங்களுக்கு நல்ல அப்பாவா இருந்து அவங்கள படிக்க வச்சு வேலைக்கும் போகச் செஞ்சாரு. மகன் இன்னிக்கு குடும்பத்தோடு சவுத் ஆப்பிரிக்காவுல இருக்கான். மகள நல்ல ஒரு இடத்துல கல்யாணம் செஞ்சு கொடுத்தாச்சு. பத்து வருஷ வெளிநாட்டு வாழ்க்கையை முடிச்சுகிட்டு ஊருக்கு வந்து குடும்பத்தோடு வாழ்ந்துகிட்டு இருக்கா. இதுக்கு அப்புறமும் செஞ்சு முடிக்க வேண்டிய வேலை இருக்குன்னு எத இவரு சொல்றாரு? ஒன்னும் புரியல”
காலை உணவையும் சாப்பிட்டு முடித்து வராந்தாவுக்கு வந்து உட்கார்ந்து செய்தித்தாள்களை கையில் எடுத்த அவரிடம் சரோஜம் கேட்டாள். “என்னோட கேள்விக்கு பதில் சொல்லிட்டு அப்புறமா செய்தித்தாளப் படிங்க”
அவர் செய்தித்தாளை மடக்கி வைத்து விட்டு சரோஜத்தின் கேள்வியை சாய்வு நாற்காலியில் இருந்தபடி கேட்டார்.
அவள் தொடர்ந்தாள். “உங்களுக்கு செஞ்சு முடிக்க இன்னமும் என்ன வேல இருக்கு?. கடமைங்கள ஒழுங்கா செய்யலைன்னு தோணுதா? என்னவோ எனக்கு அப்படி ஒன்னும் தோணல”
“நான் அத ஒன்னும் சொல்லல சரோஜம். இந்த வீட்டுல ஒவ்வொரு அறையிலயும் எத்தன எத்தன சாமானுங்கள பத்திரப்படுத்தி வச்சிருக்கோம்! அதுல பலதும் நமக்கு பயன்படாதவையே. ஆனால் அதெல்லாம் மத்தவங்களுக்கு பயன்படக்கூடியவை. அப்படிப்பட்டவங்களக் கண்டுபிடிச்சு அதயெல்லாம் அவங்ககிட்ட கொடுக்கணும். அதப் பத்திதான் நான் யோசிச்சுகிட்டு இருந்தேன். எதுவா இருந்தாலும் அதுங்கள நாம போறப்ப கொண்டு போக முடியாது இல்லயா?”
“நீங்க ஏன் திடீர்னு இப்படி யோசிக்க ஆரம்பிச்சீங்க? எங்கப் போறதப் பத்தி சொல்றீங்க? வீட்டயும் தோட்டத்தயும் வித்துக் காசாக்கி அப்பா அம்மாக்கள முதியோர் இல்லத்துல கொண்டு போய் விடற பசங்க ஊர்ல எத்தன பேரு இருக்காங்க? நம்ம பசங்களும் அப்படி செய்வாங்கன்னு பயப்படறீங்களா?
அவங்க அப்படி நினைப்பாங்களா? இல்ல. ஒரு நாளும் அவங்க அப்படிச் செய்ய மாட்டாங்க. போன மாசம் உங்களோட எழுபத்தி ஒன்பதாவது பிறந்த நாளைக்கு மகனும் மகளும் குடும்பத்தோட வந்தாங்க. அப்பாவும் அம்மாவும் மட்டும் இந்தப் பெரிய வீட்டுல இருக்கறது கவலையா இருக்குன்னு சொன்னாங்க. உடனே இதுக்கு ஒரு வழி செய்யணும்னு மகள் ஞாபகப்படுத்தினா. அப்படின்னா அங்கப் போறதப் பத்திதான் நீங்க யோசிச்சுகிட்டு இருந்தீங்களா? கொஞ்ச நாளைக்கு முன்னால ஒரு நாள் திடீர்னு உங்களுக்கு தல சுத்தல் வந்துச்சு. ஆஸ்பத்திரியில ஒரு நாள் இருக்கற மாதிரி ஆயிடுச்சு. இனிம அதிக நாள் இருக்கமாட்டோமோன்னு ஒரு பயம்”
“அது...!”
“அதுதான் உங்க மனசுல இருந்திருக்கணும்”
“சில சமயத்துல...!”
“சரோஜம். நீ ஏன் திடீர்னு அப்படி நினைக்கற?”. செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருப்பதற்கு நடுவில் சரோஜத்திடம் கேட்டார்.
“நீ ஏன் இப்படி யோசிக்கற? நான் சொன்னது புரியலயா?”
“இல்ல. நீங்க எங்கப் போறதப் பத்தி சொல்றீங்க?”
“எங்கயா இருந்தாலும் நாமப் போற இடத்துல நாம எல்லாத்தயும் எடுத்துகிட்டுப் போக முடியுமா? நமக்கு வயசாகுது இல்லயா? எனக்கு எம்பது வயசாக இன்னும் அதிக நாள் இல்ல. பசங்களோட போகவேண்டி வந்தா எந்தெந்த சாமான்கள எடுத்துட்டுப் போக முடியும்? அவங்களோட புது வீட்டுல நவீனமா எல்லாம் உண்டு. அவங்க யாருக்கும் இந்த பழய சாமானுங்க தேவையும் இல்ல. அதனால இதயெல்லாம் வாடகைக்குக் கொடுக்கவோ அல்லது விக்கவோதான் செய்யணும். இந்தப் பழய சாமானுங்க பசங்களுக்கு ஒரு சுமை. ஆனா நமக்கு விலை மதிப்பு மிக்கது. புதுத் தலைமுறைக்கு இதெல்லாம் ஒரு வேண்டாத குப்பைதான். வீட்டப் பெருக்கி சுத்தப்படுத்தவே அவங்களுக்கு நேரமில்ல. அவங்க யாரும் இது வரைக்கும் நம்பளுக்கு எந்தக் கஷ்டத்தயும் கொடுத்தது இல்ல. அதனால நாமும் அவங்கள கஷ்டப்படுத்த முடியாது. யோசிச்சுப் பாரு. நான் சொல்றது சரிதானே?”
“சரிதான். பேரப் பசங்களோட ஓடி அலைஞ்சு கஷ்டப்படற எத்தனையோ வயசானவங்க நம்ம ஊர்லயே இருக்காங்க. பசங்க ஆபீஸ்க்குப் போறதே பெரிய கஷ்டமான வேலயா இருக்கு. குழந்தைங்களப் பாத்துக்க வயசானவங்க வீட்டுல இருக்காங்கன்னு அவங்க வேலைக்குப் போறாங்க. ஆனா... அம்மா அப்பாவோட கஷ்டங்கள அவங்க கண்டும் காணாத மாதிரி இருந்துடறாங்க. குழந்தைங்கள குளிப்பாட்டறதும் சாப்பாட்ட ஊட்டிவிட்டு ஸ்கூல்ல கொண்டு போய் விடறதும் எல்லாம் வயசான அப்பா அம்மாங்கதான். வீட்டு வேலய எல்லாம் முடிச்சு கொஞ்சம் ஓய்வா இருக்கலாம்னு நினைக்கற நேரத்துலதான் குழந்தைங்க ஸ்கூல் விட்டு வர்ற நேரமா இருக்கும். ஸ்கூல் பஸ் வரதுக்காகக் காத்துகிட்டு வெய்யில்ல போய் நிப்பாங்க. பலகாரம் செஞ்சு பாட்டி வீட்டுல இருப்பாங்க. அப்புறம் டியூஷனுக்குக் கொண்டு போய் விடணும். முடிஞ்சப்பறம் போய் கூட்டிகிட்டு வரணும். இதெல்லாம் முடியறப்பதான் மகனோ மகளோ ஆபீஸ்லேர்ந்து வருவாங்க. இந்த மாதிரி வயசான அம்மா அப்பாங்க எத்தனயோ பேரு இருக்காங்க. வளத்து ஆளாக்கி கஷ்டப்பட்ட பெத்தவங்கள அவங்களோட வயசான காலத்துல ஓய்வு எடுக்க விடற பசங்க ரொம்ப ரொம்பக் குறைவுதான். சரி. சாமானுங்க வேணும்னு கேட்டு யாராச்சும் வந்தாங்களா?”
சரோஜம் சொல்லி முடித்தபோது அவர் சொன்னார். “ஆள கண்டுபிடிக்கணும். வரவேற்பு அறையில நூத்துக்கணக்கான புத்தகங்க இருக்கு” சொல்லிவிட்டு அந்த அலமாரி அருகில் அவர் போய் நின்றார்.
சின்ன வயசுல பொக்கிஷம் மாதிரி சேர்த்துவைத்த புத்தகங்க அது. “நாம இதயெல்லாம் பல தடவை படிச்சிருக்கோம். பசங்கள வாசிச்சுப் பாக்கவும் சொல்லியிருக்கோம். செல்போனிலோ கம்ப்யூட்டரிலோ வாசிக்கற இந்தக் காலத்து பேரப் பசங்களுக்கு இதெல்லாம் தேவையில்லாதது. பாதுகாத்து வைக்கறதுல ஏதாச்சும் அர்த்தம் இருக்கா?”
“சரிதான். அப்ப என்ன செய்யலாம்?”
அவர் தொடர்ந்தார். “நம்ம வீட்டு வேலைக்கு வர்ற அந்த ராதாவோட ஒன்பதாவது படிக்கற பையன் இருக்கானே! அவனுக்கு புத்தகம் வாசிக்கறது ரொம்பப் பிடிக்கும். அதனால அவனுக்குக் கொடுக்கலாம். பழய அலமாரியையும் அவனுக்கேக் கொடுக்கலாம். அவனோட சின்ன வீட்டுல புத்தகங்கள வச்சுக்கறதுக்கு உரிய வசதி இல்ல. அதனால அவனுக்கு கொடுத்தா அது அவனுக்கும் சந்தோஷமாயிருக்கும். மீதிய கடைத் தெருவுல இருக்கற வாசகர் சாலைக்குக் கொடுக்கலாம். அப்ப வீட்டோட ஒரு பகுதி காலியாயிடும். அப்புறம் என்ன இருக்கு? ஏராளமான ஃபர்னிச்சருங்க. அக்கம்பக்கத்துல அத தேவைப்படறவங்க இருக்காங்க. வீட்டுக்கு விருந்தாளிங்க வந்தாங்கன்னா உக்காரறதுக்கு நாற்காலி கேட்டு வர்றவங்க இருக்காங்க இல்லயா? இதெல்லாம் அவங்களுக்கு நிச்சயமா உதவியா இருக்கும். அப்புறம் நான் பயன்படுத்திகிட்டு இருந்த அறையில நிறய விளையாட்டு சாமானுங்க இருக்கு. அத எல்லாம் கோயில் மைதானத்துல விளையாடற சின்னப் பசங்களுக்குக் கொடுக்கலாம். அப்புறம் என்ன இருக்கு? சமையலறையில கொஞ்சம் எவர்சில்வர் பாத்திரங்க. பாத்திரமே இல்லாத கஷ்டப்படறவங்களுக்கு அதக் கொடுக்கலாமே? அப்பறம் கொஞ்சம் துணிமணிங்க இருக்கு. தேவையானத மட்டும் வச்சுகிட்டு மீதிய ஏதாச்சும் ஒரு அனாதை இல்லத்துக்குக் கொடுத்துடலாம்”
அது வரை அவர் சொல்வதை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்த மனைவியிடம் அவர் சொன்னார்.
“சரோஜம். நீ என்ன ஒன்னுமே பேசாம இருக்க? எல்லாத்தயும் இழக்கப் போறோம்னு தெரிஞ்சுதுனால மனசுக்கு ரொம்ப வேதனையா இருக்கா? பழய சாமானுங்க எல்லாம் ஒவ்வொன்னும் பல நினைவுங்கள நமக்குத் தர்றது. ஆனா அதுங்க எல்லாத்தயும் இதுக்கு அப்புறமும் பத்திரமா பாதுகாத்து வச்சுக்கறதுல என்ன அர்த்தம் இருக்கு? எல்லாத்தயும் பொறுக்கி வாரி எடுத்து பழய சாமான் வாங்கற கடையில கொண்டு போய் கொடுக்க மனசு வரல. அதனால அவசியப்படற ஆளுங்களக் கண்டுபிடிச்சு அவங்க கிட்ட கொடுக்கலாம்னு நினைச்சேன். யாருக்காச்சும் இதெல்லாம் பயன்படும்னு நினைச்சு மனச சமாதானப்படுத்திக்க வேண்டியதுதான். வேற என்ன செய்யறது? இப்பவே ஞாபகங்க குறஞ்சுகிட்டே வருது இல்லயா? இருக்கற கொஞ்சம் நஞ்சம் நினைவுங்களும் இல்லாமப் போயிடுச்சுன்னா? இது எல்லாத்தயும் வச்சுகிட்டு ஒன்னும் செய்யமுடியாது. அதனால இந்தத் தீர்மானம் சரின்னு தோணுது இல்லயா சரோஜம். திடீர்னு ஒரு நாள் தெய்வம் நம்பளக் கூப்பிட்டாருன்னா இத எல்லாத்தயும் நம்மலால கொண்டு போக முடியுமா? இப்படி சிந்திச்சா துக்கம் ஏற்படாது. “இந்த வீடு?”
“இத வாங்க ஆளுங்க இருக்காங்க சரோஜம். அம்பத்து ரெண்டு வருஷம் நாம ஒன்னா வாழ்ந்த வீடு இது! நான் பிறந்த இடம். மூச்சுக் காத்து நிக்கற மட்டும் இந்த வீடு என்னோட ஞாபகத்துல இருக்கும். அந்த ஞாபகத்தக் கூட முடிவுல இங்கயே விட்டுட்டுப் போகணும்? இத மட்டும் ஒன்னும் செய்யக்கூடாது சரோஜம்”
சுவரில் மாட்டியிருந்த ஒரு போட்டோவின் மீது அவருடைய பார்வை பதிந்தது.
அம்மா. அப்பா. அவர். சரோஜம் எல்ல்லோரும் அந்த போட்டோவில் இருந்தனர். அவர் துண்டால் அதில் படிந்திருந்த தூசைத் துடைத்தார்.
“என்ன?! இதக் கொடுக்கறதுக்கும் யாராச்சுமிருக்காங்களான்னு தேடிக் கண்டுபிடிக்கணுமா?”
“ம்”. ஒரு முனகல் சத்தம் மட்டுமே அவருடைய இடறிய தொண்டையில் இருந்து வந்தது. மீதி எதையும் சொல்ல முடியாமல் வார்த்தைகள் அவருடைய தொண்டையில் ஒடுங்கின.