தற்செயலாகத்தான் சுவர்ணனைப் பார்த்தேன். வடக்கு ஸ்டாண்டில் இருந்த இண்டியன் காபி ஹவுஸில். வெளியில் மழை பெய்ய ஆரம்பித்திருந்தது. ஒரு ஆறுதலுக்காகத்தான் காபி ஹவுஸுக்குப் போனேன். வழக்கம்போல... எதிர்பார்த்தது போல... இருக்கைகள் எல்லாம் காலியாகக் கிடந்தன. காபி ஹவுஸில் அப்படித்தான். அது பொழுது போகவோ, வெறுமனே பேசிக் கொண்டிருக்கவோ, தமாஷ்கள் பேச ஆட்கள் கூடும் ஒரு இடம்.
ஒரு காபியை ஆர்டர் செய்துவிட்டு மணிக் கணக்கில் அங்கே இருக்கலாம். உரத்தக் குரலில் நகைச்சுவைகள் சொல்லிக் கொண்டிருக்கலாம். அரசியல் பற்றிப் பேசி நேரத்தைப் போக்கலாம். அதுவும் இல்லையென்றால், அப்போது ரிலீஸ் ஆன படத்தைப் பற்றிப் பேசலாம். ஒவ்வொரு படத்தையும் அதன் இயக்கத்தை பூதக்கண்ணாடி வைத்து அலசி ஆராயலாம். காபியைக் குடித்துவிட்டு சும்மா இருக்கும்போது சர்வர் வந்து நின்றால், இன்னொரு காபியையும் ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்திருக்கலாம்.
எதிர்பக்கத்தில் இருந்த இருக்கையில் உட்கார்ந்துகொண்டு ஆவேசத்தோடு கட்லெட் சாப்பிடும் ஆளைக் கவனிக்காமல் இருக்க முடியவில்லை. சுவர்ணன்.
சுவர்ணன் புதுக்காடு.
ஆவி பறக்கும் கட்லெட்டை ருசித்து சுவைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அவனுடைய முக பாவத்தில் ஏற்படும் மாறுதல்களை ரசித்தபடியே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தேன். முகத்தைப் பார்த்து சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள்வதற்காகக் கேட்டேன். “சுவர்ணன். சுவர்ணன் புதுக்காடுதானே?”
”சாப்பிடுவதற்கு இடைவேளை கொடுத்துவிட்டு அவன் ஆச்சரியத்தோடு பதில் சொன்னான்.
“எப்படி தெரிஞ்சது?”. “எனக்கு அப்படி ஒரு திறமை இருக்கு. ஒரு ஆளோட முகத்தப் பாத்தா பேரு சொல்லமுடியும். கூடுதலா வேற எதாச்சும் சொல்லணுமா? கடவுள வேண்டிகிட்டு சாப்பிடுங்க”. நகைச்சுவையோடு கூடிய என்னுடைய பதிலை கேட்டுவிட்டு அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது.
“பாத்து எத்தனை நாளாச்சு?” அவனுடைய உற்சாகத்தோடு கூடிய பதில் என்னை ஒரு புனிதப் பயணத்திற்கு அழைத்துக்கொண்டு போனது.
ஏறக்குறைய நாற்பது நாற்பத்திரண்டு வருடங்கள். நினைவுகள் பட்டென்று மின்னி மறைந்தன. அகில இந்திய வானொலியில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்த சமயம். இளைஞர்களுக்காக நான் நிகழ்ச்சிகளை தயாரித்துக் கொண்டிருந்தேன். ஸ்டுடியோவில் சோக முகத்தோடு இருக்கும் ராஜசேகரனைப் பார்க்க அப்போது நேரம் கிடைக்கவில்லை.
குழந்தைகளுக்கான நிகழ்ச்சிகளை அவர் தயாரிக்கும் வேலையில் இருந்த அவருடைய அறைக்கு நான் சிறிது நேரம் போய் நின்று கொண்டிருந்தேன்.
ஞாயிற்றுக்கிழமை ஒலிபரப்பாக வேண்டிய குழந்தைகள் நிகழ்ச்சிதான் அவருடைய அப்போதைய பிரச்சனை. அந்த நிகழ்ச்சியின் ஒரு முக்கிய அம்சமாக இருந்த ஒரு குட்டிக் கதையுடைய ஸ்கிரிப்ட் காணாமல் போய்விட்டது.
அவர் நிகழ்ச்சியின் எடிட் செய்யாத டேப்புடன் ஸ்கிரிப்டையும் அறையில் வைத்திருந்தார். இப்போது காணவில்லை. ஸ்டுடியோ முழுவதும் நானும் அவரு ஒரு இம்மி இடம் கூட விடாமல் தேடினோம். ஒரு பயனும் ஏற்படவில்லை.
பதட்டம் அதிகமானது. அதைக் குறைப்பதற்காக நான் கேட்டேன்.
“நூலகத்தில இன்னொரு தடவ பாக்கலாமா?”
“ஒரு பயனும் இல்ல. எங்கயும் இல்ல. என்ன செய்யணும்னு யோசிக்கக்கூட முடியல”
அவருடைய இடறிய குரல் என் நிம்மதியை குலைத்தது. நிலைமை புரிந்தது. தளர்ந்து போயிருந்த அந்த முகத்தில் அது நிறைந்திருந்தது.
நிலையத்தில் எப்போதும் தனியாளாகவே வேலை பார்த்தார். சக ஊழியர்களுடன் ஒரு யந்திரம் போலவே பழகினார். ஆனால் என்னிடம் பாசமாக பழகினார். தற்காலிக அடிப்படையில் வேலை பார்த்து வந்த அவருடைய இந்தப் பிரச்சனை அவருடைய வயிற்றுப்பிழைப்பிற்கே உலை வைக்கக்கூடியது.
விஷயத்தை ஆழமாக விசாரித்தேன்.
காணாமல் போன அந்த கதை சுவர்ணன் எழுதியது. அவருக்கும் சுவர்ணனுக்கும் நல்ல நட்பு இல்லை. பெயரைக் கேட்டபோது எனக்குச் சற்று ஆறுதல் ஏற்பட்டது. கொளுத்தும் கோடை வெப்பத்தை தனிக்க வரும் மழை போல அந்தப் பதில் இருந்தது. கேண்டீனுக்குப் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் இருந்து ஒரு இளம் காற்று வீசியது.
சுவர்ணனை எனக்குப் பல வருடங்களாகத் தெரியும். திருவல்லா சுங்கத்தில் இருந்த எலக்ட்ரிசிட்டி ஆபீசில் வேலை பார்த்து வந்தான். ஊரில் இலக்கிய மேடைகளில் மும்முரமாக ஈடுபட்டதால் அவனை எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். ஒரு சமயம் ஒரு கவியரங்கு நிகழ்ச்சியில் அவனை எனக்கு யாரோ அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.
“நான் எப்படியாச்சும் கதய வாங்கித் தரேன்”
மனதில் ஊற்றெடுத்த உற்சாகம் வாயில் இருந்து வார்த்தைகளாக வெளியில் வந்து விழுந்தன. அந்த நேரத்தில் எனக்கு தைரியத்தைக் கொடுத்தது யாரென்று தெரியவில்லை.
ராஜசேகரனுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. சுவர்ணன் எங்கே இருக்கிறான் என்று கூட எனக்குத் தெரியவில்லை.
சுவர்ணனுடன் எனக்கு இருந்த தோழமை தன்னம்பிக்கையைக் கொடுத்தது.
ராஜசேகரனுக்கு உத்தரவாதம் தந்த பிறகும்ம் அந்தத் தைரியத்தைக் கொடுத்தது யார்? என்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய வேலைகளை முடிக்க ராஜசேகரன் உதவினார்.
டேப்பை நூலகத்தில் கொடுத்ததற்குப் பிறகு பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்கப் போனோம். ஒலிபரப்ப வேண்டிய விஷயம் காணாமல் போய்விட்டது என்று தெரியவரும்போது கிருஷ்ணமூர்த்திக்கு ஏற்படப் போகும் உணர்ச்சிகளை என்னால் ஊகிக்க முடியவில்லை. இதனால் உருவாகப்போகும் பூகம்பத்தைப் பற்றி அவர் பயந்து போனார்.
இது போல முன்பும் ஒரு தடவை நடந்துள்ளது. இதே எழுத்தாளருடைய கதைதான் அப்போதும் காணாமல் போனது. கவலையோடு இருந்த கிருஷ்ணமூர்த்தியையும் நான் ஆறுதல்படுத்த முயற்சி செய்தேன். முழு நம்பிக்கையோடு “பிரச்சனய நல்ல விதமா தீக்கலாம்” என்றும் வாக்குறுதி கொடுத்தேன். அப்போது அவருடைய முகத்தில் ஆச்சரியத்தை விட அவநம்பிக்கைதான் அதிகமாக இருந்தது.
தமிழ் கலந்த ஆங்கிலத்தில் அவர் என்னைப் பாராட்டினார். ராஜசேகரன் மதிய உணவுக்கு என்னை அழைத்தார். பசியில்லை என்று சொல்லிவிட்டு அந்தக் கோரிக்கையை நிராகரித்தேன். எடுத்துக் கொண்ட வேலையின் தீவிரத்தன்மை என் பசியை அமுக்கிவிட்டது. நிலையத்தில் இருந்து இரங்கி நடக்கும்போது நிகழ்ச்சி துணைப் பொறுப்பாளர் ஐ பி ஜி மேனன் ஸ்கூட்டரோடு வந்தார்.
பஸ் ஸ்டாப் வரை லிஃப்ட் கொடுத்தார். ஆபீசில் இருந்து வந்த சுவர்ணனைப் பார்த்தேன். மாலை நேரம். அவனிடம் நான் விஷயத்தை சொன்னேன்.
“என்னைக் காப்பாத்தணும். எனக்கு ஒரு தப்பு நடந்துபோச்சு” ஒரு நாடகம் போல நான் விஷயத்தை ஆரம்பித்தேன். அந்த சம்பவத்தைப் பற்றிய எந்த ஒரு உருவமும் இல்லாததால் சிரிப்புடன் அவன் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்தான்.
“என்ன ஆச்சு ரகு? பரிகாரம் இல்லாத பிரச்சனை இருக்கா? விஷயத்த சொல்லு”. நான் அவனிடம் முழுவதையும் விவரமாக சொன்னேன். அவனுடைய முகத்தில் மின்னி மறைந்துகொண்டிருந்த முக பாவங்கள் என்னை லேசாக அச்சுறுத்தியது. பதிவிறக்கம் செய்து நான் கலந்து சொன்ன பொய்களை அவன் ஆரம்பத்தில் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்தான் என்றாலும் பிறகு கலவரத்தோடு கூடிய கோபம் அவனுக்குள் நிறைந்து நின்றது.
மறுபடியும் பலவீனத்தோடு அதற்கும் மேலாக நாடகத்தை இயக்குபவர் அதைக் கொண்டு செல்வதைப் போல மீண்டும் ஒரு தடவை சொன்னேன்.
அவனுடைய முக பாவம் மாறியது. பிறகு சிந்தனையில் மூழ்கினான்.”நீ சொல்றத நான் நம்பல. ரகு நீ யாரையோ காப்பாத்த முயற்சி செய்யற. நான் ஒத்துக்க மாட்டேன். எல்லாரையும் கோர்ட்டுக்கு இழுப்பேன்”
அவனுடைய வார்த்தைகளில் கண்டிப்பு நிறைந்திருந்தது. என்னுடைய மனம் துடித்தது. நம்பத்தகுந்த ஒரு சூழ்நிலையை உருவாக்கி ராஜசேகரனுக்கும் கிருஷ்ணமூர்த்திக்கும் வாக்குறுதி கொடுத்துவிட்டு வந்திருக்கிறேன்.
“பகவதி! கருணை காட்டு தாயே!”. மனமுருகி நான் பிராத்தனை செய்தேன்.
அவனுடைய முகத்தில் மாற்றங்கள் மெதுவாக ஏற்பட்டன.
“ஸ்க்ரிப்ட் எப்படியோ தவறுதலா தொலைஞ்சுபோச்சு. என்னுடைய வாக்குறுதிகள் பொய்யாகிப் போனால் அது எத்தனை பேரை பாதித்துவிடும்?! கடவுள்தான் உண்மை. நான் கதையை மாற்றி சொன்னது கடவுளுக்குத் தெரியும். மறுபடியும் பிரார்த்தனை செய்தேன். சுவர்ணன் மீண்டும் என்னை ஆதரவோடு பார்த்தான்.
அவனுடைய மனம் கரைந்துவிட்டது என்று எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
முக பாவத்தில் இருந்து அதை நான் வாசித்து எடுத்தேன். போயிருந்த கரண்ட் வருவது போலத் தெரியவில்லை. “வா ரகு. நாம போய் கொஞ்சம் மண்னெண்ணை வாங்கிட்டு வரலாம்”. சிறிது நேரத்தில் திரும்பி வந்தோம்.
அவனுடைய கையில் கதையின் ஒரு காப்பி இருக்கும் என்று நினைத்தேன்.
“இல்ல. கையெழுத்துப் பிரதியதான் ரேடியோ ஸ்டேஷனுக்கு அனுப்பிவச்சேன்”
மண்னெண்ணையின் மங்கிய வெளிச்சத்தில் சுவர்ணன் மறுபடியும் கதை எழுதினான். அவனிடம் விடைபெற்று கொண்டு நான் நிலையத்திற்கு திரும்பும்போது ராத்திரி ஆகியிருந்தது.
பஸ் ஸ்டாப்பில் இறங்கி வேகமாக நடந்தேன். வெற்றியாளனுடைய பாவத்தோடு உள்ளே நுழைந்தேன். டிரேன்ஸ்மிஷன் எக்சிக்யூட்டிவ் நம்பூத்ரியுடைய இருக்கைக்கு அருகில் ராஜசேகரன் நின்று கொண்டிருந்தார்.
என்னைப் பார்த்ததும் அவருடைய முகத்தில் பிரகாசம் படந்தது. கிருஷ்ணமூர்த்தி சார் என்னைப் பார்த்து சிரித்தபடி சொன்னார்.
“தேங்க் யூ”. ராஜசேகரனிடம் சொன்னார்.
“ரகு பெரிய ஆளுதான்”
அந்த நாட்கள் என்னுடைய நினைவில் சட்டென்று மின்னி மறைந்தன. நான் வெளியில் பார்த்தேன். மழை நின்றிருந்தது. ஆரவாரங்களும் கொண்டாட்டங்களும் தீர்ந்த ஒரு மைதானம் போல சுற்றுப்புறம் அமைதியாக இருந்தது. “ரகு. என்ன யோசிச்சுகிட்டு இருக்கற?”. சுவர்ணன் என்னுடைய நினைவுகளை கலைத்தான்.
“கரை “கடந்து பொங்கும் தோழமை எல்லையில்லாத தன்னம்பிக்கைக்கு வழிவகுக்கும். என் வாழ்க்கைப் பயணத்தில் இந்த அனுபவத்தை நினைத்துப்பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. இதை ஒரு தோழமையுள்ள மனிதனால் மட்டுமேப் புரிந்து கொள்ள முடியும். இதைச் சொன்ன சுவர்ணனுடைய முகத்தையே நான் உற்றுப் பார்த்தேன்.
அவனுடைய தத்துவரீதியான அந்தப் பேச்சு என்னை மெய்சிலிர்க்க வைத்தது.
அவன் சொன்னான். “ரகு. அன்னிக்கு நீ சொன்ன பொய்க்குக் கூட சத்த்தத்த விட பளபளப்பு உண்டு. அதனாலத்தான் நான் தோத்துப்போனேன். நான் வேண்டி விரும்பி வாங்கிகிட்ட தோல்வி அது”
அவனுடைய முகத்தைப் பார்க்க எனக்கு வெட்கமாக இருந்தது.
நான் அவனிடம் விடைபெற்றுக் கொண்டு காபி ஹவுசில் இருந்து இறங்கினேன்.