ஏர்வாடா செண்ட்ரல் ஜெயில். பெரிய கேட். அதன் நடுப்பகுதியில் ஒரு ஆள் மட்டும் உள்ளே நுழையக்கூடிய சிறிய வாசல். துப்பாக்கியுடன் நிற்கும் போலீஸ்காரன். காந்திஜியையும் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த சுதந்திரப் போராட்ட வீரர்களையும் அடைத்து வைத்து வரலாறு படைத்த ஜெயில்.
“நெக்ஸ்ட்டு ஸ்டாப்” கண்டக்டர் ஞாபகப்படுத்தினார்.
பெட்டியையும் சாமான்களையும் கதவுக்கு அருகில் எடுத்துக் கொண்டு போய் வைத்தேன். இறங்கத் தயார். பஸ் நின்றது. நாங்கள் இறங்கினோம். நான் சுற்றுமுற்றும் கண்களை ஓடவிட்டேன். ஐ டி கம்பெனிகள். மால்கள். பெரிய பெரிய கட்டிடங்கள். பல வர்ணக் கொடிகள் பறக்கவிடப்பட்ட ஸ்டார் ஹோட்டல்கள். பானி பூரியையும் ஊத்தப்பத்தையும் விற்கும் தகரக் கடைகள். எல்லாம் அஸ்தமன சூரியனின் செங்கதிர் பட்டு ஜொலித்தன. ஒரு ஹோட்டல் பக்கவாட்டில் இருந்த சாலை முடிந்த இடத்தில் எங்களுடைய ப்ளாட் இருந்தது. சாவியை வாங்கி உள்ளே நுழைந்தோம்.
மகனைக் கட்டிலில் கிடத்தினேன். சாமான்களை ஒதுக்கிவைத்தோம். “இனி மேல கொஞ்சம் ஓய்வு எடுக்கலாம். நாளைக்கு ஆபீசில் ரிப்போர்ட் செய்யணும்”
காலையிலேயேக் கிளம்பினேன். பஸ் ஸ்டாப்பை நோக்கி நடந்தேன். சாலையின் அகலத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். நாலு வழிப் பாதை. இரண்டு வழி இடது பக்கம். இரண்டு வழி வலது பக்கம். இடது வலது பக்கங்களை கருங்கல்லால் கட்டப்பட்ட உயர்த்திய அகலம் உடைய மண் திட்டு பிரித்தது. குறிப்பிட்ட அகலத்தில் நட்டு வளர்க்கப்பட்டிருந்த அலங்கார ஈச்சமரப் பனைகள். பட்டுப்போர்வை விரிக்கும் புல்வெளிகள். இரண்டு பக்கங்களிலும் இடைவிடாமல் ஓடிக் கொண்டிருக்கும் வாகனங்கள். இரண்டு பக்கமும் நட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருந்த பூச்செடிகள். வெட்டி அழகாக்கப்பட்ட செடிகளுக்கு நடுவில் அழகான நடைபாதைகள். எட்டு அடி அளவுக்கு அகலம் உள்ள நடைபாதையில் இண்டர்லாக் டைல்ஸ் பதிப்பித்து அழகாக்கப்பட்டிருந்தது.
செடிகளுக்கு நீரூற்ற அவசியமான குழாய்கள். சாலையும் சுற்றுப்புறமும் சுத்தமாக இருந்தன. “க்ளீன் பூனா... க்ரீன் பூனா...” என்ற போர்டின் வாசகங்கள் அவ்வப்போது என்னை வரவேற்றன. சாலைகள் எவ்வளவு அழகாகப் பராமரிக்கப்படுகின்றன! என் சிந்தனைகளைத் தலைகீழாக மாற்றி குப்பைக்கூடங்கள் குவிந்து கிடக்கும் நம் ஊர் சாலைகள் என் ஞாபகத்துக்கு வந்தன. கால்நடையாகச் செல்பவர்களை முற்றிலுமாகப் புறக்கணிக்கும் நம் ஊர் சாலைகள். மூடியில்லாத சாக்கடைக்குள் விழுந்த குழந்தையையையும் அவளைச் சாகசமாக காலாலேயே காப்பாற்றிய தாயையும் பற்றிய செய்திகள் என்னுடைய நினைவுகளில் மின்னி மறைந்தன. நான் பஸ் ஸ்டாப்ப்பை அடைந்தேன். ஏராளமானவர்கள் பஸ்ஸுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள்.
ஆட்டோ ரிக்சாக்கள் பயணிகளுக்காக வரிசை வரிசையாகக் காத்துக் கிடந்தன. பலதரப்பட்ட ஆடைகளை அணிந்தவர்கள். பஸ் வருவதற்கு இருக்கும் நேரத்தைக் கூட வீணாக்காமல் மொபைல் போனில் கேம் விளையாடும் இளம் வயதுக்காரர்கள். சுற்றி இருப்பவர்கள் யாரென்று தெரியாமல் தொலைதூரத்தில் இருப்பவர்களோடு சாட் செய்து கொண்டிருக்கும் சிறிய வயதுக்காரர்கள். யாரும் யாரையும் கவனிக்கவேயில்லை.
பத்தாம் நம்பர் பஸ் வந்தது. மராத்தி மொழி தெரியாத எனக்கு பஸ்ஸின் நம்பர்தான் உதவியது. புதுமையான காட்சிகளை ரசித்து மூழ்கியிருந்த நான் சத்தம் கேட்ட திசையில் பார்த்தேன். கரியால் உருவாக்கப்பட்டது போல ஒரு உருவம். அவனுடைய முகமும் வேட்டியும் தார் நிறத்தில் இருந்தன. கை உயர்த்தி முஷ்டியை மடக்கிக் கொண்டு ஏதோச் சொன்னான்.
நீண்டு சுருண்ட முடி. அழுக்கு புரண்டு ஜடை போல் ஆகியிருந்தது. அது முகத்துக்கு நீண்டு வந்து கண்கள் மேல் படும் என்று ஆன போது இடது கையால் பின்பக்கம் ஒதுக்கினான். ஒட்டிய வயிறு. குழிந்த கண்ணம். வறுமையைப் பறை சாற்றியது. நல்ல கம்பீரமான குரலில் அவன் ஏதோ புலம்பிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பக்கத்தில் ஒரு தள்ளுவண்டி. வண்டி நிறையச் சாமான்கள். வண்டிக்காரன் அவனிடம் ஏதோ சைகை காட்டினான். சத்தம் நின்றது. அனுசரணையான மாணவன் ஆசிரியர் முன் இருப்பது போல அவன் நின்றான். அடுக்கி வைத்திருந்த பழத்தில் இருந்து ஒன்றை எடுத்து வண்டிக்காரன் அவனுக்குக் கொடுத்தான்.
அவன் அதை ஆர்வத்தோடு சாப்பிட்டான். பஸ் முன்னோக்கிச் சென்றது. நான் ஆபீஸ் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தேன். வேலையில் ஜாய்ன் செய்தேன். புதிய சக ஊழியர்களை தெரிந்துகொண்டேன். அறிமுகம் செய்து கொண்டேன். அவர்களுக்காக ஒரு தேநீர் விருந்தையும் கொடுத்தேன்.
சாயங்காலமானது. ஆபீஸ் வாகனத்திலும் சொந்த வாகனங்களிலுமாக எல்லோரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். நான் ஒரு பஸ்ஸில் ஏறி வீட்டுக்கு வந்தேன். சிரித்துக் கொண்டு ஓடி வந்த மகனை வாரி எடுத்து முத்தம் கொடுத்தேன். புதிய ஆபீஸ் விசேஷங்களை மனைவியோடு பகிர்ந்து கொண்டு ஆவி பறக்கும் தேநீரை அருந்தினேன். அடுத்த நாளும் பஸ்ஸில் இருந்து நான் அவனைப் பார்த்தேன். மக்கள் கூட்டத்தில் இருந்து சற்று தூரம் தள்ளி அவன் நின்று கொண்டிருந்தான்.
தொண்டர்களுக்கு முன் ஆவேசமான தலைவனைப் போல முஷ்டியை மடக்கி முழக்கமிட்டுக் கொண்டிருந்தான். நான் சுற்றிலும் பார்த்தேன். என்னைத் தவிர, வேறு யாரும் அவனைக் கவனிக்கவேயில்லை. எனக்கு என்னவோ அந்த ஆளோடு விவரிக்க முடியாத ஒரு அன்பு ஏற்பட்டது. ஆபீசுக்கும் திரும்பி வரும் பயனங்களிலும் நான் அவனைப் பார்த்தேன்.
பஸ் ஏறியவுடன் அவனைப் பார்க்க வசதியாக இருக்கும் இருக்கையைக் கண்டுபிடித்து அதில் உட்கார ஆரம்பித்தேன். அவனின் மூலம் நான் பலரையும் பார்த்தேன். என்னுடைய அப்பாவை... அம்மாவை... சகோதரன்களை... அவனின் ஊடே நான் என் ஊரையும் ஊர்க்காரர்களையும் கண்டேன். நான் தவறாமல் பஸ்ஸில் போனதற்கும் ஆபீஸ் ஏற்பாடு செய்த வாகனம் வேண்டாம் என்று சொன்னதற்கும் முக்கியக் காரணம் அவனைப் பார்க்கலாம் என்பதே.
ஒரு சாயங்கால நேரம். வழக்கமாக நான் உட்காரும் இருக்கை எதுவும் கிடைக்கவில்லை. கூட்டம் அதிகமாக இருந்ததால் எவ்வளவு முயற்சி செய்தும் அவனைப் பார்க்க முடியவில்லை. எனக்கு என்னவோ போலிருந்தது. வீட்டை அடைந்தேன். செய்தித்தாளை எடுத்தேன். வாசிக்க முடியவில்லை. மீனா கொண்டு வந்து வைத்த தேநீர் ஆறிக் கொண்டிருந்தது.
“இதென்ன ஆச்சு? வந்ததுலேர்ந்து இப்படி ஒரு இருப்பு?” பதில் கிடைக்காமல் போன போது, அவள் மறுபடியும் என்னைக் கேட்டாள். “என்ன அப்படி ஒரு சோகம்? ஆபீஸ்ல ஏதாச்சும் பிரச்சனையா?”. “ஒன்னுமில்ல” உண்மையை மறைத்துக் கொண்டு சொன்னேன். ஜில்லிட்டுப் போன தேநீரைக் குடித்தேன்.
மகனுடன் விளையாடும் போது, அந்த முன் பின் தெரியாதவனுடைய ஞாபகம் வந்தது. நெஞ்சு விம்மியது. “நாளைக்கு ஆப்பீஸ்க்கு கொஞ்சம் லீவு எடுக்க முடியுமா? மகனுக்கு உடம்பு சரியில்ல. டாக்டரப் போய்ப் பாக்கணும்”. மீனாவின் குரல் கேட்டுதான் எழுந்தேன். “முடியாது... முடியாது... இன்னிக்குப் போயே ஆகணும். ரொம்ப அவசரமான வேல இருக்கு. நீ ஒரு ஆட்டோ ரிக்சாவப் பிடிச்சுட்டுப் போய் மகனைக் காட்டிட்டு வா”.
நான் பட்டென்று வீட்டில் இருந்து இறங்கினேன். நல்ல வேளை வழக்கமாக உட்காரும் இருக்கை கிடைத்தது. ஏர்வாடாவை அடைந்தேன். அவனுடைய சத்தம் கேட்கவில்லை. வழக்கமாக இருக்கும் இடத்தில் அவன் இல்லை. “ஒரு வேள எங்கயாச்சும் உக்காந்திருப்பானா? ஓ. அப்படி ஒன்னும் இருக்காது. இத்தன நாளாப் பாத்திருக்கோம்னாலும் அவன் ஒரு சமயம் கூட உக்காந்திருக்கறத பாத்ததே இல்ல. என்ன ஆச்சு?”. பஸ் முன்னோக்கி நகர்ந்தது. ஆனால் என்னால் முன்னோக்கி செல்ல முடியவில்லை.
அடுத்த ஸ்டாப்பில் இறங்கினேன். திரும்பிப் போகும் ஒரு பஸ்ஸில் ஏறி ஏர்வாடாவில் இறங்கினேன். சுற்றிலும் பார்த்தேன். அந்த வண்டிக்காரனையும் காணவில்லை. இனி மேல் என்ன செய்வது? எங்கேக் கேட்பது? என்னவென்று கேட்பது? அவன் யார்? எதற்காக அவன் இங்கே நிற்கிறான்? எனக்கு எதுவும் தெரியவில்லை. நான் எதற்காக இங்கே வந்தேன்? எனக்கு என் மீதேக் கோபம் ஏற்பட்டது. பஸ்ஸில் ஏறினேன்.
வீட்டுக்குப் போனேன். மீனா குழந்தையோடு ஆஸ்பத்திரிக்குப் போகத் தயாராகிக் கொண்டிருந்தாள். “ஆஸ்பத்திரிக்கு நானும் வரேன். தனியாப் போக வேணாம்”. “ஹோ! நல்லதாப் போச்சு. பாஷை கூட தெரியாத நான் என்ன செய்யறது?”. அவளுக்கு நிம்மதி ஏற்பட்டது. “ஹும். அவளாவது சந்தோஷமா இருக்கட்டும்”
நாங்கள் ஆஸ்பத்திரியை அடைந்தோம். டோக்கன் எடுத்து டாக்டரைப் பார்க்க வெளியில் காத்திருந்தோம். தேடிப் போன மூலிகைச் செடி காலில் சுற்றியது போல அதோ அந்தத் தள்ளு வண்டிக்காரன்! “ஃப்பையா” நான் உரத்த குரலில் கத்தினேன். ஓடிப் போனேன். அந்த ஆளைப் பற்றி விசாரித்தேன். என்னுடைய மலையாளம் கலந்த ஆங்கிலமும் அவனுடைய மராத்தி கலந்த ஆங்கிலமும் ஒன்று சேர்ந்து எங்கள் இருவருக்கும் எதுவும் புரியவில்லை என்றாலும் ஒன்று எனக்கு உறுதியானது. நான் தேடுகிற ஆள் இங்கே அட்மிட் செய்யப்பட்டிருக்கிறான். என்கொயரியில் விசாரித்த போது கூச்சம் கலந்த ஒரு புன்முறுவலோடு வெள்ளை நிற மூக்குத்தி அணிந்து கொண்டிருந்த இளம் பெண் வார்டு நம்பரைச் சொன்னாள். நான் வேகமாக அங்கேச் சென்றேன். அந்த ஆள் வெகுவாக மாறியிருந்தான்.
பழைய சத்தம் இல்லை. சைகைகளும் இல்லை. ஜடை பிடித்த முடி நன்றாக வெட்டப்பட்டிருக்கிறது. அழுக்கு புறண்டு கிடந்த வேட்டிக்கு பதில் வெள்ளை நிற வேட்டி. பலவீனமாக இருக்கிறான் என்று அவன் படுத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தாலே தெரியும். அருகில் போய் அவனைப் பார்த்தேன். அவன் என்னையும். “என்ன ஆச்சு?”. நான் கேட்டேன். ஆச்சரியத்தோடு அவன் என்னைப் பார்த்தான். சத்தம் போட்டுச் சிரித்தான். அதைக் கேட்டு என் மனது குளிர்ந்தது.
என்னையும் அறியாமல் என் கண்கள் நிறைந்தது. தாய் மொழியின் வசீகரம். அன்பு. எல்லாவற்றையும் அந்த சிரிப்பின் வழியாக நான் உணர்ந்தேன். என் ஊர்க்காரனை... சகோதரனை... இல்லையில்லை என்னுடைய எல்லாமுமான மலையாளியை நான் கண்டுபிடித்துவிட்டேன்! அளவில்லாத ஆனந்தம் ஏற்பட்டது. அவனுக்குத் தேவையான மருந்துகளையும் உணவையும் வாங்கிக் கொடுத்துவிட்டு மகனுக்கு பக்கத்தில் போனேன். டாக்டரைப் பார்த்தாயிற்று. திரும்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். பட்டென்று நான் கேட்டுக்கு அருகில் போனேன்.
நல்லவேளையாக அவர்கள் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். ஆட்டோவுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். மீனா மெல்லியக் குரலில் கோபத்தோடு ஏதோ முனகினாள். குற்ற உணர்வால் என்னுடைய தலை தாழ்ந்தது. வீட்டை அடைந்தோம். கடைத்தெருவில் பார்த்த மலையாளியைப் பற்றியும் அவனுடைய முழக்கங்களைப் பற்றியும் ஆஸ்பத்திரியில் அவனைப் பார்க்க நேர்ந்ததைப் பற்றியும் எல்லாம் மீனாவிடம் விவரமாகச் சொன்னேன்.
அவளுடைய முகம் கோபத்தால் சிவந்தது. “அப்படின்னா நீங்க அவனோடயே போயிடுங்க. என்னையும் என்னோட மகனையும் என்னோட வீட்டுல கொண்டு போய் விட்டுடுங்க” அவள் அலறினாள். “கடவுளே! எனக்கு இப்படி ஒரு புருஷன் எதுக்கு? குழந்தையக் கூட கவனிக்காத துஷ்டன்!” அவள் வெடித்துச் சிதறினாள்.
மாலையான போது மகனின் காய்ச்சல் சரியானது. அவன் விளையாட்டும் சிரிப்புமாக வந்தான். நான் அவனை வாரி எடுத்து முத்தம் கொடுத்தேன். மீனா கோபத்தோடு ஓடி வந்தாள். குழந்தையை என்னிடம் இருந்து தட்டிப் பறித்தாள். “தொடக்கூடாது! தொடக்கூடாது என்னோட மகனை!” தப்பு செய்த அப்பாவுக்கு முன்னால் ஆக்ரோஷமான கோபத்துடன் இருக்கும் அம்மாவுடைய கட்டளை!
நான் இரண்டு பேரையும் சேர்த்து அணைத்து ஆறுதல்படுத்தினேன். பாவம் மீனாவுடைய கோபம் கரைந்து உருகியது. நாட்களும் மாதங்களும் கடந்து போயின. மீனாவிடம் பல விஷயங்களைப் பற்றிப் பேசுவேன் என்றாலும் அந்த மலையாளியைப் பற்றிய பேச்சு எங்களுக்கு இடையில் வராமல் இருக்க நான் கவனித்துக் கொண்டேன்.
ஆஸ்பத்திரியில் இருந்து வெளியில் வந்த அவனுடைய மன நிலை இயல்பாக மாறியது. அதற்காக கொஞ்சம் கூடுதலாகவே பணம் செலவழிக்க வேண்டி வந்தது. அதையெல்லாம் மீனாவுக்குத் தெரியாமல் கண்டுபிடிக்க வேண்டி நேரிட்டது. இன்று அந்த ஆள் ஒரு ஆபீஸில் வாட்ச்சர். ஒரு நாள் நான் அவனுடைய சிறிய அறைக்குப் போனேன். என்னைப் பார்த்த அவன் ஒரு குட்டிக் குழந்தையைப் போல துள்ளிக் குதித்தான். அவன் தன் கடந்த காலத்தை எனக்கு மனம் திறந்து சொன்னான். சங்கரன் அண்ணன் என்ற ஆள் அவனை தன் மகனைப் போல பாசம் காட்டி பராமரித்து வந்தான். அவனுடைய புத்திசாலியான மகளுடைய கல்விக்காக சங்கரன் கணக்கில்லாமல் பணம் கொடுத்து உதவினான். அந்தக் கடனை மீண்டும் திருப்பிக் கொடுக்க அவன் வங்கியில் கடன் வாங்கினான். பணத்தோடு சங்கரனைப் பார்க்கக் கிளம்பிய அவனை ஏதோ ஒரு வாகனம் இடித்துத் தள்ளியது. பணமும் உயிரும் மட்டுமல்ல. இருந்த சிறிய வீடும் அதனுடன் சேர்ந்து நஷ்டமானது. கடனைப் பற்றி யாருக்கும் தெரியாது. மனைவியைப் பற்றியோ மகளைப் பற்றியோ அவனுக்கு இப்போது எதுவும் தெரியவில்லை.
ஒரு வேலையைத் தேடித்தான் அவன் மகாராஷ்டிராவில் இந்த மகாநகரத்திற்கு வந்தான். பிறகு என்ன நடந்தது என்று ஞாபகப்படுத்திக் கொள்ள அவனால் முடியவில்லை. கதையைக் கேட்டு மனம் நொந்து நான் அவனை என் வீட்டுக்கு அழைத்தேன். “வரேன்”. அவன் சொன்னான். ஒரு இரண்டாவது சனிக்கிழமை.
“இன்னிக்கு அந்த ஆள் வருவான். நம்மைப் பார்க்க... என்னோட மகனைப் பார்க்க... வீட்டைப் பார்க்க...” இந்த விஷயத்தை நான் என்னிடமும் மகனிடமும் அவ்வப்போது சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால் அந்த ஆள் வருவது மீனாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்றாலும் சுவையான சாப்பாடு தயார் செய்து வைத்திருந்தாள். எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு அவள் குளிக்கக் கிளம்பினாள். அழைப்பு மணி ஒலித்தது. நான் வாசல் திறந்தேன். கேரி பேஃப்குடன் சிரித்தபடி அவன் நின்று கொண்டிருந்தான். “வாங்க... வாங்க...”. அவன் உள்ளே வந்தான். மகனுடன் விளையாட ஆரம்பித்தான்.
மீனா குளித்து முடித்துவிட்டு வந்தாள். அந்த ஆள் அவளை உற்றுப் பார்த்தான். “நீ...! மீனாதானே...!?” “ஆமாமாம்!”. அவள் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய் ஆடாமல் அசையாமல் அப்படியே நின்றாள்! ஒரு தந்தையின் பாசமும் ஒரு மகளின் பரிதவிப்பும் அதில் கலந்திருந்தது!