அம்மா. இன்னிக்கு நம்ம வீட்டுக்கு ஒரு விருந்தாளி வராரு. மகள் பிந்துஜா அம்மா சாரிகாவிடம் சொன்னாள்.
“யாரும்மா அது?”. “அதச் சொன்னா சஸ்பென்ஸ் இருக்காது. ஒரு ஆள். ஒரு ஆம்பள”
“உன்னோட பாய் ஃரெண்டா?”
“இல்ல. அதுதான் சொன்னேன் சஸ்பென்ஸ்னு”
“இதுக்கு மேலயும் நீ எங்கிட்ட பேசிகிட்டு இருந்தீன்னா உன்னோட காலேஜ் பஸ் அது பாட்டுக்கு போயிடும். “பை... பை...”. பிந்துஜா அம்மாவுடைய கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து பாடித்திரியும் பட்டாம் பூச்சியைப் போல சட்டென்று எழுந்து கிளம்பினாள்.
சாரிகாவுக்கு பெரிய குழப்பம்.
“வரப்போறது. காலேஜ்ல அவளுக்குப் பிடிச்சப் பேராசிரியரா இருக்கும். இந்தப் பொண்ணுக்கு யாருன்னு சொன்னா என்னவாம்? நம்பள எதுக்காக டென்ஷனாக்கறா? வர்ற ஆளு விஜிட்டேரியனா இல்ல நான் வெஜிட்டேரியனா? யாராயிருக்கும்? எதுவா இருந்தாலும்” எல்லாத்தயும் சமாளிக்கலாம்”
சாரிகா சமையலறைக்குப் போனாள். உதவிக்கு இருந்த தங்கமணியிடம் சொன்னாள்.
“இன்னிக்கு சாப்பாட்டுக்கு ஒரு ஆள் கூடுதலா வர்றாங்க. ஏதாச்சும் ஸ்பெஷலா வைக்கணும். சரியா?”
“ஒரு ஆளு மட்டும்தானே அக்கா?”
“அப்படித்தான் மக சொல்றா. ஒரு பால் பாயசம் கூட சேத்து வச்சுடலாம்”
“ம்”
தங்கமணி ஒரு தலைவனைப் போல வேலைகளைச் செய்யத் தயாரானாள். சமையலறையில் சிறிய சிறிய உதவிகளை அவளுக்குச் செய்து கொடுத்துவிட்டு சாரிகா குளித்து கண் மையிட்டு நெற்றியில் பொட்டு வைத்து முடியைக் கொண்டை போட்டுக் கட்டி பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டாள்.
பட்டுப் புடவையில் அம்மாவைப் பார்ப்பதற்கு மகளுக்கு மிகப் பிடிக்கும்.
“சரி. அவளாவது சந்தோஷமா இருக்கட்டும்” சாரிகா நினைத்துக் கொண்டாள்.
ஒரு மணி நேரம் கழிந்தபோது சாரிகா மகளுக்கு செய்தி அனுப்பினாள்.
“கெஸ்ட் எத்தனை மணிக்கு வராரு?”
“ரெண்டு மணிக்கு வராரு அம்மா. அவரோட கார்லதான் வராரு”
சாரிகா வெறுமனே டி வியைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போதுதான் ஹாரன் சத்தம் கேட்டது. சாரிகா சட்டென்று எழுந்தாள். ஆர்வத்தோடு ஜன்னல் வழியாகப் பார்த்தாள். பார்க்க அழகாக இருந்தான் அந்த ஆள்.
“அவளோட பேராசிரியரா இருக்குமா?” சாரிகா வேகமாகப் போய் வாசல் கதவைத் திறந்து வைத்து காத்துக் கொண்டு நின்றாள்.
மகளும் அவரும் உள்ளே நுழைந்தார்கள். ஆளை சாரிகா உற்றுப் பார்த்தாள்.
அவளுக்குள் ஒரு எரிமலை வெடித்துச் சிதறியது! “ஜெயதேவன்! ஜெயதேவனுக்கு எப்படி என்னோட பொண்ணைத் தெரியும்?” புன்சிரிக்க மறந்து உள்ளே வரச்சொல்லி அழைக்கும் அடிப்படை மரியாதையையும் மறந்து அவள் ஸ்தம்பித்து நின்றாள்!
“என்னம்மா இது? ஒரு மேனர்ஸ் கூட இல்ல. வர்ற விருந்தாளிய வான்னு கூப்பிடறது இல்லயா?” மகளுடைய குரல் கேட்டு அவளுடைய சிந்தனைகள் முறிந்தன.
அவள் அதிர்ச்சியில் இருந்து மீண்டாள். அதற்குள் மகள் அவரை ஹாலுக்கு அழைத்துச் சென்றிருந்தாள்.
ஜெயதேவனுடைய முகம் உணர்ச்சிகளுடன் இருப்பதாகவும் பரவசத்துடன் இருப்பதாகவும் சாரிகாவுக்குத் தோன்றியது. அவள் விக்கி விக்கி அவனிடம் கேட்டாள். “ஜில்லுன்னு குடிக்க ஏதாச்சும் தரட்டுமா?”
மகள்தான் அதற்குப் பதில் சொன்னாள்.
“வேணாம்மா. நல்ல பசி. சாப்பிட்டாப் போதும்”
அந்தச் சூழ்நிலையில் இருந்து பின்வாங்கிச் செல்ல விரும்பிய சாரிகா பட்டென்று உள்ளே போனாள். ஆயிரமாயிரம் எண்ணங்கள் அவள் மனதில் கடந்து சென்றன. “ஜெயதேவங்கற பிரபலமான எழுத்தாளனை இவளுக்கு எப்படித் தெரியும்? எல்லா விஷயமும் தெரியுமா?”
அவளுக்கு மூச்சு முட்ட ஆரம்பித்தது. “மகளுக்கு ஏதாச்சும் தெரிஞ்சிருக்குமா?”
“சாப்பாடு பரிமாறட்டுமா அக்கா?”
தங்கமணியின் கேள்வி அவளை மீண்டும் அதிர்ச்சியடையச் செய்தது.
“பரிமாறு”
தங்கமணி பரிமாறினாள். சாரிகா ஜெயதேவனை சாப்பிட அழைத்தாள்.
“வாங்க. சாப்பிடலாம்”
மகளும் ஜெயதேவனும் ஒன்று சேர்ந்து சாப்பிட வந்தார்கள்.
கடைசியாக பால் பாயசம் பரிமாறப்பட்ட போது ஜெயதேவன் அவளை ஒரு இரகசியப் பார்வையோடு பார்த்தான்.
“இது என்னோட ஃபேவரைட் ஐட்டம்”
“என்னோட மகளுக்கும் இது ரொம்பப் பிடிக்கும். அதுதான் செஞ்சேன்”
“நல்லது”அவன் சொன்னான்.
அவளின் உள்ளுக்குள் அலை கடல் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது. ஜெயதேவனும் அவளும் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவர்கள். கல்லூரியில் நடக்கும் எல்லா இலக்கியப் போட்டிகளிலும் அவளுக்கும் ஜெயதேவனுக்கும்தான் முதலிரண்டு இடங்கள். விருப்பங்கள் ஒரே மாதிரியாக இருக்கும் இரண்டு பேர் நெருங்குவது இயல்புதானே? அப்படி ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழக ஆரம்பித்தார்கள். அது காதலாக மாறியது. பிரிய முடியாத நிலை! கால வெள்ளத்தில் எல்லாம் மாறிப்போனது!
“அம்மா. சார் கிளம்பறாராம்”
மகளின் குரல் கேட்டது.
மன இறுக்கத்தோடு ஒரு புன்முறுவலைக் காட்டி ஜெயதேவனை வழியனுப்பி வைத்தாள். அவன் கிளம்பிய பிறகும் அதைப் பற்றி மகளிடம் தான் எதுவும் கேட்கவில்லை என்று சிறிது நேரம் கழித்துதான் அவளுக்கு நினைவு வந்தது.
ஜெயதேவனை அனுப்பி வைத்துவிட்டுத் திரும்பி வந்த மகள் சொன்னாள்.
“வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தா இப்படி நடந்துப்பியா? அவரு பிரபலமான ஒரு எழுத்தாளராக்கும்”
மகளிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் அவள் ஊமையானாள்.
“எனக்கு தாங்க முடியாத தலைவலி”
ஏதோ சொல்லவேண்டும் என்பதற்காக சொன்னாள்.
“நான் கொஞ்சம் படுக்கட்டுமா?”. அவள் படுக்கையறைக்குச் சென்று கதவை மூடி படுக்கையில் விழுந்தாள். நினைவுகள் அவளை வேட்டையாடின. புயல் காற்றில் அகப்பட்ட சருகு இலை போல மனது நடுங்கியது.
“மகள்! அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குமா?”
எண்ணங்களின் துவம்ச யுத்தத்தில் அவளுடைய நிம்மதி காணாமல் போனது.
வாசல் கதவைத் தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு எழுந்தாள்.
வாசல் கதவைத் திறந்தாள். மகள் நின்று கொண்டிருந்தாள்!
“என்ன ஒரு தூக்கம் அம்மா இது? எனக்குத் தெரியும்”
சாரிகா பதில் பேசவில்லை.
“அம்மாவுக்கு என்ன ஆச்சு? அவள் உள்ளே நுழைந்தாள்.
சாரிகாவுடைய கைகளைப் பற்றிக் கொண்டாள். உட்கார வைத்தாள்.
“தங்கமணி கிளம்பிட்டா. ஆறு மணியான பிறகும் அம்மா நீ எந்திரிக்காததுனாலதான் நான் எழுப்பினேன். அம்மா. உன்னோட மனச இப்ப என்னால நல்லாப் புரிஞ்சுக்க முடியும். உன்னோட மனசுக்குள்ள இருக்கற எண்ணங்க... கேள்விங்க... எல்லாம் எனக்குத் தெரியும். ஜெயதேவன்ங்கற என்னோட அப்பாவ நான் மனப்பூர்வமாத்தான் இங்க கூட்டிகிட்டு வந்தேன்!”
சாரிகா அதிர்ச்சியோடு மகளைப் பார்த்தாள். காதலுங்கற உணர்ச்சிப்ப்பெருக்குல என்னிக்கோ உங்களுக்கு சம்பவிச்ச ஒரு தப்போட மீதிதான் நானுங்கறதும் எனக்குத் தெரியும்! அப்பா இன்னும் கல்யாணம் செஞ்சுக்கல அம்மா! இப்பவும் இந்த என்னோட அம்மாங்கற செல்லத்த நினைச்சுகிட்டுதான் வாழறாரு. நீயும் அப்படித்தானே?”
எதையும் நம்பமுடியாமல்... காதுகள் அடைத்துக் கொண்டது போல... புத்தி மரத்துப் போனது போல... ஒரு மரப்பாச்சி பொம்மையைப் போல அசைவில்லாமல் இருந்தாள் சாரிகா!
“இனிமேலயாச்சும் நீங்க ரெண்டு பேரும் ஒன்ன்னா சேரணும். என்னோட அப்பா உசிரோட இருக்கறப்ப நான் எதுக்காக அப்பா இல்லாதவளா வாழணும்? அம்மா. நீ எதுக்காக புருஷன் இல்லாதவளா வாழணும்? நீங்க ரெண்டு பேரும் எனக்கு வேணும். இது என்னோட உரிமை. என்னோட உரிமை எனக்குக் கிடைச்சே ஆகணும்”
சாரிகாவுக்கு மீண்டும் அதிர்ச்சி! “நீ சந்தேகப்பட வேணாம். நான் அப்பாவோட எல்லாத்தப் பத்தியும் பேசிட்டேன். அவருக்கு முழுச்சம்மதம்”
வார்த்தைகள் கிடைக்காமல் சாரிகா பிரமை பிடித்தவள் போல இருந்தாள். தலைக்கு மேல் கடல் பொங்குவது போலிருந்தது.
“அம்மா”மகள் அவளை குலுக்கினாள்.
“நமக்கு விதிக்காதத நாம் வேணாம்னு வச்சுடணும் மகளே” சாரிகா பரிதவிப்போடு சொன்னாள்.
“யார் சொன்னாங்க கிடைக்காததுன்னு”
“அப்படி ஒரு விதி இருந்திருந்தா நாங்க அன்னிக்கே ஒன்னு சேந்திருப்போம்.. உறவுங்களோட மதிப்பு தெரிஞ்சவங்களுக்குதான் அது இல்லாமப் போகும் போது உண்டாகற வலியும் தெரியும்”
“அது அப்பாவுக்கும் தெரியும் அம்மா. நாம மூனு பேரும் சேந்து வாழணும்னு நான் ரொம்ப நாளா கனவு கண்டுகிட்டு இருக்கேன். உன்னால அது சிதையக்கூடாது. உனக்கு நான் மட்டும் போதுமா? அப்பா வேணாமா?. ப்ரியமா இருக்கறவங்க ஒன்னா சேர்றதுதானே நியாயம்? இதுக்கு மேலயும் நீங்க ரெண்டு பேரும் எதுக்காக வேதனையோட வாழணும்? அது எனக்கும் வேதனை”
அனுபவப் பாடங்கள் ஏராளமாக உள்ள... அறிவுள்ள... ஒரு தீர்க்கதரிசியைப் போல பேசும் மகளைப் பார்த்து சாரிகா ஆச்சரியப்பட்டாள்!
“இதயத்தாலதானே அம்மா இதயத்தப் பாக்கமுடியும்?”
சாரிகா மௌனமானாள். மனது விம்மியது.
“இந்த அளவுக்கு என் மேல அன்பு காட்டற என்னோட மகள... ஜெயதேவனை எப்படி வேணாம்னு சொல்றது?”
கண்களில் தளும்பி நின்ற நீருடன் சாரிகா மகளைக் கட்டிப் பிடித்தாள்.
சாரிகாவுடைய பரிதவிக்கும் இதயம் ஆறுதலின் நிழலுக்காக ஏங்கித் தவித்தது. அவளுடைய கனவுகள் வண்ணமயமாயின. அழகான வாழ்க்கையின் வசந்தத்தில்அது மீண்டும் துளிர்விட்டது. அற்புதங்கள் எல்லாம் எதிர்பாராமல் நடப்பதுதானே? அவள் மகளின் நல்ல மனதை மனதார வணங்கினாள்!