அப்பு செட்டி தெருவில் நெரிசல் அதிகமாக இருந்தது. தூரத்தில் எங்கிருந்தோ வீசிய காற்றில் செவ்வந்திப் பூக்களின் வாசனையோடு அழுக்குச் சாக்கடையின் துர்நாற்றமும் கலந்து மிதந்து வந்தது. மஞ்சள் வர்ணம் பூசிய டாக்சிக்காரர்களுக்கும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கும் இடையில் அந்த ஆள் சைக்கிள் ரிக்ஷாவை மிதித்துக் கொண்டிருந்தார்.
இடையிடையே வலது கையை தூக்கி நீண்டு வளர்ந்து நரைத்திருந்த தாடி உரோமங்களைத் தடவிக் கொண்டிருந்தார். சிறிது தூரம் சென்ற போது சிவந்த உதடுகளோடு வாடா மல்லிப் பூக்களை சூடிய பெண்களும் குழந்தைகளும் போடும் ஆரவாரச் சத்தம் கேட்டது. ஆங்காங்கே அலங்காரம் செய்த குடைகளுமாக நாட்டியமாடுபவர்களையும் காண முடிந்தது.
ஆச்சரியத்தோடு நான் நாலு பக்கமும் நோக்கினேன். அது எதையும் கவனிக்காமல் அந்த ஆள் தன் வேலையில் மும்முரமாக இருந்தார்.
நான் கேட்டேன். “இங்க இன்னிக்கு என்ன விசேஷம்?”
”அம்மன் கோயில் திருவிழா”
திரும்பிப் பார்க்காமல் அவர் சொன்னார். காட்சிகள் ஒவ்வொன்றாகக் கடந்து போய்க்கொண்டிருந்தன.
கோயில் திருவிழாவைப் பற்றியும் பூசைகளைப் பற்றியும் அவர் வாய் ஓயாமல் சொன்னார். நீண்ட நாள் பழகிய ஒரு நண்பனைப் போல அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும் நான் ஆர்வத்தோடு கேட்டேன். திடீரென்று வளைவு திரும்பும் இடத்தில் அவர் ரிக்ஷாவில் இருந்து இறங்கினார்.
“கோயில்ல இந்த மாலய கொடுத்துட்டு சீக்கிரமா வரேன்”
என் சம்மதத்திற்கு காத்துக் கொண்டு நிற்காமல் அவர் மாலையுடன் கோயிலை நோக்கி ஓடினார். சிகரெட்டை நான் பற்ற வைப்பதற்கு முன்பே அவர் திரும்பி வந்தார்.
மறுபடியும் ரிக்ஷா ஓட ஆரம்பித்தது. தெரு முடியும் இடத்தில் நான் இறங்கவேண்டும். அந்தத் தெருவின் கடைசி வீட்டுக்குத்தான் நான் போகவேண்டும்.
அங்கேதான் எனக்குப் பிரியமான என் தோழன் பாலச்சந்திரனும் அவனுடைய மனைவியும் வாழ்கிறார்கள். அவர்கள் வீட்டுக்கு முன்பு ஒரு தடவை கூட நான் போனதில்லை. இரண்டு வருஷத்துக்கு முன்பு அவனுக்கு மதராஸில் வேலை கிடைத்து அவன் வந்தபோது நான் அவனுக்குத் துணையாக வந்தேன்.
அப்போது விநாயகா என்ற பெயருடைய ஒரு லாட்ஜில்தான் நாங்கள் தங்கியிருந்ததாக எனக்கு ஞாபகம். அது நகரத்தின் எந்தப் பகுதியில் இருந்தது என்று கூட எனக்குத் தெரியவில்லை. அவன் வேலைக்குச் சேர்ந்த மூன்றாவது நாள் நான் ஊருக்கு திரும்பிப் போனேன். அப்போது அவனிடம் ஒரு விஷயத்தைச் சொல்ல நான் மறக்கவில்லை.
“லட்டர் போட மறந்துடாத”. அப்புறம் கடிதங்கள் மூலம்தான் அவனைப் பற்றியும் அவன் தங்கியிருந்த அப்பு செட்டி தெருவைப் பற்றியும் அங்கே கடைசியாக இருந்த 135 ஆவடு வீட்டைப் பற்றியும் நான் தெரிந்து கொண்டேன்.
கம்பெனிக்கு போகும் வழியில் அந்தத் தெருவில் இருந்த குப்புசாமி டீக்கடையின் மசாலா தோசையின் ருசியோடு சேர்ந்து அவர் மகள் சிவகாமியுடைய மனதையும் அவன் சொந்தமாக்கிக் கொண்டான்.
அவன் எழுதிய கடிதங்களில் சிவகாமியின் அழகைப் பற்றியும் அவள் தமிழில் பேசுவது பற்றியும் நிறைய இருந்தது. ஒரு சில கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் ஆதரவுடன் அருகில் இருந்த ஒரு அம்மன் கோயிலில் அவர்களின் திருமணம் நடந்தது. இரண்டு மாநிலக் கலாச்சாரங்களின் சங்கமம். ஆனால், அவனுடைய வீட்டுக்காரர்கள் அதை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.
எனக்கு இண்டர்வியூ கார்டு கிடைத்தவுடனேயே நான் மதராசுக்கு வருவது பற்றி அவனுக்கு போன் மூலம் சொன்னேன். ஆனால் அவன் கடிதங்கள் வழியாகத்தான் எனக்கு பதில் அனுப்பியிருந்தான். அப்பு செட்டி தெருவைப் பற்றி வரைபடங்கள் மூலமாகவும் வார்த்தைகள் மூலமாகவும் அவன் எனக்கு விவரமாகக் கடிதம் எழுதியிருந்தான்.
என்ஜினியரிங்கில் டிப்ளமா வாங்கியதன் பலன் அந்த கடிதங்கள் முழுவதும் பிரதிபலித்தன.
“சார்”. அந்த ஆளுடைய குரலைக் கேட்டபோதுதான் அப்பு செட்டி தெருவின் கடைசி வீட்டு வாசற்படி அருகில்தான் ரிக்ஷா நிற்பதை என்னால் உணர முடிந்தது.
ஃப்ரீஃப் கேஸை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி பத்து ரூபாய் நோட்டை அவருக்கு நேராக நீட்டிக்கொண்டு நான் கேட்டேன்.
“உங்க பேரு என்ன?”
“சந்திரசேகர்” பதில் வந்தது.
கறை படிந்த பற்களைக் காட்டி என்னைப் பார்த்து சிரிக்க அவர் முயற்சி செய்தார்.
ரிக்சா வண்டி என்னை விட்டு மறைவதைப் பார்த்தபடி நான் நின்றுகொண்டிருந்தேன். அந்த உருவம் என் மனதில் மாயாமல் நிற்கிறது. எனக்கு நன்றாகப் பழக்கப்பட்ட முகம் அது. ஆனால், எங்கே பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை.
அவருக்கு ஏறக்குறைய ஏழடி உயரம் இருக்கும். கூர்மையான கண்கள். அன்போடு கலந்த பேச்சு. மலையாளம் கலந்த தமிழ். இந்த கறுத்த மனிதனை எங்கோ நான் பார்த்திருக்கிறேன். மறந்துவிட்டேன். அவரும் அவருடைய சைக்கிள் ரிக்ஷாவும் தெருவின் ஆரம்பத்திற்குப் போய் மறைந்தானர். என்றாலும் அந்த சந்தேகத்தை மனதில் வைத்துக் கொண்டு நான் அந்த கடைசி வீட்டின் மூடியிருந்த வாசல் கதவைத் தட்டினேன்.
வாசலில் வந்து நின்ற இளம் பெண்ணிடம் நான் கேட்டேன். “பாலனோட…”. வார்த்தைகளை நான் முழுமையாக்குவதற்கு முன்பே அவள் சொன்னாள்.
“வாங்க. அவரு சொல்லியிருக்காரு. இவ்வளவு நேரம் உங்களுக்காகக் காத்துகிட்டு இருந்தாரு. இதோ இப்ப வந்துடுவாரு. கோயிலுக்குப் போயிருக்காரு” தமிழ் கலந்த மலையாளத்தில் சொன்ன அவள் உள்ளே போனாள்.
பாலன் வார்த்தைகளின் மூலம் வரைந்து காட்டிய சிவகாமி இவள்தான்.
சோபாவில் உட்கார்ந்து சுவரில் மாட்டியிருந்த படங்களில் கண்களை ஓடவிட்டேன். திடீரென்று என் கவனம் டீப்பாயில் இருந்த செய்தித்தாளின் மீது சென்றது. பந்துடன் வாயுவில் எம்பி குதித்து நிற்கும் இளைஞனின் மங்கிய படம்! அதனுடன் சைக்கிள் ரிக்ஷாவை இழுத்துக் கொண்டு போகும் வயதான ஒரு மனிதனின் படமும். ஆமாம். அவர்தான் சந்திரசேகர்.
இளைஞர்களிடையில் ஒரு காலத்தில் பிரபலமாக இருந்த கூடைப் பந்து வீரர். இந்தியாவின் வலிமையான விளையாட்டு வீரர். படங்களுடன் இருந்த அந்தச் செய்தியை வாசித்தேன்.
என் நினைவுகள் விளையாட்டு மைதானங்களை நோக்கிப் பாய்ந்து சென்றன. அவருடைய ஆட்டோக்ராஃப்க்காக மணிக்கணக்கில் காத்துக் கொண்டிருந்த ரசிகர்கள். அந்த காலத்தில் நான் எனக்குப் பிடித்தமான விளையாட்டு வீரர்களின் படங்களை செய்தித்தாள்களில் இருந்து வெட்டியெடுத்து ஆல்பம் உண்டாக்கிய நினைவுகள். அதைப் பொக்கிஷமாக பாதுகாத்த ஒரு காலம் அது.
செய்தித்தாள்கள், விளையாட்டு ரசிகர்கள் வானளாவ புகழ் பாடிய சந்திரசேகர் என்ற அந்த விளையாட்டு வீரர்! இன்று இதோ இந்தத் தெருவின் வழியாக வாழ்வை மிதித்து மிதித்து ஓட்டுகிறார்! செய்தித்தாள்களைப் பார்த்துக் கொண்டிருந்த என் நிசப்தத்தை பாலனுடைய குரல் கலைத்தது. சிவகாமி பாத்திரத்தில் வடையும் கோப்பையில் தேநீருமாக வந்தாள்.
புன்சிரிப்போடு அவள் பாத்திரத்தையும் கோப்பையையும் டீப்பாயில் வைத்தாள். அவள் அணிந்துகொண்டிருந்த அந்த சிவப்புக் கல் மூக்குத்தியின் பிரகாசம் என் கண்களில் பட்டு என்னைக் கூசவைத்தது. கோப்பையில் இருந்த நிறைந்து ததும்பி வழிந்த சில தேநீர்த் துளிகள் செய்தித்தாள் மீது விழுந்தது.
அவருடைய வாழ்க்கையைப் போலவேச் செய்தித்தாளில் இருந்த அந்த கலர் போட்டோவும் நனைந்து ஈரமாகிப் போனது!
பாலன் வீட்டு விசேஷங்களை ஆவலுடன் என்னிடம் கேட்டு விசாரித்துக் கொண்டிருந்தான். ஆனால் என்னுடைய மனது கூட்டம் அலை மோதிய காலரிகளை புரட்டிப் போட்ட ரசிகர்களின் ஆரவாரங்களுக்கும் ஆனந்தங்களுக்கும் நடுவில் பந்துடன் வாயு மண்டலத்தில் உயர்ந்து நிற்கும் அவரில் பதிந்திருந்தது.
ஒரு காலத்தில் காலரிகளில் நிறைந்து நின்ற அந்த ஆரவாரங்கள் மீண்டும் ஒரு தடவை என் ஞாபகங்களில் கடந்து வந்தன.
அம்மன் கோயிலில் விழா கோலாகலங்கள். பெண்களின் நாட்டிய நிகழ்ச்சிகள். எல்லா சத்தங்களும் கேட்டுக் கொண்டிருந்தன. காலம் தப்பி வந்த சாறல் மழை ஊஞ்சலாடி கடல் கடந்து வீசிய காற்றுடன் சேர்ந்து கடந்து போனது. அப்பு செட்டித் தெருவின் நெரிசல்களுக்கு நடுவில் சந்திரசேகரின் சைக்கிள் ரிக்ஷாவின் ஹாரன் முழங்கியது. அதோடு சேர்ந்து துளித்துளியாக விழுந்து கொண்டிருந்த மழைத்துளிகளின் அழுகை ஓசைகளும்!