நகரத்தின் முதன்மையான வீதியில் இருந்து கொஞ்சம் உள் பக்கமாக ஒரு மூலையில்தான் வர்கி முதலாளியின் பர்னிச்சர் கடை. இரண்டு மாடி உள்ள அந்தக் கடைக்குள் பலதரப்பட்ட பர்னிச்சர்கள். மேல் நிலையில் இருந்த சோபா செட்டும் கட்டிலும் டீப்பாயும் டைனிங் டேபிளும் செஹ்ல்க்பும் திவான் செட்டும் எல்லாம் புது மாதிரியில் செய்யப்பட்டிருந்தன. வருவோர் வாங்கிக் கொண்டு போகும் பர்னிச்சர்கள் இருந்த இடத்தில் புதியவற்றை முதலாளி தன் குடோனில் இருந்து கொண்டு வந்து நிரப்பி வைப்பார்.
ஷோ ரூமில் முதலாளி இருக்கும் போது அவருடைய வாய் ஓயாத புலம்பல்களை சோபாவில் இருந்தபடி நான் கேட்பதுண்டு. பர்னிச்சர் வாங்க வருவோருக்கு நடுவில் வேறு மாதிரி ராஜதந்திரப் பேச்சுகள். “அம்பது வருஷத்துப் பாரம்பரியம் உள்ள கடையாக்கும் இது. எங்களோட ஊரு நிலம்பூராக்கும். நல்ல ஈட்டி மரத்திலயும் தேக்கு மரத்திலயும்தான் இத எல்லாம் செய்யறது. மகாகனின்னு சொல்லி வேறு மரத்துல செஞ்ச சாமானுங்கள சில பேரு விப்பாங்க. ஆனா நாங்க அந்த மாதிரி செய்யறது இல்ல. இங்க இருக்கறது எல்லாமே நல்லதுங்க மட்டும்தான். வில குற்அச்சுதான் நாங்க விக்கறோம்” வாங்க வருபவர்களிடம் முதலாளி சொல்லும் வழக்கமான வாத்தைகள் இவை.
கேட்டுக் கேட்டு எனக்கு இதெல்லாம் மனப்பாடமாகிவிட்டது. உண்மையில் பர்னிச்சர்கள் தொடர்பான அறிவு எனக்கு தேவையான அளவுக்கு இல்லாமல் இருந்ததால் முதலாளியோட இந்த விவரங்கள வரும் வாடிக்கையாளர்களிடம் நான்
அவ்வப்போது சொல்லுவேன். அரசாங்க வேலையில் இருந்து ஓய்வு பெற்ற போது மனதில் ஒரு வெறுமை ஏற்பட்டது.
அதுதான் புதிய ஒரு வேலையைத் தேடவைத்து என்னை இங்கே கொண்டு வந்து உட்காரவைத்தது. ஓய்வு பெற்ற சீனியர் சூப்ரன்டெண்ட்டான நான் பர்னிச்சர் ஷோ ரூமில் இருந்த போது மேனேஜர் கம் சேல்ஸ் மேனாக மாறினேன். அவ்வளவுதான். இந்த வயதில் ஏற்படும் வாழ்வின் சூன்யத்தை மாற்றவேண்டும்.
அத்தியாவசியச் செலவுக்கு தேவையான பணம் கிடைக்கும் வழியைத் தேடிப் பெறுவதே என் இலட்சியம். அரசாங்க வேலையில் இருந்து தூசு தட்டிவிட்டுக் கிளம்பிய போது ஆரோக்கியமான மனதும் உடம்பும் மிச்சமாக இருந்தது. நண்பன்
பாஸ்கரன் வக்கீல் ஒரு பர்னிச்சர் கடையைப் பற்றியும் முதலாளியைப் பற்றியும் டிசம்பர் மாதத்தில்தான் சொன்னதாக எனக்கு ஞாபகம்.
அப்போது மனது கணக்கு போட்டது வீட்டில் இருந்து கடைக்கு இருந்த ஆறு கிலோமீட்டர் தூரத்தைப் பற்றி மட்டும்தான். ஒரு பேருந்துப் பயணம். காலை ஒன்பது மணிக்கு அங்கு இருக்க வேண்டும். ராத்திரி எட்டு மணிக்குத் திரும்பலாம். பிறகு
அதிகம் யோசிக்கவில்லை. தெருவில் பெரிய ஒரு ஜாதி மரத்தின் நிழல் விழுந்த போதுதான் வர்கி முதலாளிக்கு முன்னால் நான் போய் நின்றேன்.
சுற்றிலும் கண்ணாடி மதில்கள் இருந்த ஷோ ரூமுக்கு உள்ளே இருந்து முதலாளி வெற்றிலை போட்டுக் கொண்டிருந்தார். “வேலய ஆரம்பிச்சுடு. முதல்ல பர்னிச்சர்ங்களோட விலயப் பத்தி தெரிஞ்சுக்க. அச்சுதன் ஆசாரி உதவுவாரு விலையக் குறைக்க வேண்டி வந்தா எனக்கு போன் செய்யணும்” முதலாளி ஊக்கத்தோடு சொன்னார்.
குஷன் போட்ட மெத்மெத்தென்று இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் போது முதலாளி “அப்பறம் வரேன்” என்று சமிக்ஞை காட்டிவிட்டு வெளியில் கிளம்புவார். இரண்டு மாதங்களுக்குப் பிறகும் பர்னிச்சர்களில் இருந்து உதிர்ந்த பாலிஷ் வார்னிஷ் வாசனையை மூக்கு நிறைய பிடித்து வைத்துக் கொண்டு நான் இருந்தேன்.
தெருவில் நகரம் இரைச்சலுடன் இயங்கிக் கொண்டிருந்தது. ஒரு விடுமுறைக்காக மனிதர்கள் தெரு முழுவதும் நிறைந்திருந்தார்கள். வெற்றிலைப் பாக்கு போடும் வர்கி முதலாளியுடைய முகம் அப்போது லேசாக கறுத்துப் போயிருந்தது. சர்வீஸில் இருந்தபோது கிடைத்துக் கொண்டிருந்த தற்செயல் விடுப்புகளும் மற்ற விடுப்புகளும் இப்போது இல்லை.
வாரத்திற்கு மூன்று நாட்கள் முதலாளி இந்த கடையில் இருப்பார். மற்ற நாட்களில் நிலம்பூரில் இருக்கும் கடையில். அங்கே முதலாளிக்கு இரண்டு கடைகள். முதலாளிகள் எப்படி இருப்பார்கள் என்பதைப் பற்றி எனக்கு எந்த முன்னறிவும் இல்லை. அரசாங்க வேலையில் இருந்த போது பல தடங்கல்களும் பொதுமக்களும் பிரச்சனைகளுமாக என் அறிவு ஒரு வரையறைக்கு உட்பட்டிருந்தது. இப்போதோ முதலாளிதான் ஒரு பிம்பமாக எனக்கு முன்னால் நின்று கொண்டிருக்கிறார். முன்பு இருந்த உலகத்தில் இட மாற்றங்களும் அதிகாரிகளின் அணுகுமுறைகளும் சிலருடைய புறக்கணிப்புகளும் அனுபவங்களாக இருந்தன. இனி இப்போது ஒரு முதலாளியின் சிந்தனை ஓட்டங்களை நான் வாசிக்க வேண்டும்.
முதலாளியுடய இருப்பு சில நாட்களில் இங்கே இல்லை என்றாலும் போன் மூலம் அவர் வியாபாரத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்வார். அதை நான் விரக்தியோடு நினைத்துப் பார்க்கிறேன் அனுபவிக்கிறேன். சில நாட்களில் முதலாளி நிலம்பூரில் உள்ள கடையில் இருந்து “ம். யாராச்சும் வந்தாங்களா?” என்று விசாரிப்பார்.
இப்படிப்பட்டக் கேள்வியை முதல்முறையாக கேட்டபோது வியாபாரத்தில் அவருக்கு இருந்த அக்கறையை நினைத்து நான் பெருமைப்பட்டேன். ஆனால், பத்து நிமிடம் கழித்து இந்தக் கேள்வியைத் திரும்பக் கேட்டுக்கொண்டு அவர் போன் பேசியபோது உண்மையில் நான் சங்கடப்பட்டேன். எனக்குள் படபடப்பை ஏற்படுத்தியபடி அரை மணி நேரம் கழித்து மறுபடியும் அதே கேள்வி.
போனில் நான் பதில் சொல்வதை உள்ளேயிருந்த அச்சுதன் ஆசாரி கேட்டுக் கொண்டிருப்பார். போனை வைத்துவிட்டு சங்கடத்தோடு நான் நிமிர்ந்து உட்கார்ந்த போது அச்சுதன் ஆசாரி என்னைச் சமாதானப்படுத்தினார். “முதலாளி அப்படித்தான். பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவையும் சில சமயத்துல அரை மணி நேரத்துக்கு ஒரு தடவையும் போன் செய்வாரு. அவரோட சொத்துதான் இங்க இருக்கு?”. ஒரு முதலாளிக்கு தேவையான குணம் இதுதான். இதை நான் ஊகிக்காமல் இல்லை.
கடையில் இருக்கும்போது அவருடைய பேச்சு பெரும்பாலும் பர்னிச்சர்களைப் பற்றிதான் இருக்கும். “கிரில் செட் போட ஆள் வந்தாங்களா? சாமான ஏத்டிகிட்டு வந்த ஆட்டோக்காரன் கடைசி தடவை இருபத்தி அஞ்சு ரூபா கூடுதலா வாங்கிட்டான். அவன இனிம கூப்பிடவேணாம்”. இது போன்ற விஷயங்களை அவர் அச்சுதன் ஆசாரியிடம்தான் சொல்வார். இதையெல்லாம் நான் ஆமாம் போட்டுக் கேட்பேன். பொறுப்பை எனக்கு மட்டும் கொடுப்பதற்கு முதலாளி தயங்குவதாக அப்போது எனக்குத் தோன்றுவதுண்டு. இப்படி வியாபாரத்தின் மந்திரமும் தந்திரமும் மட்டும் இங்கே நிலை நிற்கும் போது நடுநடுவில் நான் யோசிப்பதுண்டு.
ஆபீசில் ப்யூன் ராமகிருஷ்ணனோடு தர்க்கம் செய்த நாட்கள் நினைவுக்கு வந்தது. அதெல்லாம் வாசித்த புத்தகத்தைப் பற்றியோ, பார்த்த சினிமாவைப் பற்றியோ, அரசியலைப் பற்றியோ இருக்கும். தெருச் சண்டையின் போது சொல்லப்படும் கடுமையான வார்த்தைகள் முதலாளிக்கு தண்ணீர் பட்ட பாடு. எந்த ஒரு முதலாளிக்கும் தான் போட்ட முதலைப் பற்றிய கவலை இருக்கும். அது இயல்பானதுதான். இதனுடைய விளைவுகள் முதலாளியிடம் இருந்து எந்த நிமிடமும் ஏற்படலாம் என்று நான் பயந்துகொண்டிருந்தேன். அச்சுதன் ஆசாரிக்கு நேராகத் தான் இதெல்லாம் பொழியப்படுகிறது என்றாலும் அதில் ஒரு பங்கு எனக்கும் சேர்ந்ததாக இருக்கும். சர்வீஸில் இருந்தபோது க்ளார்க்குகளுக்கு நேருக்கு நேராகச் சில சமயங்களில் நான் கடுமையாக நடந்து கொண்டிருக்கிறேன்.
அந்த அத்தியாயங்கள் எல்லாம் காற்றில் மறைந்து மறைந்து போய்விட்டன என்பதை நான் சங்கடத்தோடு நினைத்துப் பார்த்தேன். இப்போது புதிய இருப்பிடத்தில். புதிய அனுபவங்களுமாக. பெரிய கண்ணாடித் திரைகளுக்குப் பின்னால் பொருட்களுடன் இருக்கும் போது என்னால் சிந்தனைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. எச்சரிக்கையோடு இருக்கவேண்டும். எந்த நிமிடத்திலும் வாடிக்கையாளர்கள் வரலாம். காலை ஒன்பது மணிக்கும் இரவு எட்டு மணிக்கும் நடுவில் பாலிஷ் வாசனையுள்ள வியாபார தந்திரங்கள் மட்டும் இங்கே. ஃபர்னிச்சர் சாதனங்களை பணமாக்கி மாற்றவேண்டும். முதலாளியைத் திருப்திப்படுத்த வேண்டும்.
அன்று ஒரு திங்கட்கிழமை. வெளியில் வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. குடையுடன் போய்க் கொண்டிருந்த ஒரு பெண்மணி மீது என் கவனம் பதிந்தது. அவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன். நினைவுக்கு வரவில்லை. ஒருவேளை முன்பு ஆபீசுக்கு வந்தவராக இருக்கலாம். என்னுடைய கவனம் கடையை நோட்டம் விட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த இரண்டு பேர் மீது திரும்பியது.
ஒரு நடுத்தர வயதுக்காரனும் ஒரு சிறிய வயதுக்காரனும். இலேசான தயக்கத்தோடு நான் அவர்களை வரவேற்றேன். ஒரு வியாபாரியின் கண்கள் இன்னும் என்னில் முழுவதுமாக விழித்துக் கொள்ளவில்லை என்று இதற்கிடையில் நான் புரிந்து கொண்டிருந்தேன்.”சோபா செட் வேணும். டைனிங் டேபிளும் நாற்காலிங்களும் வேணும். ஒரு கட்டிலும் ஒரு நல்ல ஷெல்ஃபும்”
வந்தவர்கள் தங்கள் தேவைகளைச் சொன்னபோது நான் அவர்களை பர்னிச்சர்களுக்கு இடையில் அழைத்துக் கொண்டு போனேன். தேர்ந்தெடுக்க வேண்டியது அவர்கள்தான். அவர்களுக்கு அருகில் நான் வாயைப் பூட்டிக் கொண்டு நின்றேன். என்னிடம் முன்பு இருந்த வாய் ஜாலம் இப்போது மெல்ல மெல்ல நஷ்டமாகிக் கொண்டிருந்தது. அவசியத்துக்கு மட்டும் வாய் திறப்பது ஒரு வியாபாரிக்கு அணிகலன் இல்லை என்று எனக்குத் தெரியும். வழி தப்பி வந்த ஒரு தேசாந்திரியைப் போல நான் இருக்கிறேன். வந்தவர்கள் ஒவ்வொரு சாதனத்தையும் தொட்டு தலை வருடிப் பார்த்தபடி சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்கள் அரைமணி நேரம் செலவழித்திருந்தார்கள். மேலும் கீழுமாக அவர்கள் நடந்து கொண்டிருந்தார்கள். இந்த மாதிரி ஏற்படுவது இது முதல் தடவை இல்லை. பல சமயங்களிலும் இது போன்ற அனுபவங்கள். அத்தனை அனுபவங்களும் சேர்ந்து என்னைப் பக்குவப்படுத்தி இருக்கிறது. “டபுள் கோட் கட்டிலப் பாக்கணும்”. நடுத்தர வயதுக்காரண் கேட்டான். மற்றொரு மூலைக்கு நான் அவர்களைக் கூட்டிக் கொண்டு போனேன்.
சாய்த்து நிறுத்தப்பட்டிருந்த கட்டிலை சுட்டிக்காட்டி நான் சொன்னேன்.”இது ஈட்டி மரத்துல செஞ்சதா? முழுக்க முழுக்க அதுல செஞ்சதுதானா?” சிறிய வயதுக்காரனுடைய சந்தேகம். “இல்ல. ஃப்ரேம் மட்டும்” நான் பதில் சொன்னேன்.
“நல்லா இருக்கே? இதுக்கா இத்தன வில?” ஃப்ரேமில் பதிக்கப்பட்டிருந்த விலையைப் பார்த்துவிட்டு சிறிய வயதுக்காரன் கேட்டான்.
நேரம் இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. நான் அப்போது சாப்பிட்டிருக்கவில்லை. காலை ஏழு மணிக்கு சாப்பிட்ட இட்லியுடைய செரிமானம் அஸ்தமித்துப் போயிருந்தது. பசி கூர்மையாக இருந்தது. “இவங்க எதையும் வாங்கப் போறது இல்ல” என்று தோன்றியது. விலைகள் அவர்களைத் திருப்திப்படுத்தவில்லை. எந்த நிமிடமும் மற்றொரு பர்னிச்சர் கடையைத் தேடி அவர்கள் இறங்கிப் போகலாம் என்ற நிலை.
“இதெல்லாம் ஒரிஜினல் மரத்தால செஞ்சதுதானா?. வில அதிகம்தான்”. வந்தவர்களில் ஒருவன் சொன்னான்.
சாதாரணமாக ஒரு வாடிக்கையாளரின் பாகத்தில் இருந்து உற்பத்தியாகக்கூடிய ஒரு கருத்துதான் அது. ஆனால் என்னுடைய சோர்வும் பசியும் வார்த்தைகளைத் தாறுமாறாக்கியது.
சகிக்கமுடியாமல் சொன்னேன். “வேணும்னா வாங்கினாப் போதும். யாரும் கட்டாயப்படுத்தலயே?”. அவர்கள் பரபரப்போடு என்னைப் பார்த்தார்கள். ஒரு மேனேஜர் கம் சேல்ஸ் மேன் இப்படி அறுத்தெறிந்து பேசக்கூடாது. எனக்கு சங்கடம் ஏற்பட்டது. நான் நிம்மதி இல்லாமல் தலையைத் திருப்பினேன். பின்னால் முதலாளி!
வாடிக்கையாளர்களை பாலும் தேனும் கொண்டு அபிஷேகம் செய்யவேண்டும் என்று சொல்லாமல் சொல்லிக் கொடுத்திருக்கும் முதலாளி. என்னுடைய உடல் லேசாக நடுங்கியது. வியர்வை பெருகியது. என்னால் முதலாளியுடைய முகத்தைப் பார்க்க முடியவில்லை. எப்படி அவர் என்னை இம்சைப்படுத்தப் போகிறார் என்று அந்த நிமிடம் நான் யோசிக்க ஆரம்பித்தேன்.
முதலாளியிடம் இருந்து வெளிப்பட்ட நிசப்தம் வரப்போகும் ஒரு கடும் புயலுடைய சுழற்காற்றின் அறிகுறியாகத் தோன்றியது. மனதால் நான் அடுத்து செய்யப்போகும் வேலையைப் பற்றிய கற்பனையில் நகர்ந்தேன். இந்த இடத்தை விட்டுவிட்டுப் போனால் பொழுதைப் போக்க ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். எனக்கு இருந்த பத்து செண்ட் இடத்தில் கொஞ்சம் விவசாயம் செய்யலாம்.
இனி மேல் இருக்கும் ஒரே வழி அதுதான். என்னுடைய சிந்தனைகள் ஒன்றுடன் ஒன்று பிணைத்துக் கொண்டு போக முற்றிலும் யோசனைகள் இன்றி நான் நின்றேன். வாடிக்கையாளர்களுக்கும் முதலாளிக்கும் நடுவில் நான் இருந்தேன்! இது ஒரு திருப்புமுனையா?