சிலபேரு அடுத்தவங்க என்ன பேசறாங்களோ அதே மாதிரிப் பேசறது. அவங்க என்ன செய்யிறாங்களோ அதையே செய்யிறதுன்னு இருப்பாங்க. எதையும் புரிஞ்சி செய்யமாட்டாங்க. பேசமாட்டாங்க. அவங்கள வெவரங் கெட்டவன்னும், மறுக்கோளிப் பையன்னும் சொல்லுவாங்க. இந்த மறுக்கோளியப் பத்தின கதையொண்ணு எங்க பக்கத்துல வழங்கி வருது.
ஒரு பெரிய ஊரு ஒண்ணு இருந்தது. அந்த ஊருல எல்லாரும் நல்லா ஒத்துமையா வாழ்ந்து வந்தாங்க. ஒருத்தருக்கொருத்தர் ஒதவி செஞ்சிக்கிட்டும் நல்லது கெட்டதுக்குப் போயிக்கிட்டுமா இருந்தாங்க. அந்த ஊருல ஒருத்தன் இருந்தான். அவன் நல்லவன். இருந்தாலும் அவன் வெவரங் கெட்டவனா இருந்தான். அவன மறுக்கோளின்னு சொல்லித் திட்டுவாங்க.
அவன் எல்லாரோடயும் அன்பாப் பழகுனான். அவனுக்கு அப்பா இல்ல. அம்மா மட்டுந்தான் இருந்தாங்க. அந்த அம்மா அவன நல்லாப் பாத்துக்கிட்டாங்க. அவன் ஒரு பிள்ளையா இருந்ததால அவன ரொம்பச் செல்லமா வளர்த்தாங்க. அவன் சின்னப் பையனா இருந்ததால அவனக் கண்ணுக்குள்ளாற வச்சிப் பாத்துக்கிட்டாங்க.
இப்படி இருக்கயில ஒரு நாளு அவங்க அம்மாவுக்கு ரெம்ப முடியல. அவனும் பக்கத்துல உள்ளவங்களோட ஒதவியோட அம்மாவ நல்லாக் கவனிச்சான். இருந்தாலும் அவன் அம்மா இறந்து போனாங்க. அவன் ரெம்ப அழுதான். அவன் சின்னவனா இருந்ததால அந்த ஊருக்காரவுங்க எல்லாரும் வந்து பாத்து ஆறுதல் சொன்னாங்க.
ஒவ்வொருத்தரும் வந்து அவனப் பாத்து, ‘‘டேய் தம்பி நீ கவலப் படாதடா… ஒன்ன நாங்க பாத்துக்குறம்… ஒன்னோட அம்மா ஒனக்கு மட்டும் அம்மாவா இல்லடா... இந்த ஊருக்கே அம்மாவா இருந்தாங்கடா… அவ்வளவு நல்லவங்கடான்னு…’’ சொல்லி ஆறுதல் சொன்னாங்க. அவங்க அம்மாவையும் நல்லவிதமா அடக்கம் செஞ்சாங்க.
அந்தப் பய சின்னவங்கறதால அவன எல்லாரும் நல்லாப் பாத்துக்கிட்டாங்க. அவனும் தன்னால முடிஞ்சதச் செஞ்சிக்கிட்டு அம்மா இல்லங்கற கொறை இல்லாம இருந்தான்.
கொஞ்ச நாளு போச்சு. பக்கத்து வீட்டுக்காரனோட பொண்டாட்டி இறந்து போயிருச்சு. ஊருல எல்லாரும் பக்கத்து வீட்டுக்கு வந்து புருஷங்காரனுக்கு ஆறுதல் சொன்னாங்க.
இதப் பாத்த இந்தச் சின்னப் பயலும் பக்கத்து வீட்டுக்குப் போனான். அங்கயே இருந்தான். ஊருல எல்லாரும் ஆறுதல் சொல்றாங்களே. நாமளும் போயிச் சொல்லணுமேன்னு நெனச்சான். ஆன எப்படிச் சொல்லி ஆறுதல் சொல்றதுன்னு தெரியல.
என்ன பண்றதுன்னு இருந்தவனுக்குத் தன்னோட அம்மா இறந்தபோது நடந்தது நெனவுக்கு வந்தது.
நம்ம அம்மாவுக்குச் சொன்ன மாதிரியே நாமளும் சொல்லுவோம்னுட்டு அவனும் அழுதுகிட்டு இருந்த பக்கத்து வீட்டுக்காரனுக்கிட்டப் போயி, ‘‘அண்ணே அண்ணே அழுகாதீக அண்ணே… ஒங்க பொண்டாட்டி நல்லவங்க. அவங்க ஒங்களுக்கு மட்டுமா பொண்டாட்டியா இருந்தாங்க….? இந்த ஊருக்கேல்ல பொண்டாட்டியா இருந்தாங்கன்னு’’தான் சொன்னான்.
இதைக் கேட்ட பக்கத்து வீட்டுக்காரன் அந்தப் பயலப் போட்டு அடிஅடின்னு அடிக்க ஆரம்பிச்சிட்டான். பக்கத்துல இருந்தவங்க போயி அவன வெலக்கிவிட்டுட்டு, ‘‘என்னடா இந்தச் சின்னப் பயலப் போயி இப்படிப் போட்டு அடிக்கிறீயேன்னு’’ கேட்டாங்க.
அதக்கேட்ட பக்கத்து வீட்டுக்காரன் நடந்ததச் சொன்னான். சின்னப்பய சொன்னதக் கேட்ட ஊருக்காரங்க அட மறுக்கோளிப் பயலே… சுத்த வெவரங்கெட்டவனாவுல்ல இருக்கான்னு நெனச்சிக்கிட்டு, ‘‘ஏண்டா இப்படிச் சொன்னேன்னு’’ கேட்டாக.
அதுக்கு அந்தச் சின்னப் பய, ‘‘எங்க அம்மா இறந்தபோது இப்படித்தானே நீங்க எல்லாரும் கேட்டீங்க… அதனால நானும் இப்படித்தான் கேக்கணும்னு நெனச்சி பக்கத்து வீட்டுக்காரரப் பாத்துக் கேட்டுப்புட்டேன்… இது தப்பான்னு’’ கேட்டான்.
ஊருக்காரவுக எல்லாரும் சிரிச்சிட்டாங்க. எல்லாரும் சிரிக்கிறதப் பாத்துட்டு அந்தச் சின்னப்பய பேந்தப் பேந்த முழிச்சான்.
எதச் சொல்றதா இருந்தாலும் நல்லா யோசிச்சிச் சொல்லணும்னு அதுலருந்து அந்தப் பய தெரிஞ்சிக்கிட்டான்.
இந்தக் கதைய இன்னிக்கு வரைக்கும் எல்லாரும் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாங்க.