நாம சாப்பிடற போது அடுத்தவங்களுக்கும் கொடுத்துச் சாப்பிடணும். அடுத்தவங்களுக்கு அப்படி கொடுத்துச் சாப்பிடுகின்ற போதுதான் சாப்பிடறதுக்கே ஒரு அர்த்தம் ஏற்படுது. சில பேரு எதையும் யாருக்கும் கொடுக்க மாட்டாங்க. தாங்களே எல்லாத்தையும் சாப்புட்டுருவாங்க. ஒரே வீட்டுக்குள்ளாற ஒன்றாக வாழ்ந்தாலும் மத்தவங்களுக்கு வேண்டுமேன்னு நினைக்காது எல்லாத்தையும் சாப்பிடறவங்களும் இருக்காங்க.
இன்னும் சில பேரு நாக்குக்கு அடிமையானவங்க. அதுதாங்க ருசியா எது கிடைச்சாலும் சரி. ருசி பாக்குறேன் ருசி பாக்குறேன்னே எல்லாத்தையும் சாப்புட்டுருவாங்க. இதப்பத்தி ஒரு கதை ஒண்ணு இருக்கு.
ஊருக்குள்ளாற ஒரு வீட்டுல புருஷன் பொண்டாட்டி ரெண்டுபேரு சந்தோஷமா வாழ்ந்தாங்க. புருஷங்காரன் பொண்டாட்டிமேல ரெம்பப் பாசமா இருப்பான். பொண்டாட்டிகாரியும் பாசமாத்தான் இருப்பா. ஆனா அவக்கிட்ட ஒரு சின்னக் கொறை. யாருக்கும் இருந்தாலும் இல்லாட்டியும் அதப் பத்தியெல்லாம் கவலைப் படமாட்டா. நல்லா வயிறுமுட்ட சாப்புடுவா.
இப்படி இருக்கையில ஒரு நாளு புருஷங்காரனுக்கு ஒரு ஆசை வந்துருச்சு. அவனுக்குக் குழிப் பணியாரம் சாப்புட்டு ரெம்ப நாளாச்சு. அதனால குழிப்பணியாரத்துக்கு வேண்டியதெல்லாம் பொண்டாட்டிக்கிட்ட வாங்கிக் கொடுத்துட்டு, "நல்லா குழிப்பணியாரம் செஞ்சு வையி. வெளியில கொஞ்சம் வேலை இருக்கு அதைச் செஞ்சி முடிச்சிட்டு வர்றேன்னு" சொல்லிட்டுப் போயிட்டான்.
பொண்டாட்டியும் சரின்னு சொல்லிட்டுk குழிப்பணியாரம் செய்யிறதுக்கு தயார் செய்ய ஆரம்பிச்சா. அம்பது பணியாரமாவது செய்யணும்னு மாவத் தயார் செஞ்சவுடனே குழிப்பணியாரத்தச் சுடத் தொடங்கினா. மாவ நல்லாத் தயார் செஞ்சதால பணியாரம் அருமையா வந்தது. நெய் வேற போட்டுச் செஞ்சதால பணியார வாசம் மூக்கத் தொலைச்சது.
பணியாரம் நல்லா வெந்தவுடனே அத எடுத்துத் தட்டுல போட்டா. அது ஆறுன உடனே நல்லா இருக்கான்னு ருசி பாப்போம்னு ஒன்ன எடுத்துத் தின்னு பார்த்தா. பணியாரம் நல்லா வந்துருந்துச்சு. அட நல்லா வந்துருக்கேன்னு சந்தோஷப்பட்டா.
இன்னும் நல்லா வந்துருக்கான்னு கொஞ்சங்கொஞ்சமா ருசிபாத்தா. கொஞ்சம் பணியாரம் சுடறது. அப்பறம் ருசிபாக்குறதுன்னே அவ இருந்ததால மாவெல்லாம் தீந்து போச்சு. அவளுக்கே ஒரு மாதிரியாப் போச்சு. 47 பணியாரத்தத் தின்னுட்டா. கடசியில பாத்தா தட்டுல மூணேமூணு குழிப்பணியாரந்தான் கெடந்தது. சரி இத நம்ம வீட்டுக்காரர் திங்கறதுக்காக வச்சிருவோம்னு ஒரு தட்டுல போட்டு மூடி வச்சிருந்தா.
புருஷங்காரன் வேலையெல்லாம் முடிச்சிட்டு குழிப்பணியாரத்தத் திங்கறதுக்காக ஆசையாவும் பசியாவும் வேகவேகமா வந்தான். கையக்காலக் கழுவிக்கிட்டு வீட்டுக்குள்ளாறப் போயி பொண்டாட்டிக்கிட்ட, “பணியாரஞ் செஞ்சிட்டியா..? செஞ்சிட்டியின்னா இங்க கொண்டா. எனக்கு ஆசையா இருக்குன்னு” சொன்னான்.
பொண்டாட்டியும் தட்டுல இருந்த மூனேமூனு குழிப்பணியாரத்த எடுத்துக்கிட்டு வந்து கொடுத்தா. தட்டுல இருந்ததப் பாத்த ஒடனே அவன் ஆடிப் போயிட்டான்.
அவன் பொண்டாட்டியப் பாத்து, “ஏண்டி அம்பது பணியாரஞ் சுடச் சொன்னேன் தடடுல மூனேமூனுதான் வச்சிருக்க. அம்புட்டையும் என்னடி பண்ணுனே?”ன்னு கேட்டான். பொண்டாட்டிகாரி, “எதுக்குக் கோபப்படறீங்க... ஒங்களுக்கு ருசியாச் செஞ்சி கொடுக்கணும்னு நாந்தேன் ருசிபாக்குறதுக்காக எடுத்துத் தின்னு பாத்தேன்... நல்லா இருந்ததா ஒங்களுக்குப் புடிக்குமேன்னு மூனு எடுத்து வச்சிருக்கேன். நீங்க சாப்புடுங்கன்னு” சொன்னா.
புருஷங்காரனுக்கு உள்ளாறக் கோபமா இருந்தாலும் அத வெளியில காட்டிக்காமா, “ஆமா அம்புட்டுப் பணியாரத்தையும் எப்படிடீ ஒராளுமட்டும் தின்னே”ன்னு கேட்டான்.
அதுக்குப் பொண்டாட்டிகாரி, “இதப் பாருங்க இப்படியெல்லாம் கேக்கப்படாது. ஒங்களுக்குன்னு ஆசையா எடுத்து வச்சிருந்து கொடுக்கிறேன். அதத் திங்காம அது எங்கு இது எங்கன்னுட்டு கேட்டுக்கிட்டு இருக்கறீங்கன்னு?” சொன்னா.
புருஷங்காரனும் பொறுமையா, “ஏண்டி அம்பது பணியாரத்துல மூனு போக மீதிய எப்படிடீ தின்ன?” ன்னு விடாமக் கேட்டான்.
அதக் கேட்ட பொண்டாட்டிகாரி, “இந்தாப் பாருங்க... இப்படித்தான்னு” சொல்லிட்டு தட்டுல இருந்த மூனு பணியாரத்தையும் எடுத்துத் தின்னுட்டா. அதப் பாத்த புருஷங்காரனுக்குக் கோவமான கோவம் வந்துருச்சு. அட இருந்த மூனு பணியாரமும் போச்சேன்னு அவள அடி அடின்னு அடிச்சிப் போட்டுட்டான். பொண்டாட்டிகாரியும் புருஷங்காரன் அடிச்சா அடிச்சிட்டுப் போறான்னு பொறுத்துக்கிட்டா. இந்தக் கதைய இப்பவும் சொல்லிச் சொல்லிச் சிரிப்பாக.