நாம எல்லாத்தையும் அடக்கி விடலாம். ஆனா இந்த மனச அடக்க முடியுமா? இந்தக் கேள்விக்கு பல காலமா விடையைத் தேடிக்கிட்டு இருக்காங்க. சிலர் மனச அடக்கி அதை வென்றிருக்காங்க. அவங்க மகான்கள். ஆனா சாதாரணமா இருக்கற நாம அதைச் செய்ய முடியுதான்னா? விடை மீண்டும் கேள்விக் குறியாய் வந்து மனசே நிற்கின்றது. மனசு அடங்கிடுச்சின்னா நிம்மதி, அமைதி மகிழ்ச்சி தானா வந்து நம்மைச் சேரும்.
பணங்காசு இருந்தும் எல்லா வசதி வாய்ப்புகளும் இருந்தும் பலருக்கும் நிம்மதிங்கறது இல்லையே? அந்த நிம்மதியைத் தேடித்தேடி எங்கே கிடைக்கும் எங்கே கிடைக்கும்னு அலையறாங்களே! அலைஞ்சு அலைஞ்சு கடைசியில நிம்மதியைப் பெறாமலேயே போயிடறாங்க. மனசு அலைபாயாம அடங்கிடுச்சுன்னா நாம நினைக்கிற நிம்மதி கிடைச்சிடும். அலைபாயற மனச அடக்க முடியாமா நாம அலைஞ்சிக்கிட்டே இருக்கிறோம். இதைப் பற்றிய ஒரு கதை ஒண்ணு இருக்கு. அந்தக் கதையக் கேளுங்க.
ஒரு ஊருல பெரிய பணக்காரர் ஒருத்தர் இருந்தார். அவரு எங்க போனாலும் கூட ரெண்டு வேலைக்காரங்க வருவாங்க. அவரு என்ன நினைக்கிறாரோ அதைச் செய்வாங்க. அப்படிப்பட்ட பணக்காரருக்கு நெறைய நிலம் சொத்துன்னு இருந்துச்சு.
ஆனா அவரோட மனசுல ஒருவிதமான விரக்தி நிறைஞ்சு இருந்துச்சு. அவருக்கு நிம்மதிங்கறதே இல்லாம இருந்துச்சு. வீடு, மனை, மனைவி, மக்கள், சொத்து, சுகம் அனைத்தும் இருந்தாலும் அவருக்கு எதுலயும் மகிழ்ச்சியே கிடைக்கல. அமைதியும் கிடைக்கல. மனசு எதுலயும் ஒட்டல. அவரும் என்னென்னமோ செஞ்சி பாத்தாரு. ஆனா மனசுல நிம்மதி வரல. என்ன காரணம்னு அவருக்கும் தெரியல.
இதனால அவரு பிரம்மை புடிச்சவருமாதிரி வீட்டுல இருக்க ஆரம்பிச்சாரு. வீட்டுல இருக்கறவங்களுக்கு ஒண்ணும் புரியல. அதுமட்டுமில்லாம நிம்மதியைத் தேடி ஒவ்வொரு ஊரா அலைஞ்சும் திரிஞ்சாரு. ஆனா மன நிம்மதி மட்டும் அவருக்குக் கிடைக்கல. என்னடா பண்றதுன்னு அவரு யோசிச்சிக்கிட்டு இருந்தாரு.
அந்தச் சமயத்துல அந்த ஊருக்கு ஒரு பெரிய மகான் வந்தாரு. அவரு ஊருக்கு ஒதுக்குப் புறமா இருந்த அரசமரத்தடியில தங்கியிருந்தாரு. அவர் வந்த சேதி ஊரு முழுக்கத் தீயாட்டம் பரவிருச்சு. அதைக் கேள்விப்பட்ட அந்தப் பணக்காரரு அந்தச் சாமியாரப் பாக்குறதுக்குப் போனாரு.
அந்தச் சாமியாரப் பாத்து பணக்காரரு, "சாமி எனக்கு நிம்மதியே கிடைக்கமாட்டேங்குது. எல்லாம் இருக்கு. ஆனா என்னோட மனசு அமைதியில்லாம அலைஞ்சிக்கிட்டே இருக்குது. அதக் கட்டுப்படுத்திடணும்னு நானும் கடும் முயற்சி பண்றேன். ஆனா முடியல. படுத்தா தூக்கம் வரமாட்டேங்குது. எதையாவது நினைச்சிக்கிட்டே இந்த மனசு இருக்குது. என்ன செய்யிறது. என்னோட மனசு நிம்மதியாவும் அமைதியாவும் இருக்கறதுக்கு நீங்கதான் ஏதாவது எனக்கு வழிகாட்டணும்னு" சொன்னாரு.
அவரப் பாத்த சாமியாரு, "அப்பா நீ இறைவனை நினைப்பியா? எவ்வளவு நேரம் இறைவனையே நினைச்சிக்கிட்டே இருப்பே?"ன்னு கேட்டாரு. அதுக்கு அந்தப் பணக்காரரு, "சாமி தெனந்தோறும் நான் சாமியக் கும்புட்டுக்கிட்டே இருப்பேன். சாமியக் கும்புடறபோது மனசு எங்கெல்லாமோ போகுது. அப்பறம் சாமியப் பத்தின நெனப்பே வரமாட்டேங்குது. நான் என்ன செய்யிறது?" கேட்டாரு.
சாமியாரு அவரப் பாத்து, "அப்பா கவலைப் படாதே. நான் சொல்றது மாதிரி செய்யி. நீ மட்டும் ஒரு அரையில சாமி முன்னால இருந்துக்கிட்டு அவரையே நினைச்சிக்கிட்டு இரு. அப்பறம் ஒன்னோட மனசு ஒனக்குக் கட்டுப்படும் போ. அப்படி இல்லேன்னா என்கிட்ட வா" அப்படீன்னு சொல்லி அனுப்பிச்சாரு.
அந்தப் பணக்காரரும் சரி சாமி சொல்றபடி செஞ்சி பாப்போம்னு வீட்டுக்கு வந்து தனக்குன்னு உள்ள பூசை அறையில ஒக்காந்து பூசைசெய்யிறதுன்னு முடிவு செஞ்சாரு.
மறுநாள் காலையில குளிச்சி முழுகி அந்தப் பூசையறைக்குள்ளாறப் போயி ஆண்டவன நெனச்சாரு. ஆனா கதவு தெறந்திருந்ததால அது வழிய வெளிச்சம் வந்துச்சு. கண்ணக் கூசிச்சு. ஒடனே அவரு அந்தக் கதவைச் சாத்திக்கிட்டு கண்ணை மூடிக்கிட்டு சாமி பேரைச் சொல்லிக்கிட்டே இருந்தாரு. கொஞ்ச நேரம் அப்படியே போச்சு.
அந்த நேரம் பாத்து அவங்க வீட்டுச் சமையலறையில இவருக்குப் புடிச்ச குழம்பத் தாளிச்சிக்கிட்டு இருந்தாங்க. அந்த வாசனை காத்துல மெதந்து வந்தது. அதச் சுவாச்சிச்ச அந்தப் பணக்காரருனால அதுக்கும்மேல பூசையறையில இருக்க முடியல. ஒடனே இதுக்கு ஒரு வழி பண்ணியாகனும் நெனச்சிக்கிட்டு எழுந்திருச்சிப் போனாரு.
போனவரு நல்லாச் சாப்பிட்டுட்டு, மனைவியக் கூப்புட்டு, “இனிமே சமையல இங்க செய்யாதீங்க. பக்கத்துல இருக்கற நம்மளோட இன்னொரு வீட்டுல செஞ்சி எடுத்துக்கிட்டு வாங்க”ன்னு சொன்னாரு. அந்தம்மாவும் சரின்னு சொல்லிட்டுப் போனாங்க.
இவருக்கு அப்பா இனிமே சமையல் வாசனையே வராது. அப்படீன்னு நெனச்சிக்கிட்டு, மறுநாளு அதேமாதிரி குளிச்சி முழுகிட்டு கதவையெல்லாம் சாத்திக்கிட்டு சாமியக் கும்புடத் தொடங்கினாரு. கொஞ்சநேரம் அப்படியே போயிக்கிட்டு இருந்துச்சு. சாமிய உச்சகட்டத்துல அவரு நெனக்கற நேரமாப் பாத்து அந்தப்பக்கமா அவரு வீட்டுல வேலை பாக்குற வேலைக்காரப் பொண்ணு நடந்து போச்சு. அந்தப் பொண்ணு கால்ல கொலுசு போட்டுருந்துச்சு. அது நடக்கிறபோது சல்சல்னு சத்தம் கேட்டது. இந்தச் சத்தம் இந்தப் பணக்காரரு காதுல விழுந்துச்சு. அவரால அதுக்குமேல சாமிய நெனக்க முடியல. இதுயாரு இந்த வேலைக்காரப் பொண்ணு நடந்து போற மாதிரில்ல இருக்குது. இந்தப் பிள்ளை ஒழுங்கா வேலை பாக்குதா. இல்லை நம்மள ஏமாத்துதா? அப்படீன்னு நெனக்க ஆரம்பிச்சாரு.
சாமிய நெனக்கல. ஒடனே சரி இதுக்கு ஒரு வழி செஞ்சிட்டு நாளைக்குச் சாமியக் கும்புடுவோம்னு நெனச்சிக்கிட்டு அவரு அன்னைக்கு பூசைய முடிச்சிக்கிட்டு வெளியில வந்தாரு. இதுக்கு என்ன செய்யலாம்னு யோசிச்சாரு.
ஒடனே ஆளுகள வரச்சொல்லி ஒரு ஓட்டை இல்லாம அந்த அறைய அடைக்கச் சொன்னாரு. இனிமே எந்தச் சத்தமும் கேக்காதுன்னு தெரிஞ்சிக்கிட்டாரு.
அடுத்தநாளு வெள்ளனவே எழுந்திருச்சி குளிச்சிப்புட்டு சாமியறைக்குள்ளாற ஒக்காந்துக்கிட்டு சாமிகும்புடத் தொடங்கினாரு. எந்தச் சத்தமும் கேக்கல. எந்த வாசனையும் வரல. அமைதியா இருந்துச்சு. அவரு சாமியோட பேரச் சொல்லிக்கிட்டே இருந்தாரு.
நேரம் போயிக்கிட்டே இருந்துச்சு. அப்ப சரியா அவரோட மனசுல இந்த நேரந்தான நேத்துக் கொலுசுச் சத்தம் கேட்டது. அப்படீங்கற எண்ணம் ஓடிச்சி. அப்புறம் அவருனால சாமிய நெனக்க முடியல. சல்சல்ங்கற கொலுசுச் சத்தம் அவரு மனசுக்குள்ளாற கேட்டுக்கிட்டே இருந்துச்சு. என்னடா பண்றது. எல்லாத்தையும் அடக்கினாலும் இந்த மனச மட்டும் அடக்க முடியலயே. என்ன செய்யிறதுன்னு நெனச்சிக்கிட்டு சரி இனிமே இப்படி இருக்கக் கூடாது. நாமபோயி சாமியாரப் பாத்துட்டு வந்துருவோம்னு முடிவு செஞ்சு அவரப் பாக்குறதுக்காகப் போனாரு.
ஓட்டமும் நடையுமாப் போன பணக்காரரு சாமியாரக் கும்புட்டுட்டு நடந்ததெல்லாம் சொன்னாரு. சாமியாரு பொறுமையாக் கேட்டாரு. கேட்டு முடிச்ச பின்னால. “சரி ஏம்பக்கத்துல வந்து ஒக்காரு. நான் சொல்றதச் செய்வியா” அப்படீன்னு கேட்டாரு. அதுக்கு அந்தப் பணக்காரரு, “சாமி இந்த மனச அடக்கணும் அதுக்காக நான் எதுவேணுன்னாலும் செய்யிறேன். சொல்லுங்க”ன்னாரு.
சாமியாரும், “அப்பா எதுவுமே உன்னுடையதா இருக்கக் கூடாது. எல்லாத்தையும் விட்டுடணும். அப்படி விடுறபோதுதான் மனசு அடங்கும். மனசு அடங்கிருச்சுன்னா ஆண்டவன நீ நெருங்கிடுவே. அதனால ஒன்னால எல்லாத்தையும் ஒதறிட முடியுமா? அப்படி எல்லாத்தையும் துறந்திட்டியினா மனச அடங்கிரும். நீயி தேடிக்கிட்டிருக்கற நிம்மதியும் வந்துரும்”ன்னு சொன்னாரு.
அதக் கேட்ட பணக்காரரு, “சாமி இப்பயிருந்தே எல்லாத்தையும் துறந்து ஒங்களோட சீடனா இருக்கறேன். எனக்குத் தீட்சை கொடுத்து என்னையக் கரையேத்துங்க”ன்னாரு. சாமியாரும் அவருக்குத் தீட்சை கொடுத்து அவருக்கு இறைவனோட திருநாமத்தை உபதேசிச்சாரு. எல்லாத்தையும் துறந்து துறவியா ஆனாவருக்குக் கொஞ்சங் கொஞ்சமா மனசு லேசா ஆயிடுச்சு. நிம்மதியும் குடியேறுச்சு. மனசு அடங்கவும் தொடங்கிடுச்சு. மனச அடக்கறதுக்கு இந்தக் கதை இன்னைக்கு வரைக்கும் வழக்கத்துல வழங்கப்பட்டு வருது.