பிறரை ஏமாற்றுகிறவன் எப்போதும் ஏமாற்றிக் கொண்டே இருக்க முடியாது. என்றைக்காவது ஒருநாள் ஏமாற்றுகிறவனும் ஏமாறுவான். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுன்னு சொல்வாங்க. இதை விளக்கும் வகையில் இந்த வட்டாரத்தில் ஒரு கதை வழக்கத்தில் வழங்கி வருகின்றது.
ஒரு கிராமத்தில் பெரிய பண்ணையார் ஒருத்தர் இருந்தாரு. ஊருக்குள்ள இருக்குறவங்க எல்லாரும் அவருக்கிட்டதான் வேலை செய்யப் போகணும். ஏன்னா அவருக்கிட்ட நெறைய நிலம் இருந்தது. ஊருக்குள்ள இருக்கறவங்கள பலவகையில ஏமாத்தி ஏமாத்தி எல்லா நிலத்தையும் தன்னோட பெயருக்கு எழுதி வாங்கிக்கிட்டாரு.
நிலத்தை வித்தவங்க வேற வழியில்லாததால மீண்டும் அவருக்கிட்ட கூலி வேலைக்குப் போகத் தொடங்கினாங்க. ஆனா அந்தப் பண்ணையாரு யாருக்கும் சரியாக் கூலியக் கொடுக்க மாட்டாரு. நல்லா வேலைய வாங்கிக்கிட்டு அது சரியில்ல, இது சரியில்லன்னு சொல்லிக் கூலிக்காரங்கள வெரட்டி அடிச்சிடுவாரு. இதனால பலபேரு அவருக்கிட்ட வேலைக்குப் போகாம பக்கத்து ஊருகளுக்குப் போயி கிடைக்கிற வேலையப் பாத்துக்கிட்டு வந்தாங்க.
பக்கத்து ஊருக்குப் போக முடியாதவங்க இவருக்கிட்ட கிடைக்கிறது கிடைக்கட்டும்னு வேலைக்குப் போனாங்க. யாராரோ இவர எப்படியாவது மாத்திப்புடணும்னு நெனச்சி முடியாமப் போயிட்டாங்க. இவருக்கிட்ட வேலைக்குச் சேர்ற ஆளுக, நாள்கூலிக்கு வேலை செஞ்சாத்தானே இவரு கூலியக் கொடுக்காம கொறைச்சிக் கொடுக்கிறாரு. கொடுக்காமலும் இருக்காறாரு. வருடக் கூலிக்கு வேலைக்குப் போனா பேசுன கூலியக் கொடுக்கத்தானே வேணும்னு நெனச்சும் அவருக்கிட்ட வேலைக்குப் போனாங்க.
அப்படிப் போனவங்க வருஷமுச்சூடும் வேலைபாத்துட்டு வருஷம் முடியறபோது கூலியக் கேக்கப் போவாங்க அப்பப் பாத்து அவரு நீ சரியாவே வேலை செய்யலை. எனக்கு உன்னால நட்டம் தான் வந்தது அப்படீன்னு பேசி அடிச்சி வெரட்டி விட்டுட்டாரு.
பண்ணையாரு இப்படி அடாவடியா நடந்துக்கிறதப் பாத்துட்டு அந்த ஊரு ஆளுங்க எல்லாரும் ஒருவழியா அவருக்கிட்ட வேலைக்குப் போறதையே நிறுத்திட்டாங்க. உள்ளூருக்குள்ள இருந்து யாரும் வேலைக்கு வராததால வெளியூருல இருந்து ஆட்களக் கூட்டிக்கிட்டு வந்து வேலை பார்க்கத் தொடங்கினாரு.
அப்படி வெளியில இருந்து வர்றவங்களுக்கும் கொஞ்ச நாள்ல சரியா அவரு கூலியக் கொடுக்காததால வெளியூர்க்காரங்களும் வேலைக்கு வர்றது கொறஞ்சுபோச்சு. என்னடா செய்யிறதுன்னு அந்தப் பண்ணையாரு யோசிச்சுப் பாத்தாரு. வருஷக் கூலிக்கு ஆளக் கூப்பிட்டும் பார்த்தாரு. ஆனா முடியல.
அங்க இங்க ஆளுக் கெடைக்குதான்னு பண்ணையாரு பாத்தாரு. ஆளு அம்புடலே. சரி இனிமே கூலிய ஒடனே தர்றேன்னும் சொல்லிப் பாத்தாரு. ஆனாலும் யாரும் வரலே. அவரால ஒண்ணும் செய்ய முடியல. யாருமே அவர நம்பல. இப்படி இருக்கறபோது ஒருத்தன் ரெம்பத் தூரத்துல இருந்து அந்த ஊருக்கு வேலை தேடி வந்தான்.
வந்தவன் இந்தப் பண்ணையாருக்கிட்ட வேலை இருக்குன்னு கேள்விப்பட்டு அவரைப் போயிப் பாக்கப் போனான். இவன் வெளியூருல இருந்து வந்ததுனால இவன அங்க உள்ளவங்க எல்லாரும் பாத்து, ‘‘தம்பி நீ அந்தப் பண்ணையாருக்கிட்ட போயி வேலைக்குச் சேந்துராதே. அவரு சரியா சம்பளம் தரமாட்டாரு. உன்னைய ஏமாத்திப்புடுவாரு. போயிராதேன்னு’’ எவ்வளவோ சொல்லிப் பாத்தாங்க. ஆனாலும் அவன் கேக்காமா, ‘‘இல்லை நான் அவருக்கிட்டதான் வேலைக்குச் சேருவேன். எனக்குக் கிடைக்கிற சம்பளத்தை முழுசா வாங்கிருவேன் பாருங்க. நீங்களே ஆச்சரியப்படுவீங்கன்னு’’ சொல்லிட்டுப் பண்ணையாரப் போய்ப் பாத்தான்.
ஏமாத்துற நம்மையே தேடி ஏமாறுறதுக்காகவே வர்றானேன்னு சரியான முட்டாப்பயலா இருப்பான் போல இருக்குன்னு நெனச்சிக்கிட்டு ரெம்ப சந்தோஷப்பட்டுக்கிட்டாரு பண்ணைாரு.
வந்தவன் பண்ணையார கும்பிட்டுக்கிட்டு, "ஐயா எனக்கு ஒங்க தோட்டத்தக் கவனிச்சிக்குற வேலை தாங்க"ன்னு கேட்டான். அவரும் "சரி தாரேன். ஆனா நான் சொல்ற நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டாத்தான் நான் ஒன்னைய வேலைக்கு வச்சுக்குவேன். சரியா?"ன்னு கேட்டாரு.
அதுக்கு அந்த வெளியூருக்காரன், "ஒங்களோட நிபந்தனையச் சொல்லுங்க. அதுக்குப் பிறகு நான் என்னோட நிபந்தனையச் சொல்றேன்"னு சொன்னான்.
அதுக்கு ஒத்துக்கிட்ட பண்ணையாரு, "இத பாருப்பா நீ ஒருவருஷம் முழுசும் வேலை பாக்கணும். வருஷ முடிவில எனக்கு ஓம்மேல திருப்தி ஏற்பட்டாத்தான் நீ பேசுன கூலியத் தருவேன். எனக்குத் திருப்தி இல்லேன்னு வச்சுக்க நான் கூலியக் கொடுக்க மாட்டேன். நீ போயிறணும். என்னைய எதுவும் கேக்கக் கூடாது"ன்னாரு
அதக் கேட்ட அந்த வெளியூருக்காரன், "ஐயா நான் இத ஒத்துக்கிறேன். ஆனா நான் சொல்றத நீங்க கேக்கணும் அதுக்கு நீங்க ஒத்துக்கிட்டா நான் ஒங்கக்கிட்ட வேலைக்குச் சேர்வேன்"னு சொன்னான்.
அதுக்குப் பண்ணையாரு, "சரி நீ ஒன்னோட நிபந்தனையச் சொல்லு"ன்னு கேட்டாரு. அந்த வெளியூருக்காரனும், "எனக்குச் சம்பளமே நீங்க தரவேணாம். அதுக்குப் பதிலா எனக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு நெல்ல எனக்குச் சம்பளமாத் தரணும். அதுமட்டுமில்ல. அந்த ஒரு நெல்ல விதைக்கிறதுக்கு எனக்கு நெலத்தையும் எனக்குத் தரணும். எனக்குத் தர்ற ஒவ்வொரு நெல்லையும் நான் வெதைக்கிறதுக்கு என்கிட்ட தர்ற நெலம் எனக்குச் சொந்தம். அதை நீங்க கேக்கவே கூடாது. இதை இந்த ஊருக்காரவுங்க முன்னால வச்சு பத்திரத்துல எழுதித் தரணும்"னு சொன்னான்
இதைக் கேட்ட பண்ணையாரு, "அட சம்பளமே வேணாம்னுட்டு ஒரு நெல்லை மட்டும் சம்பளமாக் கேக்குறானே. சுத்த பைத்தியக்காரன இருப்பாம்போல இருக்கே. சரி இவன் வசமா மாட்டுனான்"னு நெனச்சிக்கிட்டு அவன் சொன்னதுக்கெல்லாம் சம்மதித்து அவனுக்கு ஊருக்காரங்கள வச்சி எழுதிக் கொடுத்தாரு.
அவருக்கிட்ட எழுதி வாங்கிக்கிட்ட அந்த வெளியூருக்காரன் கடுமையா ஒழைச்சான். பண்ணையாருக்கு ஏகப்பட்ட வருமானம் கிடைச்சது. அதைக்கண்ட பண்ணையாரு அவனோட கூலியா ஒரு நெல்லக் கொடுத்தாரு. அந்த நெல்ல வெதைக்கிறதுக்கு கையகல இடத்தையும் கொடுத்தாரு.
அவன் அந்த நெல்ல வெதைச்சு நாத்தையும் பண்ணையாரு கொடுத்த நிலத்துல நட்டான். பயிரு நல்லா வெளைஞ்சு நல்ல பலனைக் கொடுத்துச்சு. அந்தக் கருத அறுத்து அதை வயல்ல பாவுறதுக்குப் பண்ணையாருக்கிட்ட இடம் கேட்டான். அவரும் அவனுக்கிட்ட சொன்னது மாதிரி கொஞ்சம் நெலத்தைக் கொடுத்தாரு.
அவன் இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா பாடுபட்டு பண்ணையாரோட நெலத்தை முழுதையும் வாங்கிக்கிட்டான். பண்ணையாருக்குன்னு எந்த நெலமும் இல்லாமப் போச்சு. பண்ணையாரு என்னடா இந்தப் பயல நாம ஏமாத்தலாம்னு நெனச்சா அவன் நம்மல ஏமாத்திட்டானேன்னு நெனச்சிக்கிட்டு அவனப் பிரச்சனை பண்ணி வெளியில தொரத்திடலாம்னு நெனச்சாரு.
ஆனா அவன் போறமாதிரி தெரியல. ஊருக்காரவுங்களக் கூப்புட்டு நியாயம் கேக்கலாம்னு நெனச்சி பஞ்சாயத்தைக் கூட்டுனாரு. பஞ்சாயத்தாரு மத்தியில அந்த அசலூருக்காரன் பண்ணையாரு எழுதிக் கொடுத்ததைத் தூக்கிப் போட்டான். பஞ்சாயத்தாருங்க எழுதியிருந்ததைப் படிச்சிப் பாத்தாங்க. அதுல எழுதியிருந்தபடி பண்ணையாரு அசலூருக்காரனுக்கு நெலத்தைக் கொடுத்துட்டு வெளியேறனும்னு சொன்னாங்க. ஆனா பண்ணையாரு அதுக்கு ஒத்துக்கமாட்டேன்னு அடம்பிடிச்சாரு.
ஊருக்காரவுங்க எல்லாரும் எல்லாரையும் ஏமாத்துனது மாதிரி அசலூருக்காரனையும் ஏமாத்த முடியாது. நீங்க நிலத்தை விட்டு வெளியேறலன்னா நாங்க எல்லாரும் சேர்ந்து ஒங்கள வெளியேத்தும்படி வரும்னு எச்சரிச்சாங்க.
பண்ணையாருக்கு நாம ஏமாந்துட்டமேன்னு நெனச்சி நொந்துபோயி ஊராளுங்க சொன்னமாதிரி வெளியேறிட்டாரு. அசலூருக்காரன பைத்தியக்காரன்னு நெனச்சிருந்த அந்த ஊருமக்கள் அவனோட திறமையப் பாத்து பெருமைப்பட்டாங்க. அசலூருக்காரன் அந்தப் பண்ணையாரோட நிலத்தை அந்த ஊருக்காரங்களுக்குப் பிரிச்சிக் கொடுத்துட்டு அங்கேயே அவங்களோட வாழ்ந்தான்.
ஏமாத்தனும்னு நெனச்சா ஏமாந்துதான் போவாங்கங்கறது இதுல இருந்து தெரியுது. இன்னமும் இந்தக் கதை மக்களிடையே வழக்கத்துல இருந்து வருது.