எதையும் உருவத்தைப் பார்த்து எடைபோடக் கூடாது. அவங்க அவங்களுக்குத் தகுந்த மாதிரி திறமையும் வலிமையும் அவங்க அவங்களுக்கு இருக்கு. அது மட்டுமில்லாமல் தான்தான் வலிமையானவன், தன்னால் எதையும் சாதிக்க முடியும் தன்னை யாராலும் எதுவும் செய்ய முடியாது அப்படீன்னும் நெனைக்கக் கூடாது. அவ்வாறு நினைத்துக் கொண்டு அடாத செயலைச் செய்தால் அழிய நேரிடும். இது தொடர்பான கதை ஒன்று இந்த வட்டாரத்துல வழங்கி வருது.
ஒரு பெரிய காடு இருந்தது. அந்தக் காட்டில் அடர்ந்த மூங்கில் மரங்கள் பல இருந்தன. அந்த மூங்கில்களில் இருந்த மரம் ஒன்றில் கூடு கட்டி அதுல முட்டையிட்டு குஞ்சு பொறித்து அந்தக் குஞ்சுகளைப் பாதுகாத்துக்கிட்டு வந்தது. குஞ்சுகளுக்கு இறகே முளைக்கவில்லை. அந்தக் குஞ்சுகளுக்குக் காவலா பெண் சிட்டுக்குருவி இருக்கும். ஆண் சிட்டுக்குருவி பறந்து போயி இரைதேடிக்கிட்டு வந்து குஞ்சுகளுக்கும் பெண் சிட்டுக்குருவிக்கும் கொடுக்கும்.
இப்படி இருந்துக்கிட்டு இருந்த சமயத்துல அந்தப் பக்கமா ஒரு பெரிய யானைக் கூட்டம் வந்துச்சு. அந்த யானைக இந்த மூங்கில் புதரத் தாண்டித்தான் போகணும். மூங்கில்கள் யானைகளுக்கு ரெம்பப் பிரியமான தீனி. அதனால அந்தச் சிட்டுக்குருவிக ரெண்டும் பயந்ததுங்க. அப்ப இந்த பெண் சிட்டுக் குருவி ஆண் சிட்டுக்குருவியப் பாத்து, “நீங்க நம்ம குஞ்சுகளப் பாத்துக்குங்க. நான் போயி அந்த யானைகளை வேறு பக்கமாப் போகச் சொல்லிட்டு வர்றேன்னுட்டு” போச்சு.
வேகமாப் பறந்து போயி புழுதி பறக்க வந்துக்கிட்டு இருந்த யானைக் கூட்டத்துக்கு முன்னால போயி, “போகாதீங்க… போகாதீங்க”ன்னு கத்துச்சு. யானைக் கூட்டத்துல இருந்த கொம்பன் யானை என்னடா நம்மைப் போகாதீங்கன்னு யாரோ தடுக்குறாங்க. யாருன்னு நின்னு பாத்தது.
கொம்பன் யானை நின்னதும் மற்ற யானைகளும் நின்னுருச்சுங்க. அப்ப கொம்பன் யானையைப் பாத்து பெண் சிட்டுக்குருவி, “யானைகளோட தலைவரே ஒங்களக் கெஞ்சிக் கேட்டுக்குறேன். நீங்க போற வழியில என்னோட கூடு மூங்கில் பொதருல இருக்கு. அதுல என்னோட குஞ்சுக இருக்கு. நீங்க இந்த வழியில போனா மூங்கில் பொதரத் தின்ன ஆரம்பிச்சிருவீங்க. என்னோட வீடும் குஞ்சுகளும் அழிஞ்சி போயிரும். அதனால தயவு செஞ்சி என்னையும் என்னோட குஞ்சுகளையும் காப்பாத்துங்க. வேற வழியில நீங்க போங்க”ன்னு அழுதுக்கிட்டே சொன்னது.
அதக் கேட்ட கொம்பன் யானை, “சிட்டுக்குருவியே நாங்க தண்ணி குடிக்கறதுக்காகத்தான் போறோம். உன்னையையும் உன் கூட்டையும் குஞ்சுகளையும் எதுவும் செய்ய மாட்டோம். நீ ஒன்னோட குடும்பத்தோட சுகமா இரு. நாங்க வேற பக்கமா போறோம். ஆனா ஒண்ணு எங்க கூட்டத்தோட சேராமா ஒரு முரட்டு யானை ஒண்ணு இருக்கு. அது யாரு சொல்றதையும் கேட்காது. அதுவும் இந்தப் பக்கமாத்தான் வந்துக்கிட்டு இருக்கு. அதைப் பாத்து நீ சொல்லிரு. நான் சொல்றதக் கேக்காததால அதை எங்க கூட்டத்தை விட்டே விலக்கி வச்சிருக்கோம். பாத்துக்க” அப்படீன்னு சொல்லிட்டு கொம்பன் யானை தன்னோட கூட்டத்தைக் கூட்டிக்கிட்டு வேற பக்கமா போயிருச்சு.
கொம்பன் யானைக்கும் மத்த யானைகளுக்கு சிட்டுக்குருவி நன்றி சொல்லிட்டு அந்த மொரட்டு யானைத் தேடிக்கிட்டுப் போச்சு. அது கொஞ்சதூரம் போன உடனேயே அந்த மொரட்டு யானை வேகமா வந்துக்கிட்டு இருந்துச்சு. அந்த மொரட்டு யானையப் பாத்த ஒடனேயே சிட்டுக்குருவிக்கு கொம்பன் யானை சொன்னது நினைவுக்கு வந்தது. சரி என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னுட்டு அந்த யானையோட முன்னால போயி பறந்து அதப்பாத்து, “ஐயா யானையாரே! நீங்க இந்தப் பாதையில போகாதீங்க. நீங்க போற வழியில நானும் என்னோட குஞ்சுகளும் குடியிருக்கோம். நீங்க இந்த வழியில போன அந்த என்னோட கூடும் குஞ்சுகளும் அழிஞ்சிபோயிரும். அதனால வேற வழியில நீங்க போங்க. ஒங்களுக்குப் புண்ணியமா போயிரும்”னு சொல்லிட்டு கும்புட்டுச்சு.
ஆனா அந்த மொரட்டு யானை எதையும் கேக்கல. “ஏய் சிட்டுக்குருவி நாம் அப்படியயத்தான் போவேன். நீ யாரு என்னைய வேற பாதையில போன்னு சொல்றதுக்கு. எனக்கு நீ புத்தி சொல்ல வேண்டாம். பேசாமப் போயிரு” அப்படீன்னு சொல்லிட்டு வேகவேகமா போயி அந்தச் சிட்டுக்குருவி தடுக்கத் தடுக்க அந்த மூங்கில் மரத்தையும் அந்த சிட்டுக்குருவியோட குஞ்சுகளையும் அதனோ ஆண்குருவியையும் கொன்னுட்டு இப்ப என்ன பண்ணுவே! அப்படீன்னு வீராப்பா புழுதியக் கிளப்பிக்கிட்டுப் போச்சு.
அதக் கேட்ட சிட்டுக்குருவி, “ஏய் மொரட்டு யானையே நான் சின்னக் குருவிதானேன்னு நினைச்சிக்கிட்டுத்தானே இப்படி அநியாயமா என்னோட வீட்டையும் குடும்பத்தையும் அழிச்சிட்டுப் போற. ஒன்னைய என்ன செய்யிறன்னு பாரு. ஒன்னைய அழிச்சிட்டுத்தான் மறுவேலை. அதுவரைக்கும் எனக்கு எந்த வேலையும் கிடையாது”ன்னு சொல்லிட்டுப் பறந்து போயிருச்சு.
யானை அந்தச் சிட்டுக்குருவியப் பாத்து எக்காளமா சிரிச்சிக்கிட்டுப் போயிருச்சு. வேகமாப் பறந்து போன சிட்டுக்குருவி அழுதுக்கிட்டே போச்சு. அப்ப ஒரு காகம் வேடன் விரிச்சிருந்த வலையில சிக்கிக்கிட்டு ரெக்கைய படபடன்னு அடிச்சிக்கிட்டு துடிச்சிக்கிட்டு இருந்துச்சு.
அதப் பாத்த சிட்டுக்குருவி மெதுவாப் போயி வலையில இருந்து காகம் தப்பிக்கிறதுக்கு ஒதவுச்சு. வலையில இருந்து தப்பின காகம் சிட்டுக்குருவிக்கு நன்றி சொன்னது. அப்பறம் அந்த சிட்டுக் குருவியப் பாத்து, “நீ என்னோட உயிரைக் காப்பாத்திட்டே. ஆனா நீ ரொம்ப வருத்தமா இருக்கியே. ஏன்?” அப்படீன்னு கேட்டது.
அதக் கேட்ட ஒடனே சிட்டுக்குருவி அழுதுக்கிட்டே, “காக்கையண்ணே காக்கையண்ணே என்னோட வீட்டையும் குடும்பத்தையும் இந்தக் காட்டுல இருக்குற ஒரு மொரட்டு யானை ஒண்ணு அழிச்சிடுச்சு. இப்ப எனக்குன்னு யாருமே இல்லை. என்னோட வாழ்க்கைய நாசமாக்கிய அந்த யானைய ஒழிக்கணும் நீ எனக்கு ஒதவி செய்வியா?” அப்படீன்னு கேட்டது.
அதுக்கு காகம், “நான் ஒதவி செய்யிறேன். நீ எதைப் பத்தியும் கவலைப் படாதே. நீ எப்போ என்னைய மனசுல நினைச்சிக்கிட்டு வான்னு கூப்புட்ட ஒடனேயே நான் அங்க வந்துருவேன்”னு சொல்லிட்டுக் காகம் பறந்து போயிருச்சு.
அதுக்கப்பறம் அந்த சிட்டுக்குருவி கொஞ்ச தூரம் பறந்து போயிக்கிட்ட இருந்தபோது அதுக்கு தண்ணித் தாகம் எடுத்தது. அதனால அங்க இருந்த ஒரு குளத்துக்குப் போயி தண்ணி குடிக்கறதுக்குப் போச்சு. அப்ப தண்ணியில விழுந்து ஒரு எட்டுக்காலு பூச்சி தத்தளிச்சிக்கிட்டு இருந்துச்சு. அதப் பாத்த சிடடுக்குருவி மரத்துல இருந்து ஒரு பெரிய எலைய எடுத்துக்கிட்டு வந்து அதத் தண்ணியில போட்டு எட்டுக்காலுப் பூச்சியக் காப்பாத்துச்சு.
வெளியில வந்த எட்டுக்காலுப் பூச்சி சிட்டுக்குருவியப் பாத்து, “நண்பா என்னைய நீ காப்பாத்திட்டே. ரொம்ப நன்றி. ஆனாலும் நீ ஏன் வருத்தமா இருக்கே”ன்னு கேட்டது.
அதக் கேட்ட சிட்டுக்குருவி நடந்ததை எல்லாத்தையும் சொன்னது. அதைக் கேட்ட எட்டுக்காலுப் பூச்சி, “நீ கவலைப் படாதே நான் ஒனக்கு ஒதவி செய்யிறேன். நீ என்னைய நெனச்சிக்கிட்டு எப்பக் கூப்புடுறியோ அப்போதே நான் ஒன்னோட முன்னால வந்து நிப்பேன். கவலைப் படாமப் போ”ன்னு சொல்லிட்டு தன்னோட இருப்பிடத்துக்குப் போச்சு.
அப்பறம் அந்த சிட்டுக்குருவி பறந்து போயிக்கிட்டே இருந்துச்சு. அதுக்கு ரெம்ப களைப்பா இருந்துச்சு. அதனால அது ஒரு ஆத்தோரமா பறந்து போயி கரை ஓரத்துல இருந்த பாறையில ஒக்காந்து இருந்துச்சு. அப்ப ஒரு தவளை கத்துறது மாதிரி இருந்துச்சு. என்னடா தவளை ஒண்ணு கத்துதேன்னு சிட்டுக்குருவி பாறையப் பக்கம் பாத்துச்சு. அப்ப ஒரு பாம்பு தவளையப் புடுச்சி முழுங்கப் பாத்துச்சு.
அந்த பாம்புக்கிட்ட இருந்து தவளைய எப்படியாவது காப்பத்தணும் நினைச்ச சிட்டுக்குருவி அந்தப் பாம்போட கண்ணப் பாத்து கொத்துச்சு. பாம்போட கண்ணுல சிட்டுக்குருவி கொத்துன வலி பொறுக்க முடியாத பாம்பு ஒடனே தவளைய விட்டுருச்சு. தவளை வேமாக ஆத்துத் தண்ணிக்குள்ளாற குதிச்சு தப்பித்து ஓடிருச்சு. சிட்டுக்குருவி பறந்து போயி ஒரு மரத்துல ஒக்காந்துக்கிருச்சு.
பாம்பு வலி பொறுக்க முடியாம வேற பக்கமாப் போயிருச்சு. பாம்பு போனபின்னால வெளியில வந்த தவளை சிட்டுக்குருவியக் கூப்பிட்டுச்சு. மரத்துல இருந்து பறந்து வந்த சிட்டுக்குருவியப் பாத்த தவளை தன்னோட நன்றியச் சொன்னது. அப்பறமா, சிட்டுக்குருவி சோகமா இருப்பதைப் பாத்துட்டு, “சிட்டுக்குருவியோ ஏன் சோகமா இருக்கே. எனக்கிட்ட சொல்லு நான் ஒனக்கு ஒதவி செய்யிறேன்”னு சொன்னது.
அதக்கேட்ட சிட்டுக்குருவிதனக்கு நேர்ந்த துன்பத்தைச் சொன்னது. அந்த மொரட்டு யானைய எப்படியாவது அழிக்கணும். அதுக்கு நீ எனக்கு உதவி செய்யறியா?” அப்படீன்னு கேட்டது.
அதக் கேட்ட தவளை, “நான் கண்டிப்பா ஒனக்கு ஒதவி செய்யிறேன். வா இப்பவே போயி அந்த யானையப் பழிவாங்கப் போகலாம்”னு சொல்லியது.
சரின்னு சிட்டுக்குருவி தவளையக் கூட்டிக்கிட்டு அந்த மொரட்டு யானை தங்கியிருந்த இடத்துக்குப் போச்சு. அந்த மொரட்டு யானை நல்லா தின்னட்டு சொகமா படுத்துக்கிடந்துச்சு. இந்த யானைய என்ன செய்யிறதுன்னு யோசிச்ச சிட்டுக்குருவி மனசுக்குள்ளாற ஒரு திட்டத்தை வகுத்துச்சு. அப்பறம் காகத்தையும் எட்டுக்காலுப் பூச்சியையும் நினைச்சது.
சிட்டுக்குருவி நினைச்ச ஒடனே ரெண்டும் வந்ததுங்க. சிட்டுக்குருவி அந்தக் காக்காயப் பாத்து, “நண்பா நீ இந்த மொரட்டு யானையோட கண்ணைக் கொத்தி வெளியில எடுத்துரு. அப்பறம் எட்டுக்காலுப் பூச்சி நண்பா நீ வந்து கண்ணு இல்லாத அந்த இடத்துல பெரிய கூட்ட கட்டிரு. கண்ணுத் தெரியாம இந்த யானை அங்கிட்டும் இங்கிட்டும் அலையும். அப்பப் பாத்து தவளை நண்பா நீ இந்த யானை தண்ணிக்கு அலையிறபோது இந்த காட்டுக்குள்ள இருக்கற உயரமான பெரிய மரணப் பாறைக்குக் கீழ இருந்து நீ கத்து. அந்தச் சத்தத்தைக் கேட்டு அந்த யானை தண்ணி இருக்கற இடம் அந்தப் பாறைக்குப் பக்கத்துலதான்னு நெனச்சிக்கிட்டு வரும். அதுக்குக் கண்ணுத் தெரியாததால பாறையில இருந்து அது கீழ விழுந்து செத்துரும். இந்த ஒதவியச் செய்யிங்க” அப்படீன்னு தன்னோட திட்டத்தைச் சொல்லி ஒதவி கேட்டுச்சு.
அதக்கேட்ட காக்கை சிட்டுக்குருவி சொன்னது மாதிரி செஞ்சது. எட்டுக்காலு பூச்சியும் யானையோட குருடாப் போன கண்ணுக் குழியில கூட்டக் கட்டிருச்சு. கண்ணு தெரியாததால அந்த யானை அங்கயும் இங்கயுமா அலைஞ்சது. அதுக்குத் தண்ணித் தாகம் எடுத்துச்சு.
அதனால தண்ணியத் தேடி போக ஆரம்பிச்சிருச்சு. அப்பப் பாத்து இந்தத் தவளை கத்திக்கத்தியே மரணப்பாறை இருக்கற எடத்துக்குக் கூட்டிக்கிட்டுப் போயி பாறையில இருந்து விழுகவச்சி யானையக் கொன்னுருச்சு. சிட்டுக்குருவி எல்லாத்துக்கும் நன்றி சொன்னது. அப்பறம் தன்னோட குடும்பம் இறந்து போன இடத்துல இருந்து கொஞ்ச காலத்துல அதுவும் எறந்து போயிருச்சு. அதனால எதையும் சாதாரணமா எடைபோட்டுடக் கூடாது. யாரோட உருவத்தைப் பாத்தும் மரியாதைக் குறைவா நடத்தக் கூடாது. அப்படீங்கற உண்மைய இந்தக் கதை நமக்குச் சொல்லுது.