மனிதனுக்கு எப்பவும் தான்தான் இந்த உலகத்தில் பெரியவன் என்ற ஆணவம் இருந்துக்கிட்டே இருக்குது. உலகத்துல நடக்கறதை எல்லாத்தையும் பாத்தாலும் மனிதன் திருந்தவே மாட்டேன்னு அடம்புடிக்கிறான். எப்படி எப்படியோ வாழ்ந்தவங்க எல்லாம் இன்றைக்கு வாழ்ந்த தடமே தெரியாமப் போயிட்டாங்க. இருந்தாலும் மனிதன் இதையெல்லாம் உணர்வதே இல்லை. தான்தான் இந்த உலகத்துலேயே பெரிய ஆளு. தன்னைவிட இங்க யாருமே இல்லையென்று வீணான கர்வம் கொண்டு அலைந்து மற்றவர்களுக்கு இடையூறு செய்து வாழ்கிறான். உண்மையை உணர்கிறபோது ஆணவம் அழிந்து இயல்பாக வாழத் தொடங்குகின்றான்.
இந்தக் கருத்தை விளக்கும் வகையில் புதுக்கோட்டை வட்டாரத்தில் ஒரு கதை வழங்கி வருது.
ஒரு பெரிய நாடு இருந்தது. அதை ஒரு ராஜா ஆண்டுக்கிட்டு வந்தாரு. அந்த ராஜாக்கிட்ட அளவுக்கு அதிகமான செல்வம் வளங்கொழிச்சது.
நாட்டுல நல்ல மழை பேஞ்சு விளைச்சலும் அதிகமா இருந்தது. மக்களும் மகிழ்ச்சியா இருந்தாங்க. இதனால அந்த ராஜாவுக்கு நம்மல மிஞ்சுறதுக்கு இங்க யாருமே இல்லைன்னு நெனப்பு மனசுக்குள்ள வந்துருச்சு.
அதனால அவரு யாரு எவருன்னு பாக்காம எல்லாரையும் எடுத்தெறிஞ்சி பேசுனாரு. எல்லாருடைய மனசும் வருத்தப்படற மாதிரி நடந்துக்கிட்டாரு. ஆனா ராஜாவை எதுத்து யாரும் எதுவும் சொல்லல. பயந்துக்கிட்டு பேசாமப் போயிட்டாங்க.
அந்த ராஜாக்கிட்ட ஒரு அமைச்சரு வேலைபாத்துக்கிட்டு இருந்தாரு. அவரு வயசுல மூத்தவரு. அவரும் ராஜாக்கிட்ட இதைப் பத்தி சொல்லலாம்னு நெனச்சாரு. ஆனா அந்த மூத்த அமைச்சரைப் பாக்க மாட்டேன்னு அந்த ராஜா இருமாப்பா இருந்திட்டாரு. அதனால அந்த மூத்த அமைச்சராலயும் அந்த ராஜாவத் திருத்த முடியல.
இப்படி இருக்கிறபோது அந்த ஊருக்கு ஒரு துறவி வந்தாரு. அவரு பெரிய மகான். அவரு யாரைத் தேடியும் போகமாட்டாரு. அவரத் தேடித்தான் மத்தவங்க வந்து வணங்கி அருள் வாக்கு வாங்கிக்கிட்டுப் போவாங்க. அந்தத் துறவியப் பத்திக் கேள்விப்பட்ட மூத்த அமைச்சர் துறவி மூலம் ராஜாவத் திருத்திடலாம்னு நெனச்சு, துறவியப் போய்ப் பாத்து விஷயத்தச் சொன்னாரு. அதக் கேட்ட துறவி, நீங்க போங்க சமயம் வர்றபோது பாத்துக்கிறேன்னு சொன்னாரு.
கொஞ்ச நாளு போச்சு. துறவியப் பத்தி அந்த நாடு முழுக்கப் பேச ஆரம்பிச்சிட்டாங்க. ராஜாவுக்கும் துறவியப் பத்திய செய்தி போச்சு. ராஜா ஒரு சேவகனக் கூப்பிட்டு துறவியக் கூட்டிக்கிட்டு வருமாறு கூறினார். சேவகங்க போய் துறவிய அரண்மனைக்குக் கூப்பிட்டாங்க. அதுக்கு துறவி ஒங்க ராஜாவை வரச்சொல்லு நான் அரண்மனைக்கு வர்றேன்னு சொன்ன ஒடனே, சேவகங்களும் ராஜாக்கிட்டப் போயிச் சொன்னாங்க.
அதக் கேட்ட ராஜாவுக்கு பயங்கரமாக் கோவம் வந்துருச்சு. அதப் பாத்த அங்க இருந்த அமைச்சருங்க, என்னாகப் போகுதோன்னு பயந்துக்கிட்டு இருந்தாங்க. இருந்தாலும் ராஜா பெரிய மகான நாம போயித்தான் பாக்கணும்னு நெனச்சிக்கிட்டு, துறவிய நானே பாத்துட்டு வர்றேன்னு சொல்லிப் போனாரு.
அந்தத் துறவியப் பாத்து வணங்குனாரு. வணங்கிட்டு, ‘‘துறவியாரே நான் இந்த நாட்டுக்கு ராஜா. என்னிடம் என்ன வேண்டுமானாலும் தாங்கள் கேட்டுப் பெற்றுக் கொள்ளலாம். எதைக் கேட்டாலும் என்னால் தரமுடியும். தயங்காமல் நீங்கள் கேளுங்கள். நீங்கள் கேட்பதைத் தருவதற்கு நான் தயாராக இருக்கிறேன்னு’’ மமதையோடு சொன்னாரு.
அதைக் கேட்ட துறவி, ‘‘என்ன நீ எதைக் கேட்டாலும் கொடுப்பாயா? அது உன்னால் முடியுமா? நீ என்ன கடவுளைவிடப் பெரியாளா?’’ என்று கேட்டுவிட்டு ராஜாவைப் பாத்து சிரித்தார்.
துறவி சிரித்ததைக் கேட்டுக் கோபம் கொண்ட ராஜா, ‘‘துறவியே என்னைக் கண்டு இந்த உலகமே நடுநடுங்குகின்றது. என்னால் முடியாதது இந்த உலகத்திலேயே இல்லை. என்னைக் கண்டால் அனைவரும் வணங்கித் தள்ளி நிற்கின்றனர். அப்படி இருக்க துறவியாகிய நீ என்னைப் பார்த்து சிரிக்கின்றாயா? என்ன துணிச்சல் உனக்கு’’ என்று கோபம் கொப்பளிக்கத் துறவியைப் பார்த்துக் கொக்கரித்தான்.
அதைக் கண்ட துறவி, ‘‘அட பேதையே! நீ என் அடிமைகளின் அடிமை. அடிமையாக இருக்கும் உன்னைக் கண்டு நான் ஏன் பயப்பட வேண்டும். உன்னிடம் நான் எதைக் கேட்டுப் பெற வேண்டும். நான் கேட்பதுதான் உன்னிடம் இருக்குமா? நீ ராஜாவே அல்ல. அடிமைகளின் அடிமை’’ என்று கூறி அவனை ஒரு புழுவைப் போன்று பார்த்தார்.
ராஜாவுக்குக் கடுமையான கோபம் இருந்தாலும் அதனை அடக்கிக் கொண்டு, ‘‘என்னது நான் அடிமைகளின் அடிமையா? உங்களின் அடிமைகள் யார்? சொல்லுங்கள் பார்க்கலாம்’’ என்றான்.
அதைக்கேட்ட துறவி, ‘‘கோபமும், நான் என்ற ஆணவமும் என்னுடைய இரு அடிமைகள். நீயோ இவ்விரண்டு அடிமைகளின் அடிமையாக இருக்கிறாய். அதுதான் தலைகால் புரியாமல் இப்படிக் குதித்துக் கொண்டு இருக்கின்றாய். அடிமைகளின் அடிமையாகிய நீ எப்போதும் சிறப்படைய முடியாது. இதை உணர்ந்து கொள்’’ என்று கூறினார்.
இதைக் கேட்ட ராஜாவிற்கு அப்போதுதான் புத்தி வந்தது. துறவி கூறியது அவனது உள்ளத்தில் சம்மட்டி கொண்டு அடிப்பதைப் போன்று இருந்தது. ஆஹா இதுநாள் வரை நாம் ஆணவத்தோடு வாழ்ந்துவிட்டோம். நம்மைப் போன்று இங்கு யாருமில்லை என்று தவறாக நினைத்து அனைவரையும் இழிவாக நடத்திவிட்டோம். எவ்வளவு மிகப்பெரிய தவறைச் செய்துகொண்டிருந்தோம் என்று வருந்தி, துறவியை வணங்கி, ‘‘சாமி இனிமேல் நான் உங்களின் அடிமைகளிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டேன். அனைவரிடமும் இனிமையாக நடந்து கொள்வேன். எனக்குப் புத்தி புகட்டி என்னை நல்வழியில் திருப்பிவிட்டீர்கள். என் கண் திறந்தது. நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன்’’ என்று வணங்கிவிட்டு அரண்மனையை நோக்கி நடந்தான்.
அதன் பிறகு அனைவரிடமும் அன்பாக நடந்து தான தருமங்கள் பல செய்தான். அவன் நாட்டு மக்களும் அவனைக் கொண்டாடினார்கள். மக்கள் முன்னிலும் பெருமகிழ்ச்சியாக இருந்தார்கள்.
ராஜா திருந்தியதைக் கண்ட மூத்த அமைச்சர் பெருமகிழ்ச்சி அடைந்தார். கோபமும், ஆணவமும் ஒருவனுக்கு இருக்கவே கூடாது. அப்படி இருந்தா அவற்றுக்கு நாம அடிமைன்னு அர்த்தம். இதை விளக்குவதற்கு இந்தக் கதை மக்களிடையே வழங்கி வருது.