சில பேரு உழைக்காமலேயே வெறும் வாய்சவடாலுலேயே காலத்த ஓட்டிக்கிட்டு இருப்பாங்க. எந்த வேலைக்கும் போகமாட்டாங்க. அங்கக் கடன் வாங்கி, இங்கக் கடன் வாங்கி மத்தவங்கள ஏமாத்திக்கிட்டே காலத்தைப் போக்கிக்கிட்டு இருப்பாங்க. அவங்க எதுக்கும் கவலப்பட மாட்டாங்க. எப்போதும் தங்களப் பத்தியே நெனச்சிக்கிட்டு இருப்பாங்க. இவங்க மாதிரி ஆளுங்களுக்காக புதுக்கோட்டை மாவட்டத்துல ஒரு கதை வழக்கத்துல வழங்கி வருது.
பெரிய காடு ஒண்ணு இருந்துச்சு. அந்தக் காட்டுல கருங்குயிலு ஒண்ணு சந்தோஷமா வாழ்ந்துக்கிட்டு இருந்தது. அந்தக் குயிலு எப்பப் பாத்தாலும் பாடிக்கிட்டே இருக்கும். அதோடு மட்டுமில்லாம எந்த வேலையும் செய்யாம வேலை செய்யிறவங்களக் கேலி பண்ணிக்கிட்டுத் திரியும்.
ஒரு கோடைகாலம். கடுமையான வெயிலு. மரங்கள் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு வந்த குயிலு மரத்து மேல இருந்துக்கிட்டு மெதுவாப் பாடுச்சி. பாடிக்கிட்டே கீழ குனிஞ்சி பாத்துச்சு. அப்ப எறும்புக எல்லாம் வரிசை வரிசையா தொலைதூரத்துக்குப் போயி தானியங்களைக் கொண்டுக்கிட்டு வந்துச்சுக.
அதப் பாத்த குயிலு மரத்துல இருந்து பறந்து வந்து கீழ ஒக்காந்துக்கிட்டு, “எறும்புகளே... எறும்புகளே... என்ன செஞ்சிக்கிட்டு இருக்கறீங்க?”ன்னு கேட்டுச்சு.
அதுக்கு எறும்புக, “ம்ம்ம்... பாத்தாத் தெரியல... தானியங்கள எடுத்துக்கிட்டுப் போயி எங்க வீட்டுக்குள்ளாற பத்திரமாச் சேமிச்சிக்கிட்டு இருக்கோம்...ன்னு” சொல்லுச்சுக.
அதுக்கு குயிலு, “அட பயித்தியக்காரப் பயலுகளா... ஒங்களுக்கு வாழ்க்கைய ரசிக்கவே தெரியல... இந்தக் கோடைக் காலத்துல மரங்களடர்ந்த பகுதியான இந்தக் காட்டுல எப்படிக் காத்து சிலு சிலுன்னு வீசுது தெரியுமா...? இத அனுபவிச்சிக்கிட்டு சந்தோஷமா ஆடிப்பாடித் திரியறத விட்டுட்டு தானியத்தைப் பொறுக்கிக்கிட்டுத் திரியறம்னு சொல்றது அசிங்கமா இருக்கு... ஒங்களுக்கு வாழவே தெரியல... என்னயப் பாருங்க நான் எவ்வளவு மகிழ்ச்சியா வாழ்க்கைய அனுபவிச்சிக்கிட்டு இருக்கறேன்னு தெரியல...” அப்படீன்னு சொல்லிக் கிண்டல் பண்ணுச்சு.
அதக் கேட்ட எறும்புக, “குயிலண்ணே நீயி சொல்லறது ஒனக்கு வேணுமின்னா சரியா இருக்கலாம். எங்களுக்கு ஒத்து வராது. இப்பவே ஒழைச்சுத் தானியங்கள சேத்து வச்சிக்கிட்டாத்தான் மழைக்காலத்துல கஷ்டப்படாம சாப்புடலாம்... இப்பச் சேத்து வைக்காம இருந்தா மழைக்காலத்துல சாப்பாடு இல்லாம ரெம்ப கஷ்டப்படணும்... இத புரிஞ்சிக்காம நீ பாட்டுக்கு வாழ்க்கைய அனுபவிக்கணும் அப்படி இப்படின்னு உளறிக்கிட்டு இருக்க...” அப்படின்னு சொல்லிச்சுக.
குயில இதக்கேட்டுட்டு, “அட வாழத்தெரியாதவங்களா... காலம் இருக்கறப்பவே வாழ்க்கைய அனுபவிச்சி வாழணுங்கறது ஒங்களுக்குத் தெரியலையே... என்னயப் பாத்திங்கள்ள எப்படி ரெம்ப மகிழ்ச்சியாப் பொழுதக் கழிக்கறேன்னு... என்னயப் பாத்தும் ஒங்களுக்குப் புத்தி வரமாட்டேங்குதே... இப்படியே பொழுதுக்கும் வேலைவேலைன்னு ஒழைச்சு வாழ்க்கைய வீணடிங்க... ஒங்கள எல்லாம் திருத்தவே முடியாதுன்னு” சொல்லிச்சு.
அதுக்கு எறும்புக, “அண்ணே நாங்க பொழைக்கத் தெரியாதவங்களாவே இருந்துட்டுப் போறம்... நீங்க வாழ்க்கைய மகிழ்ச்சியாப் பாடிக்கிட்டு வாழுங்க... ஒங்க வழியில நீங்க போங்க... எங்க வழியில நாங்க போறம்”ன்னு சொல்லிட்டு அதுங்க பாட்டுக்குத் தானியங்களத் தேடி எடுக்கப் போயிருச்சுங்க.
குயிலு அதுபாட்டுக்குச் ஜாலியாப் பாட்டுப் பாடிக்கிட்டு பறந்துகிட்டே திரிஞ்சிச்சு... அதுக கூட குயிலுக் கூட்டமே சேர்ந்துக்கிட்டு ஜாலியா இருந்துச்சுங்க... கோடைக்காலம் மெல்ல மெல்ல மாறிக்கிட்டே வந்தது. மழைக்காலம் தொடர்ந்து வந்துருச்சு.
இடியும் மழையும் பின்னி எடுத்துச்சு... குயிலுக்குக் கூடு வேற இல்லை... மரத்தோட எலைகளுக்குக் கீழேயே குயிலு தங்கி இருந்துச்சு. மழை விடுறபாடாத் தெரியல. குயிலால எங்கயும் எறதேடப் போக முடியல. கொஞ்சம் மழைவிட்டாப் போதும். எங்கயாவது போயி கொஞ்சம் எறயத்தேடிப் பசியப் போக்கிக்கலாம்னு குயிலு நெனச்சது. ஆனாலும் மழை விட்டபாடில்லை. தொடர்ந்து மழை கூடிக்கிட்டே போச்சு... மழை குறையல. குயிலால பசியக் கட்டுப்படுத்த முடியல. எங்காயவது எதாவது விதைகிதை கிடைக்குமான்னு மழையில நனஞ்சிக்கிட்டே தேடுச்சு. சிறுதுளிகூட குயிலுக்கு உணவு எதுவும் அகப்படலை. குயிலு திரும்பவும் தான் தங்கியிருந்த மரக்கிளைக்கே வந்து தங்கிடுச்சு. என்ன பண்றதுன்னே குயிலுக்குத் தெரியல. ரெம்ப நேரம் யோசிச்சது.
அதுக்குத் திடீர்னு அந்த எறும்புகளப் பத்தி ஞாபகம் வந்துருச்சு. அந்த எறும்புகளப் போயிப் பாத்தா நம்ம பசி போறதுக்கு வழி வந்துரும்னு நெனச்சிக்கிட்டு நனஞ்ச செரகோட ரெம்ப முயற்சி செஞ்சு அந்த எறும்புகளத் தேடிப் போச்சு. ரெம்ப நேரத்துக்கு அப்பறமா காட்டுக்குள்ளாற இருந்த எறும்புப் புத்த குயிலு கண்டுபிடிச்சது.
வேகவேகமாப் போயி எறும்புகளக் கூப்புட்டுச்சு. ரெம்ப நேரம் குயிலு கத்திக்கிட்டே இருந்துச்சு. அதுக்கப்பறம் எறும்புக யாரு நம்மளப் போயி இந்த நேரத்துல கூப்புடறதுன்னு எட்டிப் பாத்ததுக. அப்ப அந்தக் குயிலு மழையில நனஞ்சிக்கிட்டு வெடவெடன்னு ஆடிக்கிட்டு இருந்துச்சு.
அதப்பாத்த எறும்புக என்னன்னு விசாரிப்போம்னுட்டு வெளியில வந்து எதுக்கு இப்ப இந்த நேரத்துல வந்து கூப்புடுறன்னு கேட்டதுங்க. அதுக்குக் குயிலு, “எறும்புத் தம்பிகளா எனக்கு ரெம்பப் பசியா இருக்குது. நான் சாப்புட்டு ரெண்டு மூணு நாளா ஆகுது. பசி என்னால தாங்க முடியல... அதனால ஒங்கக்கிட்ட கொஞ்சம் தானியத்தக் கடன் வாங்கி பசியாத்திக்கலாம்னு வந்தேன்னு சொன்னது.
அதுக்கு எறும்புக, “ஆமா கோடைகாலத்துல நீ என்ன பண்ணிக்கிட்டுருந்த... எங்களக் கேலி பண்ணிச் சிருச்சியில்ல... யாரு வாழ்க்கைய வாழத்தெரியாதவங்க... ஆமா கடனாக் கொஞ்சம் தானியத்தக் கொடுத்தோம்னு வச்சிக்க நீ எப்படி எங்களுக்குத் திருப்பித் தருவே... அதுக்கு என்ன உத்தரவாதம் இருக்கு... எங்களுக்கேக் கொஞ்சந்தான் தானியம் இருக்குது... ஒனக்கு ஒண்ணும் தரமுடியாது... பேசாம நீ போ”ன்னு சொல்லிட்டு புத்துக்குள்ளாறப் போகப் பாத்ததுங்க.
அதுக்கு குயிலு, “ஐயோ நான் ஒங்களக் கேலிபண்ணிப் பேசியது தப்புத்தான்... மன்னிச்சிருங்க... இப்போதைக்குத் தானியங்களத் தந்து என்னோட பசிய ஆத்திட்டீங்கன்னா மழைவிட்டதும் அந்தத் தானியத்தைத் திருப்பித் தந்திருவேன்... கோடைகாலத்துல பாடிக்கிட்டே மகிழ்ச்சியா இருந்துட்டேன். அதனோட பலனை இப்ப அனுபவிக்கறேன்... எனக்குக் கொஞ்சம் தானியத்தத் தாங்க”ன்னு கேட்டது.
அதப் பாத்த பெரிய எறும்பு கொஞ்சம் தானியத்தக் கொடுப்பமேன்னு மத்த எறும்புகளுக்கிட்ட கேட்டது. அதுக்கு மத்த எறும்புக, “அந்தக் குயிலு சரியான ஏமாத்துப் பேர்வழி... அது பசிபோற வரைக்கும் கெஞ்சிக் கேக்கும்... பசி பறந்துருச்சுன்னா அதுக்கு எதுவும் நெனப்புக்கு வராது. அதனால அதுக்கு இத்துணூண்டு கூடக் கொடுக்கக் கூடாது”ன்னு ஒட்டுமொத்தமாச் சொல்லிடுச்சுங்க...
பெரிய எறும்பும் வெளியில வந்து, “குயிலண்ணே குயிலண்ணே கோவுச்சிக்காத... எங்க எறும்புக எல்லாம் மாட்டேன்னுட்டதுக... நான் மட்டும் என்ன செய்யிறது... பொருள் சேர்க்கற காலத்துல சேர்த்துக்கணும்... சேர்க்க முடியலன்னா ஒன்னையாட்டம் கெடந்து சிரமப்பட்டுத்தான் ஆகணும்... கோடை காலத்துல நீ பாட்டுப் பாடிக்கிட்டே திரிஞ்சியில்ல... இப்ப ஆடிக்கிட்டே திரி... ஏன்னா ஒன்னய நம்ப முடியாது... ஒழைக்கறவன நம்பி எதையும் கொடுக்கலாம்... சோம்பேறிய நம்பி எதையும் கொடுக்கக் கூடாது... சோம்பேறிகளுக்கெல்லாம் கொடுத்து ஒதவுனா என்னப் போல முட்டாள் இந்த ஒலகத்துல இருக்கமாட்டாங்க... நீ போயி வேற எடத்தப் பாத்துரு”ன்னு சொல்லிட்டுப் போயிருச்சு.
அதக்கேட்ட குயிலுக்கு ரெம்ப மன வருத்தம் ஏற்பட்டுடுச்சு. நாம ஒழைக்காம இருந்துட்டோம்... அதோடு மட்டுமில்லாம ஒழைக்கறவங்களக் கேவலமாப் பேசியும் தொலைச்சிட்டோம்... இதெல்லாம் பெரிய தப்புத்தான்னு நெனச்சிக்கிட்டுத் தன்னோட தவறுக்குக் கிடச்ச தண்டனை சரிதான்னு வருத்தப்பட்டுக்கிட்டு பேசாம தன்னோட எடத்துக்குப் பறந்து போயிருச்சு...
ஒழைக்காதவங்க ஏழ்மையில வாட நேரும். உழைப்பாரு சோத்துல எளைப்பாரதேன்னு ஒரு சொலவட இன்னமும் இந்தப் பக்கம் வழக்கத்துல மக்களிடையே இருக்குது. உழைப்புதான் நம்மளோட வறுமையை விரட்டும். உழைக்கலைன்னா இந்த குயிலுமாதிரிதான் வருந்தப்படணும்.