உலகின் மிகப்பெரிய கோவில், இந்துக்கள் அதிகம் வாழும் இந்தியாவில் இல்லை. கம்போடியா நாட்டில் உள்ளது. தென்கிழக்கு ஆசியாவில் வியட்நாம், லாவோஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையில் இந்த நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டில் அங்கோர்வாட் என்ற இடத்தில் இந்த பிரமாண்ட கோவிலை காண முடிகிறது.
இந்த கோவிலுக்குள் 20 ஸ்ரீரங்கம் கோவில்களை அடைக்கலாம் என்றால், எவ்வளவு பெரிய கோவில் என்று பார்த்துக்கொள்ளுங்கள்! கி.பி.1113ல் கம்போடியாவை ஆண்ட மன்னன் இரண்டாவது சூரியவர்மன் இந்தப் பிரமாண்டக் கோவிலைக் கட்டினான். தான் தீவிர விஷ்ணு பக்தன் என்பதால் விஷ்ணுவுக்காக அந்த அற்புத கோவிலை உருவாக்கினான் சூரிய வர்மன். ஆரம்பத்தில் விஷ்ணு கோவிலாக இருந்த இக்கோவில் 14ம் நூற்றாண்டில் பவுத்த கோவிலாக மாறி, இன்று வரையிலும் பவுத்த கோவிலாகவே இருந்து வருகிறது.
1860ல் ஹென்றி முஹோட் என்ற ஆராய்ச்சியாளர் பட்டுப்பூச்சிகள் பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக கம்போடியா சென்றார். அங்குள்ள காடுகளை அவர் வலம் வந்தபோது சிதலமடைந்து கிடந்த இந்த கோவிலை கண்டார். மனித நடமாட்டமே இல்லாத இந்த இடத்தில் எப்படி கோவில் வந்தது? என்று யோசித்தார். அவரைத் தொடர்ந்து பல தொல்பொருள் ஆய்வாளர்கள் அந்த பகுதிக்கு வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
ஹென்றி முஹோட், அங்கோர்வாட் சென்ற 10 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு கிறிஸ்தவ பாதிரியார் இங்கு சென்றுள்ளார். அதுபற்றி தனது டைரியிலும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். எனினும், அங்கோர்வாட் பற்றி தீவிரமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது ஹென்றி முஹோட் சென்று வந்த பின்னர்தான்.
அங்கோர்வாட் விஷ்ணு ஆலயம் தாமரைப்பூ வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலுக்கு மத்தியில் பெரிய கோபுரமும், அதைச்சுற்றி பல சிறிய கோபுரங்களும் அமைந்துள்ளன. ஆலயத்திற்குள் செல்ல பெரிய கற்பாலம் அமைந்துள்ளது. இந்தப் பாலத்தின் கீழே பெரிய அகழி ஒன்று உள்ளது. கற்பாலத்தின் இரு புறங்களிலும் 50க்கும் மேற்பட்ட காவல் தெய்வங்கள் நின்ற நிலையில் காணப்படுகின்றன. கோவிலின் மூன்றாவது சுற்றுச்சுவர்களில் குருஷேத்திர போர்க்காட்சிகள் செதுக்கப்பட்டுள்ளன. அத்துடன், ராமர்-ராவணன் போர் புரியும் காட்சிகளும் காணப்படுகின்றன.
கி.பி.13ம் நூற்றாண்டில் அங்கோர்வாட் நாட்டின் அரண்மனைக்கு சென்ற ஒரு வரலாற்று சீனப்பயணி, அந்த அரண்மனையில் வேலைக்கார பெண்கள் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேல் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார். இவற்றை வைத்து பார்க்கும்போது, அந்த காலத்தில் உலகின் மிகப்பெரிய நகரங்களுள் ஒன்றாக அங்கோர்வாட் இருந்தது தெரிய வருகிறது. 15ம் நூற்றாண்டில்தான் அந்த பகுதி அழிந்துவிட்டது. பெரிய படையெடுப்பு, வெள்ளப்பெருக்கு அதற்கு காரணமாக இருக்கலாம் என்கிறார்கள்.
சமீபத்தில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையத்தில் இருந்து எடுக்கப்பட்ட அங்கோர்வாட் புகைப்படங்களை விஞ்ஞானிகள் ஆராய்ந்தபோது, அந்த நகரம் அழிந்ததற்கு வேறு காரணம் இருக்கலாம் என்பது தெரிய வந்தது.
அதாவது, புராதன அங்கோர்வாட் நகரம் 3 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் (இன்றைய லாஸ்ஏஞ்செல்ஸ் நகரம் போல்) இருந்திருக்கலாம் என்றும், காடுகள் அழிக்கப்பட்டது, குடிநீர் கிடைக்காமல் போனது, விளைநிலங்கள் அழிந்து போனது போன்ற காரணங்களால் அந்த நகரம் படிப்படியாக அழிந்துபோய் இருக்கலாம் என்றும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்தனர். எது எப்படியோ, உலகின் மிகப்பெரிய இந்து ஆலயம் உலகின் எங்கோ ஒரு மூலையில் இருக்கிறது என்பதற்காக நாம் மார்தட்டிக் கொள்ளலாம்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கம்போடியாவை ஆண்ட க்மேர் வம்ச அரசர்கள் இந்துக்களாக இருந்தனர். ஆனால், இப்போது அங்கு இந்துக்கள் கிடையாது. அந்த நாட்டில் சமஸ்கிருதம் ஒரு மொழியாக வழக்கத்தில் இருந்தது என்பதற்கு, அங்கு அந்த மொழியில் உள்ள கல்வெட்டுகள் இன்றும் சாட்சிகளாக திகழ்கின்றன.