சில எழுத்தாளர்களின் விசித்திரப் பழக்கங்கள்

இலக்கிய ஆசிரியரும் ஞானியுமான லியோ டால்ஸ்டாய்க்கு தீயணைக்கும் எஞ்சின் ஊதும் சப்தத்ததைக் கேட்பதென்றால் அலாதிப் பிரியமாம். அந்த சப்தத்ததைக் கேட்பதற்காகவும், ரசிப்பதற்காகவும் சில சமயம் அதன் பின்னாலேயே ஓடுவாராம்.

பால்ஸாக் என்ற நாவலாசிரியருக்கு காபி குடிப்பதென்றால் உயிர். அதை எத்தனை முறை குடிப்பது, எவ்வளவு குடிப்பது என்று கணக்கே கிடையாதாம். பன்னிரண்டு மணி நேரம் வரை தொடர்ந்து எழுதும் இவர் இடையிடையே காபியைக் குடித்துக் கொண்டேயிருப்பாராம். பக்கத்திலுள்ள பாத்திரத்தில் குறையக் குறைய காபியை நிரப்பி வைப்பதற்கென்றே ஒரு வேலையாள் கூட வைத்து இருந்தாராம்.

கார்லைல் எனும் எழுத்தாளருக்கு புதிய பாட்டில்களைத் திறக்கும் போது அவற்றின் கார்க்குகளிலிருந்து வரும் புஸ் எனும் சப்தத்தைக் கேட்பதில் அதிகமாக விரும்புவாராம். இதற்காக அடிக்கடி புதிய பாட்டில்களை வாங்கித் திறந்து மகிழ்ச்சி கொள்வாராம்.

பொதுவாக சப்தமில்லாத சூழ்நிலையில் எழுதுவதைத்தான் எழுத்தாளர்கள் அனைவரும் விரும்புவார்கள். ஆனால் பிரபல எழுத்தாளரான ஆஸ்கர் வைல்டுக்கு ஏதாவது சப்தத்தைக் கேட்டால்தான் நன்றாக ஏழுத வருமாம். ஒரு பிரபல புத்தகத்தை பாரிஸ் நகர ஹோட்டல் ஒன்றில் வாத்தியக் கோஷத்தை முழங்க வைத்து அந்த சப்தத்தில் எழுதி முடித்தாராம்.

பிரபல நாவலாசிரியரான சார்லஸ் டிக்கன்ஸ்க்கு ஒரு அபூர்வப் பழக்கம் உண்டு. தம்முடைய தலையை அடிக்கடி சீப்பை வைத்து வாரிக் கொள்வார். நண்பர்கள் யாராவது பேசிக் கொண்டிருந்தாலும் கூட இந்தப் பழக்கத்தை அவர் விடாமல் செய்து கொண்டுதானிருப்பாராம்.

ஹுமிங்வே எனும் எழுத்தாளருக்குப் பூனைகள், நாய்கள், பசுக்கள் என்று பிராணிகளின் மீது அதிகமான ஆர்வத்துடன் வளர்த்து வந்தார். இவைகளின் சப்தத்தில்தான் அவருக்கு அதிகமான எழுத்துக் கற்பனை ஊற்றெடுக்குமாம்.

உருதுக் கவிஞரான காலிப் வாழ்ந்த காலத்தில் முதலில் எல்லோரும் தாடி வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர் முகச்சவரம் செய்து கொண்டு பளபளப்பாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தார். பின்பு எல்லோரும் முகச்சவரம் செய்து கொள்ள ஆரம்பித்த போது அவர் தாடி வைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டார். மற்றவர்களின் பழக்க வழக்கங்களுக்கு நேர் எதிராக நடக்க வேண்டுமென்பதில் அவருக்கு ஆசை.

பிரபல பிரெஞ்ச் கதாசியரான அலெக்ஸாண்டர் டுமாஸ்க்கு அவர் எழுதும் போது ஏதாவது தடை ஏற்பட்டால் ஜப்பான் நாட்டு கவுனைப் போட்டுக் கொண்டு மறுபடி எழுத ஆரம்பிப்பாராம். அப்போதுதான் அவருக்கு அடுத்து எழுத ஆர்வம் வருமாம்.

தத்துவ ஞானியும் எழுத்தாளருமான ஜார்ஜ் மெரிடித் என்பவருக்கு தமது புஜ பலத்தை மற்றவர்கள் அறிய வேண்டுமென்பதற்காக இரும்புக் குண்டுகளையும், கம்பிகளையும் மேலே தூக்கி எறிந்து அவை கீழே விழும் போது கைகளில் தாங்கிப் பிடிப்பார். சில சமயம் பெரிய இரும்புக் கம்பிகளை வளைத்துக் காண்பிப்பார். இதில் அவருக்கு தனிப் பெருமை கூட உண்டு.

எலியட் என்கிற கவிஞருக்கு இயற்கையாகவே கூச்சம் அதிகம். எனவே கூட்டத்தில் யாராவது அவரிடம் கையெழுத்து வாங்க வருவது தெரிந்தால் உடனே ஓட்டம் பிடித்து விடுவாராம்.
- விசித்திரமான பழக்கவழக்கங்கள் ஒவ்வொருவருக்கும் இருப்பது உண்டு. ஆனால் இவர்களைப் போல் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக நாம் வந்து விட்டோமா என்றால் அதுதான் இல்லை. இன்னும் காலம் எதுவும் ஓடிப்போய் விடவில்லை. முயற்சித்துப் பாருங்களேன்... ஒரு எழுத்தாளராக, தத்துவ ஞானியாக, அறிஞராக, மாற முடியுமா என்று முயற்சித்துத்தான் பாருங்களேன்...
- கணேஷ் அரவிந்த்
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.