கேரளத் தீண்டாமைக் கொடுமைகள்
இந்தியாவிலேயே தீண்டாமைக் கொடுமைகள் அதிகம் இருந்த இடம் கேரள மாநிலம் ஒன்றாய்த்தான் இருக்க முடியும். இங்கிருந்த கொடுமைகளுக்கு அளவே இல்லை. மனிதர்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்த முடியும் என்பதற்கு இங்கு வேறு எங்குமில்லாத புதுக் கொடுமைகள் அரங்கேற்றப்பட்டன. அவற்றில் சில கொடுமைகளை மட்டும் இங்கு பார்க்கலாம்.
அடிமை வணிகம்
கேரள மாநிலத்தில் தாழ்த்தப்பட்டவர்களாக இருந்த பறையர், புலையர் போன்றவர்களைச் சந்தைகளில் மாடுகளை விற்பது வாங்குவது போல் அடிமை வணிகம் இருந்தது. இந்த அடிமைச் சந்தைகளில் வாங்கப்படும் மனிதர்களை அடிக்கவோ,தண்டிக்கவோ, கொல்லவும் கூட உரிமை இருந்தது. ஆண்களுக்கு ஒரு விலையும், பெண்களுடன் சேர்ந்து இருந்தால் அதற்கென இரு மடங்கிலான விலையும் இருந்தது. இதில் குழந்தைகளும் கூட அடிமைகளாக விறகப்பட்டனர். இதற்காகக் குழந்தைகளைப் பெற்றோர்களிடமிருந்து பிரித்துக் கூட விற்றனர்.
பார்வைக்கும் தடை
கேரளாவில் பிராமணர்கள் மட்டுமே உயர்ந்தவர்கள். இவர்களை நாயர்கள் 40 அடி தூரத்திலிருந்துதான் பார்க்க வேண்டும். நாயர்களைப் பறையர், புலையர் போன்றோர் 60 அடி தூரத்திலிருந்து பார்க்க வேண்டும்.
பிராமணர்கள் தாழ்த்தப்பட்ட மக்களைப் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது அவமரியாதையாகக் கருதப்பட்டது. மேலும் அவர்களால் தீட்டுப்பட்டு விட்டதாகக் கருதுவர். இதற்காகப் பகலில் தாழ்த்தப்பட்டவர்கள் நடமாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டது. இவர்கள் இரவில்தான் எங்கும் செல்ல வேண்டும்.
மார்பக வரி
கேரளாவில் பெண்கள் மார்பகங்களுக்கென தனி வரி செலுத்த வேண்டும். பிராமணர்கள் உயர்ந்த சாதியினர் என்பதால் அவர்களுக்கு இந்த வரி இல்லை. நாயர்கள் அதிக அளவில் படைகளில் பணியாற்றுவதால் அவர்களிடம் குறைவான வரி வசூலிக்கப்பட்டது. ஈழவர் மற்றும் நாடார்களிடம் இந்த வரி அதிகமாக வசூலிக்கப்பட்டது.
தலை வரி
கேரளாவில் ஈழவர், கிறித்தவர், இசுலாமியர் போன்றவர்களுக்கும் தலை வரி விதிக்கப்பட்டது. மனிதர்களின் தலைகளை எண்ணி அதற்கு வரி வசூலித்தனர். இறந்தவர்களுக்குக் கூட வரி வசூலிக்கப்படுவதுண்டு. ஒருவர் இறந்து விட்டதை நிரூபணம் செய்ய முடியாமல் போனால் தலைவரியாக இறந்தவரது சொத்தில் பெரும்பகுதியை “புருசார்த்தம்” எனும் பெயரில் கைப்பற்றிவிடுவர்.
கடை செல்லத் தடை
தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் நகரில் ஏதாவது பொருள் வாங்க வேண்டுமென்றால் கடைக்குச் செல்ல முடியாது. ஒரு இடத்தில் மறைந்து நின்று வாங்க வேண்டிய பொருளைச் சத்தமாகச் சொல்ல வேண்டும். கடைக்காரர் அதற்கான விலையைச் சொல்வார். கடைக்காரர் குறிப்பிட்ட விலையை ஓரிடத்தில் வைத்து விட்டு மறைவாகச் செல்ல வேண்டும். கடைக்காரர் அந்தப் பணத்தை எடுத்துக் கொண்டு பொருளை வைத்து விடுவார். பிறகு அந்தப் பொருளைத் தாழ்த்தப்பட்டவர் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பால் கறக்க உரிமையில்லை
சில பகுதிகளில் ஈழவர்கள் பசு வளர்த்தால் பசு கன்று போட்டதும், அதிலிருந்து பால் கறக்க ஈழவர்களுக்கு உரிமை இல்லை. பசுவையும், கன்றையும் நாயரிடம் கொடுத்து விட வேண்டும். நாயர்கள் பால் கறக்கும் வரை அந்தப் பசுவை வைத்திருப்பார்கள். நாயர்கள் கறந்து வைத்த பாலை வீட்டில் வைக்கவோ, பயன்படுத்தவோ உரிமை இல்லை. பாலை பிராமணர்களுக்கு அளித்து விட வேண்டும். பால் கறந்து தீர்ந்ததும் பசுவைத் திரும்பி ஈழவர்களிடம் ஒப்படைப்பார்கள். பசுவை வாங்கும் போதும், கொடுக்கும் போதும் ஒரு வேளை உணவு வழங்கப்படும். இதுதான் ஈழவர்களுக்குக் கிடைக்கும் லாபம். ஈழவர்கள் பசுவைக் கொடுக்க மறுக்கும் நிலையில் கடுமையான தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள்.
பெண்கள் மார்பை மறைக்கக் கூடாது
ஈழவர் முதலான 18 சாதியைச் சேர்ந்த பெண்கள் தங்கள் மார்பை மறைத்துத் துணி அணியக் கூடாது. இடுப்பில் தண்ணீர்குடம் வைத்துச் சுமக்கக் கூடாது. தலையில் வைத்துத்தான் தண்ணீர்க்குடம் சுமக்க வேண்டும்.
மீசைக்கு வரி
ஈழவர் முதலான ஆண்கள் மீசை வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி மீசை வைத்துக் கொள்ள விரும்பும் ஆண்கள் அதற்கென மீசை வரியைத் தனியாகச் செலுத்த வேண்டும்.
விருப்பப்படி பெயர் வைக்க முடியாது
ஈழவர் முதலானவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு உயர் சாதி வகுப்பினர் வைத்திருக்கும் பெயர்களை வைக்கக் கூடாது.
கோயிலுக்குள் நுழையக் கூடாது
ஈழவர் முதலான சாதியினர் கோயிலுக்குள் நுழையக் கூடாது. உயர் வகுப்பினர் வணங்கும் கடவுள்களை வணங்கக் கூடாது.
- இப்படி பல்வேறு சாதி வழியிலான தீண்டாமைக் கொடுமைகளை அனுபவித்து வந்தவர்களுக்கு ஸ்ரீ நாராயண குரு நடத்திய பல்வேறு போராட்டங்களே விடிவு காலமாய் அமைந்தது.
- கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.