பிள்ளையார் சுழி வந்தது எப்படி?
எழுத்து வடிவத்திலான செயல்களின் போது, எழுதப்படும் இடத்தின் மேல் பகுதியில் ‘உ’ எனும் குறியீட்டை இட்டுத் தொடங்கும் வழக்கத்தை இன்னும் சில பெரியவர்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இதைப் “பிள்ளையார் சுழி” என்று குறிப்பிடுகின்றனர்.
இன்றும் செட்டிநாட்டு நகரத்தார் சமுதாயத்தினர் தங்களது எழுத்தைத் தொடங்குவதற்கு முன்பாக உ. சிவமயம் என்றுதான் எழுதுகிறார்கள். அதாவது, பிள்ளையார் சுழி சிவமயம் என்று எழுதுகிறார்கள்.
இந்தப் பிள்ளையார் சுழி எப்படி ஏற்பட்டது என்பதற்கு விடையாகக் கீழ்க்காணும் கருத்துகள் சொல்லப்படுகின்றன.

தமிழ் எழுத்துகள் இயற்கை வடிவமான வட்ட வடிவிலானவை என்றும், அவ்வடிவத்தை விரைந்து எழுதும் பொழுது அதன் முடிவு நீளக் கோட்டில் முடியுமென்றும் எழுதத் தொடங்குவர். இதனால், முதலில் வட்டமிட்டுப் பின் அதைக் கோடாக இழுத்த வழக்கம் “பிள்ளையார் சுழி” ஆகிவிட்டது.

ஏட்டில் எழுதும் போது எழுதுகோலின் சீர்மையையும், ஏட்டின் செம்மையையும் அறியச் சுழித்துப் பார்க்கும் வழக்கமே பிள்ளையார் சுழியாகி விட்டது.

பிள்ளையாரின் முகத் தோற்றம் “ஓ” என்றும் “ஓம்” என்றும், பிரணவத்தைச் சுருக்கமாக “உ” என்று முன்னெழுதி மற்றவைகளைப் பின்னெழுதுவது சுவடி எழுதுபவரின் மரபாக இருந்துள்ளது.

ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தின் கூட்டமாகிய பிரணவத்தின் அகரம் - சிவம்; உகரம் - சக்தி; மகரம் - மலம்; நாதம் - மாயை; விந்து - உயிர் ஆகும். இவற்றுள் அகர உகரமாக இருக்கும் பிள்ளையார் சுழி சிவசக்தியின் சேர்க்கை என்கிறார்கள்.

திருமூலர் அகாரம் உயிரென்றும், உகாரம் இறையென்றும், மகாரம் மலமென்றும் கூறுவதால் அகாரமாகிய உயிர், உகாரமாகிய இறைவனோடு இயைந்து ஒன்றியிருக்கும் நிலையை விளக்குவதே பிள்ளையார் சுழி என்று முனைவர் வே. ரா. மாதவன் குறிப்பிடுகிறார்.

பிரணவத்தின் ஐந்து கூறுகளில் அகரத்திற்குப் பிரமனும், உகரத்திற்குத் திருமாலும், மகரத்திற்கு உருத்திரனும், விந்துவிற்கு மகேசனும், நாதத்திற்கு சதாசிவனும் ஆதி தெய்வங்களாவார்கள். எழுதத் தொடங்குவது இலக்கியப் படைப்பைக் குறிக்கும். அதற்கு முன் பிரமன் ஆதி தெய்வமாகக் கொண்ட அகரத்தின் வட்ட வடிவமான குறியையும், எழுதப் பெறும் இலக்கியம் நின்று நிலை பெற வேண்டுமென்று திருமாலை ஆதித் தெய்வமாகக் கொண்ட உகரத்தின் நீள்கோடுக் குறியீடையும் இணைத்து ‘உ’ என்ற பிள்ளையார் சுழியாக எழுதினர் என்றும், அச்சுழி மூல மனுவாகிய பிரணவத்தின் சிதைந்த வடிவு என்றும் முனைவர் வே. ரா. மாதவன் மற்றொரு கருத்தாகக் குறிப்பிடுகிறார்.

ஓலையை எழுத எடுத்ததும், அதன் பதத்தைப் பார்க்க ஒரு சுழியையும், கோட்டையும் இழுத்துப் பார்ப்பதுண்டு. இந்த முதல் சுழிதான் இன்று பிள்ளையார் சுழியாகி இருக்கிறது என்று தோன்றுகிறது என்றாலும் இது நம் அறிவுப் பசிக்கு முழு உணவும் அளிக்கவில்லை. தமிழ் உயிர் எழுத்துகள் அனைத்துமே சுழியை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, தமிழ் எழுத்துகளை எழுத வேண்டுமாயின் சுழிக்கக் கற்றுக் கொள் என்று முன்னோர்கள் கூறுவார்கள். எனவே இந்த முறையை அமைத்ததாக கி.ஆ.பெ. விசுவநாதம் குறிப்பிடுகிறார்.

ஓலைச்சுவடிகளின் தொடக்கத்தில் ‘அறிவோம் நன்றாகக் குரு வாழ்க குருவே துணை’ என்று எழுதப்பட்ட நிலை சமயச் சார்புற்று ‘அரி ஓம் நன்றாக’ என்று எழுதப்பட்ட காலத்தில் ஏட்டின் தொடக்கத்தில் பிள்ளையார் சுழி இடம் பெற்றது மட்டுமின்றிப் பாட்டின் முடிவிலும் பாடல் எண்களை அடுத்தும் இடம் பெற்றுள்ளமை இங்கு சுட்டத் தருவது. இவ்வாறு பிள்ளையார் சுழி பாடல் தொடக்கத்தையும், பாடல் முடிவையும், எண் முடிவையும் குறித்த குறியீடாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
பிள்ளையார் வழிபாடு என்பதே தமிழகத்தில் பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. அதற்கு முன்பிருந்தே ஏட்டில் எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது. ஏட்டின் சேர்பதம் பார்க்கச் சுழித்துப் பார்த்த நிலையைச் சமயப் பார்வை மிகுந்த பிற்காலத்தில் “பிள்ளையார் சுழி” ஆக்கி விட்டனர் என்பதே இங்கு பொருத்தமாகும்.
-முனைவர். தமிழப்பன்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.