நூலக அலமாரி வடிவில் நூலகக் கட்டிடம்
நூலகம் என்றால் அலமாரிகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். இதுதான் நூலகத்தின் அடையாளம். நூலகக் கட்டிடத்தையே அலமாரிகளில் புத்தகம் அடுக்கப்பட்டிருப்பது போல் வடிவமைத்து இது நூலகம் என்று வெளியிலேயே அடையாளப்படுத்தினால் எப்படி இருக்கும்? என்று சிந்தித்து ஒரு நூலகக் கட்டிடத்தைக் கட்டியிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் மிசௌரி மாநிலத்திலுள்ள கான்சா நகரிலிருக்கும் கான்சா நகரப் பொது நூலகம் 1873 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டிருந்தாலும், 2004 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில்தான் அவர்களுக்கு இப்படியொரு வித்தியாசமான சிந்தனை வந்திருக்கிறது. அதன் பிறகு, இந்த கான்சா நகரப் பொது நூலகத்தின் தெற்குச் சுவரை 25 அடி உயரமும் 9 அடி அகலமும் கொண்ட 22 புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பது போன்று வடிவமைத்துக் கட்டியிருக்கிறார்கள். கான்சா நகரப் பொது நூலகத்தின் வாசகர்களால் பரிந்துரைக்கப்பட்ட புத்தகங்களின் தலைப்புகளிலிருந்து கான்சா நகர நூலக அறக்கட்டளைக் குழுவினர் 22 புத்தகங்களின் தலைப்புகளைத் தேர்வு செய்து இந்தச் சுவரில் இடம் பெற்றிருக்கும் 22 புத்தகங்களுக்குப் பயன்படுத்தி இருக்கின்றனர்.
நூலகம் என்பதை அடையாளப்படுத்தச் செய்யப்பட்ட இந்த முயற்சி இன்று வித்தியாசமான வடிவங்களைக் கொண்ட கட்டிடங்களில் ஒன்றாக அமைந்து விட்டது.
-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.