தீபாவளித் தகவல்கள்

தீபாவளியை காம சூத்திரத்தில் கூராத்திரி என்றும், பாகவத புராணமான பவிஷ்யோத்ர புராணத்தில் தீபாவளிகா எனவும், கால விவேகம், ராஜமார்த்தாண்டம் நூல்களில் சுக்ராத்திரி என்றும் அழைத்ததாகத் தெரிகிறது.
வடமொழி நூல்களில் வாசக்திரிய கவுமுதி, த்ருத்யத்வம் என்றும், நாகநந்தம் எனும் நூலில் தீப ப்ரதிபனுஸ்தவம் எனவும், நீலமேக புராணம் என்ற நூலில் தீபோத்ஸவம் என்றும் தீபாவளிக்குப் பல்வேறு பெயர்கள் குறிப்பிடப்படுள்ளன.
கி.மு.4-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம் நூலில் தீபாவளித்திருநாள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. ஐப்பசி மாத அமாவாசையன்று, கோயில்கள் மற்றும் நதிக்கரைகளில் வரிசையாக விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்ட தகவல் இந்த நூலில் இடம் பெற்றிருக்கிறது.
வாத்ஸ்யாயனர் எழுதிய காமசூத்திரம் நூலில் தீபாவளி தினத்தை, யட்சகர்களின் இரவு என்று குறிப்பிடுகிறார்.
தீபாவளியன்று பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களிலும், ஒவ்வொரு தெய்வத்தின் அருள் இருப்பதாகச் சாத்திரங்கள் கூறுகின்றன. இதன்படி, எண்ணெய் - லட்சுமி, சிகைக்காய் - சரஸ்வதி, சந்தனம் - பூமாதேவி, குங்குமம் - கௌரி, தண்ணீர் - கங்கை இனிப்புப் பலகாரம் - அமிர்தம், நெருப்புப் பொறி - ஜீவாத்மா, புத்தாடை - மகாவிஷ்ணு, லேகியம் - தன்வந்தரி ஆகியோரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
தீபாவளியன்று உப்பு வாங்குவது மிகவும் அதிர்ஷ்டமானதாகக் கருதப்படுகிறது. உப்பில் மகாலட்சுமி இருக்கிறாள் என்பது தொன்ம நம்பிக்கை.
இந்தியாவின் வட மாநிலங்களில், முதல் நாள் லட்சுமி பூஜை, இரண்டாம் நாள் நரகசதுர்த்தி, மூன்றாம் நாள் முழுக்கு, ஐந்தாம் நாள் எமதர்ம வழிபாடு என தீபாவளியை ஐந்து நாட்கள் கொண்டாடுகின்றனர்.
ஆசியாவிலேயே தீபாவளிதான் அதிகமான மக்கள் கொண்டாடும் பண்டிகையாக இருக்கிறது. தீபாவளியை இந்து சமயத்தினர் மட்டுமின்றி, புத்த, சமண மதத்தினரும் கொண்டாடுகின்றனர். ஐப்பசி மாதத்தில் வரும் அமாவாசை, திரயோதசி, சதுர்த்தசி, பிரதமை ஆகிய நான்கு நாட்களும் தீபாவளியோடு தொடர்பு கொண்டவையாகும். வடமாநிலங்களில் அமாவாசை, பிரதமையிலும் தென் மாநிலங்களில் திரயோதசி, சதுர்த்தசியிலும் தீபாவளி கொண்டாடுகின்றனர்.
ராஜபுத்திரர்கள் தீபாவளியன்று ராமரை வழிபடுவார்கள். அன்றைய தினம் ராஜஸ்தான் பெண்கள் உடல் முழுவதும் எனாமல் நகைகளை அணிந்து கொண்டு வண்ண ஆடைகள் அணிந்து நடனம் ஆடி மகிழ்வர்.
மத்தியபிரதேசத்தில் தீபாவளி நாளில் குபேர பூஜை செய்கின்றனர். அன்று குபேரனை வழிபட்டால், பணத்தட்டுப்பாடு வராது என்பது அவர்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
வங்காளத்தில் காளியின் உக்கிரத்தை சங்கரன் குறைத்த நாளாகக் கருதித் தீபாவளியை மகா நிசா என்ற பெயரில் கொண்டாடுகின்றனர். இந்த நாளில் காளிபூஜை செய்யப்படுகிறது.
இமாச்சலப்பிரதேசத்தில் தீபாவளி நாளில் பசுக்களை அலங்கரித்து வழிபடுகின்றனர்.
சமணர்கள் தீபாவளி நாளை மகாவீரர் வீடு பேறு அடைந்த நாளாகக் கொண்டாடுகின்றனர்.
சீக்கியர்கள் சீக்கிய மதகுரு, குருநானக் பூத உடல் நீத்து புகழுடம்பு எய்திய நாளாகக் கொண்டாடுகின்றனர்.
-கணேஷ் அரவிந்த், திருநெல்வேலி.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|