108 என்றவுடன் இந்தியாவில் அவசர மருத்துவ சிகிச்சை உதவிக்கான தொடர்பு எண் என்பதுதான் தற்போது நினைவுக்கு வருகிறது. ஆனால், இந்த 108 எண்ணுக்குச் சமயம், வானியல், உடலியல், போன்றவற்றிலும் சில சிறப்புகள் இருக்கின்றன. அவைகளில் சில;
* இந்து சமயத்தில் வேண்டுதலுக்காக நாம் 108 முறை ஜெபிக்கும் வழக்கமிருக்கிறது.
* வேதத்தில் 108 உப நிடதங்கள் இருக்கின்றன.
* சைவ, வைணவ திவ்ய தலங்கள் என்ணிக்கையும் 108 இருக்கின்றன.
* இந்து சமயத்தினர் அரச மரத்தையும் பல தெய்வங்களையும் 108 முறை வலம் வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
* நடராஜரின் கரணங்கள் 108, தாளங்கள் 108, அர்ச்சனையில், நாமங்கள் 108 என்றிருக்கின்றன.
* முக்தி நாத் க்ஷேத்திரத்தில் 108 சிவ சன்னதிகள் உள்ளன.
* திபெத்திய புத்த சமயம் பிரிவில் பாவங்களின் எண்ணிக்கை 108 ஆக இருக்கின்றன.
* மஹா நிர்வாணத்தை அடைய 108 படிகள் உள்ளதாக புத்தமதம் கூறுகிறது.
* ஜப்பானிய ஷிண்டோ சமயத்தில் புது வருடம் 108 மணி ஓசையுடன் வரவேற்கப்படும். இந்த ஓசை 108 வகை மனத்தூண்டுதல்களை நாம் வெற்றி கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துகிறது என்கின்றனர்.
* தாவோ தத்துவத்தில் 108 தெய்வீக நட்சத்திரங்கள் இடம் பெற்றிருக்கின்றன.
* சீக்கிய குருமார்கள் 108 முடிச்சுகள் உள்ள ஜெபமாலையையே பயன்படுத்துகிறார்கள்.
* உடலில் 108 மர்ம ஸ்தானங்கள் என வர்மக்கலை கூறுகிறது.
* குங்ஃபூ கலை உடலில் 108 அழுத்தப் புள்ளிகள் இருப்பதாகக் கூறுகிறது.
* உடலின் பல்வேறு பாகங்களிலிருந்து இதய ஸ்தானத்தில் 108 சக்தி நாடிகள் குவிவதாகத் தந்திர சாஸ்திரம் கூறுகிறது.
* பிரபஞ்ச அமைப்பில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம் சந்திரனின் விட்டத்தைப் போல 108 மடங்கு என்கின்றனர்.
* பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் சூரியனின் விட்டத்தைப்போல் 108 மடங்கு என்கின்றனர்.
* சூரியனின் விட்டம் பூமியின் விட்டத்தைப் போல் 108 மடங்கு என்கின்றனர்.
- இந்த 108 என்பது வரையறைக்கு உட்பட்ட எண்ணிக்கையாக இருந்து கொண்டு வரம்பற்ற நிலையை உணர்த்துகிறது என்று சில ஆன்மிகவாதிகள் தெரிவிக்கின்றனர். அதாவது, 1 என்பது கடவுளை அல்லது உயர் உண்மையையும் , 0 என்பத் சூனியத்தை அல்லது ஆன்மீகச் சாதனையில் முழுமையையும், 8 என்பது எட்டு திக்குகளிலும் உள்ள எல்லையற்ற ஆகாயத்தையும் குறிக்கும்.