உயர்வான வாழ்வுக்கு கழுகின் வழிகாட்டல்கள்
கழுகு (Eagle) ஓர் அற்புதமான பறவை. அதற்குச் சிறப்பான பார்வையும், உயரப் பறக்கும் ஆற்றலும் உள்ளன. உலக நாடுகளின் சின்னங்கள், வியாபாரப் பொருட்கள் என்று அந்தப் பறவை அடையாளப்படுத்துவதற்குக் காரணம் அதன் சிறப்பான பண்புகளே ஆகும். கழுகிடம் காணப்படும் ஏழு உயர் குணங்கள், மனித வாழ்வின் உயர்வுக்கும் வழிகாட்டுவதாக அமைந்திருக்கிறது.
கழுகின் குணம் 1
கழுகுகள் தனியாக, உயரத்தில் பறக்கும். அவை ஏனைய பறவைகளுடன் சேர்ந்து பறக்காது. ஏனைய பறவைகளும் கழுகுகள் பறக்கும் உயரத்தில் பறக்க முடியாது.
மனிதருக்கான வழிகாட்டல் 1
கழுகுகள் கழுகுகளுடன் மட்டும் பறக்கும்.
கழுகின் குணம் 2
கழுகுகள் கூர்மையான பார்வை உடையன. ஐந்து கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள ஒன்றை அவற்றால் தெளிவாகப் பார்க்க முடியும். கழுகு ஓர் இரையைப் பார்த்ததும், அது தன் பார்வை ஒடுக்கி அதைப் பிடிக்க முயலும். தடைகள் வந்தாலும், அது தன் தன் கவனத்தை திசை திருப்பாது, அது தன் பார்வையை இரையின்மேல் வைத்திருக்கும்.
மனிதருக்கான வழிகாட்டல் 2
எந்தவொரு செயலிலும், எத்தனைத் தடைகள் வரினும் சிதறாத கவனம் வெற்றியடையும்.
கழுகின் குணம் 3
கழுகு புதிய இரையினை மட்டுமே உண்ணும். பிணந்தின்னிக் கழுகு போன்று, அழுகியவை மற்றும் இறந்தவற்றை உண்ணாது.
மனிதருக்கான வழிகாட்டல் 3
எதை உண்பது? எதைத் தெரிவது? எதை விலக்குவது? என்பதில் ஒவ்வொரு மனிதரும் சரியானவைகளைத் தேர்வு செய்திட வேண்டும்.
கழுகின் குணம் 4
கழுகுகள் புயலை விரும்புகின்றன. புயல் காற்றின் மூலம் அவை மேகங்களின் மேலாக உயர்த்தப்படுகின்றன. அதனால், அவை சிறகினை விரித்துக் காற்றில் மிதக்கவும், அதன் மூலம் இளைப்பாறவும் போன்றவற்றிற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்கின்றன. அதே நேரம், மற்றப் பறவைகள் மரக்கிளைகளில் ஒளிந்து கொள்கின்றன.
மனிதருக்கான வழிகாட்டல் 4
மனிதர்கள், தங்களது வாழ் நாட்களில் ஏற்படும் புயல்களைப் போன்ற சவால்கள் மற்றும் இடையூறுகளை, வாழ்வின் உயவுக்கான சந்தர்ப்பங்களாகவும், நன்மையாகவும் மாற்றிக் கொள்ளப் பழகிட வேண்டும்.
கழுகின் குணம் 5
கழுகு பரீட்சையின் பின்பே நம்பிக்கை வைக்கும். பெண் கழுகு ஓர் ஆண் கழுகை சந்தித்து உறவு கொள்ளும் முன், அது ஆண் கழுகுடன் நிலத்திற்குச் சென்று சிறு தடி போன்ற குச்சியை எடுக்கும். பின்பு மேலே ஆணுடன் உயரத்திற்குப் பறந்து சென்று அந்தக் குச்சியினைக் கீழே போட்டுவிட்டு அதைப் பார்த்துக் கொண்டிருக்கும். நிலத்தை நோக்கி வீழ்ந்து கொண்டிருக்கும் குச்சியை ஆண் கழுகு விரட்டிச் சென்று, அது நிலத்தில் விழும் முன்பாகப் பிடித்து, அதை உயரப் பறக்கும் பெண் கழுகிடம் கொண்டு சேர்ப்பிக்கும். பெண் கழுகு மீண்டும் குச்சியைக் கீழே போட்டுவிடும். ஆண் கழுகு பிடிப்பதற்காகக் கீழே செல்லும். இவ்வாறு குச்சியை வீழ்த்துவதும், எடுத்து வருவதுமாக பல பரீட்சைகளை நடத்தும். அதன் பின்னர், பெண் கழுகு, ஆண் கழுகிடமுள்ள பொறுப்புணர்வை நிச்சயப்படுத்திக் கொண்டு, ஆண் கழுகிற்கு உறவு கொள்ள இடமளிக்கும்.
மனிதருக்கான வழிகாட்டல் 5
மனிதர்கள், தங்களுக்கான எந்தவொரு உறவையும் ஏற்படுத்திக் கொள்ளும் முன்பு சில பொறுப்புணர்வு சோதனையினை நடத்திக் கொள்ள வேண்டும்.
கழுகின் குணம் 6
பெண் கழுகு முட்டையிடத் தயாரானதும், ஆணும் பெண்ணும் மலையின் உச்சியிலுள்ள, ஏனைய உயிரிணங்கள் இலகுவில் வந்தடைய முடியாத இடத்தினைத் தேர்வு செய்யும். ஆண் முட்களைக் கொண்டு வந்து பாறைப் பிளவில் கூட்டினை அமைக்க ஆரம்பிக்கும். அதன் பின் குச்சிகளையும், அதன் மேல் முட்களையும் வைத்துக் கூடு கட்டும். அதன்மேல் மிருதுவான புற்களை அடுக்கி முதலாவது அடுக்கினை முடிக்கும். அதன் பின் முட்களைப் பரப்பி, அதன் மேல் புற்களைப் பரப்பும். அதற்கு மேலாக தன் இறகுகளைப் பரப்பி, கூட்டினைக் கட்டி முடித்துவிடும். கூட்டின் வெளியேயுள்ள முட்கள் வெளியேயிருந்து எதுவும் கூட்டிற்குள் வருவதைத் தடுக்கும். பெண் கழுகு முட்டையிட்டு பாதுகாக்க, ஆண் கழுகு இரையை வேட்டையாடும். குஞ்சுகளைப் பயிற்றுவிக்க பெண் கழுகு அவற்றை கூட்டிற்கு வெளியே எடுத்துவிடும். பயந்த குஞ்சுகள் கூட்டிற்குள் தாவி வந்துவிடும். ஆகவே, குஞ்சுகளை கூட்டிற்கு வெளியே எடுத்துவிட்டதும், கூட்டிலுள்ள இறகுகளை வெளியேற்றி முட்களுடன் கூட்டை விட்டுவிடும். பயந்த குஞ்சுகள் மீண்டும் கூட்டிலுள் தாவியதும், அங்குள்ள முட்கள் அவற்றைக் குத்திவிடும். இதனால் குஞ்சுகள் கூட்டைவிட்டு வெளியேறும். அடுத்து, மலை உச்சியிலிருந்து குஞ்சுகளை தாய்க் கழுகு கீழே தள்ளிவிடும். பயத்தால் அவை கீச்சிட்டு, கீழே விழும் முன் ஆண் கழுகு அவற்றைப் பிடித்து தன் மேல் வைத்துக் கொண்டு மலை உச்சிற்குக் கொண்டு வரும். குஞ்சுகள் இறக்கை அடிக்கத் தொடங்கும் வரை, இவ்வாறு நடைபெறும். குடும்பம் இருவரின் பங்குபற்றலாலும் வெற்றி பெறும்.
மனிதருக்கான வழிகாட்டல் 6
முட்கள் குத்தும் போது, வாழ்வு அனுபவப்படாமல், முன்னேறாமல், கற்றுக் கொள்ளாமல் அதிக வசதியாக இடத்தில் இருப்பதை உணர்த்துகின்றது. வாழ்விலுள்ள முட்கள் வளர வேண்டும், கூட்டை விட்டு வெளியேறி வாழ வேண்டும் என்பதை கற்பிக்கின்றன. நம்மை நேசிப்பவர்கள், நம்மைச் சோம்பலினால் நலிவுற விடமாட்டார்கள். அவர்களின் செயல் கூடாத செயலாகத் தெரிந்தாலும் நம் வளர்ச்சி, செழிப்பு எனும் நன்மைக்காளுக்காகவே, அவர்கள் நம்மைக் கடினமான பாதையில் தள்ளுவார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கழுகின் குணம் 7
ஒரு கழுகு வயதாகியதும், அதன் இறக்கை பலவீனமாகி, அது பறக்க வேண்டிய வேகத்தில் பறக்க ஒத்துழைக்காது. அது சாகும் அளவிற்கு பலவீனப்பட்டுள்ளதாக உணர்ந்ததும், மலையிலிருந்து நீண்ட தூரத்திற்கு ஓய்விற்காகச் சென்றுவிடும். அங்கிருந்து, தன் உடலிலுள்ள அத்தனை இறகுகளையும் மொட்டையாக வரும்வரை நீக்கிவிடும். அந்த மறைவான இடத்தில், புது இறகுகள் முளைக்கும் வரை தங்கியிருந்து, பின் வெளியே வரும்.
மனிதருக்கான வழிகாட்டல் 7
சுமையான, வாழ்க்கைக்குத் தேவையற்ற பழைய நினைவுகள், பழக்க வழக்கங்கள் போன்றவைகளை இடையிடையே நீக்கி விடவேண்டும்.
- மு. சு. முத்துக்கமலம்.
*****
 இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|